Published : 01 Jul 2024 08:38 AM
Last Updated : 01 Jul 2024 08:38 AM
ஒவ்வொரு தனி மனிதனின் உள்ளத்தின் தூய்மையின் நிறைவே அவன் வாழும் குடும்பத்தின் நிறைவாக மலருகிறது. அதன் வழியாகவே அவன் வாழும் ஊரும் நாடும் உலகமும் நிறைகின்றது. எனவே, புறத்தில் அமைதியையும் ஆனந்தத்தையும் வளத்தையும் காண விரும்பும் மனிதன் முதலில் தன் அகத்தில் அவற்றை நிரப்பிக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றான்.
"உள்ள(ம்) நிறைவில் ஓர் கள்ளம் புகுந்திடில் உள்ள நிறைவாமோ
தெள்ளிய தேனில் ஓர் சிறிது நஞ்சையும் சேர்த்த பின் தேனாமோ
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது வாழ்வுக்கு நேராமோ
தாழ்வு பிறர்க்கெண்ணத் தான் இழிவான் என்ற சாத்திரம் கேளாயோ"
என்று உள்ளத்தின் நிறைவை வலியுறுத்திப் பாடும் மகாகவி பாரதியார் இறுதியில் ஒன்றைச் சொல்லி எச்சரிக்கிறார்.
பிறருக்குத் தாழ்வு வருமாறு ஒருவன் எண்ணினாலே போதும், அதுவே நஞ்சாக மாறி அவனுக்கே இழிநிலையை உண்டாக்கிவிடும் என்று நமக்கு உணர்த்த முயல்கிறார். பிறரால் அழிவான் என்று அவர் பாடவில்லை, தனக்குத்தானே இழிவைத் தேடிக் கொள்வான் என்றுதான் கூறுகிறார்.
வாளை எடுத்து மற்றவரை அழிக்க முயல்பவன் அந்த நேரத்தில் மற்றவரின் உடலை அழிப்பதில் வெற்றி பெற்றாலும், அதே வாளால் தானே மடிய நேரிடும் என்று இயேசு பெருமான் கூறும்போது ஓர் அரிய உண்மையை உணர்த்துகிறார். மற்றவர் உடலைக் கொல்லும் அளவுக்கு வெறுப்பு கொள்பவன் அந்த வெறுப்புணர்வு என்ற நஞ்சால் தானே இழிவடைவான் என்பதையே மடிதல் என்று குறிப்பிடுகிறார்.
ஒரு முறை முகமது நபிகள் தன் நண்பர் அபூபக்கர் என்பவருடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். அப்பொழுது அங்கு வந்த ஒருவர் அபூபக்கரை வாய்க்கு வந்தபடி திட்டினாராம். அபூபக்கர் பொறுமை காக்கிறார். சற்று நேரத்தில் பதிலுக்குத் திட்டத் தொடங்கி விடுகிறார். உடனே நபிகள் நாயகம் அங்கிருந்து எழுந்து சென்று விடுகிறார். சண்டை முடிந்த பிறகு அபூபக்கர், நபிகள் நாயகத்திடம் வந்து "ஏன் என்னைக் கைவிட்டு வந்து விட்டீர்?" என்று வினவினாராம்.
அதற்கு நபிகள் கூறிய பதில் இது: "அவர் எவ்வளவு திட்டியும் நீ பொறுமை காத்தபோது அங்கு அல்லா நம்முடன் இருப்பதை உணர்ந்தேன். நீ எப்போது பதிலுக்குத் திட்டத் தொடங்கினாயோ அப்போது அங்கு அல்லா இல்லை என்று கண்டேன். அல்லா இல்லாத இடத்தில் நான் இருக்க விரும்பவில்லை." இறைவன் வாழும் தூய்மையான உள்ளம் கொண்டோர் பதிலுக்குத் திட்டுவதில்லை என்பதை அழகாக நபிகள் உணர்த்துகிறார்.
பலன் கருதாமல் ஒவ்வொரு நொடியும் கர்மம் புரிதலே உள்ளத் தூய்மைக்கு வழி என்று உரைக்கும் கிருஷ்ண பகவான், சற்றே வழுக்கிப் பலனில் பற்று வைத்தால் அது எப்படி நஞ்சாக மாறித் தன்னையே அழிக்கும் என்பதையும் அர்ஜுனனுக்கு உணர்த்த முயல்கிறார். இந்து சமய அறவாழ்வியலான பற்று அறுத்தலுக்குத் தடையாக நிற்பது உள்ளத்தை மாசுபடுத்தும் நஞ்சே ஆகும்.
நல்ல எண்ணம், நல்ல சொற்கள், நல்ல செயல்கள் ஆகிய மூன்றையும் வலியுறுத்துகின்ற பார்சி சமயம், அவை தூய உள்ளத்தில் இருந்து மட்டுமே விளைய முடியும் என்று சுட்டிக் காட்டுகிறது.
ஆசையே துன்பத்துக்குக் காரணம் என்று சுட்டிக்காட்டிய புத்த பகவான் அந்தத் துன்பத்தை நீக்குவதற்கு ஆசை துளிர் விடாத தூய்மையான உள்ளம் வேண்டும் என்று மறைமுகமாக உணர்த்துகிறார்.
எவ்வித உடைமைகளும் இல்லாத வாழ்வியலே உள்ளத் தூய்மையை அளிக்கக் கூடியது என்று நிர்வாண நிலையில் அமர்ந்திருக்கும் மகாவீரர் கூறாமல் கூறுகிறார்.
சரணாகதித் தத்துவத்தையே எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வாக முன்வைக்கும் மகாத்மாக்கள் அவ்வளவு பேரும் உள்ளத்தைப் பண்படுத்திப் புனிதப்படுத்தும் வழிவகைகளையே வலியுறுத்துகின்றனர்.
'பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே' என்று பாரதியார் பாடினார். மகாத்மா காந்தியோ பகைவனே அற்ற ஒரு வாழ்வியலுக்குப் பரிணமிக்க, ‘சர்வோதயம்’ என்ற எல்லோருக்கும் நன்மை விளைவிக்கும் ஒரு வாழ்வியலை நமக்குக் கற்றுத் தந்தார்.
பரிசுத்தமான இதயமே இறைசக்தி நிரம்பித் ததும்பும் ஆலயம் என்பதை இன்று நாம் உணர வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
ஒரு தம்பதிகள் போட்ட சண்டையின் முடிவில் பிரிந்து விட எண்ணினர். அந்த நேரம் அவர்களுடைய மனநல மருத்துவரான குடும்ப நண்பர் அங்கு வந்தார். அவரிடம் முறையிட்டனர். அவர் கூறிய தீர்வு இதுதான்: "சரி பிரிந்து விடுங்கள். ஆனால் அதன் பிறகும் உங்களுடைய மனசுக்குள் தொடர்ந்து ஒருவரை ஒருவர் வெறுப்புடன் திட்டித் தீர்ப்பதில் உங்களுடைய அவ்வளவு சக்தியும் அழிந்து கொண்டேதான் இருக்கும்.
பதிலாக, ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் வெறுப்புணர்வை நீக்கிவிட்டுத் தூய உள்ளத்துடன் பிரிந்து விட்டால் அமோகமாக மகிழ்ச்சியாக வாழ்வீர்கள்!" இரண்டு மாதம் கழித்து நண்பர் அங்கு வந்தார். தம்பதிகள் பிரியவில்லை. எப்படி என்று கேட்டார். அவர்கள் மனமொத்து ஒரே குரலில் சொன்னார்கள்:
“பிரிந்து சென்றால் நாங்கள் எங்களுக்குள் இருக்கும் வெறுப்புணர்வுடன்தான் தனித்தனியே வாழ முடியும். எனவே வெறுப்புணர்வை நீக்குவது இணைந்த முயற்சியினால்தான் சாத்தியம் என்று உணர்ந்தோம். நாங்கள் என்ன செய்தாலும் அதை ஒருவருக்கொருவர் ஏற்றுக்கொள்வது, பதில் வினை புரிவதும் இல்லை, வெறுப்புணர்வு கொள்வதும் இல்லை, மாறாக மற்றவர் தவறே செய்தாலும் அதை ரசித்து மகிழ்வது என்பதை சிறந்த வழியாகக் கொண்டோம். இனி எதற்குப் பிரிய வேண்டும்?”
அன்பு என்றால் அது ஒருவழிப்பாதை போன்றது. அன்பு செய்து கொண்டேதான் இருக்க வேண்டும். அதுதான் இயற்கை விதி. ஆனால் ஒரு நொடியேனும் அதன் பலனாக அன்பைப் பதிலுக்குப் பெற வேண்டும் என்று நினைத்தாலே வாழ்க்கைப் பாதையில் விபத்து நேரும், வெறுப்பு நிறையும், உள்ளம் நஞ்சாகும், வியாதிகள் பீடிக்கும், பாலியல் வன்முறைக் கொடுமைகள் பெருகும், டைவர்ஸ் அதிகமாகும் என்பதை காதலர்கள் உணர வேண்டும்!
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய உள்ளத்தைத் தூய்மைப்படுத்த எடுக்கும் எல்லா சிறு சிறு முயற்சிகளும் இணைந்து பேராற்றலாக உருவெடுத்து மொத்தத்தில் உலகையே காப்பாற்றும் என்ற நம்பிக்கையைத்தானே மகாத்மா காந்தி நம்மிடம் விதைத்துச் சென்றார்!
உள்ள நிறைவில் ஓர் கள்ளம் புக விடலாமா? சொல்லுங்கள்!
- சூ.குழந்தைசாமி, செயலர், காந்தி அமைதி நிறுவனம், சென்னை | தொடர்புக்கு: kulandhaisamy.gpf@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT