Published : 10 Jan 2024 02:32 PM
Last Updated : 10 Jan 2024 02:32 PM
கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 தற்போது நூறாவது நாளை கடந்துள்ளது. இன்னும் மூன்று நாட்களில் இந்த சீசன் முடிவுக்கு வரவுள்ள நிலையில், இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பதை முழுமையாக கணிக்க முடியாத சூழலே நிலவுகிறது.
100 நாட்கள் கடந்துவிட்டதால் இந்த வாரம் முழுவதும் பழைய போட்டியாளர்கள் வருகை, ஸ்பான்ஸர் டாஸ்க், போட்டியாளர்களின் சொந்தபந்தங்களின் வீடியோ கால் என இலகுவாகவே செல்கிறது. கடுமையான டாஸ்க்குகளோ, சண்டை மூட்டிவிடும் விஷயங்களோ எதுவும் இருக்காது என்று தோன்றுகிறது. வாரத்தின் இடையிலேயே மீதியிருக்கும் போட்டியாளர்களில் ஓரிருவர் வெளியேற்றப்படலாம். போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் தங்களுடைய இந்த நூறு நாள் பயணத்தை கேமரா முன்பு நின்று ஆடியன்ஸிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தனர். பழைய போட்டியாளர்கள் இருந்து முதலில் அனன்யா, பின்னர் அக்ஷயா, அவரைத் தொடர்ந்து அதிரடியாக வினுஷாவும் உள்ளே நுழைந்தார்.
‘தம்பி போன் செய்தானா?’ என்று ஏதோ அக்கறையாக கேட்பது போல நைசாக வினுஷாவிடம் பற்ற வைத்தார் தினேஷ். அதற்கு பதிலளித்த வினுஷா, ‘மன்னிப்பு கேட்டான். 70 கேமரா முன்புதானே என்னைப் பற்றி பேசினாய். அதே 70 கேமரா முன்பு வந்து மன்னிப்புக் கேள்” என்று கூறியதாக கூறினார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அர்ச்சனாவின் பக்கம் திரும்பிய வினுஷா, ‘நிக்சனிடம் சண்டை போடும்போது என் பெயரை பயன்படுத்தியது ஏன்?’ என்று கேட்டார். எபிசோடை சுவாரஸ்யமாக்கும் நோக்கில் பிக்பாஸ் நிர்வாகமே வினுஷாவிடம் இதையெல்லாம் கேட்க சொல்லி அனுப்பினார்களே என்று தெரியவில்லை. எப்படி இருந்தாலும் இதையெல்லாம் போட்டியில் இருக்கும்போது கேட்டிருந்தால் இன்னேரம் வினுஷா மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுத்திருக்கலாம்.
ஆனால் வினுஷாவின் கேள்விகளை மிக சாமர்த்தியமாய் சமாளித்து நகர்ந்தார் அர்ச்சனா. இன்னும் ஓரிரு நாட்களே இருக்கும் நிலையில், இப்போது ஏதாவது பேசப் போய் அது முதலுக்கே மோசமாகிவிடக்கூடாது என்ற எண்ணம் அர்ச்சனா மட்டுமின்றி மாயா, விஷ்ணு என அனைத்து போட்டியாளர்களிடமுமே இருப்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.
கடந்த சீசன்களில் எல்லாம் இவர்தான் வெற்றியாளர் என்பதை ஓரளவாவது யூகித்து விடமுடியும். அல்லது இரண்டு பேரில் யாராவது ஒருவர் என்ற நிலையில்தான் இறுதிகட்டம் இருக்கும். ஆனால் இந்த சீசனில் அப்படியான எதையும் யூகிக்க முடியவில்லை. ஏனெனில் ஒவ்வொரு போட்டியாளரும் ஆரம்பம் முதலும் பயங்கர ஸ்ட்ராட்டஜியுடனும், உள்நோக்கத்துடனுமே காய் நகர்த்திவிடுகின்றனர்.
முந்தைய சீசன்களில் கேமராக்கள் பற்றிய கவனம் போட்டியாளர்களுக்கு ஓரிரு வாரங்களில் காணாமல் போய் அவர்களது சுயம் முழுமையாக வெளிப்பட்டு விடும். ஆனால் இந்த சீசனில் கிட்டத்தட்ட சண்டை போடும்போதும் கூட கேமராக்களை பற்றிய கவனத்துடன் போட்டியாளர்கள் இருப்பது கவனிக்கத்தக்கது. அதேபோல வார இறுதிகளில் கிடைக்கும் கைதட்டல்களும் இந்த சீசன் போட்டியாளர்களின் மாற்றத்துக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தது.
உதாரணமாக விஷ்ணு, வார இறுதிகளில் யாருக்கு கைதட்டல்கள் கிடைக்கிறதோ அவர்கள் பக்கம் சாய்வதையே வழக்கமாக கொண்டிருந்தது முந்தைய எபிசோட்களை பார்த்தவர்களுக்கு தெரியும். அர்ச்சனாவுமே கூட ஒருமுறை தினேஷுக்கு கிடைத்த பலத்த கைதட்டல்களை பார்த்து விசித்ராவை எச்சரித்தார். அர்ச்சனாவுக்கு ஒவ்வொரு வாரமும் கிடைக்கும் கைதட்டல்கள் பூர்ணிமா, மாயா இருவருக்கும் தடுமாற்றத்தை உண்டாக்கின. இது போன்ற விஷயங்களால் இந்த சீசனில் போட்டியாளர்களின் ஆட்டத்தை யூகிப்பதே கடினமாக இருந்தது.
சமூக வலைதள ஆதரவை வைத்து பார்த்தால், அர்ச்சனா வெற்றியாளராக இருக்கலாம் என்று தோன்றினாலும், ஃபைனலில் சேனல் நிர்வாகம் நாம் எதிர்பார்க்காத ஒருவரை வெற்றியாளராக ஆக்கிவிடும் என்பது கடந்தகால வரலாறு. எப்படி இருந்தாலும் இனிமேல் ஆட்டத்தை சிறப்பாக ஆடி ஒருவரால் ஆடியன்ஸின் மனதை வெல்வது சாத்தியமில்லை. இதுவரையிலான போட்டியில் சிறப்பாக ஆடியவரே இந்த சீசனின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார் என்று நம்புவோம்.
முந்தைய அத்தியாயம்: விசித்ராவின் சறுக்கல் தொடங்கியது எங்கே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT