Published : 03 Apr 2024 03:26 PM
Last Updated : 03 Apr 2024 03:26 PM
மக்களவைத் தேர்தல் வரலாற்றில் உருவாக்கப்பட்ட சின்னங்களும், அதற்கான காரணங்கள் குறித்து தெரியுமா? இந்தியாவில் கல்வி அறிவுக்கும் கட்சிகள் சின்னத்துக்கும் இடையே உள்ள தொடர்பு என்ன? அதுபற்றி சற்றே விரிவாக இந்த எலெக்ஷன் ஃப்ளாஷ்பேக் 4-வது பகுதியில் பார்க்கப் போகிறோம்.
1947-ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற இரு ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நிறுவப்பட்டது. 1950-ல் நாட்டின் முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக சுகுமார் சென் நியமிக்கப்பட்டார். அதன்பின் முதல் மக்களவைத் தேர்தல் 1951 அக்டோபர் 25-ல் இமாச்சலில் தொடங்கியது. 4 மாதங்கள் நீடித்த முதல் தேர்தல் பணிகள் 1952 பிப்ரவரி கடைசி வாரத்தில் முடிந்தன. 499 லோக்சபா இடங்களுக்கு மொத்தம் 4,500 இடங்களில் வாக்குப்பதிவு நடந்தது. அந்தத் தேர்தலில் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட ஆண், பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது.
அந்தத் தேர்தலின்போது இந்தியாவில் 84 சதவீத மக்கள் கல்வி அறிவு அற்றவர்களாக இருந்தனர். இது தவிர வறுமை சமூகப் பிரிவினைகள் தேசப்பிரிவினை மதப் பிரிவினைகள் எனப் பலவிதமான சிக்கல்கள் அப்போது இருந்து வந்தன. அந்தக் காலகட்டத்தில் 17 கோடியே 32 லட்சத்திற்கும் அதிகமானோர் வாக்குரிமை பெற்றிருந்தனர். இவர்களில் 51.15% பேர் அந்தத் தேர்தலில் வாக்களித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
படிப்பறிவு அற்றவர்கள் என்றால் அவர்களுக்கு எழுத்து எண்கள் என்றால் என்னவென்றே தெரியாது. ஆனால், அவர்களை வாக்கு செலுத்த வைக்க வேண்டும். அதற்காகத் தேர்தல் ஆணையம் உருவாக்கியது சின்னம். வாக்குச் சீட்டில் சின்னம் அச்சடிக்கப்பட்டு அதில் முத்திரை குத்த வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக வாக்குச் சாவடிகளில் அந்தந்தத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் சின்னம் ஒட்டப்பட்ட வாக்கு பெட்டிகள் வைக்கப்படும்.
எடுத்துக்காடாக, காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கை சின்னத்தின் முத்திரை அந்தப் பெட்டியில் ஒட்டப்பட்டிருக்கும். எனவே, வாக்களிக்க நினைக்கும் கட்சிக்கு வாக்கைச் செலுத்தலாம். முதன்முதலில் 1951-52 ஆண்டு பொதுத் தேர்தலுக்காகக் கட்சி சின்னங்கள் உருவாக்கப்பட்டன என்பது தனிச்சிறப்பு.
தேர்தல் ஆணையத்தில் பணியாற்றிய எம்.எஸ்.சேத்தி (M.S.Sethi) என்கிற ஓவியர் சின்னங்களைத் தன் கைகளால் வரைந்தார். சேத்தியின் பாணி சின்னங்களையே இப்போதும் உருவாக்கி வருகிறது தேர்தல் ஆணையம். பெரும்பாலும் தேர்தல் ஆணையம் வழங்கும் சின்னங்கள் அன்றாடம் மக்கள் புழங்கும் சின்னங்களாகவே இருந்தன.
அதன்பின் கட்சிகள் எண்ணிக்கை அதிகரித்தது. தேசிய கட்சிகளைக் கடந்து மாநில கட்சிகள் அதிகமாக உருவெடுக்கத் தொடங்கின. எனவே, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு பெட்டி என்பது தேர்தல் ஆணையத்துக்குக் கூடுதல் செலவு எனக் கருதிய ஆணையம், ஒரே ஒரு பெட்டிக்கு மாறியது. பெட்டியில் சின்னங்களைப் பொறிப்பதற்குப் பதிலாகச் சீட்டுகளில் பல சின்னங்களை அச்சிட்டது. அதன்பின், மக்கள் தங்கள் வாக்குகளை மை கொண்டு சின்னத்தில் முத்திரை குத்தி பெட்டிகளில் செலுத்தினர். பின் அந்தச் சீட்டுகள் எண்ணப்படும்.
இப்படிதான், இந்தியாவில் சின்னங்கள் உருவானது. சமீபத்தில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்துக்குப் பதிலாக அமெரிக்காவில் உள்ளதுபோல் அடையாள சின்னங்களைக் கொண்டுவருவோம் எனத் தேர்தல் அறிக்கையிலும் கூறியிருந்தார். ஆனால், நீண்ட காலமாக ஒரே சின்னத்தில் போட்டியிடும் கட்சிகளுக்கும் புதிதாகப் போட்டியிடும் கட்சிகளுக்கும் உள்ள வேற்றுமை என்னும் அடிப்படையில் சீமான் பேசினார். ஆ
னால், 1951-ம் ஆண்டு 16% மக்கள் மட்டுமே படித்தவர்களாக இருந்தனர். ஆனால், 2011 - 74% (கடைசியாக எடுக்கப்பட்ட தரவு) இந்திய மக்கள் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கின்றனர். ஆகவே, தேர்தலில் சின்னம் என்பது மக்களின் கல்வி அறிவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டதே அன்றி வேறு காரணமில்லை. எனினும், இப்போதும் சின்னங்கள் அடிப்படையில் மின்னணு எந்திரங்கள் வாயிலாக வாக்குப்பதிவு இந்தியாவில் நடந்து வருகிறது.
முந்தைய பகுதி: மக்களவைக்குப் போகாத பிரதமர், போட்டியின்றி வென்ற எம்.பி? | எலெக்ஷன் ஃப்ளாஷ்பேக்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT