Published : 03 Feb 2018 06:09 PM
Last Updated : 03 Feb 2018 06:09 PM
மத்திய பாஜக கூட்டணி அரசு தனது ஆட்சிக்காலத்தின் கடைசி முழு அளவிலான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. கடைசி பட்ஜெட் என்பதால் பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் இருந்தன. தேர்தலை கணக்கில் கொண்டு பல்வேறு திட்டங்களும், மக்களை ஈர்க்கும் பட்ஜெட்டாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு பரவலாக இருந்தது.
சாதாரண மக்கள் தொடங்கி பொருளாதார நிபுணர்கள் வரை பலரும், பல்வேறு விதமான எதிர்பார்ப்புகளை வைத்திருந்தனர். ஜிஎஸ்டிக்கு பிந்தைய முதல் பட்ஜெட் என்பதாலும், ரயில்வேக்கு தனி பட்ஜெட் இல்லை என்பதாலும், இந்த ஆண்டு பட்ஜெட் கூடுதல் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருந்தது.
இந்த பட்ஜெட் பெண்கள், முதியவர்கள், கிராமப்புற மக்கள், விவசாயிகளுக்கான பட்ஜெட் என பாஜக அமைச்சர்கள் பெருமை பொங்க கூறுகின்றனர். இது ஒன்றுமே இல்லாத வெற்று பட்ஜெட் என எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன் வைக்கின்றன.
இந்தியா சில ஆண்டுகளாக பின்பற்றி வரும் தராளமயப் பொருளாதார கொள்கையின் நீட்சியே இந்த பட்ஜெட் என்பது சில பொருளாதார நிபுணர்களின் கருத்து. ஆனால் வேறு சிலரோ பட்ஜெட் அறிவிப்புகள் எந்த அளவிற்கு நடைமுறை சாத்தியம் என்ற கேள்வியையும் முன் வைக்கின்றனர்.
ஆனால் அறிவிப்புகளும், விடை தெரியாத கேள்விகளும் பட்ஜெட்டில் ஏராளமாகவே உள்ளன.
வருமான வரி உச்சவரம்பு - ஏமாற்றம்
மத்தியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது முதல் வருமான வரி உச்ச வரம்பு உயர்த்தப்படாத நிலையில் கடைசி பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. ஆனால், உச்ச வரம்பு உயர்த்தப்படாதது ஏமாற்றத்தையே அளித்துள்ளது. அதுபோலவே 80சி உட்பட பிற சலுகை அளவை 1.5 லட்சத்தில் இருந்து கணிசமாக அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதுவும் செய்யப்படவில்லை.
மாத சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரியை கணக்கீடு செய்யும்போது, அவர்களின் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுகளுக்காக செய்யும் செலவுத்தொகையை நிலையாக கணக்கிட்டு, கழித்துக் கொள்வதே நிலையான கழிவு என்பதாகும். மாத சம்பளதாரர்கள், 40,000 ரூபாயை நிலையான கழிவாக பெற்றுக் கொள்ள முடியும்.அதேசமயம் தற்போது வழங்கப்பட்டு வரும் போக்குவரத்து மற்றும் மருத்துவ செலவுக்காக கணக்கீட்டின் அடிப்படையில் பெறும் விலக்கு இனிமேல் இருக்காது.
வருமான வரியில் தற்போது கல்விக்காக வசூலிக்கப்படும் கூடுதல் வரியான 3 சதவீதம் என்பது மாற்றப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக கல்வி மற்றும் மருத்துவ காப்பீட்டு திட்டங்களுக்காக 4 சதவீத கூடுதல் வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செலுத்த வேண்டிய தொகை கூடுதலாகும். எனவே கொடுத்த சிறிய சலுகையையும் பறித்துக் கொண்டது பட்ஜெட். மாதம் 50 ஆயிரம் சம்பளம் வாங்குபவர்களுக்கு கூட, புதிய வருமான வரி சலுகையால், அதிகபட்சம் 300 ரூபாய் சேமிப்பானாலே அதிகம் என்கின்றனர் வருமான வரி ஆலோசகர்கள்.
பெண்கள் - முதியவர்கள்
பெண்கள் மற்றும் முதியவர்களுக்கான சில திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் புதிதாக பணிக்கு சேரும்போது அவர்கள் செலுத்தும் வருங்கால வைப்பு நிதி பிடித்தம், 12 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சம்பளம் கூடுதலாக இருக்கும். அதை தவிர பெரிய பயன் ஏதும் இல்லை. இதில் அரசின் நிதி உதவியோ, சலுகையோ எதுவும் இல்லை.
மூத்த குடிமக்கள் வங்கி மற்றும் தபால் நிலையங்களி்ல் டெபாசிட் செய்யும் தொகைக்கான வட்டிக்கு தற்போது 10 ஆயிரம் ரூபாய் வரை விலக்கு பெறுகின்றனர். இனிமேல் இது, 50 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் ஓய்வுக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யும் மூத்த குடிமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்து உள்ளது.
மருத்துவ காப்பீடு
நாடுமுழுவதும் 5 கோடி குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை - எளிய மக்களுக்கும் மருத்துவ காப்பீடு கிடைக்கும் இந்த திட்டம் பெரும் வரவேற்பை பெறும் என பாஜக நம்புகிறது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தலுக்கு இந்த திட்டம் பெரிய அளவில் கைகொடுக்கூடும் என்பது பாஜகவின் எண்ணம். ஆனால் இந்த திட்டம் எப்படி? செயல்படுத்தப்பட போகிறது என்ற கேள்வி உள்ளது. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் மருத்துவ காப்பீட்டு திட்டம் அமலில் உள்ள நிலையில், அவை சரியான முறையில் செயல்பட வில்லை என்ற புகாரும் உள்ளது. பிரமாண்டமாக அறிவிக்கப்படும் வெற்று தேர்தல் அறிவிப்பாகி விடக்கூடாது என்ற கவலையும் உள்ளது.
விவசாய திட்டங்கள்
2022ம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள விவசாயிகள் வருமானம் இரண்டு மடங்காக உயரும் என பட்ஜெட்டில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார். ஆனால், இது எந்த வகையில் சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. விவசாய விளைப் பொருட்களுக்கு உற்பத்தி செலவைப்போல் ஒன்றரை மடங்கிற்கு நிகராக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகளுக்கு, 11 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்படும் எனவும், விவசாய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள், விவசாய விளை பொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கு பதிலாக, விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு சலுகை போகவும் வாய்ப்புள்ளது.
கொடுத்ததும் பறித்ததும்
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வருவதால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. எனவே அதற்கான கலால் வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. அதை ஏற்று பட்ஜெட்டில் லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு 2 ரூபாய் வரி குறைக்கப்படும் என பட்ஜெட்டில் ஜேட்லி அறிவித்தபோது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அது, சற்று நேரம் கூட நீடிக்கவில்லை. இழப்பை சமன்படுத்தும் வகையில் சாலை மேம்பாட்டு உள்கட்டமைப்பிற்காக கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஜேட்லி இதன் மூலம் குறைக்கப்பட்ட வரி, வேறொரு வடிவில் மீண்டும் வசூலிக்கப்படுகிறது. மொத்தத்தில் மாற்றம் எதுவும் இல்லை.
கார்ப்பரேட் நிறுவனங்கள்
பெரு நிறுவனங்களிடம் இருந்து வசூலிக்கப்படும் கார்ப்பரேட் வரியை, 50 கோடி ரூபாய் வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக கடந்த பட்ஜெட்டின் போதே அறிவிக்கப்பட்டது. இந்த சலுகை 250 கோடி வரையில் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கும் இந்த பட்ஜெட்டில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது. எங்கு வரி வருவாய் ஈட்டப் பட முடியமோ அங்கு சலுகை வழங்கப்பட்டுள்ளது.
மூலதன ஆதாய வரி
பங்குச்சந்தையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களுக்கு ஒராண்டுக்கு மேற்பட்ட மூல தன ஆதாயத்திற்கு வரி விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை இருந்து வருகிறது. இந்த பங்குச்சந்தைகளி்ல் முதலீடு செய்யும் முதலீட்டு நிறுவனங்கள் 4 லட்சம் கோடி ரூபாய் வரை வரி சலுகை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கு வரி வசூலிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆனால், அவ்வாறு செய்தால் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்ய தயக்கம் காட்டும் என கூறப்பட்டது. ஆனால், இந்த பட்ஜெட்டில் இதற்கான பிள்ளையார் சுழி முதன்முறையக போடப்பட்டுள்ளது. சேவை வரியில் நடந்ததை போல வரும் காலத்தில் மத்திய அரசு, இதன் மூலம் பெரிய அளவில் வரி வசூல் செய்யும் என நம்பலாம்
கர்நாடக தேர்தலும், சொந்த மாநிலமும்
பெங்களூரூ நகருக்காக உள்ளூர் ரயில் வசதிக்கு 17,000 கோடி ரூபாய் அதற்காக ஒதுக்கப்பட்டிருப்பது இந்த ஆண்டு நடைபெறும் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவுக்கு உதவும். அதுபோலவே பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் வதோதராவில் ரயில் பல்கலை உள்ளிட்ட திட்டங்களும் பாஜக மற்றும் பிரதமர் மோடியின் அரசியல் காய்நகர்த்தல் என்பது வெளிப்படை. இதுபோலவே கிராமப்புறங்களுக்கு கேஸ் இணைப்பு, மின்சார இணைப்பு, கழிப்பறை அமைக்கும் திட்டம் என ஏற்கனவே இருந்து வரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வாக்களிப்பது யார்?
மொத்தத்தில் மத்திய பட்ஜெட்டில் இந்திய அரசின் பொருளாதார வளம், வருவாய் அதிகரிப்பு, செலவு குறைப்பு என்பவை கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அடுத்த நிதியாண்டில் உயரும் என்ற சர்வதே நிதி அமைப்புகளும், சர்வதேச நிதியமும் பாராட்டி வருகின்றன. இந்த பாராட்டு தொடர வேண்டும் என்பது மத்திய அரசுக்கு உள்ள கவலையாக இருக்கலாம்.
அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் இது வெற்றிக்கு உதவிடக் கூடும். ஆனால் இந்தியர்களுக்கு இந்த பட்ஜெட்டில் என்ன கிடைத்தது என்பது தான் கேள்வி. மொத்தம் இந்த பட்ஜெட்டில் 24.5 லட்சம் கோடி ரூபாய்க்கான செலவினங்கள் மற்றும் 20 லட்சம் கோடி ரூபாய்க்கான வருவாயுடன் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பிரமாண்ட தொகை மிரட்டலாம். இவை யாருக்காக இந்திய அரசுக்கா? அல்லது இந்தியர்களுக்கா?
ஏனெனில் பாஜகவுக்கும், பிரதமர் மோடிக்கு வாக்களிக்க போவது இந்திய அரசு அல்ல... இந்தியர்கள் என்பதை கவனத்தில் கொண்டால் நல்லது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT