Published : 31 Jan 2018 05:39 PM
Last Updated : 31 Jan 2018 05:39 PM
''1995-96ல் ஜெயலலிதா எதிர்ப்பு என்பது மக்கள் மத்தியில் ஆழமாகவே இருந்தது. முக்கியமாக முதல்வர் ஜெயலலிதா செல்லும் சாலையில் போக்குவரத்து அரைமணி நேரம், ஒரு மணிநேரம் நிறுத்தப்பட்டது. அதில் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ரஜினியே அதனால் பாதிக்கப்பட்டது எல்லாம் வெளிப்படையாக பத்திரிகைகளில் வந்த செய்தி. ஆனால் அதையும் தாண்டி ஏதோ அதி முக்கியப் பிரச்சினைகள் ரஜினிக்கு ஜெயலலிதா ஆட்சியில் இருந்திருக்கிறது. அப்போது அவரிடம் நெருக்கமாக இருந்த கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட சில நண்பர்கள்தான் அவரை மூப்பனாரிடம் கூட்டிப் போயிருக்கிறார்கள். அவரும், சிதம்பரமும் அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடம் ரஜினியை அழைத்து போயிருக்கின்றனர்!'' என்கிறார் அப்போது தமாகா இளைஞர் அணியில் இருந்த பிரமுகர் ஒருவர். இப்போது இவர் அதிமுகவில் இருக்கிறார்.
அவர் மேலும் பேசியது:
''தமிழகத்தில் அரசியல் சூழ்நிலைகள் சரியில்லை ஜெயலலிதா ஆட்சியின் அராஜகப்bபோக்கும் கட்டுடைத்துக் கொண்டுள்ளது. ஜெயலலிதா இரண்டாண்டுகளுக்கு முன்பே காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துவிட்டார். எனவே நாம் வரும் தேர்தலில் ரஜினியை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திக்க வேண்டும்'' என்றெல்லாம் சிதம்பரம், மூப்பனார் போன்றோர் கோரிக்கை வைத்ததாகவே சொன்னார்கள். அதற்கு நரசிம்மராவும் ஒப்புக் கொண்டுவிட்டார். அந்த காலத்தில் சோ ராமசாமியும் ஜெயலலிதா ஆட்சிக்கு எதிர் மனநிலையில் இருந்தார். அவர்தான், 'காங்கிரஸ் தனித்து நிற்பதன் மூலமும், ரஜினியை முன்னிலைப்படுத்துவதன் மூலமும் ஓட்டுகள் பிரிந்து திரும்பவும் பெரிய கட்சிக்கான அதிமுகவிற்கே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வாய்ப்புகள் இருக்கு. எனவே திமுகவுடன் கூட்டணி வைத்துப் போட்டியிடுவதே சரியானது!' என்ற கருத்தை முன் வைத்துள்ளார். அவரே இரு பக்கமும் தூதுவராக பேசியிருக்கிறார். இதற்கு நரசிம்மராவும் சம்மதித்து விட்டார்.
இதற்கிடையில் என்ன நடந்ததோ? நேரடியாகவே ஜெயலலிதா நரசிம்மராவுடன் பேசி விட்டார். அதனால் தமிழக காங்கிரஸாரின் எண்ணத்தையும் உணர்வுகளையும் மீறி அதிமுகவுடன் கூட்டணி என அறிவித்து விட்டது மத்திய காங்கிரஸ் கமிட்டி. அதை கடுமையாக எதிர்த்தே தமிழக காங்கிரஸ் உடைந்தது. தமாகாவும் உருவானது. அதனையொட்டி பல்வேறு கட்சிகள் ரஜினியின் ஆதரவை கேட்பதில் முனைந்திருந்தன. அந்த சமயத்தில் ரஜினி அமெரிக்காவில் இருந்தார். நரசிம்மராவ் ஏற்படுத்திய காங்கிரஸ் கூட்டணி குழப்பத்தினால் உணர்ச்சி வசப்பட்டிருந்த ரஜினி அமெரிக்கா செல்லும் முன்னரே, 'என்னுடைய படங்களை எந்த கட்சியும் பயன்படுத்தக்கூடாது. என் ரசிகர்கள் தேர்தலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை தேர்தலுக்கு முன்பு அறிவிப்பேன்!' என்று அறிக்கை விட்டுவிட்டே சென்றிருந்தார்.
இந்த சூழ்நிலையில்தான் மூப்பனார் உள்ளிட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் அமெரிக்காவில் இருந்த ரஜினியுடன் தொலைபேசியில் மாறி, மாறி தொடர்பு கொண்டு பேசினார்கள். ரஜினியைப் பொருத்தவரை அடுத்தது ஜெயலலிதா ஆட்சி வந்து விடக்கூடாது என்பதில் உறுதிப்பாடுடன் இருந்தார். அதன் நிமித்தம் திமுக-தமாகா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக ரஜினி சம்மதித்தார். அதில் சோ ராமசாமியின் பங்கு பெரும்பான்மையாக இருந்தது. இந்தக் கூட்டணியில் தொகுதி உடன்பாடு பிரச்சினை வந்தபோது கூட ரஜினியே தலையிட்டிருக்கிறார். அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் இருகட்சியும் சரிபாதித் தொகுதிகளை பகிர்ந்து கொண்டது போலவே சட்டப்பேரவைத் தொகுதிகளையும் தலா 117 என பாதி, பாதியாக பிரித்துக் கொள்ளவே பேசப்பட்டது. 1980-ல் இந்திராகாந்தி இருந்தபோது பேசப்பட்ட மாதிரி கூட்டணியில் எந்தக் கட்சி அதிக தொகுதியைப் பிடிக்கிறதோ, அதற்கே முதல்வர் பதவி என்றும் கூட பேசப்பட்டதாக கேள்வி.
அதற்கு திமுக இணங்கவில்லை. ஆனால் மூப்பனார் அதில் உறுதியாக இருந்தார். இன்னும் சொல்லப்போனால் ரஜினியை முதல்வர் வேட்பாளராக அறிவித்து பக்கபலமாக தமாகாவினர் இருப்பதையே அவர் விரும்பினார். அவரைப் பொருத்தவரை திராவிடக்கட்சிகளின் ஆட்சியை முறியடிக்க வேண்டும் என்ற எண்ணமே அதிகம் இருந்தது. அதற்கு ரஜினி ஒப்புக் கொள்ளவில்லை. திமுக தலைவர் கருணாநிதி ரஜினியுடன் பேசியிருக்கிறார். அவர் கொடுத்த அழுத்தத்தின் பேரிலேயே இத்தனை தொகுதிகளும், தமாகாவுக்கு இத்தனை தொகுதிகளும் என முடிவெடுத்து மூப்பனாரிடம் பேசியிருக்கிறார். அதன் பிறகே மூப்பனார் அந்த தொகுதி பங்கீட்டிற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார். இல்லாவிட்டால் அன்றைக்கே காங்கிரஸ் தலைவர் ஒருவர் தமிழக முதல்வர் ஆவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருந்தது!'' என்கிறார் அந்த காங்கிரஸ் பிரமுகர்.
இந்த சமயத்தில்தான், ''நான் அரசியலுக்கு வரவேண்டும் என்றோ, அரசியல்வாதி ஆகணும் என்றோ எப்போதுமே நினைத்துப் பார்த்தது கூட கிடையாது. திடீரென்று அரசியலுக்கு வாங்கன்னு சொன்னா அதை என்னால ஏத்துக்கவும் முடியாது. எந்த ஒரு வேலைன்னாலும் அதை ஒழுங்கா, கரெக்டா செய்யணும்னு நினைப்பேன். தனி ஒரு மனிதனால் எந்த நாட்டையும் திருத்தி விட முடியாது. நம் நாட்டை திருத்தணும்ங்ற உணர்வு இங்கே ஒவ்வொரு மனிதனுக்கும் வரணும்!'' என்று வெளிப்படையாகவே பேசியிருக்கிறார் ரஜினி. அவை ஊடகங்களிலும் வெளியாகியிருக்கிறது. அதை ஒட்டித்தான் ''எனக்கு பதவி மீது ஆசையில்லை. அப்படி ஆசைப்பட்டிருந்தேன்னா 1996ல் பதவி என்னைத் தேடி வரும்போதே அதை அனுபவித்திருக்க முடியும்!'' என்று சமீபத்தில் நடந்த ரசிகர்கள் சந்திப்பில் சொல்லியிருக்கிறார் ரஜினி என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதையே ரஜினி ரசிகர்கள் கொஞ்சம் மாற்றிப் பேசுகிறார்கள்.
''1992-வது வருஷம் 'அண்ணாமலை' படம் உருவான போதே ஜெயலலிதா எதிர்ப்பு என்பது ரஜினியிடம் உருவாகிவிட்டது. அதற்கு காரணம் அப்போதே ரஜினிக்கு எந்த அளவு செல்வாக்கு? எதற்கு அவருக்கு இத்தனை ரசிகர் மன்றங்கள், அந்த மன்றங்களை உருவாக்குபவர்கள் எந்த மாதிரியான அரசியல் பின்புலங்கள் உள்ளவர்கள் என்பதையெல்லாம் தமிழக போலீஸின் உளவுப் பிரிவு சர்வே செய்ய ஆரம்பித்து விட்டது. அதில் ஜெயலலிதா உவகை கொள்ளும்படியான தகவல்கள் இல்லை. எனவேதான் ரசிகர்கள் மீதான நெருக்கடிகளை போலீஸ் செய்ய ஆரம்பித்து. மதுரையில் மட்டுமல்ல பல்வேறு பகுதிகளில் ரசிகர்கள் மீது தாக்குதல்கள், பொய் வழக்குகள் என்பது தவிர்க்க முடியாததாகி வந்தது.
அதில் வெகுண்டே அவர் 'அண்ணாமலை'யில், ''என்னை எதுவேண்ணா செய்யுங்க. என் மாட்டு மேல கைவச்சீங்க. என் பாணியே தனியா இருக்கும்!'' என்ற பஞ்ச் வசனத்தை அரசியல்வாதி வினுசக்கரவர்த்திக்கு எதிராக வைப்பதும் நடந்திருக்கிறது.
அதே சமயம் அவருக்கு அரசியல் ஆசை என்பது அப்பவும் சரி, 1996லும் சரி இல்லவேயில்லை. அதை ரசிகர்களாகிய நாங்கள்தான் விரும்பினோம். வெளிப்படையாகச் சொன்னால் 1996 தேர்தலின் போது ரஜினிதான் எல்லாம் என்பதில் திமுகவும், தமாகாவும் தீவிரமாக இருந்தது. 'ரஜினி ரசிகர்கள் சிலருக்கு மட்டுமாவது இரு அணிகளிலும் சீட் கேட்கலாம். தலைவரிடம் கேளுங்கள்' என்றோம். தமாகா, திமுக சைடில் தலா 10 தொகுதிகள் கொடுத்தால் நம் மன்றங்களையே நம்பியிருக்கும் மூத்த ரசிகர்கள் சிலரின் அரசியல் வாழ்வு மலருமே என்றும் கேட்டுப் பார்த்தோம். அதை சத்தியநாராயணாவிடமும் சொன்னோம். அவரும் அந்த விஷயத்தை ரஜினியிடம் கொண்டு போயிருக்கிறார்.
அதைக் கேட்டு ரொம்பவுமே கோபப்பட்டு விட்டாராம் ரஜினி. 'ஒரு சீட்டு மட்டுமில்லை. தேர்தல் பணியாற்றுவதற்காக எந்த பிரதிபலனும் நம் ரசிகர்கள் அரசியல் கட்சிகளிடம் கேட்கக்கூடாது. எதிர்பார்க்கவும கூடாது. அப்படி யாராவது எதிர்பார்த்து பலன் அடைஞ்சா என்னுடைய நடவடிக்கை கடுமையா இருக்கும்னு கூட எச்சரிச்சிருக்கார். அந்த தேர்தலின்போது ரசிகர்கள் நிறைய பேர் அதிமுகவில் இருந்தனர். அவர்கள் எல்லாம் கட்சியை விட்டுவிட்டு வந்து திமுக, தமாகாவுக்கு தேர்தல் வேலை செய்தனர்!'' என்று 1996-ம் ஆண்டு அரசியலை நினைவு கூர்கிறார் கோவையை சேர்ந்த ரஜினி ரசிகர் ஒருவர்.
- பேசித் தெளிவோம்...
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT