Published : 24 Feb 2018 02:19 PM
Last Updated : 24 Feb 2018 02:19 PM
கமலும், ரஜினியும் போகிற வேகத்தைப் பார்த்தால் இனி வருங்காலத்தில் இவர்கள்தான் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி போலவும் திமுகவும், அதிமுகவும் சிந்து சமவெளி நாகரிகக் கட்சிகளாகிவிடும் போலவும் தோற்றத்தை உண்டாக்கி வருகிறார்கள்.
பல ஆண்டுகளாகவே இவர்கள் இருவரும் பேசிவைத்துக் கொண்டு சினிமா படங்களை ரிலீஸ் செய்வது போல தற்போது தங்கள் அரசியல் கட்சிகளையும் அறிவிக்க முடிவு செய்துவிட்டார்கள்.
நடிகர் கமல்ஹாசன் தொடர்ந்து ட்விட்டரிலும் பேட்டிகளிலும் மேடையிலும் கடந்த ஓராண்டாக தனது அரசியல் வருகைக்கான சூசகமான செய்தியைப் பேசி வந்தார். அதைத் தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் 21.02.2018 அன்று தனது புதிய கட்சியினைத் தொடங்கினார். நிர்வாகிகளை அறிவித்து தனது அரசியல் கட்சியையும் தொடங்கிவிட்டார்.
ரஜினி மக்கள் மன்றம் என்று ஆரம்பித்து அதற்கு நிர்வாகிகளை நியமித்து மாவட்ட வாரியாக ரசிகர்களைச் சந்தித்து வரும் நடிகர் ரஜினி, தனது அரசியல்பிரவேசத்தை கடந்த டிசம்பர் 31-ம் தேதி உறுதி செய்தார். நேற்று திடீரென 'மற்றவர்கள் சத்தம் போடட்டும் நாம் வேலையைப் பார்ப்போம்; என் ரசிகர்களுக்கு அரசியல் கற்றுத்தரவேண்டாம்' திடீரென ஆவேசமாகப் பேசியுள்ளார்.
இதற்கிடையில் காந்திய மக்கள் இயக்கம் சார்பாக ரஜினியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி கோவையில் மே 20 அன்று மாநாடு நடத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் இத்தனை ஆண்டுக்காலம் சினிமாவைத் தவிர பொதுவாழ்க்கையிலிருந்து தள்ளியே நின்றிருந்தனர். 1996-ல் ரஜினி வாய்ஸ் அரசியலில் எடுபட்டது.
அப்போது அவரை மக்கள் எதிர்பார்க்கவும் செய்தார்கள். பின்னர் தொடர்ந்து வந்த அடுத்த தேர்தலில் ரஜினி வாய்ஸ் எடுபடவில்லை. அவரது ரசிகர்கள் ஓய்ந்துபோனதுதான் மிச்சம். தற்போது அவர் சந்தித்து வருவது அந்த ரசிகர்கள்தானா என்பது கேள்விக்குறி. அது ஒருபக்கம்.
ஆனால் இப்போது ரஜினி- கமல் இருவருமே இந்த ஓராண்டுகாலமாக காட்டி வரும் உற்சாகம் முன்எப்பொழுதையும்விட பன்மடங்கு பெருகியுள்ளது என்பதை மறுக்க முடியாது. ஜெயலலிதா மறைவுக்குப் பின், கருணாநிதி ஓய்வுக்குப் பின் தமிழக அரசியலில் ஒரு பெரிய இடைவெளி விழுந்திருப்பதை யாரும் மறுக்க முடியாது.
இச்சமயம் இவர்கள் திடீரென வந்திருப்பது கேப்பில் கெடாவெட்டும் கதையாக இருக்கும்வகையில்தான் அமைந்துள்ளது. இவர்களின் வெள்ளாமை வீடு வந்து சேருமா என்பது சற்று ஆய்வுக்குரிய விஷயம்.
இந்நிலையில் இவர்கள் அரசியலில் காட்டிவரும் உற்சாகமும் தொடர்ந்து மீடியாக்கள் இவர்களை முன்னிறுத்தி வெளிச்சம் படரவிடுவதும் திமுக, அதிமுக இரண்டும் இனி சிந்து சமவெளி நாகரிகக் கால கட்சிகளாகிவிடுமோ என்று சிரிப்பை மறைத்துக்கொண்டு யோசிக்க வேண்டியிருக்கிறது.
தமிழகம் இவ்வளவு மோசமான இடத்திற்கா வந்து சேர்ந்துள்ளது என்று நம்மையறியாமல் ஒரு கேள்வியும் உடன் வந்துகொண்டிருக்கிறது.
இதைவிட மோசமான நிலையை ஆர்.கே.நகர் தேர்தல் சந்தித்ததை நாம் மறந்துவிடுவதற்கில்லை. அதனால் கமல், ரஜினியின் வருகையை உதாரசீனம் செய்துவிடமுடியாது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
திமுக, அதிமுக
கடந்த 50 ஆண்டுகளாக தமிழகம் இன்று கண்டுள்ள வெற்றிகளுக்கும் வீழ்ச்சிகளுக்கும் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும்தான் தார்மீகப் பொறுப்பு. ஆனால் வெற்றி, வீழ்ச்சி என்பது எந்தெந்த வகையான தளங்களில் என்பதைப் பிரித்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களைவிட கல்வி, வேலைவாய்ப்புகளில் தமிழகம் குறிப்பிடத்தக்க இடத்தில் இருப்பதை மறுத்துவிடமுடியாது.
ஆனால், ஊழலில் சுரண்டலில் ஆக்கிரமிப்புகளில் கடைசிவரை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களை சுத்திகரித்துக் கொள்ளவேயில்லை என்பதுதான் சோகம்.
அதேநேரத்தில் மக்கள் மனங்களில் முற்போக்கு சிந்தனையும் பல இன மக்களும் கூடிவாழும் சோஷலிச எண்ணங்களிலும் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் எந்த விதத்திலும் பின்தங்கியிருக்கவில்லை.
அதனாலேயே இந்தியா முழுவதும் முழுவீச்சில் வெற்றியடைந்த மதவாதக் கட்சியான பாஜக தமிழகத்தில் தேர்தல் களத்தில் இந்தநிமிடம் வரை எடுபடாத நிலையே உள்ளது. அள்ளஅள்ளக் குறையாது என்பதுபோல வளர்ச்சியடைந்த தமிழகத்தில் சுரண்டல் எனும் தீச்செயல் தமிழகத்தின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் சாசனமாகிப் போயுள்ளது. (லட்சம் கோடிகள் கடன்பெற்றாவது) தமிழகம் வளர்ச்சி அடைந்தது உண்மை எனில் வடமாவட்டத் தமிழர்கள் ஏன் ஆந்திராவுக்கு செம்மரம் வெட்டியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஆயிரக்கணக்கான எண்ணிக்கையில் சிறையில் அடைபட்டுக்கிடக்கிறார்கள்? அவ்வப்போது மர்ம மரணங்களும் என்கவுன்ட்டர்களையும் வடதமிழக மக்கள் சுமக்கும் நிலை ஏன்? தென்மாவட்டத் தமிழகக் கடலோ மீனவர்களின் வாழ்க்கை சீரடைய என்னதான் தீர்வு?
தென்மாவட்ட தமிழகத்தில் தொடர்ந்து சாதியப் படுகொலைகளும் கலவரங்களும் தொடர்ந்து உருவாகக் காரணமென்ன? தென்மாவட்டங்களில் வேலைவாய்ப்புகள் உறுதிசெய்யப்பட்டுள்ளனவா?
திமுக, அதிமுக கட்சிகளில் சாதாரண கட்சி நிர்வாகிகளாக தங்கள் வாழ்வைத் தொடங்கியவர்கள் பிற்காலத்தில் கல்லூரி பல்கலைக்கழக நிர்வாகிகளாகிப் போனது எப்படி? போன்ற கேள்விகள் எப்பொழுதும் இந்த இயக்கங்களைத் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.
பாமக, தேமுதிகவின் சமீபத்திய வீழ்ச்சிகள்
67களில் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்த திராவிடக் கட்சிகள் கடந்த 50 ஆண்டுகளாக தமிழகத்தின் பிக்பிரதர்களாகிப்போயின. இந் நிலையில் 96ல் தமாகா பெற்ற வெற்றியைத் தவிர்த்துப் பார்த்தால் பாமகவும் தேமுதிகவுமே திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தநிலையில் மக்களிடம் செல்வாக்கு பெற்று தேர்தலைச் சந்தித்து கணிசமான பிரதிநிதிகளை உருவாக்கின.
தமிழகத்தின் ஆதாரமான பிரச்சினைகளைப் பேசுவதில் பாமகவின் ஆர்வமும் பரந்துபட்ட அறிவும் வியக்கவைக்கக் கூடியது. இன்றுவரை தமிழகத்தின் நலன்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது. அதேநேரம் பாமக ஒரு வகுப்புவாதக் கட்சி என்ற அவப் பெயரை அவர்களால் துடைத்தெறியமுடியாத இடத்தில் உள்ளனர். இளவரசன் திவ்யா உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடும் செயல்களும் சோஷலிச சிந்தனையாளர்களை அத்தகைய சிந்தனை பரவியுள்ள மக்கள் சமுதாயத்தை முகம்சுளிக்கவே வைத்தன.
தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிநிலையை அடைந்த தேமுதிக பின்னர் கழுதைதேய்ந்து கட்டெறும்பான கதையாகிப்போனது. ஆனால் ஒரு கட்சியை மாநிலம் தழுவிய அளவில் வெற்றிகரமாக நடத்திய அனுபவம் பெற்றதையும் கடந்துவந்த ஒவ்வொரு தேர்தல்களையும் துணிச்சலாக எதிர்கொண்டதையும் மறுக்கமுடியாது. திராவிடக் கட்சிகளைத் தொடர்ந்து சினிமா பின்புலம் என்ற தொடர்ச்சியைப் பெற்ற தேமுதிக தொடர்ந்து சரிவையே சந்தித்து வருகிறது.
இத்தகைய ஒரு நெடிய கண்ணோட்டத்தின் அடிப்படையிலேயே ரஜினி கமல் வருகைக்கு இங்கு முக்கியவத்துவம் உருவாக்கப்படுவதை காணவேண்டியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை பாமக, தேமுதிக உள்ளிட்ட இதரக் கட்சிகள் கூட தொடர்ந்து ஆர்ப்பரித்தபோதும் திமுக, அதிமுக இரு கோட்டைகள் எதிரே வெற்றிகாண முடியவில்லை என்பதுதான் கடந்தகால சரித்திரம். அது நல்லதோ கெட்டதோ என்பதை விட அக்கட்சிகளின் கட்டுக்கோப்பும் நிர்வாக ஆளுமையும் இதுவரை தேசிய அளவில்கூட எக்கட்சியும் கண்டிராத நிலை இன்றுவரை தொடர்வது. நாம் காண்பது இவர்கள் ஆட்சியில் இருக்கும் கடந்த ஐம்பதாண்டுகால கட்டங்களைத்தான். ஆனால் அதற்கும் ஐம்பதாண்டுகாலமாக பண்படுத்தப்பட்ட நிலம் திராவிட இயக்கம் சார்ந்த அரசியல் என்பது.
ஆனால் கட்சிநிர்வாகக் கட்டமைப்புகள் சார்ந்த எந்த அனுபவமும் இல்லாத இவ்விரு திரை நட்சத்திரங்களும் ஒற்றைத் தலைமை எனும் ஒன்மேன் ஷோ வழித்தோன்றல்களாக மட்டுமே இவர்கள் இருக்கிறார்கள். அதனாலேயே இவர்களின் உற்சாகத்தைப் பார்த்து இனி திமுக, அதிமுக இரண்டும் இனி சிந்து சமவெளி நாகரிகக்கால கட்சிகளா என்று குபுக்கென பெருகும் சிரிப்பை லேசாக மறைத்துக்கொள்ளவேண்டியுள்ளது.
தவிர சிங்காரவேலர், பெரியார், ப.ஜீவானந்தம், ஆர்.நல்லகண்ணு போன்ற பரந்துபட்ட சிந்தனைத்தெளிவும் ஆழ்ந்தகன்ற சமூகக் கண்ணோட்டமும் மிக்க ஆன்றோர்களைக் கண்ட தமிழகம் இன்று ரஜினி கமல் தரப்போகும் மாற்றங்களுக்காக காத்திருக்கும் நிலை என்பது சற்று சோகம்தான்.
அதேநேரம் ரஜினியும், கமலும் முன்னெடுத்துள்ள இயக்கங்கள் ஜொலிப்பதும் அரசியலில் ஒருவேளை ஜொலிக்கப் போவதும் வெறும் திரைவெளிச்சத்தில் மட்டுமே சாத்தியமானதல்ல... சிந்தனைத் தெளிவும் செயல் திறமையும் மிக்க புதிய இளைஞர்களின் ஈடுபாட்டிலும்தான் அதற்கான வாய்ப்பு எனும்போது அவர்கள் எவ்வளவுபேர் இவர்களைநம்பி வரப் போகிறார்கள் எனும் கேள்வி மிகப் பெரிய அளவில் நம்முன்னே உருவெடுத்து எதிரே நிற்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT