Published : 05 Feb 2018 08:58 PM
Last Updated : 05 Feb 2018 08:58 PM

ரஜினி அரசியல்: 19 -கோவை தொடர் குண்டுவெடிப்பின் பின்னே...

1998 பிப்ரவரி மாத இறுதியில் நடந்த மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை ரஜினி திமுக-தமாகா கூட்டணியையே ஆதரித்தார் ரஜினி. என்றாலும் வெளிப்படையான அரசியல் வாய்ஸ் எதுவும் தரவில்லை அவர். அதே சமயம் 1996 தேர்தலில் ரஜினி வாய்ஸின் தாக்கத்தை ஜெயலலிதாவும் மறக்கவில்லை. 'சோ'வின் பங்களிப்பின் எதிர்நிலையும் அவரிடம் அப்போது உக்கிரமாய் கனன்றது.

உதாரணமாக 1998 மக்களவைத் தேர்தலின் அதிமுக வேட்பாளர் பட்டியலை 1998 ஜனவரி கடைசி வாரத்தில் அதிமுக தலைமைக் கழகத்தில் வெளியிட்டார் ஜெயலலிதா.

பத்திரிகையாளர்களுக்கு அப்போது பேட்டி அளித்த ஜெயலலிதா சோ பற்றிய ஒரு கேள்விக்கு, 'நான் தவறு செய்தேன் என்று சொல்ல சோ ஒன்றும் நீதிபதி அல்ல!' என்று வெடுக்கென்று பதிலளித்தவர், 'தினம்தினம் குண்டு வெடிக்கிறது. பஸ் கட்டணம் உயர்ந்திருக்கிறது. இதைப் பற்றியெல்லாம் அந்த நடிகர் ஏன் வாய் திறக்கவில்லை?' என்று ரஜினியின் மீது வலுக்கட்டாயமாக பாய்ச்சலும் காட்டினார்.

இந்த செய்திகள் பத்திரிகைகளிலும் வெளிவந்தன. ஆனால் ரஜினியிடம் நோ ரியாக்ஷன். என்றாலும் ஜெயலலிதா தினம்தினம் குண்டுகள் வெடிக்கிறது என்று சொன்ன சொல்லுக்கு அர்த்தம் இருந்தது. தினம்தினம் அல்ல, கோவையில் ஒரே நாளில் தொடர் குண்டுகளே வெடித்தது.

இந்தியாவிலேயே கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் போல் ஒரு நடுநடுங்க வைக்கும் துயர சம்பவம் வேறு எங்கும் நடந்ததில்லை என்பதை இன்றளவும் அரசியல் நோக்கர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.

1998 பிப்ரவரி 14-ம் நாள் மாலை கோவை ஆர்.எஸ்.புரம் மைதானத்தில் பாஜக தேசியத் தலைவர்களில் ஒருவரான அத்வானி பேச இருந்த மேடைக்கு அருகில் ஆரம்பித்து, இங்கிருநு்து கிட்டத்தட்ட 12 கிலோமீட்டர் தொலைவுக்குள் பல்வேறு இடங்களில் வெடிகுண்டுகள் வெடித்தன. 35 ஆண்கள், 10 பெண்கள், ஒரு குழந்தை உட்பட மொத்தம் 46 பேர் இந்த குண்டுவெடிப்புகளில் கொல்லப்பட்டனர். சுமார் 2000-த்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர், உலக சரித்திரத்திலேயே இல்லாத விதமாய் மக்கள் நோய்தீர்க்க வரும் மருத்துவமனை வளாகத்திலேயே குண்டுகள் வெடித்து பலர் பலியாகினர் என்பதையெல்லாம் வரலாறு பதிவு செய்துள்ளது.

1997 நவம்பரில் நடந்த காவலர் செல்வராஜ் கொலை, அதையொட்டி நடைபெற்ற கலவரச் சூழல், அதில் கொல்லப்பட்ட 19 இஸ்லாமியர்கள், அதற்கு போலீஸ் நடவடிக்கையில் மெத்தனப் போக்கு ஆகியவையே இஸ்லாமிய அமைப்புகளில் ஓரிரு பிரிவினரின் ஆவேசத்திற்கு காரணமாக அமைந்தது. அதுவே இப்படியொரு குண்டுவெடிப்பு சூழலை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த உடனே இதற்கு காரணமானவர்கள் யார் என்பதை அறிந்து கைது நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க ஆரம்பித்துவிட்டது. பதுக்கப்பட்ட குண்டுகள், வெடிக்கத் தயாராக இருந்த குண்டுகள் என பலவும் கைப்பற்றப்பட்டு செயலிழக்க வைக்கப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இந்த அசாதாரண சூழலின் போதுதான் 1998 மக்களவைத் தேர்தலும் நடந்தது. வரலாறு காணாத அளவு வெங்காய விலை உயர்ந்து கிடந்த அந்த காலகட்டத்தில் போகிற மேடைதோறும் அதைப் பற்றியே தாய்மார்களிடம் பிரச்சாரம் செய்து தன் கூட்டணிக்கான ஆதரவை (பாஜக-அதிமுக கூட்டணி) பெற்றுக் கொண்டிருந்த ஜெயலலிதாவிற்கு, வெங்காயத்திற்கு பதிலாக இந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு சம்பவங்கள் கிடைத்துவிட்டன. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர் நடந்த இந்த தொடர் குண்டு வெடிப்புகள் மூலம் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு பெருகும் என உறுதிபட கணித்தனர் அக்கூட்டணிக் கட்சி தலைவர்கள்.

இந்த சம்பவங்கள் நடந்த அதே நேரத்தில் கருணாநிதி-மூப்பனார் மற்றும் அப்போதைய ஆளும்கட்சி கூட்டணித் தலைவர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு முந்தைய கடைசிப்பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தார்கள். மாலை நான்கரை மணி வாக்கில்தான் செல்போன் மூலம் மேடையில் இருந்த முரசொலி மாறனுக்கு முதல் தகவல் வந்தது.

முகம் மாறிய மாறன் அதை ஆற்காட்டாரிடம் சொல்ல, 'இந்த அதிர்ச்சியான செய்தியை முதல்வரிடம் நான் சொல்ல மாட்டேன்!' என்று அவர் ஜகா வாங்க, பின்னர் முதல்வரின் உதவியாளர் சண்முகநாதனுக்கு சொல்லப்பட்டது. அவரும் அதை சொல்ல யோசிக்க, கடைசியில் அப்போதைய காவல்துறை ஆணையர்தான் முதல்வரிடம் சொல்லியிருக்கிறார்.

அந்தச் செய்தியைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த முதல்வர் கருணாநிதியிடம் அங்கிருந்து நேரடியாக கோட்டைக்கு வண்டியை விடச் சொல்லி விட்டார். அதன் பிறகு கோட்டையில் நடந்த ஆலோசனைகள், அதிகாரிகளுக்கு போடப்பட்ட உத்தரவுகள், தேர்தல் சமயத்தில் இதை எப்படி எதிர்கொள்வது என எடுக்கப்பட்ட அரசியல் வியூகங்கள் எல்லாமே அரண்மனை ரகசியங்கள்.

குண்டு வெடிப்புக்கு இரண்டாம் நாள் கோவையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களைக் காண முதல்வர் கருணாநிதியே நேரடியாக வந்தார். அவர் வரும்போது கூடவே மூப்பனாரும் இருந்தார். குண்டு வெடித்த இடங்களில் ஒன்றான கோவை அரசு ஆஸ்பத்திரி அப்போது போர்க்களம் போல் காட்சியளித்தது. ஒரு பக்கம் குண்டு வெடிப்பு பாதிப்பு. இன்னொரு பக்கம் குண்டுவெடிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த சூழல். அதே ஆஸ்பத்திரியிலும் குண்டு வெடித்ததால் அலறி அடித்து சிகிச்சை பெற வந்தவர்களும் ஓடிப்போன கொடுமை. தனியார் ஆஸ்பத்திரிகளை தேடி அலைந்த அவலம் என சகல குரூர காட்சிகளும் அரங்கேற்றம் காண சில நிமிடம் கூட அங்கே கருணாநிதியும்-மூப்பனாரும் சேர்ந்தாற் போல் நிற்க முடியவில்லை.

அந்த இடத்தில் கதறி அழுத மக்களுடன் மக்களாக கரைந்து அழுதார் முதல்வர். அதிலும் அங்கிருந்த மருத்துவர்களும், பயிற்சி நர்ஸ்களும், மருத்துவமனை ஊழியர்களும் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டும்; இல்லாவிட்டால் இங்கே பணிபுரியவே முடியாது! என கத்திக்கூப்பாடு போட்டது கருணாநிதியை அப்செட் ஆக்கியது. அந்த இடத்திலும் முண்டியடித்த கட்சிக்காரர்களை கடிந்து கொண்டார். கோவையில் இப்படியொரு சூழல் இருக்கிறது என்பதை அவர்கள் யாருமே தெரியப்படுத்தவில்லை என்கிற கோபமும், வெப்பமும் அவரிடம் இருந்ததை காண முடிந்தது.

இரண்டரை மாதத்திற்கு முன்பு நடந்த டிசம்பர் கலவரத்தின் போது நேரில் வந்து பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காத முதல்வர் இதற்கு வந்ததற்கு தேர்தல்தான் காரணம். அதிலும், 'கோவையில் நவம்பரில் கலவரம் நடந்தது. 19 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். அதில் பலருடைய உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. வந்தாரா கருணாநிதி? ஆறுதல் கூறினாரா கருணாநிதி?' என்று ஏற்கெனவே பிரச்சாரத்தில் கடுமையாக சாடியிருந்தார் ஜெயலலிதா.

இனி இவ்வளவு பெரிய சம்பவத்திற்கு மேடைதோறும் எப்படியெல்லாம் வார்த்தைகளை உதிர்ப்பாரோ என்ற கவலை திமுக, தமாகா தலைவர்களிடம் அப்போது குடிகொண்டிருந்தது. பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க கருணாநிதி கோவை வரும் முன்னரே இந்த தொடர் குண்டு வெடிப்புகள் எதிரொலியாக அல்உமா, ஜிகாத் கமிட்டி ஆகிய அமைப்புகளை தமிழக அரசு தடை செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக காவல்துறையினர் சந்தேகத்திற்கிடமான பலரையும் தேடித்தேடி கைது செய்து கொண்டிருந்தனர்.

அந்த வேகத்தில் அமெரிக்காவிலிருந்து ரஜினி தானாக வந்தாரோ, வரவழைக்கப்பட்டாரோ நிச்சயம் தெரியாது. வந்த வேகத்தில் பத்திரிகையாளர்களையும் சந்தித்தார்.

இயக்குநர் மணிரத்னம் வீட்டு ஒற்றை வெடிகுண்டுக்கே 'வெடிகுண்டு கலாச்சாரம்' என மேடையில் முழங்கியவர், இந்த விஷயத்தில் கடும் கொந்தளிப்பையே வெளிப்படுத்துவார். அதிலும் இந்தத் தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவு நிலை எடுப்பார்; அல்லது திமுக-தமாகா ஆதரவு நிலையை விடுத்து நடுநிலை வகித்து விடுவார் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

மாறாக, 'நடைபெற்ற கோவை குண்டு வெடிப்பில் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்டிருக்க முடியாது!' என அதிரடி கிளப்பினார்.

கூடவே, 'இனியொரு குண்டு வெடிப்பு தமிழகத்தில் நடக்காது. நடக்கவும் விடமாட்டார் கருணாநிதி. அப்படி மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு நடந்தால் கருணாநிதியே பதவியை ராஜினமா செய்து விடுவார்!' என்று உத்தரவாதம் வேறு கொடுத்தார். தேர்தல் பிரச்சாரத்தின் கடைசி நாளில் தொலைக்காட்சியில் தோன்றி 1996 போலவே 1998லும் திமுக- தமாகாவை ஆதரிக்குமாறு மக்களை கேட்டுக் கொண்டார்.

இது பாஜக மற்றும் பிற இந்து அமைப்புகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதிமுகவிலிருந்து வெளியேறிய ஒரு பிரிவு ரஜினி ரசிகர்களுக்குள்ளும் அதிருப்தியைக் கிளறிவிட்டது. இது ரஜினியின் பேச்சு அல்ல. திமுகவும், தமாகாவும் சேர்ந்து தூண்டி விட்ட பேச்சு. அவர்களே வெளிநாட்டிலிருந்து ரஜினியை கட்டாயமாக வரவழைத்து இப்படியொரு பேட்டியை கொடுக்க வைத்து தங்களுக்கான தேர்தல் கால அரசியலில் ஆதாயம் தேடிக் கொண்டனர் என்றெல்லாம் வெளிப்படையான கண்டனங்கள் வெளிவந்தன. இந்த கண்டனக் குரலுக்கு சொந்தக்காரர்கள் பலரும் ரஜினியை எதிர்த்துப் போராட்டம் செய்யவும் தொடங்கினர்.

குறிப்பாக ரஜினி ரசிகர்கள் பெயராலேயே இந்தப் போராட்டங்கள் எல்லாம் நடந்தது. கொடும்பாவி எரிப்பு, செருப்பு மாலை போடுவது, ரசிகர்கள் மன்றத்திலிருந்து இத்தனை பேர் விலகல், ரஜினி ரசிகர் மன்றங்கள் கலைப்பு என்றெல்லாம் செய்திகள் இறக்கை கட்டிக் கொண்டன. 'ரஜினிக்கு செல்வாக்கு கிடையாது. ரஜினிக்கு அரசியல் தெரியாது!' என்றெல்லாம் மேடைகளில் பேசித் தீர்த்தனர் அதிமுக-பாஜகவினர்.

இந்த அமளியில் திமுக தரப்பிலும் ரஜினி பேச்சில் ஒரு தர்மசங்கடமான நிலை நிலவியது. அதாவது, 'மீண்டும் தமிழகத்தில் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தால் கருணாநிதியே ராஜினாமா செய்து விடுவார்!' என்று ரஜினி சொல்லிவிட்டாரே! என்ன செய்வது?

பத்திரிகைகள் பலவும் அந்த வார்த்தைகளை உச்சரித்தது, உச்சரித்தபடியே அச்சேற்ற, 'ராஜினாமா செய்து விடுவார்' வார்த்தைகளை பயன்படுத்தாமல், 'எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று அவருக்கு (கலைஞருக்கு) தெரியும்' என்று பேட்டியை மாற்றி வெளியிட்டிருந்தது திமுகவின் செய்தி பிரகடன ஏடான முரசொலி.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x