Published : 29 Jul 2024 04:00 AM
Last Updated : 29 Jul 2024 04:00 AM
உண்மையில், பேட்டரியை லிஃப்டில் கொண்டு சென்றால் வெடிவிபத்து ஏற்படுமா?
முதலாவதாக இந்த சம்பவம் சமீபத்தில் நடந்தது அல்ல. சீனாவில் ஹைஜு மாவட்ட குவாங்சூ நகரில் 2021-ல் ஏற்பட்ட சம்பவம். அந்தக் காலகட்டத்தில் சீனாவில் இது வைரலாக பரவியது. ஆயினும் அந்த வீடியோ எதிலும் காந்தபுலத்தல் ஏற்பட்ட விபத்து என்று குறிப்பிடவில்லை. சீனாவில் பெருகி வரும் மின்வாகனங்களின் தொடர்ச்சியாக பலர் தங்கள் வீட்டுக்கே பேட்டரியை எடுத்துவந்து சார்ஜ் செய்வது, மின்வாகனங்களில் மாற்றங்களை செய்வது என பாதுகாப்பு விதிகளை மீறி செயல்பட்டு வந்தனர். இதற்கு உள்ளூர் அதிகாரிகள் தடை விதித்தனர். சார்ஜிங் நிலையத்தில் சார்ஜ் செய்யாமல் மின்கலத்தை வீட்டுக்கு எடுத்து வந்து சார்ஜ் செய்தால் விபத்து ஏற்படும் என்பது குறித்துவிழிப்புணர்வு ஏற்படுத்த சீன அதிகாரிகள் வெளியிட்ட வீடியோதான் இது.
2021-ம் ஆண்டில் சிங்கப்பூரிலும் லிஃப்டில் மின்வாகன பேட்டரி எடுத்துசென்றபோது வெடி விபத்து ஏற்பட்டது. பேட்டரியில் நுகர்வோர் தாமேஏற்படுத்திய மாற்றங்களின் காரணமாகத்தான் இந்த விபத்து ஏற்பட்டது என்பது விசாரணையில் தெரியவந்தது.
பேட்டரியால் காந்தப்புலத்தை ஏற்படுத்த முடியாது.
சில அடிப்படையான விஷயங்களை அலசலாம். பேட்டரியை லிஃப்டில் கொண்டு செல்லும்போது காந்தப்புலம் உருவாகுமா? இல்லை. ஆணியை சுற்றி வயரை வளையம் வளையமாக சுற்றி மின்சுற்று ஏற்படுத்தினால் அந்தஆணியில் காந்தப்புலம் உருவாகும். மின்னேற்றம் கொண்ட பொருள் இயங்கும்போது மின்காந்தம் உருவாகும். இங்கே வயர் வழியே மின்னேற்றம் பாய்கிறது; மின்சுற்று ஏற்படுகிறது.
மின்வாகனங்களின் பேட்டரியை எடுத்துக்கொண்டு நாம் படுவேகத்தில் ஓடினாலும், அதனுள் மின்னேற்ற நிகர இயக்கம் இல்லை. பேட்டரியின் உள்ள மின்சுற்று பூஜ்ஜியமாக இருக்கும். அதாவது, மின்புலம் பூஜ்ஜியம். எனவே, பேட்டரியால் காந்தப்புலத்தை ஏற்படுத்த முடியாது.
அதேபோல லிஃப்டின் உலோக பகுதிகளில் மின்சுற்று ஏதுமில்லை. எனவே அதுவும் மின்காந்தமாக மாற முடியாது. எனவே பேட்டரி மூலமாக நகரும் லிஃப்ட் மின்காந்தம் அடைகிறது என்பதற்கு எந்தவித இயற்பியல் அடிப்படையும் இல்லை. இது வெறும் போலி செய்திதான்.
மின்வாகனங்களில் மட்டுமல்ல கைபேசி, மடிக்கணினி என பல பொருள்களிலும் நாம் இப்போது லித்தியம் அயன்பேட்டரிகளைதான் பயன்படுத்துகிறோம். லிப்டில் கைபேசியை எடுத்து செல்லும்போதும் அதில் உள்ள லித்தியம் அயன்பேட்டரி நகரும். ஆனால், எந்தவித மின்காந்தமும் ஏற்படுவது இல்லை.
அதேசமயம், லித்தியம் அயன் பேட்டரிகள் தீ பிடிக்கும் ஆபத்து உள்ளது. எனவேதான் விமான பயணத்தின் பொது செக்-இன் செய்யும் உடமை பெட்டிகளில் லித்தியம் அயன் பேட்டரி கொண்டு செல்லதடையுள்ளது. கைபேசி, கணினி எனகையில் ஏந்தி செல்லும் உடைமையாகதான் எடுத்து செல்லமுடியும்.
பேட்டரியை தேவைக்கு மிக அதிகமாக சார்ஜ் செய்தால் அதில் தெர்மல் ரன்அவே எனப்படும் வெப்பமிகு மின்னோட்டம் ஏற்படும் வாய்ப்பு உருவாகும். கூடுதல் சார்ஜ் செல்வதால் பேட்டரியின் வெப்பம் கூடும்;. இதன் தொடர்ச்சியாக பேட்டரியில் உள்ள வேதிப்பொருள்களில் வினை ஏற்படும். இந்த வேதிவினை மேலும் கூடுதல் வெப்பத்தை உமிழ்கிறது. எனவே வெப்பநிலை மேலும் அதிகரிக்கிறது; வேதிவினை வேகம் அதிகரிக்கிறது. இவ்வாறு சங்கிலிவினையாக தொடரும் நிகழ்வே தெர்மல் ரன்அவே எனப்படும் வெப்பமிகு மின்னோட்டம். இதுதான் பேட்டரி விபத்துக்கு பொதுவான காரணமாக உள்ளது
தயாரிப்பு கோளாறு, வெளிப்புற சேதம், தவறான பயன்பாடு, மிகுமிஞ்சி சார்ஜ் செய்தல் உள்ளிட்டவற்றால் பேட்டரியின் உள்ளே குறுக்கு வெட்டு மின்பாய்வு காரணமாக மின்கசிவு ஏற்பட்டு மின்பொறி உருவாகும். இதுவே தீயாக கொழுந்து விட்டு எரியும்.
தேவையற்ற அச்சம்: மின்வாகனங்களில் உள்ள பேட்டரிகள் பாதுககாப்பானவைதான். பரிந்துரைக்கப்பட்ட விதிகளை புறம்தள்ளிபயன்படுத்தும்போது விபத்து நிகழும் வாய்ப்பு உருவாகிறது. எனவே எல்லாமின்வாகன பேட்டரிகளும் ஆபத்தானவை என்பது தேவையற்ற அச்சம்.
த.வி.வெங்கடேஸ்வரன், பேராசிரியர், இந்திய அறிவியல் கல்வி - ஆய்வு நிறுவனம் தொடர்புக்கு: tvv123@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment