Published : 30 Jan 2018 10:21 AM
Last Updated : 30 Jan 2018 10:21 AM
மனிதர்கள், இத்தனை துன்பங்களையும் சந்திப்பதற்கு, ஆசையே காரணம் என்றார் புத்தர் அறிவின்மைதான் துன்பங்களுக்குக் காரணம் என்று வலியுறுத்தினார் பிளேட்டோ. அச்சம்தான் காரணம் என்று எடுத்துச் சொன்னார் விவேகானந்தர். உண்மையின்மைதான் இந்தத் துன்பங்களுக்கெல்லாம் காரணம் என்றார் மகாத்மா காந்தி. இங்கே, உண்மை இருந்துவிட்டால், ஆசைகள் சரியானவையாக இருக்கும். ஆசைகள் சரியானவையாக இருக்கும் போது, அறிவு விழிக்கத் தொடங்கிவிடும். விழிப்புடன் உள்ள அறிவு இருந்தால், அங்கே அச்சத்துக்கே வேலையே இல்லை. ஆக சத்தியமே வாழ்க்கை என்று சொல்லி, சத்தியத்தின்படியே வாழ்ந்த சத்தியபுருஷர்... மகாத்மா காந்தி.
காந்தியை இன்றைக்குப் பாடப்புத்தகத்திலும் பணத்திலும் மட்டுமே பார்க்கப்படுகிறது. அவரை மகாத்மா என்று போற்றிக் கொண்டாடியதாலேயே, நாம் அவரைக் கொஞ்சம் தள்ளியே வைத்துவிட்டோம் அல்லது ஒரு பீடம் கொடுத்து அமரவைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம் . ஆனால் ஒரு மனிதன், மனிதனாக வாழ்ந்ததற்கு அடையாளமும் ஆவணமும்தான் மகாத்மா காந்தி. அப்படி நாமெல்லாம் வாழாததால்தான் அவரை மகாத்மா என்று பிரமித்துச் சொல்லிவிட்டு, நம் வேலையை நாம் பார்க்கப் போய்விட்டோம்!
தெருவுக்காகவும் ஊருக்காகவும் தேசத்துக்காகவும் இன்றைக்கும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் . ஓர் அமைப்பாக, ஒரு குழுவாக, தனியொருவனாகக் கூட எந்த எதிர்பார்ப்புமின்றி அரசு எனும் கட்டமைப்புக்கு எதிராக முழக்கங்கள் இட்டுக் கொண்டும் முஷ்டி மடக்கி கோதாவில் இறங்கி போராட்டங்கள் செய்துகொண்டுமாக எத்தனையெத்தனையோ பேர் இன்றைக்கும் இருக்கிறார்கள். ஆனால் இங்கே ஒரு சோகம்... அவர்களையெல்லாம் நாம் ஜோக்கர்களாகத்தான் பார்க்கிறோம். அப்படி ஜோக்கர்களாகப் பார்க்கும்படி, அரசியல்வாதிகள் ஆக்கிவைத்தார்கள்.
ஆனால், மோகன் தாஸ் கரம்சந்த் காந்தி என்கிற இளைஞரையும் சரி, காந்தி எனும் நடுத்தர வயதுக்காரரையும் சரி, மகாத்மா என்கிற கிழவரையும் சரி... அவரை மிகப்பெரிய போராட்டக்காரராகவே பார்த்து, பயந்து பம்மினார்கள் பரங்கியர்கள். இதுதான் காந்திஜியின் வெற்றி என்று ஒற்றை வரியில் மட்டுமே சொல்லிவிடமுடியாது; கூடாது. ‘முதலில் உங்களை பொருட்படுத்தமாட்டார்கள். பிறகு எள்ளி நகையாடுவார்கள். அடுத்து சண்டை பிடிப்பார்கள். அதன் பின் நீங்கள் வென்றிருப்பீர்கள்’ என்கிறார் மகாத்மா. இவரின் இந்த நிதானம்தான் அவருடைய வெற்றி அல்ல. இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி. பலம்!
இன்றைக்கு எளிமையாக இருப்பதில், மிகப்பெரிய சிரமங்கள் இருக்கின்றன. எளிமை தருகிற அவமானங்கள் ஏராளம். ஏளனங்கள் எக்கச்சக்கம். அக்கம்பக்கத்தாரிடம் பணக்காரனைப் போலவும் உறவினர்களிடம் ஏழையைப் போலவும் இருக்கவேண்டியிருக்கிறது என்று வலைதளங்களில் வறுத்தெடுப்பதாலேயே, எளிமையின் குணங்களே குற்றவாளிக்கூண்டில் நிற்கும் அவலம் இங்கே!
ஆனால் அக்கம்பக்கத்தாரையும் உறவுக்காரர்களையும் தாண்டி, அகில உலகத்துக்கே தெரிந்த மகாத்மா காந்தியின் எளிய வாழ்வு, இன்றைக்கு மட்டுமின்றி என்றைக்குமான, நம் எல்லோருக்குமான பாடம்; வேதம்! சொல்லப்போனால் எளிமையையே ஆயுதமாக்கிக் கொண்டவர் காந்திஜி.
அவர் எடுத்துக் கொண்ட இன்னொரு ஆயுதம்... அகிம்சை. எவரையும் இம்சிக்காமல், வெள்ளையர்களின் அன்றாடப் பணிகள் கூட பாதிக்காமல், தன் கொள்கையை முன்னிறுத்தி, தன் தேச விடுதலையை வலியுறுத்தி, அகிம்சை வழியிலேயே போராடியவர்... அகிம்சையாலேயே ஜெயித்தவர்... காந்திஜியாகத்தான் இருக்கமுடியும். ‘அமைதியை அடைவதற்கென்று எந்தப் பாதையும் கிடையாது. ஏனென்றால்... அமைதிதான் பாதையே...’ என்கிறார். இந்த அமைதிப் புரட்சிக்குக் கிடைத்த வெற்றிதான் சுதந்திரம்!
’மனிதத்தின் மீதான நம்பிக்கையை இழக்கக் கூடாது. அது சமுத்திரம் போன்றது. அந்த சமுத்திரத்தில், சில துளிகள் அசுத்தமாக இருப்பதால், சமுத்திரமே அசுத்தமாகிவிடாது’ என்கிறார். இன்றைக்கு மனிதத்தையும் நேயத்தையும் கொஞ்சம் தள்ளிவைத்துப் பார்க்கிற இந்தச் சமூகத்துக்கு அவர் எப்போதோ சொல்லிவைத்த சேதி இது! மனிதத்தின் மீதான, தேசத்தின் மீதான நம்பிக்கையை, அவ்வளவு ஏன்... அவர் மீதான நம்பிக்கையையும் ஒருபோதும் இழக்கவில்லை காந்திஜி!
உலகின் ஏதோவொரு மூலையில், இந்த நிமிடம் என்ன நடந்தது என்பது அடுத்த இரண்டாவது நிமிடத்தில் இண்டர் நெட் வழியாக, முகநூல் வழியாக, டிவிட்டர் மூலமாக, ஊடகங்கள் வழியாக நமக்குத் தெரிந்துவிடுகிறது. அன்றைக்கு, சபர்மதி ஆஸ்ரமத்தின் காந்திஜி உண்ணாவிரதம் இருந்தால், ஒட்டுமொத்த இந்தியாவே பரபரத்துப் பதைபதைத்தது. இந்தியாவை ஆள வந்து, ஆண்டு கொண்டிருந்த வெள்ளையர்களே பதறித்தான் போனார்கள்.
இன்றைக்கும் உண்ணாவிரதங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், மறியல்கள் நடக்கத்தான் செய்கின்றன. ஆள்பவர்களுக்கு எதிராக குரல்கள் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் அதை செவிமடுக்கத்தான் எவரும் இல்லை. காதலிக்கும் வரை உருகிவிட்டு, காதலியை அல்லது காதலரைக் கரம்பிடிக்கும் வரை, கல்யாணம் செய்துகொள்ளும் வரை மல்லுக்கட்டி போராடிவிட்டு, பிறகு ஓர் அசால்ட் நிலையில் வாழ்வது போலத்தான், போராடிப் பெற்ற சுதந்திரத்தை, சுதந்திர இந்தியாவை, இப்போதைய இந்தியாவுக்காக இந்திய எதிர்காலத்துக்காகப் போராடுபவர்களையும் அசால்ட்டாகவே எடுத்துக் கொள்கிற மனோபாவம் , ஆகப்பெரிய சோகம்! ஆனால் உட்கார்ந்த இடத்தில் இருந்துகொண்டு, இந்த உலகையே அசைத்துப் பார்த்த அந்த ஒத்துழையாமை இயக்க நாயகனின், சத்தியமும் நேர்மையும் தளராத மன உறுதியும் திடமான நம்பிக்கையும் தான் பரங்கியரின் மனங்களையே பதம் பார்த்தது!
’என் வாழ்க்கையே நான் சொல்ல விரும்பும் அறிவுரை’ என்று இந்த உலகில் எந்தத் தலைவரும் சொன்னதில்லை. சொல்லவும் முடியாதோ என்னவோ! ஆனால் இப்படி இப்படி நடக்கவேண்டும் என்பதை வாழ்ந்து காட்டியதால்தான் காந்திஜியை உதாரண புருஷர் என்று இன்றைக்கும் சொல்லிப் பெருமிதம் கொள்கிறோம்.
எளிமையின் அடையாளம் அவர். அமைதியின் அடையாளம் அவர். அகிம்சையின் அடையாளம். மன உறுதியின் அடையாளம். ஒற்றுமையின் அடையாளம். ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளம். இளைஞர்கள் பாஷையில் சொன்னால்... இந்தியாவின் ‘ஐகான்’ மகாத்மா காந்தி!
இன்றைக்கு அவரின் நினைவு நாள் ( 30.1.18). எப்போதும் நினைக்கவேண்டிய அந்த மாபெரும் தலைவனை, இப்போதேனும் நினைப்போம். 1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் கிடைத்து, செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி, ஜனவரி 30ம் தேதி என சுதந்திரம் கிடைத்த ஆறுமாதத்துக்குள்ளாகவே காந்திதேசத்தில்... காந்தி இல்லை. சுட்டுக் கொல்லப்பட்டார்.
யாரேனும் ஏதேனும் நற்செயல்கள் செய்தால்... ‘இவரு பெரிய மகாத்மா காந்தி’ என்று கேலியாய், கிண்டலாய்ச் சொல்லுவோம். ஊரே காந்திகள் எனில், யாரை, எவர் சொல்லி நகைக்க முடியும்? காந்தி அபூர்வமானவர். அதிசயமானவர். ஆனால் காந்தியம் மிக எளிமையானது. அவசியமானது. அற்புதமானது!
’உங்கள் நாட்டு கிழவரை நாங்கள் பத்திரமாகப் பார்த்துக் கொண்டோம். ஆனால் சுதந்திரம் கிடைத்து, சில மாதங்களிலேயே அவரைப் பாதுகாக்க முடியாமல், இப்படிச் செய்துவிட்டீர்களே...’ என்று வெள்ளைக்காரர் வருந்திச் சொன்னதாகச் சொல்வார்கள்.
இது நிஜமா... பொய்யா... தெரியவில்லை. ஆனால்... இந்த வார்த்தைக்குள் இருப்பது நிஜம்தான். சத்தியபுருஷரை பாதுகாக்கத் தவறிவிட்டோம் என்பது சத்தியம்தான்!
மகாத்மாக்கள் உருவாக்கப்படுவதில்லை. உருவாகிறார்கள். ஆனால் மகாத்மாக்களைப் பார்த்து மனிதர்களாவோம்! மனிதம் காப்போம். அன்பு வளர்ப்போம். விழாவில், மாறுவேடத்துக்கு மட்டுமே உபயோகப்படுத்திக் கொள்ளும் காந்தியை, வாழ்க்கைக்கு உபயோகப்படுத்திக் கொள்வோம்.
‘எங்கே அன்பு இருக்கிறதோ, அங்கே வாழ்வு உயிர்த்திருக்கிறது’ என்கிறார் காந்திஜி.
காந்தி வாழ்க்கை... ஓர் வாழ்வியல் பாடம். இந்த உலகுக்கான வேதம். அதை நம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பது அவசியம். ‘அவரைப் பத்தி எங்களுக்கு ஒண்ணும் தெரியாதே’ என்று சொல்லலாம். மகாத்மாவின் ‘சத்தியசோதனை’யை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்போம். அது... பீட்ஸா, பர்கரை விட விலைகுறைவு. ஆனால் சத்தான பலன் நிச்சயம்!
வீட்டுக்கொரு சத்தியசோதனை இருந்தால், ஊருக்கு ஒரு காந்தியேனும் கிடைப்பது நிச்சயம். காந்திதேசத்தில் காந்திகளின் திரு உலா நிகழட்டும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT