Published : 09 Jan 2018 08:44 PM
Last Updated : 09 Jan 2018 08:44 PM
எம்.எல்.ஏ (வேட்பாளர்) வேண்டுகோளை ஏற்று அப்படியே செய்த எம்.எல்.ஏ அடுத்தநாள் எம்ஜிஆர் பிரச்சாரத்தின் போது மொத்தம் 28 இடங்களில் பிரச்சாரம் செய்ய வரைபடம் போட்டுக் கொடுத்திருக்கிறார். 27 இடங்களில் பிரச்சாரம் முடித்த பின்பு வந்த வழியிலேயே திரும்பச் சென்று கடைசி இடத்தில் பிரச்சாரம் செய்ய வேண்டி வந்தது.
அதை நம் எம்எல்ஏ (வேட்பாளர்) எம்ஜிஆரிடம் சொல்ல, அவருக்கு வந்ததே கோபம். தன் துண்டால் எம்எல்ஏவை ஓங்கி ஓர் அடி அடித்தார். டிரைவரை காரை நிறுத்தச் சொன்னார். பிரச்சார வழியிலேயே வேட்பாளரை இறக்கிவிட்டு எம்ஜிஆர் கார் பறந்தது. இவர் கும்பிட்டுக் கொண்டே அங்கே நிற்க, எம்ஜிஆர் பிரச்சார வேனுக்குப் பின்னால் வரிசையாக சென்ற காரில் உள்ளவர்கள் எல்லாம் ஆச்சரியத்தோடு பார்த்தார்கள்.
'வேட்பாளர் இங்கே நிற்கிறார். தலைவர் யாருக்கு பிரச்சாரம் செய்யப்போகிறார் என்பதுபோல் இருந்தது அவர்கள் பார்வை. அந்த தேர்தலில் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் வென்றேன்!' அந்த முன்னாள் எம்.எல்.ஏ சொன்னது இப்போது போல் உள்ளது.
இதேபோல் அப்போதைய வருவாய்த்துறை அதிகாரியாக இருந்தவர் சொன்ன இன்னொரு சுவாரஸ்ய சம்பவம்.
1977-80 ஆம் ஆண்டுகளில் நல்லாட்சி தந்தார் எம்ஜிஆர் என்பதை மறுப்பவர்கள் கூட அந்த காலகட்டத்தில் கள்ளு, சாராயக்கடைகளை ஒழித்து, கள்ளச்சாராயத்திற்கு முடிவு கட்டினார் என்பதை மறுக்கமாட்டார்கள். தன் தாயின் மீது ஆணையிட்டு தான் ஆட்சிக்கு வந்தால் தாய்க்குலம் கண்ணீர் சிந்தும் கள், சாராயக்கடைகளுக்கு சமாதி கட்டுவேன் என்று வாக்குறுதி தந்தே வென்றார். அதை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்.
ஆனால் 1980 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி வைத்து திமுக தமிழகத்தில் 39க்கு 38 இடங்களை வெல்ல, ரொம்பவும் சோர்ந்து போனார் எம்ஜிஆர். அதையொட்டி ஆட்சியும் கலைக்கப்பட அதிர்ச்சியின் உச்சத்திற்கே போனார். நான் என்ன தவறு செய்தேன் என்று தமிழக மக்களிடம் கலங்கி நின்றார். அதில் உருகிப்போயினர் மக்கள். அந்த காலகட்டத்தில் கோவைக்கு வந்த எம்ஜிஆர் செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தினார். அதில் பேசிய கட்சிக்காரர்கள் ஒரேயடியாக பொங்கித் தீர்த்தனர்.
''இரண்டரை ஆண்டுகாலம் நல்லாட்சி நடத்தினீர்கள். உண்மைதான். ஆனால் எங்களுக்கு என்ன பலன். நாங்கள் கட்சிப்பணி ஆற்றக்கூட செலவுக்கு பணம் இல்லை. காவல்நிலையங்களில் கூட எங்கள் பேச்சு எடுபடுவதில்லை. அங்கெல்லாம் திமுகவினரே கோலோச்சராங்க. அவங்க காலத்துல எல்லோரும் சாராயம், கள்ளுக்கடை மூலமா நிறைய சம்பாதிச்சு வச்சிருக்காங்க. அவங்க பண பலம்தான் அதிகாரிகளை சலாம் அடிக்க வைக்குது!'' என்றெல்லாம் அதில் காரசார பேச்சு.
கடைசியாக எம்ஜிஆர், ''கவலைப்படாதீர்கள். இந்த முறை கலங்காமல் தேர்தல் பணி செய்யுங்கள். கடந்த முறை நடந்த தப்பு இப்போது நடக்காது. வரப்போவது மக்களுக்கான ஆட்சியாக மட்டும் இருக்காது; உங்களுக்கான ஆட்சியாகவும் அமையும். நான் உங்களை கைவிட மாட்டேன்!'' என்று உருக்கமாகப் பேசினார்.
அந்த தேர்தலில் வென்ற பிறகுதான் எம்ஜிஆர் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ரத்து செய்தார். சாராயக் கடைகளை கொண்டு வந்தார். அந்த சாராயக்கடைகள் ஏலம் எடுப்பதன் மூலம் அந்த வருவாய் கட்சிக்காரர்களுக்கே இருக்க வேண்டும் என்று கருதினார்.
அதற்காக சாராயக்கடை ஏலம் கோருபவர்கள் தங்கள் கட்சி உறுப்பினர் சீட்டு விவரங்களை குறிக்க வேண்டும். அவர்களுக்கே முன்னுரிமை தரவேண்டும் என்று அதிகாரிகளுக்கு எழுதப்படாத ஆணை பிறப்பித்தார். அது முறையாக நடக்கிறதா என்பதை உளவுத்துறை மூலம் கண்காணித்து நடைமுறைப்படுத்தவும் செய்தார். 'ரொம்ப நேர்மையாக ஆட்சியை நடத்துவது ஆபத்தானது; சில நெளிவு சுளிவுகளுடன்தான் நகர்வதுதான் சரியானது!' என எம்ஜிஆருக்கே அனுபவம் பாடம் காட்டியதுதான் அந்தத் தேர்தல்.
அத்தோடு நின்றாரா?
சாராயக்கடைகள் திறக்கப்பட்ட வேளை. சாராயக் கம்பெனி நடத்த ஒரு குறிப்பிட்ட தொழிலதிபருக்கே அனுமதி வழங்கப்பட்டது.
அவர் தன் ஒரு நாள் கலெக்ஷனை எடுத்துக்கொண்டு எம்ஜிஆரை சந்தித்தார். அதை கட்சி நிதியாகவோ, தனிப்பட்ட நிதியாகவோ ஏற்க வேண்டும் என்று வேண்டி நின்றார். அந்தப் பணத்தை கையால் கூட தொடமாட்டேன் என்று சொல்லிவிட்டார் எம்ஜிஆர். அந்த தொழிலதிபரும் பிடிவாதமாக இருக்க, வேறு வழியில்லாமல், இந்த நிதியை சத்துணவுத் திட்டத்துக்கு அளித்து விடுங்கள் என்று அந்த துறை அதிகாரியை கைகாட்டி விட்டார். அது முடிந்தபிறகும் பிரச்சினை ஓய்ந்ததா என்றால் அதுதான் இல்லை.
மறுபடியும் சில நாட்களில் பெரும் தொகையை பெட்டியில் அடுக்கிக்கொண்டு வந்தார் அந்தத் தொழிலதிபர். 'இதையாவது நீங்கள் ஏற்றுத்தான் ஆக வேண்டும்!' என்றார். எம்ஜிஆர் மறுக்கிறார். இருந்தாலும் பிடிவாதமாக கட்டாயப்படுத்தி தொழிலதிபர் அங்கேயே அதை வைத்துவிட்டுச் செல்கிறார்.
எம்ஜிஆர் பார்க்கிறார். அன்று இரவு முழுக்க அவர் தூங்கவேயில்லை. தனது அறையில் பரணில் அங்கங்கே இருந்த பழைய டைரிகள், பழைய நோட்டுகளை எடுத்து, எடுத்து அதிலிருந்து எதையோ குறிப்பெடுக்கிறார்.
விடியற்காலை 4 மணிக்கு தன் கதவைத் திறந்து உதவியாளரை அழைக்கிறார். தன் கையில் உள்ள தாள்களை நீட்டி, 'இதில் உள்ள முகவரிகளுக்கெல்லாம் போன் செய்; தந்தி அடி. அவர்களை எல்லாம் இங்கே மாலைக்குள் அவசரமாக வரச்சொல்!' என உத்தரவிடுகிறார்.
அதேபோல் உதவியாளரும் செய்ய, அதில் அழைக்கப்பட்டவர்கள் எம்ஜிஆர் இல்லம் பதறியடித்து ஓடி வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரவேற்று உபசரிக்கிறார். தனித்தனியே அழைத்துப் பேசுகிறார்.
''நீங்க இன்ன நேரத்தில் இப்படி கஷ்டத்தில் இருந்தேன். நீங்க இன்ன உதவி செஞ்சீங்க. அதை மறக்க மாட்டேன். அதற்காக இல்லாவிட்டாலும் எனக்காக இதை ஏற்றுக்கொள்ள வேண்டும். இன்னும் என்ன உதவி வேணும்னாலும் எப்ப வேணும்னாலும் கேளுங்க. என்னால் முடிஞ்சதை செய்யறேன்!'' என்று சொல்லி கட்டி வைக்கப்பட்டிருந்த பொட்டலங்களை அளிக்கிறார்.
அந்தப் பொட்டலங்களில் தொழிலதிபர் வைத்து சென்ற பணமே லட்சலட்சமாக பிரித்து கொடுக்கப்பட்டிருந்தது. அதில் ஒரு பைசாவை கூட அவர் தொடவில்லை. கடைசி வரை எம்ஜிஆர் இப்படியேதான் இருந்தார். எனவேதான் அவர் ஆட்சியில் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வீசப்பட்ட போதெல்லாம், ''நான் தப்பு செய்தேனா? நான் ஊழல் செய்தேனா? ஆதாரத்துடன் நிரூபியுங்கள். ஆட்சியை விட்டே செல்கிறேன்!'' என்றெல்லாம் சவால் விட்டார்.
சரி, இதற்கும் ரஜினிக்கும், ரஜினி அரசியலுக்கும் என்ன சம்பந்தம்? நிச்சயம் இருக்கிறது. தனக்கு உதவி செய்தவர்களை மறக்கலாகாது, தன்னை நம்பி வந்தவர்களை கைவிடக்கூடாது என்ற எம்ஜிஆரின் அந்தப் பண்பாடு ரஜினியிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதுதான் இந்த இடத்தில் சுட்டிக் காட்ட வேண்டிய அம்சம்.
'பாபா' பட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த நேரம். நான் அப்போது பணியாற்றிய வாரமிரு பத்திரிகையில் வாசகர்களுக்கு ஒரு போட்டி அறிவித்திருந்தார்கள்.
ரஜினி படம் என்றால் பஞ்ச் வசனங்கள் இல்லாமலா? ரஜினியின் 'பாபா' படத்தில் எப்படிப்பட்ட பஞ்ச் வசனங்கள் இடம் பெறலாம். வாசகர்களே உங்கள் கற்பனைக் குதிரையை தட்டி விடுங்கள். ஓர் அஞ்சலட்டையில் எழுதி அனுப்புங்கள். பரிசு காத்திருக்கிறது என அறிவிப்பு செய்திருந்தார்கள். தேர்ந்தெடுக்கப்படும் ஒவ்வொரு பஞ்ச் வசனத்திற்கும் ரூ.250 பரிசுத்தொகையாக அறிவிக்கப்பட்டிருந்ததாக நியாபகம்.
அந்தப் போட்டி முடிவும் வெளிவந்தது. தொடர்ந்து வாரவாரம் பல பஞ்ச் வசனங்கள் வெளியாகின.
திடீரென்று அலுவலகத்திலிருந்து எனக்கு போன். உதவி ஆசிரியர் பேசினார்.
''நாம் வெளியிட்டு வரும் பாபா பஞ்ச் வசனங்களை ரஜினிகாந்த் படித்திருக்கிறார். அந்த பஞ்ச் வசனங்கள் பல அவருக்கு பிடித்து போய்விட்டது. அதை படத்தில் பயன்படுத்துவதாகவும் சொல்லியிருக்கிறார். அது மட்டுமல்லாது அச்சில் வெளியான அத்தனை பஞ்ச் வசனம் எழுதிய வாசகர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் தந்திருக்கிறார்!'' என தெரிவித்தார்.
அதற்காக கோவையில் பரிசு பெற்ற இரண்டு வாசகர்களின் முகவரியைச் சொல்லி அவர்களை சந்தித்துப் புகைப்படம் எடுத்து அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டார்.
அன்றைக்கு ரூ.10 ஆயிரம் என்பது பெரிய தொகை. அந்த வாசகர்கள் குடும்பத்தை சந்தித்து இதை சொன்னபோது அவர்கள் அடைந்த மகிழ்ச்சியை காணக் கண்கோடி வேண்டும்.
இது 'பாபா' படத்தில் மட்டும்தான் நடந்ததா?
பேசித் தெளிவோம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT