Published : 03 Apr 2018 03:47 PM
Last Updated : 03 Apr 2018 03:47 PM
அந்த காலகட்டத்தில் ரஜினியின் நெருங்கிய நண்பரும், துக்ளக் பத்திரிகை ஆசிரியருமான சோ இது சம்பந்தமாக பேசிய விஷயம் முக்கியமானது. ரஜினி சொல்லும் திட்டம் சாத்தியமா, ரஜினியின் பின்னணியில் நீங்கள்தான் இயக்குகிறீர்களா போன்ற சந்தேகங்களுக்கு விரிவாக அவர் பிரபல வார இதழ் ஒன்றில் பேட்டி கொடுத்திருந்தார்.
அது இதுதான்:
‘தனிமனிதனாக நின்று இதை செய்யப்போவதாக ரஜினி சொல்லவில்லை. பலருடைய ஒத்துழைப்பை பெற்ற ஒரு தனி மனிதன் முயற்சித்தால் அது நிச்சயமாக சாத்தியம். ரஜினி அறிக்கை வந்ததைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவும் வந்துள்ளது. துணை பிரதமர் அத்வானியும் பேசியிருக்கிறார். மத்திய அரசே இதில் முனைப்பு காட்டுகிற போது, ‘மக்கள் இயக்கம்’ என்பது தேவைப்படாமல் போகலாம். ரஜினியின் குறிக்கோள்களில் முக்கியமானது மத்திய அரசு இந்த நதி நீர் இணைப்பைச் செயலாக்க வேண்டும் என்பதுதான். எனவே உடனடியாக மக்கள் இயக்கம் என்பதில் முனைப்பு அவசியமில்லாமல் போகலாம். பேச்சோடு மத்திய அரசு நின்று செயலலில் ஈடுபட்டாலோ அல்லது மாநில அரசுகள் பிரச்சினைகளைக் கிளப்பி விட்டாலோ, அந்த சூழ்நிலையில் அவருடைய மக்கள் இயக்கத்திற்கு அவசியம் ஏற்படலாம்!’
இந்த திட்டத்தின் பிரம்மாண்டத்தை உணராமல் சற்று உணர்ச்சி வசப்பட்டு பேசுகிறாரா ரஜினி?
இத்திட்டத்திற்கு எடுத்த எடுப்பிலேயே தன் சார்பில் ஒரு கோடி ரூபாய் தருவதாகச் சொன்னார். பிறகு பல நிபுணர்களோடு கலந்தாலோசித்து இது சாத்தியமா, என்ன செலவாகும், என்னென்ன சிக்கல்களை இதற்கு கடக்க வேண்டி வரும். எந்த அளவுக்கு பயன்தரும். எவ்வளவு வருடங்கள் தேவைப்படும் என்பதை பற்றியெல்லாம் விவரங்கள் அறிந்துள்ளார். இது சம்பந்தமாக இதுவரை பிரசுரமாகியுள்ள பல தகவல்களையும், ஆய்வுகளையும் படித்துள்ளார். கர்நாடகா முதல்வர் கிருஷ்ணாவிடமும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடமும் முதல் கட்டமாகப் பேசியுள்ளார். அடுத்து தமிழகத்தின் முன்னாள், இந்நாள் முதல்வர்கள், பிரதமர், துணை பிரதமர், முன்னாள் பிரதமர்கள் போன்றவர்களுடன் பேசி வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளார். அதாவது மக்களின் முக்கியப் பிரதிநிதிகள் எல்லோரும் இதில் ஒருமித்து செயலாற்ற வழி செய்வதுதான் அவர் திட்டத்தின் ஒரு பகுதி. ஆகவே இதில் உணர்ச்சிவசப்பட்டு பிரச்சினையின் தன்மையை உணராமல் பேசிவிட்டார் என்று சொல்ல முடியாது!
நம்முடைய அரசியல்வாதிகளைத் தாண்டி இவ்வளவு பெரிய மெகா திட்டத்தை செயல்படுத்தி விட முடியுமா? முட்டுக்கட்டை போட மாட்டார்களா?
இப்படிச் சொல்கிறவர்கள் பொதுவாக கங்கை, காவிரி இணைப்பைப் பற்றி பேசுகிறார்கள். அதில் பல சிரமங்கள் இருப்பதால் செய்து முடிப்பது கடினம் என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். ஆனால் தென்னக நதி நீர் இணைப்பைப் பொறுத்தவரை கடக்க முடியாத சிக்கல்கள் பெரிதாக இருக்காது என்றும் சொல்கிறார்கள். இம்மாதிரி திட்டங்கள் மேற்கொள்ளப்படும்போது, எவ்வளவு மக்கள் இடம் பெயர நேரிடும், அவர்களுக்கு என்ன ஏற்பாடு செய்யப்படும் என்பது ஒரு முக்கியமான பிரச்சினை. தென்னக நதி நீர் இணைப்பை பொறுத்தவரை இது கூட பெரிய பிரச்சனையாகாது என்பது நிபுணர்கள் கருத்து. மகாநதியில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுவதால் ஒடிசா மாநிலம் கூட இதற்கு சம்மதம் தெரிவிப்பது நல்லது என நினைக்கலாம். காவிரி நீர், கர்நாடகம், தமிழ்நாடு இரண்டுக்கும் சேர்த்து போதவில்லை. ஆகவே இரண்டு மாநிலமும் ஆர்வம் காட்டும். கேரளம் கூட பிரச்சினையாக இருக்காது என்றே நினைக்கிறேன். இம்மாதிரித் திட்டங்களுக்கு சர்வ தேச நிதி அமைப்புகள் உதவி செய்யக்கூடும். நில உரிமையாளர்கள் உதவி செய்யலாம். வேலை வாய்ப்பும் பெருமளவு பெருகும். ஆக, இது நடக்கக்கூடிய காரியம்தான்!
ரஜினி அரசியலுக்கு வர நதி நீர் இணைப்பை ஓர் அஸ்திரமாக இறக்குகிறாரா?
அரசியலுக்கு வர அவருக்கு இது தேவையில்லை. இதனாலேயே தமிழகத்தின் பெருவாரியான மக்கள் யாருக்கும் ஆதரவு காட்டி விடமாட்டார்கள். உண்மையில் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக ரஜினி வர வேண்டுமென விரும்புகிறார்கள். அதுதான் அவர் பலம்!’
ரஜினி பல விஷயங்களில் குழம்பக் காரணம் உங்கள் ஆலோசனையைக் கேட்பதால்தான். நீங்கள் தொடர்ந்து அவரைக் குழப்புகிறீர்கள் என்று ஒரு குற்றச்சாட்டு உள்ளதே?
எந்த விஷயங்களில் அவரைக் குழப்பினேன். சொல்லுங்கள். நீங்கள் சொல்வது என் மீது சொல்லும் குற்றச்சாட்டு அல்ல. ஒருவர் குழப்ப நினைத்தால் அவர் குழம்பி விடுவார் என்று ரஜினி மீது குற்றம் சுமத்துகிறீர்கள். இது நீங்கள் அவருக்கு இழைக்கும் அநீதி. இங்கே நீங்கள் மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள பல பத்திரிகைகளும் சேர்ந்து முனைந்து அவரைக் குழப்ப முயற்சித்தும் கூட அவர் தெளிவாக இருக்கிறார். அப்படி இருக்க, நான் ஒருவன் மட்டும் தனித்து முயற்சித்து, அவரைக் குழப்பி விட முடியாது. கவலை வேண்டாம்!
பல்வேறு விஷயங்களில் ரஜினியின் மூலக்கதைக்கு, நீங்கள்தான் திரைக்கதை வசனம் எழுதுகிறீர்கள் என சொல்லப்படுகிறதே?
நான் திரைக்கதை எழுதினால் அதை என் மேஜை டிராயரில்தான் வைத்துக் கொள்ளலாம். பொழுது போகாத போது நானே என்னைப் பாராட்டிக் கொள்ளலாம். ரஜினி யாராலும் இயக்கப்படுபவர் அல்ல. தானாக சிந்தித்துத்தான் எந்த முடிவையும் எடுக்கிறார். இன்று பல பத்திரிகைகள்தான் ரஜினி இவரிடம் இதை சொன்னார்; அதை அவரிடம் சொன்னார் என்று கற்பனையாகவே வசனம் எழுதிக் கொள்கிறார்கள். அந்த பாவத்தைக் கூட நான் செய்வதில்லை!.
ரஜினியின் மக்கள் இயக்கம், தென்னக நதிகள் இணைப்பு சம்பந்தமான இந்த விஷயங்கள், விஐபி பேட்டிகள் எல்லாம் பத்திரிகை உலகில் இப்படி கோலோச்சிக் கொண்டிருந்த நேரத்தில் 28.11.2002 அன்று சுப்பிரமணியன் சுவாமியை சந்தித்தார் ரஜினி.
அன்றைய தினம் பகல் 2 மணிக்கு சென்னை சாந்தோமில் இருந்த தமிழ்நாடு ஜனதா கட்சி அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது. இருவரும் 30 நிமிடங்கள் பேசினார்கள். இந்த சந்திப்பின்போது ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரலேகா உடன் இருந்தார். இந்த சந்திப்பு முடிந்து சுப்பிரமணியன் சுவாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர், ‘தென்னக நதிகள் இணைப்பு தொடர்பாக நான் ஓர் அரசியல் அறிக்கை தயார் செய்துள்ளேன். இந்த அறிக்கைக்கு தென்னக நதிகள் இணைக்கும் திட்டம் என்ற பெயரையும் சூட்டியுள்ளேன். அறிக்கை 40 பக்கங்கள் கொண்டதாகும். இந்த அறிக்கையை அடுத்ததாக வெளியிட இருக்கிறேன். அந்த அறிக்கை பற்றி பேசத்தான் ரஜினி என்னை சந்தித்தார். பேசினார். ஏற்கெனவே அவரை நான் 4 முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். அப்போதெல்லாம் அவரிடம் தென்னக நதிகள் இணைப்பு சாத்தியக்கூறுகள் பற்றி பேசியுள்ளேன். இப்போது நான் தயாரித்துள்ள அறிக்கையின் ஒரு பிரதியை அவரிடம் கொடுத்தேன். மேலும் நாங்கள் தென்னக நதிகளை இணைக்கும் திட்டத்தை நிறைவேற்ற என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்பது பற்றியும் விவாதித்தோம்.
நடிகர் ரஜினிகாந்த் என்னிடம், ‘மக்களவைத் தேர்தல் வருவதற்கு முன்பு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கலந்து ஆலோசித்து இதில் ஒருமித்த கருத்தை ஏற்படுத்த வேண்டும். அரசியல் கட்சிகள் வாய் திறந்து பேசினால் போதாது. இதில் என்ன முயற்சி எடுக்கின்றன என்பதை பார்க்க வேண்டும்!’ என்றெல்லாம் கருத்துகள் சொன்னார். ரஜினிகாந்த் என்னை சந்தித்தது முக்கிய சந்திப்புதான். நாங்கள் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் பேசினோம். ஆனால், அரசியல் பற்றி என்ன பேசினோம் என்பதை வெளியிட முடியாது. நடிகர் ரஜினிகாந்த் தேச பக்தி உடையவர். அவருக்கு அரசியல் ஆர்வம் இருந்தால் நாட்டுக்கு பல நன்மைகளை செய்யலாம்!’ என்றும் குறிப்பிட்டார்.
இந்தப் பேட்டியை சுப்பிரமணியன் சுவாமி அளித்து 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இதுவரை அரசியலுக்கு, அரசியல் கட்சிக்கு ரஜினி வரவில்லை. சுப்பிரமணியன் சுவாமி இப்போது ஜனதா கட்சியில் இல்லை. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராக ஆகிவிட்டார். இப்படியான சூழலில்தான் கடந்த டிசம்பர் 31-ம் தேதி ரஜினி அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்தார். அந்த சூட்டோடு பேட்டி கொடுத்த சுப்பிரமணியன் சுவாமி ரஜினியை கடுமையாகவே விமர்சித்தார். அது அத்தனை பத்திரிகை மீடியாக்களிலும் வெளியாகி பரபரப்பையும் கண்டது.
அவர் அளித்த பேட்டியில், ‘தமிழக வளர்ச்சிக்கான திட்டங்கள் எதுவுமே ரஜினியிடம் இல்லை. அரசியல் ஞானம் இல்லாதவர். ஊடகங்கள் மூலம் அவரால் அரசியல் நடத்த முடியாது. ரஜினி தனது அரசியல் கட்சியை அறிவித்து ஊழலுக்கு எதிரான கொள்கையை முன்னிறுத்தும்போது உண்மை அவருக்குத் தெரியவரும். அப்போது அவரே ஓடிவிடுவார். ரஜினிக்கு பாஜக ஆதரவு அளிக்குமா, அளிக்காதா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் ரஜினியை ஆதரிப்பதை நான் எதிர்ப்பேன்!’ என பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.
15 வருடத்தில் என்னே அரசியல் முரண்? இதற்குள் சு.சுவாமிக்கும், ரஜினிக்கும் என்ன அரசியல் நடந்தது? அதை அவர்கள் இருவரில் ஒருவர்தான் சொல்ல வேண்டும். அதுதானே அரசியல்?
- பேசித் தெளிவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT