Published : 13 Jan 2018 03:39 PM
Last Updated : 13 Jan 2018 03:39 PM
தை முதல்நாளுக்கு முந்தினநாள் காப்புக்கட்டு. அன்னைக்கு பகல்ல வேப்பந்தழை, பூளைப்பூ காப்புக்கட்டி, ராத்திரியில பூசணிக்காய், அரசாணிக்காய், பீர்க்கங்காய், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு கலந்து கட்டி பொறியல் செஞ்சு, அரிசியும் பருப்பும் சோறு ஆக்கி சங்காரந்தி படையல் போட்டாலே பொங்கலுக்கான புதுவாசம் ஊர் முழுக்க குடியேறிடும்.
முதல் நாள் பெரியவங்க பொங்கல். அடுத்த நா பட்டிப்பொங்கல், மூணாம் நாள் பூப்பறிக்கிற நோம்பி. புதுசா கண்ணாலம் கட்டிக்கிட்டுப் போன பொட்டைப் புள்ளைகளுக்கு புதுத்துணி, புதுப் பொங்கப் பானை, புதுநெல்லு, கருப்பட்டி கொடுத்து அனுப்பறது என்ன? ஆற்று மேட்டுல குடியானவங்க மாடுகன்னுகளை ஓட்டிட்டு போய் குளிப்பாட்டறது என்ன? கொம்புக்கு சிகப்பு, நீல சாயம் பூசறது என்ன? கோணாரிக பட்டிய சுத்தம் செஞ்சு அலங்காரம் போடறது என்ன? சக்கரைக்கத்திக பொங்கவச்சு கத்திக்கப்படாவையும் சுத்தம் செஞ்சு பூஜையில வச்சு படையல் போடறது என்ன? ஏகாளிக சேவக்கோழியறுத்து வெள்ளாவிப் பொங்கல் பொங்கி படைப்பு வக்கிறது என்ன?
பெரிசுக பொங்கல்னா காலாங்கார்த்தால பொங்கல் வச்சு சூரியனுக்கு படையல்போட்டு, பெரியவங்களை மனசார கும்பிடறதுல அமைதிதான் நெறைஞ்சிருக்கும்.
பட்டிப் பொங்கல்னு பார்த்தா குடியானவன் ஊட்டு ஆடு, மாடு, கன்னுகளுக்கு ஊட்டி, தனக்கும் பரிமாறிக்கிற சக்கரை பொங்கல் நாக்குக்கு இனிப்பா இருக்கும். துள்ளி விளையாட எள மனசுக்கு இது ஏற்குமா? அன்னைக்கு டவுசர் போட்ட, பாவடை சட்டை போட்ட சிறிசு முதல் தாவணி கட்டின எளசுக, பின்கொசுவம் கட்டின பெரிசு வரைக்கும் எல்லோருக்கும் புடிச்ச பொங்கல் பூப்பொங்கல்தான்.
கன்னிப்பொங்கல், புள்ளாரு பொங்கல், பூப்பொங்கல்னு இதுக்கு விதவிதமா பேரு இருந்தாலும், அன்னைக்கு ஊர் பொட்டைப் புள்ளைகளும், ஆம்பளை பசங்களும் ஒரே ஆட்டம் பாட்டம்தான் அம்சமா இருக்கும். முந்தின நா ராத்திரியே துவங்கிற ஆட்டம் அடுத்த நா அடங்கறதுக்கு வெகுநேரம் ஆகும். அதோட கெளம்பும் ஓலையக்கா கும்மி பாட்டுக்கு சூடும், சத்தமும், கொண்டாட்டமும் சாஸ்தி. வயசுப் புள்ளைங்களும், அரும்பு முளைச்ச பசங்களும் அந்தப் பாட்டுக்குள்ளே காட்டற சக்காந்தத்துக்கு அளவேயிருக்காது.
''ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ...
தாழம்பு சித்தாடை.. தலைமேலயே முக்காடு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு புறப்பட்டாளாம் ஓலையக்கா...
ஓலே...ஓலே... !''
''நாழி, நாழி நெல்லுக் குத்தி,
நடுக்கெணத்துல பொங்க வச்சு
கோழியக்குழம்பாக்கி... குத்து நெல்லும் சோறாக்கி,
கோழிக்கறி பத்தலையேன்னு கொதிக்கிறாளாம் ஓலையக்கா...
ஓலே.. ஓலே...!''
நடுராத்திரி ஊர்க் கோடியிலயிருந்து பாட்டு புறப்பட்டு வரும். கும்மியடிசத்தமும், ஓலே சத்தமும், கூடவே தப்பட்டை சத்தமும் ஆடாத தொடையையும் ஆட வைக்கும்.
அரைக்கா டவுசர் போட்ட அந்தப் பருவத்துல, துாக்கங் கலைஞ்சு போய்ப் பார்த்த அங்கே வாண வேடிக்கையும், வேட்டச் சத்தமும் மினுக்கம் காட்டும். ஊருக்குள்ளே ரெண்டாங்கட்டி சாதி சனங்க முதல்ல, குடியான குடிக வரை. ஊட்டுக்கு ஊடு மார்கழி மாசம் துவங்கி ஒண்ணாந்தேதி ஒண்ணு. ரெண்டாந்தேதி ரெண்டு. மூணாந்தேதி மூணுன்னு முப்பதுநாளும் வச்ச சாணி உருண்டைப் புள்ளார்களை, பந்தல் மேலயிருந்து பிரம்பு கூடையில எடுத்தடுக்கி நடு ஊருக்கு கொண்டு புள்ளார் கோயில் முச்சந்தியில வச்சு அதை சுத்தி நின்னு வந்து தாவணி போட்ட பொட்டப்புள்ளைக, இளவெட்டு பொம்பளைக கும்மி கொட்டி நின்னா அதை ஊரே சுத்தி நின்னு பாக்கும்.
''வட்ட, வட்டப் புள்ளாரே..
வடிவெடுத்த புள்ளாரே...
முழங்காலு தண்ணியில மொதக்கறியே புள்ளாரே... ஓலே.. ஓலே...!
ஓலையக்கா கொண்டையில..
ஒரு சாடு தாழம்பூ..
தாழம்பூ சித்தாடை, தலைநிறைய முக்காடு ஓலே... ஓலே....
நாழி நாழி நெல்லுக்குத்தி, நடுக்கெணத்துல பொங்க வச்சு,
பொட்டுன்னு சத்தம் கேட்டு, புறப்பட்டாளாம் ஓலையக்கா...
ஓலே... ஓலே...!''
குமிஞ்சு கொட்டும் கும்மி, ஒருக்கழிச்சு நிமிர்ந்து போடும் குதியாட்டம். எளவட்டப்பசங்களை சும்மாயிருக்க வைக்காது. அவங்களும் பதிலுக்கு வட்டம் கட்டுவாங்க. வேட்டிய மடிச்சுக் கட்டீட்டு போடுவாங்க பாரு ஆட்டம்.
மஞ்ச அறுபதும்பா..மைகோதி முப்பதும்பா.
மஞ்சள் குறைச்சிலின்னு மயங்குறாளாம் ஓலையக்கா..
சீலை அறுபதும்பா, சித்தாடை முப்பதும்பா..
சீலை குறைச்சல்ன்னு சிணுங்கறாளாம் ஓலையக்கா...!
பதிலுக்கு மிதக்கும் எசப்பாட்டு. பொட்டைப்புள்ளைகளுக்கு வெக்கம் புடுங்கித்திங்கறது கண்ணுல மினுங்கும். அதை காட்டிக்காத மாதிரி கும்மிப்பாட்டு தொடரும்.
''நாழி நாழி நெல்லுக்குத்தி நடுக்கெணத்துல பொங்க வச்சு.
பொட்டுன்னு சத்தம் கேட்டு பொறப்பட்டாளாம் ஓலையக்கா..
ஓலையக்கா கொண்டையில ஒரு கூடை தாழம்பூ.
தாழம்பூ சாலாட தலைநிறையை முக்காடு..
ஓலே.. ஓலே... ஓலே!''
நடு ஊர்ல நாலு நாழி ஆட்டம். கொஞ்சதூரம் ஊர்வலமா போய் ஊர் கவுண்டர் ஊட்டுல சித்த நாழி. அப்புறம் ஊர் மணியகாரர் வாசல்ல ஒரு ஆட்டம். இப்படியே ஊர்ப் புள்ளையார் கோயில். அம்மன் கோயில்லுனு வட்டம் கட்டி பாடிஆடீட்டு ஊர்க்கோடியில இருக்கிற ஆத்துக்கோ, கிணத்துக்கோ போய்ச் சேரும்போது சேவக்கோழி கூப்பிட்டுடும்.
பொங்க வச்சு, புள்ளாருக்கு படையல் போட்டு, ஓலையக்கா கும்மி கொட்டி புள்ளார்களை தண்ணியில விடும்போது ஒப்பாரிப் பாட்டாவே ஒலிக்கும் ஓலையக்கா கும்மி. அடுத்த நா அதே மாதிரி நடு ஊர்ல கூடும் சனங்க கூட்டம். பொறி கடலை, முறுக்கு, கச்சாயம், அதிரசம், பச்சை மாவு, இன்னபிற திண்பண்டங்களை அவங்க, அவங்க சக்திக்கு தகுந்தாப்பல கூடை, கூடையா வச்சு மறுபடியும் ஓலையக்கா கும்மி பாட்டு போட்டு ஊரே கிளம்பி ஊர் கவுண்டர், ஊர் மணியக்காரர், ஊர் நாயக்கர் ஊடுன்னு போய் கும்மி கொட்டும்.
அப்படியே வீதிக்கு வீதி சேர்ந்து நிற்கும். அதுக்கப்புறம் பக்கத்து ஊருக்கு ஓலையக்கா ஆடல் பாடலுடன் நகரும். அங்கேயும் நடு ஊரு. அரச மரத்தடி. புள்ளாரு கோயில். ஊர்ப்பெரியதனக்காரர் ஊடு. இப்படியே கும்மி கொட்டி ஏழு ஊரு சனங்களும் ஒண்ணா சேரும். அதுல ரவுண்ட் கட்டி ஆடும் ஆட்டத்தில் எந்த ஊரு ஆட்டம் உசத்தின்னு பட்டிமன்றமே வக்கலாம். அந்தளவுக்கு ஓலையக்கா பாட்டு ஆட்டத்துல போட்டி நடக்கும். எல்லாம் சேர்ந்து அத்தனை ஊருக்கும் பொதுவா இருக்கிற ஆத்தங்கரைக்கும்.குளக்கரையின் ஏரிக்கரைக்கும் போனா இக்கரையிலிருந்து அக்கறை வரைக்கும் வண்ண வண்ணத்துணியுடுத்தி பட்டாம்பூச்சிகளா பொண்டு புள்ளைகளா தெரியும்.
திம்பண்டங்கள் தின்னு முடிச்சு, அங்கேயே இளைப்பாறி, சிறிசு, பெரிசு, மாமா, மச்சினிச்சின்னு பார்க்காம எளவயசு துள்ள அடிச்சுப்புடிச்சு விளையாடி, அடியாத எடத்துல அடிச்சி, புடியாத எடத்துல புடிச்சு, திரும்பவும் ஓலையக்கா கும்மி பாட்டுடனே திரும்பி வரும்போதும் அடுத்த வருஷம் பூப்பறிக்கிற நோம்பி எப்படா வரும்ன்னு ஏக்கமா இருக்கும்.
கொங்குசீமையின் கோயமுத்தூர் கிழக்கத்தி கிராமங்களான அவினாசி, சேவூர், அசநல்லிபாளையம், சோமனூர், சேடபாளையம், செகடந்தாழி, கோம்பக்காடு, செங்கத்துறை, காடாம்பாடி, கரடிவாவி, சுல்தான்பேட்டை, காமநாயக்கன்பாளையம், அனுப்பட்டி, மல்லேகவுண்டன்பாளையம், வேப்பங்கொட்டைபாளையம், புளியம்பட்டி, கிருஷ்ணாபுரம், பல்லடம், வடுகபாளையம் என வரும் ஊர்களில் இந்த பூப்பறிக்கிற நோம்பியை கொண்டாடற விதமே தனி அழகு. அதில் ஓலையக்கா கும்மியை காணக்கண்கோடி வேணும். அதுவெல்லாம் முப்பது வருஷத்துக்கு மேலாக வழக்கொழிஞ்சே போச்சு.
''அந்தக்காலத்துல இந்தளவுக்கு கட்சிக இல்லை. எளந்தாரிப் பசங்க கொடியப் புடிச்சுட்டு எங்க கட்சிதான் பெரிசு. என் தலைவன்தான் உசத்தின்னு சண்டை கட்டிகிட்டது இல்லை. இங்குள்ள ஏழு ஊரு கட்டி ஓலையக்கா கும்மியடிச்ச ஊருல இருபத்தஞ்சு வருஷத்துக்கு முந்தி ஒரு சம்பவம். ஊர்கூடி கும்மி கொட்டற கோயில் எங்களுதா? உங்களுதான்னு சண்டை வந்துடுச்சு. எளவட்டப் பசங்க கைகலந்துட்டாங்க. அதுல ரெண்டு ஊரும் பகையாச்சு. எம்மட ஊருக்குள்ளே நீ வராதே. எம்மட ஊருக்குள்ளே நீ வராதேன்னு ஊருக்கூட்டம் போட்டு கட்டுப்பாடும் போட்டாச்சு. எல்லாம் இந்த ஓலையக்கா பாட்டு பழமையால வந்த வினை. அது உள்ளூருக்குள்ளே கூட வேண்டாம்ன்னு சித்த வருஷத்துல அதையும் உட்டுட்டாங்க. இது போல ஒவ்வொரு ஊருலயும் ஒவ்வொரு பிரச்சனைக. எந்த ஊருலயும் பூப்பறிக்கப்போற கொண்டாட்டம் இருந்தாலும் ஒத்துமையா நின்னு போடற ஓலையக்கா கும்மியாட்டம் மட்டும் காணாமப் போச்சு!''
சுத்துப்பத்து கிராமங்களில் அந்தக்காலத்தில் எளசாய் சிறிசாய் கும்மி கொட்டிப்பாடிய ஊர்ப் பெரிசுகள் இப்போது சொல்லும்போது எதையோ கொடுத்துட்டு பறிச்ச உணர்வு ததும்புது. எளமை கொஞ்சும் அந்த ஓலையக்கா இப்ப வழக்கொழிஞ்சு போனாலும் பொங்கி வர்ற தை மாசத்துல இந்த கிராமத்து மண்ணை மிதிச்சு நகருகையில் ஓலையக்கா குரல் மட்டும் உள்ளுக்குள் ஒலிப்பதை தவிர்க்க முடிவதில்லை. மண்ணிலும் மனதிலும் பிரிக்க முடியாத ஜீவநாடி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT