Published : 17 Jan 2018 08:11 PM
Last Updated : 17 Jan 2018 08:11 PM

ரஜினி அரசியல்: 11- நடிப்புக்கு சிவாஜி; அரசியலுக்கு கருணாநிதி

கடந்த 2014-ம் ஆண்டு. மார்ச் மாதம். திமுக தலைவர் குடும்பத்தில் பிரச்சினை. சகோதர யுத்தம் மூண்டு கிடந்த வேளை. அழகிரியும், அவரின் ஆதரவாளர்களும் கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்கள். அந்த காலகட்டத்தில் விநோத நிகழ்வாக ரஜினியை அவர் வீட்டில் சந்திக்கிறார் அழகிரி. அவருடன் அவர் மகன் துரை தயாநிதி.

பத்திரிகையாளர்கள் கேள்விக்கு, 'என் மகன் படம் எடுக்கப் போகிறான். அதைப் பற்றி பேசவே வந்தேன். கோச்சடையான் பற்றியும் பேசினோம். நிஜமாகவே அரசியல் பேசவில்லை!' என பதில் அளித்து பறந்துவிட்டார் அழகிரி.

ஆனால் அழகிரியின் ஆதரவாளர்களோ நின்று நிதானித்து, அழகிரி மகனின் சினிமா படம் பற்றி பேசவா ரஜினியை சந்திக்க வருவார்? எனக்கேட்டு பல்வேறு விஷயங்களை கொளுத்திப் போடவும் செய்தார்கள்.

'அழகிரியின் திட்டம் திமுகவை மூன்றாவது இடத்திற்கு தள்ளுவதும், அதன் மூலம் தன் இழப்பை புரிய வைப்பதும்தான். அதற்காகவே டெல்லியில் அழகிரி ராஜ்நாத் சிங்கை சந்தித்தார். அடுத்து ரஜினிகாந்தையும் சந்தித்தார். 1996-ல் நீங்கள் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டீர்கள். விஜயகாந்த் அரசியலுக்கு வந்து 10 சதவீதம் ஓட்டுகளைப் பெற்றிருக்கும்போது, நீங்கள் அரசியலுக்கு வந்தால் 35 சதவீதம் ஓட்டுகளை அள்ளலாம். தமிழகத்தில் சாதி, மதம், இனம் இவற்றுக்கெல்லாம் அப்பாற்பட்டு உங்களுக்கு மட்டுமே மக்களின் செல்வாக்கு இருக்கிறது. தயங்காமல் அரசியலுக்கு வாங்க. நான் உங்களுக்கு தோள் கொடுக்கிறேன். இப்போதும் 40 சதவீதம் திமுகவினர் என்னுடன் இருக்கிறார்கள். 10 சதவீதம் பேர் ரகசியமாக எனக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்றெல்லாம் சொல்லியிருக்கிறார். ரஜினி எந்த பிரதிபலிப்பும் காட்டவில்லை!' என்பதே அப்போது அவர்கள் வெளிப்படுத்திய விஷயங்களாக இருந்தன. இந்த விவகாரங்கள் அப்போதே பத்திரிகை மற்றும் மீடியாக்களில் இலைமறைவு காய் மறைவாக வெளி வந்தவைதான்.

2014-ல் அழகிரி எதிர்பார்த்தது இப்போது நடந்துள்ளது. அதன் எதிரொலியே அழகிரி ரஜினி அரசியலுக்கு விரித்த சிவப்புக் கம்பள வரவேற்பு. அழகிரியின் வெளிப்படை அரசியல் சரிதான். ஆனால் அழகிரி சொன்னதை எந்த அளவு உள்வாங்கினார் ரஜினி?

ஆர்.கே. நகர் தேர்தல் முடிவினை எடுத்துக் கொள்வோம். அதில் திமுக மூன்றாவது இடம் பெற்றிருக்கிறது. டெபாசிட்டும் போயிருக்கிறது. பதிவான வாக்குகள் 1,77,057. அதில் தினகரன் பெற்ற வாக்குகள் 89,013.

கடுமையாக சரிந்த திமுகவின் செல்வாக்கு

2016 தேர்தலில் 57,673 வாக்குகள் பெற்ற நிலையில், இந்த முறை 24,651 வாக்குகளே பெறறுள்ளது. 2016 தேர்தலில் திமுக பெற்ற ஓட்டுகளில் பாதியைக்கூட இப்போது பெறவில்லை. இதன் மூலம் அழகிரியின் அரசியல் பார்வை சரியாக இருந்ததா? திருமங்கலம் ஃபார்முலாவை உருவாக்கினவர் அன்று சொன்னது இந்த தேர்தலில் நடந்ததா இல்லையா? அதை ரஜினி உன்னிப்பாக கவனித்தாரா இல்லையா? தெரியவில்லை. ஆனால் அரசியல் கட்சி அறிவிப்பதாக இப்போதுதான் சொல்லியிருக்கிறார். சொல்லிவிட்டு 1949-ம் ஆண்டு கால அரசியல் வியூகத்திற்குள்ளேயே போயிருக்கிறார் ரஜினி.

அந்த அரசியலுக்குள் செல்லுவதற்கு முன்பு இதுவெல்லாம் திட்டமிட்டு நடந்ததா இயல்பாக நடந்ததா தெரியவில்லை என்பதையும் சொல்லித்தான் தீர வேண்டும். அதே சமயம் நிச்சயம் இயல்பாகத்தான் நடந்திருப்பதற்கே வாய்ப்பு அதிகம் என்பதையும் சுட்டிக் காட்டிட வேண்டும். திட்டமிட்டது போலவே இயல்பாக நடக்கும் விஷயங்கள் யாவும் வரலாற்றை நினைவுகூர வைக்கும் வகையில் அமைந்து, அதுவே மீண்டும் வரலாறு படைக்கிறது என்பதை சரித்திரம் சொல்லிக் கொண்டிருப்பதால்தான் அதையும் இங்கே சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆனால், ரஜினி கருணாநிதியை சந்தித்ததை வைத்து அரசியல் சர்ச்சைகள் கிளப்புகிறார்கள். தன் மரியாதை நிமித்தமான சந்திப்பை அரசியலுக்கு பயன்படுத்திவிட்டார் ரஜினி என்ற புகார்களும் திமுகவினர் மத்தியில் எழுகிறது. மாற்று அரசியலுக்கு வருபவர்கள் தம் நேசமுள்ள தலைவர்களை சந்திப்பதும், அதில் அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகள் எழுவதும் சுதந்திர இந்தியாவிற்கு முந்தைய, பிந்தைய காலத்திலிருந்தே நடந்து வந்துள்ளது. தமிழகத்தில் திராவிட இயக்க வரலாற்றிலும் அத்தகைய நிகழ்வுகள் நடந்தேறியுள்ளன.

அப்படித்தான் 1949-ஆம் ஆண்டு ஈவெரா பெரியார், இந்திய கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜியை திருவண்ணாமலையில் தனியாகச் சந்தித்துப் பேசினார், தம் சொந்தப் பிரச்சினை குறித்துப் பேசினேன் என்றே செய்தி வெளியிட்டார். தொடர்ந்து கோவையிலும், பண்ருட்டியிலும் நடைபெற்ற பொதுக்கூட்ட நிகழ்ச்சியிலும் கலந்துகொண்ட அண்ணா மேடையிலேயே பேசும் போது, 'ராஜாஜியை ஏன் சந்தித்தீர்கள்? என்ன நோக்கம்? தங்களுக்கு என்று சொந்தப் பிரச்சினை என்ன இருக்க முடியும்? இயக்கத்திற்கு அப்பாற்பட்டதாக எந்த ஒரு பிரச்சினையும் திராவிடக் கழகத் தலைவராக இருக்கும் தங்களுக்கு இருக்க நியாயமில்லையே?' என்றெல்லாம் கேட்டார்.

இரண்டு பொதுக்கூட்டங்களிலும் எந்த ஒரு விளக்கமும் கூறாத ஈவெரா, சில நாட்கள் கழித்து, 'ஈவெரா இயக்கத்தின் பாதுகாப்பு கருதியும், எதிர்கால நலன் கருதியும் திருமணம் என்ற பெயரால் இரு ஏற்பாடுகள் செய்யப்போகிறேன். எனக்கு உதவியாளராகவும், எனது நம்பிக்கைக்கு உரியவராகவும், இருந்துவரும் மணியம்மையாரைத் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன். இதனைத் தடுக்கவே அல்லது எதிர்க்கவே எவருக்கும் உரிமையில்லை!' என்று கருத்துப்பட ஓர் அறிக்கையை வெளியிட்டார். ஈவெராவின் முடிவை மறுபரிசீலனை செய்ய பல்வேறு முயற்சிகளை அண்ணாவின் தரப்பு எடுத்தது. ஒன்றும் ஈடேறவில்லை.

இது மட்டுமல்லாது வேறு பல கொள்கை ரீதியான விஷயங்களில் பெரியாருடன் முரண்பாடு கொண்டே (இவையெல்லாம் அந்த காலத்தில் விடுதலை, திராவிட நாடு உள்ளிட்ட ஏடுகளில் காரசாரமான இரு தரப்பு தலைவர்கள் மூலமாகவும் கட்டுரைகளாக வந்திருக்கிறது) 1949 செப்டம்பர் 17-ம் தேதியன்று சென்னை பவளக்காரத் தெருவில் திருவொற்றியூர் சண்முகம் வீட்டின் மாடிப் பகுதியிலுள்ள கூடத்தில் திமுக தொடங்கப்பட்டது. அதற்கடுத்த நாள் (செப்டம்பர் 18) ராபின்சன் பூங்காவில் கூடிய ஒரு கூட்டத்தில் கட்சி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுகிறது. அப்போது அண்ணாவுடன் முக்கிய தலைவர்களாக இருந்தவர்கள் ஈவெராவின் அண்ணன் மகன் ஈ.வி.கே.எஸ்.சம்பத், மதியழகன், இரா.நெடுஞ்செழியன், இரா.செழியன், என்.வி.நடராசன், கே.கே.நீலமேகம், அன்பழகன், சி.பி.சிற்றரசு போன்றவர்களே.

இப்போது திமுகவின் தலைவராக விளங்கும் மு.கருணாநிதி அரசியல் காட்சியிலேயே இல்லை (அவர் இக்காலகட்டத்தில் சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் சினிமா கதை வசனம் எழுதுபவராக வேலை பார்த்து வந்தார் மாதம் ஐந்நூறு ரூபாய் சம்பளத்தில். வசனம் கருணாநிதி என்ற பெயரையும் கூட திரையில் காணமுடியாத ஆரம்ப நாள்கள் அவை. தன் குடும்பத்தோடு சேலத்தில் இடம்பெயர்ந்து தங்கியிருந்தார் அவர். அவருடன் இருந்தது கண்ணதாசன். அவர்கள் இருவரும் இக்கூட்டத்திற்காக சேலத்திலிருந்து வந்து விருதுநகர் நாடார் லாட்ஜில் தங்கியதாகவும், அண்ணா 'உன்னை பிரசாரக் குழுவில் சேர்த்திருக்கிறேன்' என்று சொன்னதாகவும், மறுநாள் காலை தானும் கண்ணதாசனும் சேலம் திரும்பிவிட்டதாகவும் கருணாநிதி 'நெஞ்சுக்கு நீதி'யில் எழுதியிருக்கிறார்).

அப்போதிருந்து அரசியல் களத்தில் ஏகப்பட்ட களப்பணிகளுக்கு பிறகே திமுக படிப்படியான வளர்ச்சி கண்டு 1967-ல் திமுக கட்சி தமிழகத்தின் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. அது ஆட்சியில் அமர கட்சி ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கிறது. திராவிட இயக்கம் எனப்பெரும் இயக்கத்தில் துளிர்த்த இருபெரும் கிளைகளின் கருத்தியல் ரீதியான முரண்பாடுகள், எதிரும் புதிருமாக உள்ள தலைவர்களையே சந்தித்து ஆலோசனை பெற வைத்தது (கவனிக்க தனிப்பட்ட பிரச்சினையாக இருந்தாலும், பொதுப் பிரச்சனையாக இருந்தாலும்), இயக்கத்தையே உடைத்து வெளியேற வைத்து புதிய கட்சியை உருவாக்க வைத்தது என்பது திமுக உருவாக்கத்திற்கு ஆகப்பெரும் சான்று.

சரி, அதற்கு பிறகு சரித்திரம் மாறுகிறது.

காங்கிரஸை போட்டுத்தாக்குவதில் வரிந்து கட்டிக் கொண்டு திமுக நின்றிருந்த வேளை. காமராஜர் மீது அளவற்ற மரியாதை கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஏற்கெனவே காங்கிரஸில் இருந்து திமுகவிற்கு வந்தவர் அல்லவா அவர்? கருத்தியல் ரீதியாக எம்ஜிஆரை திமுகவிடமிருந்து தனிமைப்படுத்திய ஒரு சம்பவம் 1965-ல் நடந்தது. அது காமராஜரின் 62-வது பிறந்தநாள் விழா. சென்னை எழும்பூரில் நடந்த அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக எம்ஜிஆர் அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் தன்னை மறந்து காமராஜருக்கு புகழாரம் சூட்டி உணர்ச்சி பொங்கினார். அதில்தான் காங்கிரஸ் கட்சியிலிருந்து வந்தவன், காமராஜரின் பற்றாளன். அவரே என் முதல் தலைவர். என் தலைவர் அண்ணாவிற்கு இணையானவர் என்றெல்லாம் குறிப்பிட்டார். இதன் மீது கடும் கண்டனக் குரல்கள் திமுகவிலேயே எழுந்தது.

'கட்சியின் முக்கியத் தலைவர் அந்தஸ்தில் இருப்பவர், எப்படி மாற்றுக்கட்சியின் தலைவரை புகழலாம். அண்ணாவுடன் ஒப்பிடலாம்!' என்றெல்லாம் கட்சிக்குள்ளேயே கண்டனங்கள் எழுந்தன. என்றாலும் எம்.ஜி.ஆர் தன் நிலைப்பாட்டில் உறுதியாக நின்றார். ஒரு கட்டத்தில் அண்ணாவிடமே தன் நிலையை எடுத்துரைத்தார். எம்ஜிஆரை நன்கு புரிந்தவரான அண்ணா, மற்றவர்களின் பேச்சை பொருட்படுத்தவில்லை.

1969-ல் மறைகிறார் அண்ணா. முதல்வர் நாற்காலி காலியாகிறது. அடுத்த கட்ட திமுக தலைவராக இருந்தவர் நாவலர் நெடுஞ்செழியன். அவரை முதல்வராக விடவில்லை கருணாநிதி வகுத்த அரசியல் வியூகம். முழு பக்கபலமாக எம்ஜிஆர் இருந்ததாலேயே அப்போது முதல்வர் நாற்காலியில் கருணாநிதி அமர முடிந்தது என்பதை வரலாறு சொல்கிறது. 1971 சட்டப்பேரவைத் தேர்தல். மாபெரும் வெற்றியை திமுக சூடி, கருணாநிதி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பின்னர் எம்ஜிஆர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்.

அதற்கு பிறகு ஆறாண்டுகள் கழித்தே ஆட்சியைப் பிடிக்கிறார் எம்ஜிஆர். எம்ஜிஆரைப் பொருத்தவரை ஆரம்பகாலத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். 1952-ல் அண்ணாவின் தலைமையில் ஈர்க்கப்பட்டு திமுகவில் சேர்ந்தார். முதலில் கட்சியின் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்து திரைப்படங்களில் வசனங்கள் பாடல்கள் மூலம் கட்சியின் பிரச்சார பீரங்கியாகவே மாறினார். கிட்டத்தட்ட கட்சியில் எம்எல்ஏவாகி, கட்சி பொருளாளராகி தீவிர கட்சிப்பணிக்கு பிறகுதான் வந்து அதிமுகவை 1972-ல் ஆரம்பித்தார். அவர் திமுகவில் சேர்ந்து 20 ஆண்டுகள் கழித்தே இது நிகழ்ந்தது.

கட்சி ஆரம்பித்ததும் சும்மாயிருந்தாரா? நேராக மாற்றுக்கட்சி தலைவர்களை எல்லாம் சந்தித்தார். குறிப்பாக கம்யூனிஸ்ட் தலைவர்களை சந்தித்தார். தோழர்கள் ராமமூர்த்தி, உமாநாத் போன்றவர்கள் ஏற்கெனவே அவருக்கு நெருக்கமான வழிகாட்டிகளாக இருந்தார்கள் (இன்று ரஜினி ஆன்மிகத் தலைவர்களை அருகில் இருத்தியிருப்பது போல்). பெரியாரை சந்தித்து ஆசி பெற்றார். காமராஜரிடம் திண்டுக்கல் தேர்தலின் போது ஆதரவு கேட்டார். அவர் அதிமுக-திமுக ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் என கமெண்ட் அடித்த அரசியல் பஞ்ச் வசனமும் உருண்டது இந்தக் காலத்தில்தான்.

ரஜினிக்கு எம்ஜிஆர், கருணாநிதியைப் போன்று நேரடியான அரசியல் பின்னணிகள் இல்லை. எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து தனக்கு பிடித்தமான தலைவர்களை சந்தித்தது போலவே, 'கட்சி ஆரம்பிக்கப் போகிறேன்!' என்று அறிவித்துவிட்டு இவரும் தலைவர்களை சந்திக்கிறார். அதில் திராவிடத் தலைவர் பெரியார் வந்தார் என்றால் இதில் ஆன்மிகத்தலைவர்கள், மடாதிபதிகள் வருகிறார்கள். அதேசமயத்தில் திராவிடக்கட்சியின் மூத்த தூணாக விளங்கும் கருணாநிதியும் வருகிறார்.

தனக்கு அரசியல் என்ட்ரியை கொடுத்து அமைச்சர் பதவியை இழந்த ஆர்.எம்.வீரப்பன் வருகிறார். ஆர்.எம்.வீரப்பன் எந்த கமெண்ட்டும் மீடியாக்களிடம் சொல்லவில்லை. கருணாநிதியோ கமெண்ட் சொல்லும் நிலையில் இல்லை. அதனால் அவரின் திமுக முகாமிலிருந்து பெரும் சர்ச்சைகள் கிளம்புகின்றன. ரஜினியைப் பொருத்தவரை மடாதிபதிகள் பீடாதிபதிகளை சந்தித்தாலும், அவர்களை முன்னணியில் வைத்தாலும் அவரின் பாசத்திற்குரிய நடிகர் சிவாஜி கணேசன். பற்றுதலுக்குரிய அரசியல் தலைவர் கருணாநிதி என்பதை மறுப்பதற்கில்லை. அதுதான் அவரை இந்த கட்டத்தில் சந்திக்க வைத்திருக்கிறது என்பதை உணரத் தலைப்படுகிறேன். சரி, இந்த இடத்தில் எதற்கு திகவிலிருந்து திமுக, திமுகவிலிருந்து அதிமுக உருவான சரித்திரத்தின் சம்பவங்கள்?

பேசித்தெளிவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x