Published : 05 Jan 2024 09:52 AM
Last Updated : 05 Jan 2024 09:52 AM
சீசன் முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டுக்கு நடுவே வைக்கப்பட்ட பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார் பூர்ணிமா.
94-வது நாள் எபிசோடில் ரூ.1 லட்சத்துடன் பணப்பெட்டி வைக்கப்பட்டது. இந்த சீசன் போட்டியாளர்கள் எப்போது என்ன டாஸ்க் வைக்கப்படும் என்று முன்கூட்டியே கணித்து வைத்திருப்பதால் இந்த டாஸ்க்குக்காக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். பணத் தொகை குறைவாக இருந்த நேரத்தில் போட்டியாளர்கள் மத்தியில் எந்த சலசலப்பும் இல்லை.
ஆனால் தொகை அவ்வப்போது அதிகரிக்கவும், குறையவும் செய்யும் என்று பிக்பாஸின் அறிவிப்பையடுத்து, பணப்பெட்டியை எடுக்கப் போவது யார் என்று போட்டியாளர்களுக்குள் தீவிர விவாதங்கள் நடந்தன. என்னிடம் நிறைய பணம் இருக்கிறது நான் கண்டிப்பாக பெட்டியை எடுக்க மாட்டேன் என்று பூர்ணிமாவிடம் விசித்ரா சொல்லிவிட்டார். அர்ச்சனாவின் வீட்டில் இருந்து வந்தவர்கள், எந்தச் சூழலிலும் பணப்பெட்டியை எடுத்துவிடாதே என்று க்ளூ கொடுத்துவிட்டதால் அவரும் எடுக்கமாட்டார் என்பதை யூகிக்க முடிந்தது.
பணப்பெட்டியின் தொகையும் அவ்வப்போது, ரூ.5 லட்சம், பின்னர் ரூ.3.5 லட்சம் என ஏறி ஏறி இறங்கியது. தொகை ஏற ஏற மற்ற போட்டியாளர்களை விட பூர்ணிமாவிடம் மட்டுமே ஒருவித தடுமாற்றம் தெரிந்தது. அதுமட்டுமின்றி வார இறுதிகளில் தனக்கு கிடைக்கும் ‘அர்ச்சனைகள்’ அவரது மனதில் ஒரு எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கக் கூடும்.
இதனை உறுதி செய்யும் வகையில், தற்போது விஜய் டிவி வெளியிட்டுள்ள முதல் ப்ரோமோவில் பூர்ணிமா ரூ.16 லட்சத்துடன் அந்த பணப்பெட்டியை எடுத்துக் கொள்வதாக காட்டப்படுகிறது. உண்மையில் பூர்ணிமா எடுத்தது சரியான முடிவாகவே படுகிறது. ஆரம்பத்தில் இரண்டாவது முறை வீட்டின் தலைவராக வந்தபோதும் சரி, பிறகு அர்ச்சனாவுடனான சண்டை, மாயா உடனான நட்பினால் கிடைத்த எதிர்வினைகள், விஷ்ணு உடனான உரசல் என ஒவ்வொரு வாரமும் சூழல்கள் அவருக்கு எதிராகவேதான் திரும்பிக் கொண்டிருந்தன. இதனால் எப்படியும் தன்னால் ஃபைனலிஸ்ட்டாக வரமுடியாது என்று அவர் நினைத்திருக்கக் கூடும். எப்படிப் பார்த்தாலும் இந்த சீசனின் கடினமான போட்டியாளர்களில் பூர்ணிமாவும் ஒருவர்.
பூர்ணிமாவின் வெளியேற்றத்தால் இனி விஷ்ணு - அர்ச்சனா - மாயா என மூன்று கடினமான போட்டியாளர்களுக்கு இடையிலான போட்டி கடுமையாகும். அர்ச்சனா தற்போது ‘சாஃப்ட் மோட்’ல் இருப்பதால் கடைசி வாரம் யாருக்கு சாதகமாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment