Published : 17 Feb 2018 08:48 PM
Last Updated : 17 Feb 2018 08:48 PM

ரஜினி அரசியல்: 28- ஆன்மிகத் தேடல் சர்ச்சைகள்

அலங்காரச் சொற்கள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அதுவும் நீட்சியாகி அலங்காரப் பதுமைகள் அக்கட்டிலில் அமர ஆரம்பித்து விட்டது. இந்தப் பதுமைகள் எல்லாம் 'பணம்தான் பதவிகளுக்கு உறுதுணை புரியும். புதிய பதவிகளை உருவாக்கும். அதற்கு சில ஜிகினா வேலைகளை ஏற்படுத்தினால் போதும்' என்ற நிலையை ஏற்படுத்தினார்கள். எங்கே எந்த மாலையானாலும் எனக்கே விழ வேண்டும். திருமணம் என்றால் நான்தான் மாப்பிள்ளை, இழவு என்றால் அதில் நான்தான் பிணம் என்ற நிலைக்கும் தள்ளப்பட்டது புத்தி.

பெரிய திரை, சின்னத்திரை, காட்சி ஊடகங்கள், அச்சிதழ்கள் எல்லாவற்றிலும் நான், நான், நானாகவே இருத்தல் வேண்டும். அதுதான் நம்மை எல்லா இடங்களிலும் அறிய வைக்கும், மக்களைப் புரிய வைக்கும். ஆட்சிக் கட்டிலில் அமர வைக்கும். அப்படியான ஆகப் பெரும் பேசுபொருள் சகல திக்குகளிலிருந்தும் வந்தே தீர வேண்டும். அப்போதுதான் இங்கே இப்போதைக்கு ஒரு தலைவன் உருவாகும் வழியாக இருக்க முடியும் போலிருக்கிறது.

நாளை இதுவே வேறு உத்தியில் மாறலாம். தியாகத்தன்மை முடிவு செய்து, கிளர்ச்சிகள், போராட்டங்கள், சிறைக் கொட்டடிகள், சுதந்திரப் போராட்ட வேட்கைகள் அரசியலை முடிவு செய்த காலம் போய், மக்களுக்காக பாடுபடும் தன்னலத் தலைவர்களின் ஈர்ப்பும் அகன்று போய், அடுக்கு மொழி வசனங்கள் ஆட்டிப் படைத்தது போய், சினிமா கவர்ச்சி இழுத்துப் பிடித்தது போய், இப்போது பணமும், ஆதிக்கமும், சாதியும், மதமும் கூட கோலோச்சிக் கொண்டிருக்கிறது.

அப்படியான மோசமான தலைவன் மட்டுமல்ல; நல்ல தலைவன் கூட ஏதாவது ஒரு திக்கின் கோடானு கோடி மக்களின் நாவின் உச்சரிப்பிலிருந்தே உருவாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதற்கு மிகப்பெரும் பிரபல்யம் தேவையிருக்கிறது. சிகரெட்டை தூக்கிப் போட்டு மடக்கிப் பிடித்தாலோ, ஓட்டுக்கு ரூ.10 ஆயிரம் அடையாளத்துக்கு 20 ரூபாய் நோட்டு கொடுத்தாலோ அதற்கெல்லாம் மசியக்கூடிய, மாறக்கூடிய ஜனங்களின் திரட்சி உள்ள பிரதேசமாக நம்முடைய அகமும், புறமும் மாறி வருகிறது.

சமகால ஆட்சியதிகாரத்தை பிடிக்கும் தேர்தல் அரசியலைப் பொறுத்தவரை நமக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும் இந்தக் கண்ணோட்டத்திலிருந்தே பார்க்க வேண்டியிருக்கிறது.

எதைக் 'கடவுள்' என்று மனிதன் வணங்கினானோ அதைக் கல்லாலும், அதை விட கடும் சொல்லாலும் அடித்தார் பெரியார் ஈவெரா. அந்த பகுத்தறிவு இயக்கத்திலிருந்து உதிர்த்த சில சீடர்கள் 'கோயில் கூடாது என்பதல்ல வாதம்; அது கொள்ளையர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்பதுதான்!' என்ற அடுக்குமொழி பேசி தேர்தல் அரசிலாக்கி குளிர் காய்ந்தார்கள்.

அதுவே உச்சகட்டமாக எம்ஜிஆரை மூகாம்பிகை கோயில் வரை கொண்டு போய் நிறுத்தியது. பெரியாரின் வழிவந்த திராவிட இயக்கத் தலைவராக காட்டிக் கொண்ட எம்ஜிஆர் எந்த இடத்திலும் தன் திரைப்படங்களில், 'கடவுள் மறுப்புக் கொள்கை'யை பிரஸ்தாபிக்கவில்லை.

'கடவுள் கல்தான்' என்றாலும், 'கடவுள் இல்லை' என்றாலும் இந்த மண்ணில் கடவுளுக்கு வயது லட்சம் கோடி ஆண்டுகள். கடவுள் மறுப்புக்கு வயதோ ஒரு நூற்றாண்டு கூட தேறாது. எனவே கடவுள் மறுப்பாளர்கள் மிகச் சிறுபான்மையாக இருக்கையில், அக்கொள்கை ஓட்டரசியலில் வேகாது என்பது மற்றவர்களை விட இவர்களுக்கு தெரிந்திருக்கிறது. அது இவர்களின் ரத்த நாளங்களில், மரபு அணுக்களில் கூட ஊடாடியே வந்திருக்கிறது.

அதன் உச்சகட்டமான ஆன்மிக அரசியல் காலம் என்றால் அது 2001-2006- ஆம் ஆண்டுகளாகத்தான் இருக்கும். அந்த காலங்களில் ஒரு அரசியல்வாதி ஒரு பிரபல ஜோசியரையோ, ஆன்மிகவாதியையோ பார்க்காவிட்டால் அவர் அரசியல்வாதியே அல்ல என்ற நிலை இருந்தது. உண்ணிக் கிருஷ்ண பணிக்கர், குருவாயூர் குருக்கள், அந்தியூர் ஜோசியர் என சகல திசைகளிலும் ஒரு வகைப் பட்டாளத்தை உருவாக்கி வைத்திருந்தார் ஜெயலலிதா.

யாகாவா முனிவர், சிவசங்கர் பாபா மாதிரியான ஜோதிட, ஆன்மிக சிகாமணிகள் கூட ஆருட, ஜோதிட மூட நம்பிக்கைகளை முன்வைத்து அரசியல் பேசி அரசியல்வாதிகளை நிர்ணயித்தார்கள்.

இன்றைக்கு சமூக வலைதளங்களில், ஊடகங்களில் வரக்கூடிய மீம்ஸ், நக்கல், நையாண்டி, கேலிச் சித்திரங்கள் எல்லாம் உள்ளன. மீம்ஸ் சமகால ஸ்டைல் என்றால் அந்தக்கால அரசியல் ஸ்டைல்தான் கேலிச் சித்திரங்கள். இந்த சித்திரங்கள் இல்லாவிட்டால் ஒருவர் அரசியல்வாதியாகவே திகழ முடியாது. பத்திரிகைகள், மீடியாக்கள் மூலம் குறிப்பிட்ட அரசியல் தலைவர்களுக்கு மீம்ஸ் போடாத குறையாக காமெடி தர்பார் நடத்தி வந்தவர்கள் அக்கால கட்டத்தில் சாமியார்களே ஆவர். அவர்கள் மூலமாக பத்திரிகைகளில் வரும் கேலிச் சித்திரங்களையும் தாண்டி இத்தகைய சாமியார்களை அருள் வாக்குகளையும், ஞானோபதேசங்களையும்(?!) மக்கள் ரசித்தனர்.

இந்த ரசிப்பிற்குள் அரசியல்வாதிகள் வரலாம். அரசியல் தலைவர்கள் வரலாம். சினிமா பிரபலங்கள் வரலாம். வந்தார்கள். ஜெயலலிதா மட்டுமல்ல, விஜயகாந்தும் வந்தார். மஞ்சள் துண்டுக்கு அர்த்தம் கற்பிக்கிற விதமாய் கருணாநிதியும் கூட சிலாகிக்கப்பட்டார். சினிமாவைத் தாண்டி அரசியல் தன்மைகளுடன் ரஜினியும் கூட அதற்குள் நுழைந்து வந்தார்.

அப்படி அவர் கண்டுணர்ந்து வந்த ஆன்மிகவாதிகள்/சாமியார்கள் பெரும்பாலும் உயர் மட்டத்தில் இருந்தனர். ஆன்மிகத் தேடலின்போது அவர் சச்சிதானந்த் மகராஜ் மட்டுமல்ல, ரஜனிஷ், யாகாவ முனிவர், நித்யானந்தா, தயானந்த சரஸ்வதி சுவாமிகள் என பலரையும் சந்தித்துள்ளார். அதில் அவர் குருவாக ஏற்றுக் கொண்டது சச்சிதானந்தா மகராஜ் மட்டுமே. அதே நிலையில் பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகளையும் வைத்திருந்தார்.

ஒரு கட்டத்தில் ரஜினிக்குள் நிறைந்தது இமயமலையில் அவர் சந்தித்த சில சாமியார்கள் மட்டுமே. இப்போதும் அவர் தன் வீட்டில் பிரபலங்களை சந்திக்கும் அறையில் யுக்தேஷ்வர், மகாசாயர் போன்ற ஆன்மிகப் பெரியவர்களின் படங்கள்தான் மாட்டி வைக்கப்பட்டிருக்கின்றன. அவர் ஆன்மிகவாதிகளுடன் வெளிப்படையான நெருக்கம் பாராட்டியதால் அரசியல்வாதிகளுக்கு மீடியாக்கள் போடும் கேலிச் சித்திரங்களை மிஞ்சும் அளவு ரஜினியின் அரசியல் ஆருடம் சொல்லும் சாமியார்களும் பெருகினர். அந்தப் பழக்க தோஷத்தில் ரஜினி எந்த சாமியாரை சந்தித்தாரோ, அந்த சாமியாரை மீடியாக்கள் மொய்ப்பதும் வாடிக்கையானது. அதில் ஒன்றாகத்தான் சச்சிதானந்த் மகராஜ் பேட்டியும் வெளியானது.

அதற்கு முன்பே ரிஷிகேசத்தில் வாசம் செய்தவரும், கோவை ஆனைகட்டியில் ஆர்ஷ வித்ய குருகுலம் அமைத்தவருமான பூஜ்யஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமியும் ரஜினியின் அரசியல் தன்மைக்கு பஞ்ச் வசனங்கள் அளித்தார். அவர் எப்போதெல்லாம் கோவை ஆனைகட்டி குருகுலத்திற்கு வருவாரோ, அப்போதெல்லாம் ரஜினியும் வருவது வழக்கமாக ஆகிப்போனது. இந்த ஆசிரமத்தில் பகவத்கீதை, உபநிஷத்துக்களும் சமஸ்கிருதமும், சாதி, மத, பேதமில்லாது அனைவருக்கும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதையெல்லாம் தாண்டி இங்குள்ள பணியாளர்கள் இன்றளவும் ரஜினி புராணம் பாடுகிறார்கள்.

சுவாமியின் ப்ரிய சீடர்களில் முக்கியானவர் ரஜினி. சுவாமி சொன்னால் ரஜினி அப்படியே கேட்பார். 'படையப்பா' படம் எடுத்த போது அதற்கான அர்த்தத்தை ரஜினிக்கு சொன்னதே சுவாமிதான். அதை 'படையப்பா' வெற்றி விழாவிலேயே சொன்னார் ரஜினி. சுவாமிஜி சொன்ன பிறகுதான் அதுல வேல் தூக்கிட்டு வர்ற சீனையெல்லாம் சேர்த்தார் ரஜினி என்பதை இன்றும் இங்கே சொல்பவர்கள் இருக்கிறார்கள்.

''சுவாமிஜி ரிஷிகேசத்துல இருந்து இங்கே எப்ப வர்றாரோ அப்ப ரஜினிக்கும் அது தெரிஞ்சுடும். உடனே கார் கண்ணாடிகளை ஏத்திவிட்டுட்டு இங்கே வந்து சேர்ந்துடுவார். சில சமயம் குடும்பத்தோட கூட வந்து தங்குவார். அவருக்குன்னு இங்கே குடில் இருக்கு. ரொம்ப நாள் அவர் வந்து போறது தெரியாமலே இருந்தது. சாயங்காலம் நேரம்தான் வெளியில் வருவார். வாக்கிங் போவார். சத்தமில்லாம வந்துடுவார். ஒரு தடவை அவர் அப்படி வாக்கிங் போகும்போது மக்கள் பார்த்துட்டாங்க. அப்புறம் என்ன? படையே வந்துடுச்சு. அப்புறம் போலீஸ் செக்யூரிட்டி போட்டு கட்டுப்படுத்த வேண்டியதாயிடுச்சு. அதனால அவர் உடனே கிளம்ப வேண்டியதாயிடுச்சு. அதுலயிருந்த ரஜினி இங்கே வர்றேன்னா கூட சுவாமிஜி வேண்டாம்னுடுவார். ரிஷிகேஷ்ல இருந்த போது மட்டும் வந்து பார்க்க அனுமதிப்பார்!''

2000-ம் ஆண்டில் ரஜினியின் 50-வது பிறந்தநாள். அதையொட்டி ஒட்டி அப்போது நான் பணிபுரிந்த முன்னணி வார இதழில் இடம் பெறுவதற்காக இங்கே பேட்டிக்கு சென்றபோது ஆசிரமத்தவர்கள் தெரிவித்த கருத்து இது.

இப்போதும் கூட பலமுறை செய்தி சேகரிப்புப் பணிக்காக இந்த குருகுலம் தாண்டித்தான் செல்கிறேன். பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் இறந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. என்றாலும் ரஜினியையும் இந்த ஆசிரமத்தையும், சுவாமியையும் இணைத்து பேசாத நபர்கள் இல்லை என்றே சொல்லலாம்.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x