Published : 07 Feb 2018 07:25 PM
Last Updated : 07 Feb 2018 07:25 PM

ரஜினி அரசியல்: 21- பாபா படப்பெட்டியும் பதற்றமும்

பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் ரஜினி பேசியதற்கு காட்டமாக கண்டனம் தெரிவித்து ராமதாஸ் பேசிய பேச்சினை தொடர்ந்து, ரஜினி ரசிகர்கள் கொந்தளிப்பில் ஆழ்ந்தனர். ராமதாஸ் பேசியது ஆகஸ்ட் 11-ம் தேதி. அது இரண்டு நாட்கள் கழித்தே செய்திகள் வெளிவந்தன. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து - அதாவது ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தன்றுதான் 'பாபா' படம் ரிலீஸ் ஆனது.

அதற்கு முந்தைய நாள் இரவே சென்னையில் மட்டும் 'பாபா' படத்துக்கான ரசிகர் மன்ற காட்சிகள் திரையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதற்கான டிக்கெட்டுகள் இரண்டு நாட்களுக்கு முன்பே ரசிகர் மன்றங்களுக்கு விநியோகிக்கப்பட்டு விட்டன. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.75. நான்கு டிக்கெட்டுகள் சேர்த்து ஒன்றாகவே இவை வழங்கப்பட்டன. அந்த டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் ரூ.400 வரை விற்கப்பட்டன.

இதற்கு முன்பு ரிலீஸான ரஜினியின் படம் 'படையப்பா' 1999-ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுக்கு வெளியாகி தமிழ்நாட்டிலும், தென் மாநிலங்களிலும் மொத்தம் 123 தியேட்டர்களில் வெற்றி விழா கொண்டாடியிருந்தது. 11 தியேட்டர்களில் வெள்ளி விழாவும் கண்டது. சென்னையில் 210 நாட்களும், கோவையில் 275 நாட்களும் ஓடி சாதனை படைத்தது. 'படையப்பா'வுக்குப் பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்கள் படங்களே வராத ஏக்கத்தில் இருந்தனர் ரஜினி ரசிகர்கள்.

அந்த ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் நிறைந்து நின்ற நிலையில் 'பாபா' படம் வருவதால் அது மகத்தான வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கையில் பட விநியோகஸ்தர்கள் போட்டி போட்டுக்கொண்டு அப்படத்தை அதீத விலை கொடுத்து வாங்கினர். 'அண்ணாமலை', 'பாட்ஷா' படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணாதான் இப்படத்தின் இயக்குநரும் என்பதாலும் இந்த எதிர்பார்ப்பு கூடி நின்றது.

இந்த நிலையில்தான் மருத்துவர் ராமதாஸின் அரசியல் தாக்குதல் ரஜினியின் 'பாபா' படத்தை நிலைகுலைய வைத்தது. படம் ஓட வேண்டும். மிகுந்த எதிர்பார்ப்புடன் விலை கொடுத்து வாங்கிய விநியோகஸ்தர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றெல்லாம் கவலையில் ஆழ்ந்தது ரஜினி தரப்பு. எதுவும் பேசி சிக்கலில் ஆழ்ந்து விடக்கூடாது என்று எந்த டயலாக்கையும் உதிர்க்காமல் அமைதி காத்தார் ரஜினி.

அதையும் மீறி, அங்கங்கே பாமக தொண்டர்களுக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. பல இடங்களில் 'பாபா' படத்தின் திருட்டு வீடியோ காப்பிகள் எடுத்து மக்களுக்கு பலர் விநியோகிப்பதாக தகவல்கள் பரவின. அதன் உச்சகட்டமாக 2002 ஆகஸ்ட் 15-ம் தேதி அதிகாலை 'பாபா' படம் திரையிடப்பட இருந்த பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் தியேட்டரின் திரை கிழிக்கப்பட்டது. படத்தின் கட்அவுட், பேனர்கள் கிழித்து, உடைத்து சின்னாபின்னப்படுத்தப்பட்டன. படப்பெட்டி கடத்திச் செல்லப்பட்டது. விருத்தாச்சலத்தில் படத்தை திரையிட இருந்த தியேட்டரின் மேலாளர் கடத்தப்பட்டார்.

அதனால் தமிழகம் முழுவதும் 'பாபா' படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் பதற்றம் நிலவியது. பெரும்பான்மை தியேட்டர்களில் போலீஸ் காவலுடன் படம் ஓடியது. பாமக பலம் வாய்ந்த வட மாவட்டங்களில் பல தியேட்டர்களில் 'பாபா' திரையிடுவது நிறுத்தி வைக்கப்பட்டது. இதுபற்றிய தகவல்களும் ரஜினிக்கு தெரிவிக்கப்பட்டதாக அடுத்தடுத்து செய்திகள். 'உணர்ச்சி வசப்படாதீர்கள். அமைதியாக இருங்கள். வன்முறையில் ஈடுபடுபவர்களை நீதிமன்றத்தில் சந்திப்போம்!' என்று ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தார் ரஜினி.

ஜெயங்கொண்டத்தில் திரை கிழிக்கப்பட்ட தியேட்டருக்கு திருச்சி காவேரி தியேட்டரில் ஸ்டாக்கில் இருந்த பழைய திரை உடனே அனுப்பி வைக்கப்பட்டது. அந்த திரை ஜெயங்கொண்டம் தியேட்டருக்கு மதியம் 11.30 மணிக்கு வந்து சேர, அந்த ஸ்கிரீனை கட்டும் வேலை ஒரு பக்கம் அங்கே நடக்க, இன்னொரு பக்கம் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் டாடா சுமோ வேனில் வேறு ஒரு படப்பெட்டி சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது. இந்த ஏற்பாடுகளை ரஜினியே திருச்சி அடைக்கல்ராஜிடமும், சென்னையில் படத் தயாரிப்பாளரிடமும் பேசி ஏற்பாடு செய்ததாக தகவல்கள் வெளியாகின (பின்னர் ரஜினி இதில் நஷ்டப்பட்ட தியேட்டர்காரருக்கு ரூ.1 லட்சம் வழங்கினார் எனவும் செய்திகள் வந்தன).

இந்த களேபரங்களுக்கிடையே ஜெயங்கொண்டத்தில் முதல்காட்சி அன்று 3.15 மணிக்கே தொடங்கியது. அதில் ரசிகர்கள் காட்சி முதலாவதாக நடந்தது. அந்த மாவட்ட எஸ்.பி பன்னீர்செல்வத்தின் தலைமையில் பாதுகாப்புப் பணிகள் தீவிரமாகவும் இருந்தன. அவர்கள் களவு போன படப்பெட்டியை யார் எடுத்துச் சென்றார்கள் என்பதை கண்டுபிடிக்கவேயில்லை. அதற்கான முன் முனைப்பு கூட காட்டவில்லை. மாறாக, 'படப்பெட்டி களவு போனதை கண்டுபிடிப்பது இப்போதைக்கு கிடையாது. மறுபடியும் இங்கே படம் போடறதுலயும், ரசிகர்களாலும் எந்த கலாட்டவும் நடந்து விடக்கூடாது என்பதைத்தான் கவனமாக பார்க்கிறோம்!' என்றனர்.

இந்த விவகாரத்தில் பாமக உள்ளூர் நிர்வாகிகள் தரப்பிலோ இதற்கு நேர் எதிர் ரியாக்ஷன் இருந்தது. 'மாநாட்டுல எங்க ஐயா எங்களுக்குச் சொன்ன செய்திக்கு ரஜினி ரசிகன்னு சொல்லிட்டு எவனவனோ சகட்டு மேனிக்கு எங்க ஐயாவைப் பேசறான். அவங்களுக்கு எதிராக நாங்க ஏதாச்சும் செய்யணும்னு நினைச்சா ராத்திரியில செய்ய வேண்டிய அவசியம் இல்லை. பட்டப்பகல்லயே செய்வோம். டிவியில சில செய்திகளை பார்த்த கோபத்துல உணர்ச்சி வசப்பட்ட சில இளைஞர்கள் யாராவது இதை செய்திருக்கலாம். ஆனா எங்களுக்கும், இந்த சம்பவத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!' என்றனர்.

என்றாலும் இச்சம்பவத்தை அடியொற்றி பாமகவின் சில நிர்வாகிகளை அழைத்த போலீஸ், 'எப்படியாவது அந்தப் பெட்டியை மட்டும் கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க ஐயா. யாராவது மேலே சின்னதா கேஸ் போட்டுட்டு உடனே ஜாமீன்ல விட்டுடறோம்!' என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர்.

கடைசியில் பெரம்பலூர் சின்னவளையம் முந்திரிக்காட்டில் படப்பெட்டியை கைப்பற்றியதோடு, அதை வைத்திருந்த இருவரை கைது செய்தது. இருந்தாலும், 'பண்ருட்டியில் கொலை மிரட்டலுக்கு பயந்து அங்குள்ள தியேட்டரில் 'பாபா' படத்தை திரையிடவில்லை. கொலை மிரட்டலின் காரணமாக திண்டிவனத்தில் ஓடிக் கொண்டிருக்கும் 'பாபா' படத்தை நிறுத்தப் போறாங்க!' என்றெல்லாம் 'பாபா' திரையிடப்பட்ட முதல் இரண்டு மூன்று நாட்களிலும் இதே அரசியல் வதந்திதான் மீடியாக்கள் மத்தியில் ஒலித்தது.

இப்படி பரபரப்பான சூழ்நிலையில் வெளியான 'பாபா' வழக்கமான ரஜினி படங்களைப் போல அமையவில்லை. பொழுதுபோக்கு அம்சங்கள் குறைவாகவும், ஆன்மிகம் அதிகமாகவும் இருந்தது. எனவே இப்படம் ரசிகர்களுக்கே பெரும் ஏமாற்றத்தை அளித்தது. தவிர இந்தப் படம் திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரச்சினைகளை சந்தித்ததால் ஒரே நேரத்தில், ஒரே ஊரில் ஏராளமான தியேட்டர்களில் திரையிடப்பட்டு, ஒரே நாளில் நான்கைந்து காட்சிகள் ஓடின. இதனால் விரைவிலேயே கூட்டம் குறையத் தொடங்கியது.

அதன் வெளிப்பாடாக இப்படம் திரையிடப்பட்ட ஒரு வாரத்திலேயே தியேட்டர்களில் கட்டணத்தை குறைத்து அறிவித்தார் ரஜினியின் மனைவி லதா. ரஜினியின் 'பாபா' படம் சம்பந்தமான ஸ்டில்கள், அவரது ஸ்டைல், அவர் படங்களில் பயன்படுத்திய அலங்காரப் பொருட்கள் இவைகளின் மாடல்களை, ஸ்டிக்கர், டி சர்ட்டுகளை ஏகமாக பல கம்பெனிகள் தயாரித்து விற்பனையில் ஈடுபட்டன. அதில் லாபமும் அடைந்தன. அதன் எதிரொலியாக அவற்றை வர்த்தக ரீதியாக பயன்படுத்த ரஜினியின் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த நிலையில் பாபா உடைகள், பாபா 3 டி ஸ்டிக்கர், பாபா டி சர்ட்டுகள் போன்றவை ரயோ என்ற பிராண்ட் பெயரில் கொண்டு வரப்பட்டது. இதனை சென்னையில் நடந்த விழாவில் 23.08.2002 அன்று தொடங்கி வைத்துப் பேசினார் ரஜினியின் மனைவி லதா.

பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x