Published : 23 May 2018 10:04 AM
Last Updated : 23 May 2018 10:04 AM
இ
ன்று குப்பைவண்டிப் பெண் சீக்கிரமே வந்துவிட்டாள். வண்டியின் வயிறு கொள்ளாமல் நிரம்பி வழிகிறது குப்பை. குடலைப் புரட்டும் நாற்றம். வண்டியைச் சுற்றிய படியே வருகிறது ஈக்களின் பட்டாளம். வீட்டுக்கு முன் குப்பைவண்டியின் மணிச்சத்தம் கண கணக்கிறது. கருப்புநிற நெகிழிப் பைகள் வீசப்படுகின்றன.
என் பங்குக் குப்பையைக் கொட்டினேன். குப்பைக்காரி சிரித்தாள். ஒழுங்கான பல்வரிசை. லட்சணமான முகம். வடிவான கண், காது, மூக்கு. நெற்றியில் வித்தியாசமான குங்குமத் தீற்றல். இந்தப் பக்கத்துப் பெண் மாதிரி இல்லை. பஞ்சம் பிழைக்க வந்த வேற்று மாநிலப் பெண்.
திடீரென்று ஒரு குழந்தையின் வீறிடல். சைக்கிள் வண்டியின் கைப்பிடியிலிருந்து குப்பை டிரம் வரைக்கும் ஒரு தூளி. அதற்கு வெளியே தெரியும் ரோஸ் நிறப் பாதங்கள். குப்பையில் முளைத்த பூ மாதிரி!
என்னால் தாங்க முடியவில்லை. திண்ணை யில் வந்து உட்கார்ந்தேன். கண்ணை மூடினால் ஐயோ ரோஸ் நிறப் பாதங்கள்! அன்றைய பேப்பர் தொப்பென்று விழுந்தது. பிரித்த உடனேயே அந்தச் செய்தி. கொடுங்கையூரில் குப்பை மலை எரிகிறது. குழந்தைகள், முதியோர் மூச்சுத் திணறும் அவலம். புறநகர்ப் பகுதிகள் எங்கும் இதுவே நிலை. எங்கெங்கு காணினும் குப்பையடா!
அடுத்த பக்கத்தைப் புரட்டினேன். ஐயோ இது என்ன? குப்பைவண்டியைத் தள்ளிக்கொண்டு போகும் ஒரு புகைப்படம். வண்டிக்குள் வெள்ளைத் துணி போர்த்தி உடலெங்கும் வரிந்து கட்டிய கயிறுகளுடன் ஒரு உயிரற்ற உடல். இந்த ஊரில் பல வருஷமா இப்படித்தானாம்! பிணங்களை அப்புறப்படுத்த வண்டி வசதி இல்லையாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT