Published : 06 Feb 2018 05:10 PM
Last Updated : 06 Feb 2018 05:10 PM

ரஜினி அரசியல்: 20 - வீரப்பன் வடிவில் வந்த வில்லங்கம்

1998 பிப்ரவரியில் நடந்த மக்களவைத் தேர்தலில் ரஜினி ஆதரித்தும் திமுக-தமாகா கூட்டணி தோல்வியை சந்தித்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தமிழக அளவில் அதிமுக-18, பாமக-4, மதிமுக-3, ஜனதா கட்சி-1, தமிழக ராஜீவ் காங்கிரஸ்-1 என மொத்தம் 30 இடங்களை வென்றது. ஐக்கிய முன்னணியில் இருந்த திமுக-5, தமாகா-3, சிபிஐ-1 ஆகியவை 9 இடங்களைப் பிடித்தன.

மத்தியில் ஆட்சியமைத்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் அதிமுகவும் இடம் பெற்றது. இந்த ஆட்சி நடந்த 13 மாத காலமும் தமிழகத்தைப் பொறுத்தவரை கோவை தொடர் குண்டு வெடிப்பும், அதை ஒட்டி தீவிரவாதச் செயல்களை இரும்புக்கரம் கொண்டு காவல்துறை ஒடுக்கும் செயல்களுமே முக்கிய இடம் பிடித்தன.

தேர்தல் முடிந்து முடிவுகள் வந்த வேகத்தில் ரஜினியின் குண்டுவெடிப்பு வாய்ஸும் பெரும் சர்ச்சைகளில் அகப்பட்டது. அவர் கொடுத்த குண்டு வெடிப்பு வாய்ஸ் காரணமாக ஏராளமான ரஜினி ரசிகர் மன்றங்கள் கலைக்கப்பட்டதாகவும் செய்திகள் அவ்வப்போது வந்தபடி இருந்தன. என்றாலும் அதற்குப் பின்பு சுத்தமாக அரசியல் மவுனியானார் ரஜினி.

1998 மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளித்த வந்த அதிமுக 13 மாதத்தில் தன் ஆதரவை விலக்கிக் கொண்டது. அதனால் மத்தியில் வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது. அதிமுக பாஜக கூட்டணியிலிருந்து விலகியதும், திமுக அதில் கூட்டணி கொண்டது.

இதனால், மூன்றாண்டுகளாக தமிழகத்தில் செயல்பட்டு வந்த திமுக-தமாகா கூட்டணி உடைந்தது. பிறகு 1999 செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடந்த மக்களவைத் தேர்தலில் மும்முனை போட்டி காணப்பட்டது. திமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, மதிமுக, பாமக, சு.திருநாவுக்கரசரின் எம்.ஜி.ஆர் அதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தியின் தமிழக ராஜீவ் காங்கிரஸ் போன்ற கட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இதனை எதிர்த்து அதிமுக காங்கிரஸுடன் கூட்டணி அமைத்தது. தமிழகத்தைப் பொருத்தவரை இக்கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இடம் பெற்றன. இவை தவிர இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் போன்ற முஸ்லிம் கட்சிகளும் அதிமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவளித்தன.

இவை தவிர தமாக-விடுதலைச் சிறுத்தைகள்-புதிய தமிழகம் கூட்டணியும் களத்தில் இருந்தது.

1998 தேர்தலில் வாய்ஸ் கொடுத்ததன் பின்னணியிலோ என்னவோ எந்த இந்த தேர்தலில் எந்த ஓர் அரசியல் நிலைப்பாட்டையும் ரஜினி வெளிப்படுத்தாமல் இருந்தார். ஆனால் திமுக தலைவர் கருணாநிதியுடனும், தமாகா தலைவர் மூப்பனாருடனும் இணக்கமான நட்புடனே செயல்பட்டு வந்தார் ரஜினி. அதை சில சம்பவங்களே ரசிகர்களுக்கு வெளிப்படுத்தியது.

1999 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பே (1999 தமிழ் புத்தாண்டின் போது) 'படையப்பா' திரைப்படம் வெளியானது.

இந்த படத்தை ரஜினியுடன் பார்த்துவிட்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி, 'படையப்பா! அனைத்து சாதனைகளையும் உடையப்பா!' என வாழ்த்தினார். அதற்கு முன்பே 1997 ஏப்ரல் 10-ம் தேதி வெளியான ரஜினியின் 'அருணாச்சலம்' படத்தை பார்த்து விட்டும், 'தம்பி ரஜினிகாந்த் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்!' என்று தன் ஆதரவை ரஜினிக்கு தெரிவித்திருந்தார்.

எனவே திமுகவினர் ரஜினியை முன்னிறுத்தியது மட்டுமல்ல, ரஜினி ரசிகர்கள் கூட திமுக நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். குறிப்பாக 'படையப்பா' படத்தில் வரும் ரம்யா கிருஷ்ணனின் நீலாம்பரி பாத்திரத்தை ஜெயலலிதாவாக கருதி தன் நரம்புகளை முறுக்கேற்றி விட்டுக் கொண்டனர்.

அதிலும், 'நீ ஒரு தடவை ஜெயிச்சுட்டே, நான் இப்ப முழிச்சுட்டேன்!' என்று கடைசியாக ரஜினி, ரம்யா கிருஷ்ணனைப் பார்த்துப் பேசும் வசனத்தை ஜெ.வை மனதில் நிறுத்தி ஆகர்சிக்கவே செய்தார்கள். 1996 அரசியல் வாய்ஸுக்கு பின்பு வெளியான 'அருணாச்சலம்' 37க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் 100 நாட்களை கடக்க, அதில் சில தியேட்டர்களில் 200 நாளையும் கடந்து வசூலில் பெரும் சாதனையை நிகழ்த்தியது.

அதே சமயம் 1998 குண்டுவெடிப்பு சம்பந்தமான வாய்ஸுக்கு பின்பு, ரசிகர்கள் அதிருப்தி, ஆயிரக்கணக்கான மன்றங்கள் கலைப்பு, ரஜினிக்கு எதிரான பிரச்சாரம் எல்லாம் சேர்ந்து 'படையப்பா'வின் ரிசல்ட் எப்படியிருக்குமோ என்ற அச்சம் ரஜினி ஆதரவு தரப்பினருக்கு இருந்தது. அது அருணாச்சலத்தையும் முறியடித்து வெற்றி விழா கொண்டாட மிகவும் சந்தோஷப்பட்டார் ரஜினி.

'போன தேர்தலின் போது நான் சொன்ன கருத்தின் காரணமாய் ரசிகர்கள் எல்லாம் எங்கே என்னை விட்டுவிட்டு போய்விட்டார்களோ என நினைத்தேன். குண்டு வெடிப்பு சம்பவத்தால் நாடே பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. அதற்கு ஒரு குறிப்பிட்ட வகுப்புவாதம் பூசாமல் எரியும் நெருப்பை அணைப்பதற்கு என்ன செய்வது என்பதுதான் அப்போதைய யோசனையாக இருந்தது. எனவேதான் அந்த மாதிரியான கருத்தை நான் தெரிவிக்க வேண்டியதாக இருந்தது. அதைத்தான் நான் செய்தேன். அந்த கருத்தின் என் நிலைப்பாட்டை மற்றவர்கள் புரிந்து கொண்டார்களோ இல்லையோ என் ரசிகர்கள் நன்றாகவே உணர்ந்து கொண்டார்கள். அவர்கள் என் பின்னால்தான் என்றென்றும் இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதற்கு இந்த 'படையப்பா'வின் வெற்றி விழா மேடையே சான்று!'' என அன்று ரஜினி சொன்னதை நினைவு கூர்ந்தார் கோவை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளில் ஒருவராக உள்ள அபு.

இந்த வெற்றி விழா மேடைக்கு பிறகுதான் 1999 ஆம் ஆண்டு செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடந்தது. தமிழகத்தில் பாஜக-திமுக கூட்டணி 26 தொகுதிகளை கைப்பற்றியது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணி 13 இடங்களை பிடித்தது. பாஜக கூட்டணி அமைச்சரவையில் திமுகவும் பங்கு பெற்றது.

அதன் பிறகு ரஜினியை ஒட்டி பெரிய அரசியல் சர்ச்சைகள் பெரிய அளவில் வரவில்லை. அதன் திருஷ்டி பரிகாரமோ என்னவோ ரஜினி ரசிகர்களுக்கு என்ன கற்றுக் கொடுத்தார் என்ற கேள்வியுடன் புதிய அரசியல் வெடியை கொளுத்திப் போட்டார் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

பூம்புகாரில் 2002-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி வன்னியர் மகளிர் மாநாடு நடந்தது. அதில் பாமக நிறுவனர் ராமதாஸ் கலந்து கொண்டு பேசினார். அதில் அதற்கு முன்தினம் பெங்களூருவில் நடிகர் ராஜ்குமார் மகன் படவிழாவில் ரஜினி பேசியதற்கு காட்டமாக கண்டனம் தெரிவித்தார் ராமதாஸ். சந்தன வீரப்பன் ராட்சஷன். அவரைப் பிடித்து வரவேண்டும் என்று ரஜினி பேசியதாக அவர் வெளியிட்ட கருத்துகள் அத்தனையும் உணர்வுகளைத் தூண்டும் விதமாக அமைந்தது. அவை பல்வேறு செய்திப் பத்திரிகைகளில் பெரிய அளவில் வந்தது. ஒரு நடிகர் அங்கே போய் வீரப்பனை புடிக்கப்போறேன்னு சொல்றார். அவர் யார்னு உங்களுக்கே தெரியும். இவ்வளவு காலம் அவர் என்ன செஞ்சார். போய் வீரப்பனை புடிச்சுட்டு வரவேண்டியதுதானே? இதை சொன்ன நான் வீரப்பனுக்கு வக்காலத்து வாங்குவதாக சொல்வார்கள். வீரப்பனிடமிருந்து நடிகர் ராஜ்குமாரை மீட்க ஏற்பாடு செய்யுமாறு கர்நாடக முதல்வர் கிருஷ்ணா எனக்கு போன் பண்ணிக் கேட்டுக் கொண்டார். அப்போது இவர் போய் ராஜ்குமாரை காப்பாற்றியிருக்கலாமே? இவர் படத்தை நீங்க பார்க்கப் போறீங்களா? 50 கோடிங்கிறாங்க. 100 கோடிங்கிறாங்க. இவர் யாரை வாழ வைக்கப்போகிறார்? அவர் தமிழ்நாட்டுல யாரை வாழ வச்சார் சொல்லுங்க பார்ப்போம்.

தினமும் குடிச்சிட்டு நம்ம இளைஞர்களுக்கு சிகரெட், பீடி பிடிக்க கத்துக் கொடுக்கிறார். இவர்களுக்கெல்லாம் நாம கொடி புடிச்சுட்டு கோஷம் போட்டு கிட்டு வாழ வச்சிட்டு இருக்கோம். இந்த மண்ணுல இவர்களுக்கெல்லாம் இனிமே ரசிகர் மன்றம் இருக்கக்கூடாது. ரசிகர் மன்றங்களை தூக்கி எறியுங்க. சிங்கப்பூர்ல போய் கலை நிகழ்ச்சி கொண்டாடறாங்க. நடிகர் சங்கத்ததுக்கு பணம் இல்லையாம். ஏன், ஒவ்வொருத்தரும் 50 கோடி, 100 கோடின்னு வாங்கறீங்களே, ஒரு கோடியை நடிகர் சங்கத்துக்கு கொடுக்க வேண்டியதுதானே?

மலேசியாவில் போய் நிகழ்ச்சி நடத்தறாங்க. மலேசியாக்காரன் நம்மை கேவலமாக நினைக்கிறான். நிறைய பேர் எனக்கு போன் பண்ணி, என்ன இவங்க இங்கே வந்து ஆடிப்பாடி பிச்சை எடுத்துட்டு போறாங்களேன்னு கேட்கிறாங்க. இந்த சினிமாக்காரர்களுக்கும், அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நானும் கூட ஒரு படத்துல நடிச்சிருக்கேன். இந்த நடிகர்களுக்கெல்லாம் ஒன்று சொல்றேன். ஒரு மணி நேரம் எங்க பொண்ணுகளை போல வயலில் வேலை பார்க்க முடியுமா? இந்த சினிமா மாயை ஒழியணும். வேற எந்த மாநிலத்திலே, நாட்டிலே இப்படி சினிமாக்காரன் பின்னாடி போய் குட்டிச்சுவரா போயிருக்காங்க சொல்லுங்க? கிடையாது. இனியும் இனி சினிமாக்காரன் இங்கே தேவையே இல்லை. நாம் வாழ வேண்டும் என்று சொன்னால் நாம் ஆள வேண்டும்!'' என்றார் ராமதாஸ்.

இதுதான் அப்போது அவர் கொளுத்திப் போட்டு பத்திரிகைகள் கட்டம் கட்டி வெளியிட்ட சமாச்சாரம். அவரின் பேச்சுக்கு எதிராக ரசிகர்களிடம், சினிமாக்காரர்களிடம் கோபாவேசம் புறப்பட்டது.

பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x