Published : 08 Jan 2024 03:34 PM
Last Updated : 08 Jan 2024 03:34 PM
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் எந்த மூத்த போட்டியாளரும் இல்லாத வகையில் மிக நீண்ட நாள் தாக்குப்பிடித்த போட்டியாளர் விசித்ரா. தொடர்ந்து பல முகங்களையும், பரிணாமங்களையும் காட்டியவர் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார். வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ‘அம்மா’ கேட்டகிரியில் ஒரு போட்டியாளர் உள்ளே அனுப்பப்படுவார். இவர்கள் பெரும்பாலும் ஓரிரெண்டு வாரங்கள் மட்டுமே தாக்குப்பிடிப்பர். இரண்டாவது சீசனில் வந்த நடிகை மும்தாஜ் மட்டுமே நான்கு அல்லது ஐந்து வாரங்கள் இருந்தார் என்று தோன்றுகிறது. இதே பிரிவில் வந்த மற்ற போட்டியாளர்கள் யாரும் பாதி நிகழ்ச்சி வரை கூட இருந்ததில்லை.
ஆனால், அந்த வழக்கத்தை உடைக்கும் விதமாக தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் நிகழ்ச்சியின் கடைசி வரை வந்தார் விசித்ரா. பொதுவாக, இந்தப் பிரிவு போட்டியாளர்கள் சக போட்டியாளர்கள் குறித்து தங்கள் மனதில் தோன்றும் கருத்துகளை வெளிப்படையாக கூற தயங்குவார்கள். இளம் போட்டியாளர்களுக்கு சரிசமமாக நாமும் மல்லுக்கட்ட வேண்டுமா என்ற தயக்கமே அதற்கு காரணமாக இருக்கும். அல்லது போட்டியாளர்களுக்கு பின்னால் அவர்கள் குறித்து பேசி பார்வையாளர்களின் அதிருப்திக்கு ஆளாவார்கள்.
ஆனால், விசித்ராவின் ஆட்டம் ஆரம்பம் முதலே மிக வெளிப்படையாக இருந்தது. மனதில் பட்டதை துணிச்சலுடன் சக போட்டியாளர்களிடம் பேசினார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பார்வையாளர்களின் ஆதரவு பெற்ற போட்டியாளராக இருந்த பிரதீப்பை எதிர்த்து நின்றது, அதே பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்ட விவகாரத்தில் பிரதீப் மீதான கோபங்களை மறந்து அவருக்காக குரல் கொடுத்தது, அதையொட்டி எழுந்த பிரச்சினையும் மாயா குரூப்பை எதிர்த்து அர்ச்சனாவுக்கு உறுதுணையாக இருந்தது என விசித்ரா அடுத்தடுத்து தனது சிறப்பான நகர்வுகளால் ஸ்கோர் செய்தார்.
தொடர்ந்து வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி சம்பவங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளும் டாஸ்க்கில் இளம் வயதில் தன்னிடம் அத்துமீறிய பெரிய நடிகர் குறித்து விசித்ரா துணிச்சலாக பேசியது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. கூடவே விசித்ராவுக்கு பெரும் ஆதரவு அலையையும் ஏற்படுத்தியது. இதனால் வார இறுதிகளில் அவருக்கு பார்வையாளர்கள் மத்தியில் பெரும் கைதட்டல்களும், தொடர்ந்து நாமினேட் செய்யப்பட்டாலும் கணிசமான வாக்குகளும் குவிந்தன.
ஆனால், கடந்த சில வாரங்களாக விசித்ராவிடம் மாற்றங்களும், தடுமாற்றங்களும் பெரியளவில் தென்பட்டன. குறிப்பாக அவரது குடும்பத்தினர் வீட்டின் உள்ளே வந்து சென்றபிறகு நடந்த சில சம்பவங்கள் விசித்ராவின் மீதான ஆடியன்ஸின் பார்வை மாறத் தொடங்கியது. மிகக் குறிப்பாக, தினேஷ் குறித்து விசித்ரா முன்னெடுத்த தனிப்பட்ட தாக்குதல்கள் எல்லை மீறத் தொடங்கின.
தினேஷ் மீது போட்டி ரீதியாக முன்வைக்க ஏராளமான விமர்சனங்கள் இருந்தும், அதை விடுத்து அவரது பர்சனல் வாழ்க்கை குறித்து விசித்ரா பேசியது பார்வையாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அர்ச்சனாவுடன் நட்பில் இருந்தபோது அவர் செய்த விஷயங்களை ஊக்குவித்தவர், தற்போது அதே விஷயங்களுக்காக அவரை உளவியல் ரீதியாக தாக்கியதும் சமீப நாட்களில் நடந்தது.
எல்லாவற்றுக்கும் மேலாக பிரதீப்பின் ரெட்கார்டு, அர்ச்சனா உடனான பிரச்சினைகளுக்கு மூலக் காரணமாக விளங்கிய மாயா மற்றும் பூர்ணிமா உடன் அவர் கடைசி சில வாரங்கள் கூட்டணி சேர்ந்தது பார்வையாளர்களால் ரசிக்கப்படவில்லை. இதுதான் விசித்ராவின் சறுக்கல் தொடங்கிய இடமும் கூட.
இதுபோன்ற மாற்றங்கள்தான் விசித்ராவின் வெளியேற்றத்துக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்க வேண்டும். எப்படி பார்த்தாலும் இதுவரை வந்த மூத்த போட்டியாளர்களிலேயே மிக வலிமையான போட்டியாளராக விசித்ரா தன்னை கடைசி வரை நிலைநிறுத்திக் கொண்டார் என்பதில் சந்தேகம் இல்லை.
> முந்தைய அத்தியாயம்: பணப்பெட்டியுடன் வீட்டை விட்டு வெளியேறிய பூர்ணிமா!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT