Last Updated : 02 Apr, 2024 03:04 PM

 

Published : 02 Apr 2024 03:04 PM
Last Updated : 02 Apr 2024 03:04 PM

மக்களவைக்குப் போகாத பிரதமர், போட்டியின்றி வென்ற எம்.பி? | எலெக்‌ஷன் ஃப்ளாஷ்பேக்

இந்திய வரலாற்றில் மக்களவைக்குப் போகாத ஒரே பிரதமர், தமிழக்கத்தில் போட்டியிடாமல் வெற்றி பெற்ற எம்பி என வரலாற்றில் இடம்பெற்றவர்கள் யார் என்பதை இந்த எலெக்‌ஷன் ஃப்ளாஷ்பேக் பகுதியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் ஒரே ஒருவர் மட்டுமே மக்களவையில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1951-ம் ஆண்டு நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தலில் கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பாக களமிறங்கிய டி.ஏ.ராமலிங்க செட்டியார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் பிறந்த டி.ஏ.ராமலிங்க செட்டியார் சட்டம் படித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். பின்னர், அரசியலில் இறங்கிய இவர் கோவை மாவட்ட மன்ற துணைத் தலைவராகவும், தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கோவை மாநகராட்சியின் தலைவராகவும் பணியாற்றிய பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் அரசியல் பயணத்தை நீதி கட்சியில் தொடங்கிய நிலையில், பின் காங்கிரஸில் உறுப்பினராக இணைந்தார். சென்னை மாகான சட்டமன்ற உறுப்பினராக 1921-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். பின் 1951-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத காரணத்தால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

மக்களவை சந்திக்காத ஒரே பிரதமர் - இந்தியாவில் இதுவரை பதவி வகித்த பிரதமர்களில் சௌத்ரி சரண் சிங் நாடாளுமன்றத்தை சந்திக்காத ஒரே பிரதமர் என்னும் சிறப்பைப் பெற்றிருக்கிறார். காங்கிரஸில் தன் அரசியல் பயணத்தைத் தொடங்கியபோதும், சரண் சிங் 1967-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி,’பாரதீய கிரந்தி தள்’ எனும் பெயரில் அரசியல் கட்சியை உருவாக்கினார்.

சௌத்ரி சரண் சிங் 1967-ம் ஆண்டு பிற கட்சிகள் ஆதரவுடன் முதன்முறையாக உத்தரப் பிரதேச முதல்வர் ஆனார். பின்னர் 1970 மற்றும் 1975 தேர்தல்களிலும் வென்று நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவசர கால நிலையின்போது பிரதமர் இந்திரா, சரண் சிங்கை சிறையில் அடைத்தார். அதனால் கோபமுற்ற சரண் சிங் தனது போட்டி நேரு மகள்தான் என்று அறிவித்தார். 1977-ம் ஆண்டு பாரதிய லோக் தள் கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்து ’ஜனதா’ என்னும் பெயரில் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்க்கொண்டது.

அப்போதுதான் ஜனதா கட்சியின் மொரார்ஜி தேசாய் பிரதமராக முன்மொழியப்பட்டார். சரண் சிங்குக்கு இந்திய துணைப் பிரதமர் பதவி வழங்கப்பட்டது. உட்கட்சிக் குழப்பங்கள் காரணமாக மொரார்ஜியின் அமைச்சரவை கவிழும் என்கிற நிலையில், 1979-ம் ஆண்டு மொரார்ஜியே முன்வந்து பதவி விலகினார். புதிய கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முயற்சி மேற்கொண்டார் சரண் சிங். அவர் 64 உறுப்பினர்கள் ஆதரவுடன் இந்திரா காங்கிரஸ் கட்சி சரண் சிங்குக்கு ஆதரவு தருவதாக வாக்குறுதியளித்த நிலையில் பிரதமரானார்.

1979-ம் ஆண்டு ஜூலை 28-ம் தேதி அன்று பிரதமராக பதவியேற்ற சரண் சிங் 1979-ம் ஆண்டு 20 ஆகஸ்ட் அன்று பதவி விலகினார். 23 நாட்கள் மட்டுமே பிரதமராக இருந்த அவர் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோர இருந்த நிலையில், காங்கிரஸ் அளித்து வந்த ஆதரவை இந்திரா காந்தி திரும்பப் பெற்றதால் நம்பிக்கை வாக்கெடுப்பைக் கூட சந்திக்காமல் பதவி விலகி விட்டார். இதனால், இந்தியாவில் பிரதமர் ஒருவர் குறுகிய காலத்தில் மக்களவையைச் சந்திக்காதவர் என்னும் பெயரை சரண் சிங் பெற்றார்.

முந்தைய பகுதி > தமிழகத்தில் அதிக முறை வென்ற எம்.பி.க்கள் யார், யார்? | எலெக்‌ஷன் ஃப்ளாஷ்பேக்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x