Published : 21 Jan 2018 07:05 PM
Last Updated : 21 Jan 2018 07:05 PM

ரஜினி அரசியல்: 14- சிஸ்டம் சரியில்லை என எப்போது சொன்னார்?

அன்றைக்கு முதல்வராக இருந்த ஜெயலலிதாவைப் பாராட்டி ரஜினி மேடையில் பேசும் காட்சியை அவருக்குப் பின்னே இருந்த பிரம்மாண்ட ஜெயலலிதா கட்-அவுட் பேக்ரவுண்ட் புகைப்படத்துடன் வெளியிட்டு, 'நிஜ அடக்கமா? வாமன அவதாரமா?' என அடிக்குறிப்பில் கமெண்ட்டும் அடித்திருக்கிறது அந்த பிரபல வார இதழ்.

1991-ல் ஜெ ஆட்சி அமைந்த பிறகு ஒரு வார இதழில் ரஜினியிடம் குறும்பேட்டி.

பெண்களுக்கு பெருமை சேர்ப்பது தாய்மை. ஆண்களுக்கு பெருமை சேர்ப்பது எது?

ஆண்களுக்கு பெருமை, பத்து பேருக்கு உபயோகப்படற மாதிரி பிரயோஜனமாக இருப்பதுதான்.

கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று ஆசையிருக்கிறதா?

முதலில் உங்களுக்கு இருக்கிறதா சொல்லுங்கள். எனக்கு அந்த ஆசை எல்லாம் இல்லம்மா. வீட்லயும், நாட்டிலேயும் நல்ல பேர் கிடைச்சா அது போதும். அது கின்னஸ் புத்தகத்துல இடம் பெற்ற மாதிரிதான்.

ஐந்தே நிமிஷம் நீங்கள் தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொள்ளச் சொன்னால், முதன் முதலில் என்ன செய்வீர்கள்?

அஞ்சு நிமிஷத்துலயா? ஒண்ணுமே செய்ய முடியாது. அதை ஒரு நாளாக வைத்துக் கொள்வோம். ஒரு நாளைக்கு நான் முதன் மந்திரியாக இருந்தால் உடனே நாட்டில் ஏழைகளே இல்லாமல் செய்து வறுமையை ஒழித்து விடுவேன். என்னால அது முடியும்.

இதே போல் 1995-ல் ஜெயலலிதா ஆட்சியில் சுஜாதா- ரஜினி சந்திப்பு. பேட்டியாக அச்சில் வந்துள்ளது.

'அரசியலுக்கு வந்தா உங்கள் கைக்கு சக்தி வாய்ந்த பதவி வரும் இல்லையா?' என்று ஒரு கேள்வி. அதற்கு பதில் சொல்கிறார். தனிமனிதனால் எதுவும் சாதிக்கவே முடியாது. எல்லாமே மாறணும். ஒட்டுமொத்த அமைப்பே மாறணும். புதுவெள்ளம்னு சொல்றாங்க இல்லையா? அது மாதிரி. அரசியல் அமைப்பே மாறணும். இப்ப இருக்கிற சிஸ்டம்ல யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது. மொத்தமா மாறினாதான் உண்டு!' என்கிறார் ரஜினி.

ஏதாவது பண்ணனும்னு நினைச்சு வர்றவங்க கூட கொஞ்ச நாளில் மாறிடறாங்க இல்லையா? அந்த கிளீன் இமேஜ் சீக்கிரத்தில மறைஞ்சு போயிடுது?

ஆமாம். எம்ஜிஆரையே எடுத்துக்குங்க. வந்த முதல் இரண்டு வருஷத்துல அவர் எப்படி இருந்தார். எப்படிப்பட்ட ஆட்சி நடத்தினார். அதுக்கப்புறம் அவராலேயே ஒண்ணும் செய்ய முடியலையே?

சுத்தி இருக்கிறவங்க விடாம சாப்பிட்டுர்றாங்க இல்லியா?

யெஸ். என்னன்னா, கொஞ்சம் நல்ல பேர் எடுக்கலாம். அவரை விட இவர் கொஞ்சம் பெட்டர். அது பிரயோஜனமில்லையே. சிஸ்டம் மாறணும்! என சொல்லிவிட்டு சிரிக்கிறார்.

ஆக, சிஸ்டம் சரியில்லை என்று சொன்னது இன்று நேற்று நடந்தது அல்ல. 1994-95 களில் ஜெயலலிதா ஆட்சியின்போதே அவர் சொன்ன அரசியல் வார்த்தைதான் அது. அதே சந்திப்பில் பல்வேறு அரசியல் கேள்வி பதில்கள் இடம் பிடிக்கின்றன.

நீங்க ஒரு சக்தி. உங்க படம் ரிலீஸ் ஆகலைன்னு திருச்சியில ஒரு ரசிகர் தற்கொலை பண்ணிட்டதாக கூட படிச்சேன். ஆனால் அந்த இல்யூசன் உங்ககிட்ட இல்லைங்கிறதும் தெரியும். உலகம் நம்மை விரும்புதுங்கிறது இல்யூசன் இல்லை. ஆனா, ரசிகர்கள் உங்களை ரொம்ப நெருக்கமா உணர்றாங்க. Larger than life image. ரசிகனோட சப்ஸ்டிட்யூட்டா இருக்கிற ஒருத்தர் நீங்கங்கிற இமேஜ் இருக்கே, அதை பாசிட்டிவ்வா திசை திருப்பலாமில்லையா? உங்க ரசிகர் மன்றங்கள்ல என்ன பண்றாங்க?

நிறைய பண்றாங்க. நற்பணிகள், சமூக சேவை, கண்தானம், முதியோர் உதவி, வெள்ள நிவாரணம் மாதிரி பலதும் செய்யறாங்க!

நீங்க சொல்றதை அப்படியே கேட்கிறாங்களா?

நிச்சயமா. அவங்க எல்லோருக்குமே நான் ஏன் அரசியலுக்கு வர மாட்டேங்கிறேன்னு ஓர் ஆசை இருக்கு. ஏன் தெளிவாச் சொல்ல மாட்டேங்கிறேன்னு நினைக்கிறாங்க. ஆனா ஆரம்பத்திலிருந்தே நான் சொல்லிட்டே வந்திருக்கேன். எனக்கு அரசியல்ல ஈடுபாடு கிடையாதுன்னு. அது மட்டுமில்லாம, நான் எதிர்காலத்தை பத்தி யோசிக்க மாட்டேன். இன்றைய தேதிதான் எனக்கு முக்கியம். ஏன்னா, நாளைக்கு இதுதான் நடக்கும்னு யாராலயும் சொல்ல முடியாது. நாளை சூப்பர் ஸ்டார் யாரு, வில்லன் யாருன்னு இப்பவே யாருமே சொல்ல முடியாது!

ரசிகர் மன்றங்களுக்கு ஏதாவது கைட்லைன்ஸ் கொடுத்திருக்கீங்களா?

ஆமாம். முதல்ல வீடு. அப்பா, அம்மா, மனைவி, குழந்தைகள் இதைத்தான் கவனிக்கணும். அதுக்கு அப்புறமா ரசிகர் மன்றத்துக்கு வாங்கன்னு சொல்லியிருக்கேன்!

ஜெயலலிதா அரசாங்கம் பத்தி என்ன நினைக்கிறீங்க?

நல்லா திறமையான லேடி. நல்ல நாலட்ஜ். எனக்கு உறுத்தற விஷயம் இந்த கட்-அவுட், பப்ளிசிட்டி இதெல்லாம்தான். இர்ரிடேட்டிங்கா ஃபீல் பண்ண வேண்டியிருக்கு. இவ்வளவு இன்டெலிஜென்ட் லேடிக்கு இது ஏன் தெரியலைன்னு புரியலை. நல்ல லீடர்ஷிப். ஆனா இதுல இப்படி அதையெல்லாம் மீறி கட்சியை கன்ட்ரோல்ல வெச்சிருக்கிறது மிகப் பெரிய விஷயம்!.

1996-ல் ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு தாங்காது என்று பஞ்ச் டயலாக் பேசி தமாகா-திமுக கூட்டணிக்கும் வெற்றிக்கும் காரணமான ரஜினி, அதற்கு முன்பே இவ்வளவு அரசியல் சர்ச்சைகளில் உழன்று வந்திருக்கிறார் என்பதை அந்தந்த காலகட்டத்தில் பத்திரிகை பேட்டிகளே உணர்த்துகின்றன.

இது மட்டுமா? 1989-ம் ஆண்டு. டிசம்பர் 14-ம் தேதி. ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டப திறப்பு விழா. இதற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கி, அந்த மண்டபத்தையும் திறந்து வைக்கிறார். அப்போது மேடையில் பேசிய ரஜினியின் பேச்சு ரசிகர்களை மட்டுமல்ல; அப்போதைய அரசியல் தலைகளையும் கூட கனிந்துருகச் செய்துவிட்டது.

''என்னை கன்னடக்காரன், தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறான் என்று சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதை ஆராய்ந்து பார்த்தால்தான் நான் தமிழ்நாட்டுக்காரன் என்பது புரியும். எங்களுடைய பூர்வீகம் கிருஷ்ணகிரி. என் தந்தை கிருஷ்ணகிரியில் உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் பிறந்தவர். வாழ்ந்தவர். தற்போதும் கிருஷ்ணகிரி தமிழ்நாட்டில்தான் உள்ளது. நான் தெய்வமாக வழிபடும் ஸ்ரீராகவேந்திரா சுவாமி ஒரு தமிழர். நான் ஆன்மிகத்தில் குருவாக வழிபடும் ரமண மகரிஷி அவரும் ஒரு தமிழர்தான். சிவாஜிராவாக இருந்த எனக்கு தமிழ் கற்றுத்தந்து எனக்கு மறுவாழ்வு கொடுத்து என்னை தத்தெடுத்து அறிமுகப்படுத்திய கே.பாலசந்தர் தமிழர்.

ஆரம்பத்திலிருந்தே என்னை சினிமாவில் சேரச் சொல்லி ஊக்கப்படுத்தய என் ஆத்ம நண்பர் ராஜ்பகதூர் ஒரு தமிழர். வாழ்நாள் முழுவதும் எனக்கு துணை வருவதாக கூறி என் வீட்டில் விளக்கேற்றிய என் மனைவி லதா ஒரு தமிழச்சி. என் குழந்தைகள் வாய் திறந்தவுடன் பேசிய முதல் வார்த்தை தமிழ். எனக்கு அன்பையும் ஆதரவையும் அள்ளிக் கொடுத்து, என்னை இந்த நிலைக்கு உயர்த்தியிருக்கும் என் உயிரினும் மேலான ரசிகப் பெருமக்கள் தமிழர்கள். அப்படியென்றால் நான் யார். நீங்களே சொல்லுங்கள்!'' என கனிந்துருகியதில் கூட்டமே கரைந்தது.

ரஜினி பேசிய பேச்சு இப்படி, அடுத்ததாக முதல்வர் கருணாநிதி பேசியதைப் பாருங்கள். கரையாதோர் மனதையும் கரைக்கும் மட்டுமல்ல. அப்போதே தமிழக அரசியலில் எவ்வளவு தூரம் ரஜினி உட்பொருளாய் நிறைந்திருக்கிறார் என்பதை உணர வைக்கும். கருணாநிதி பேசுகிறார்.

''இங்கே அனைவரையும் அன்புடன் அழைத்து அன்பினைப் பொழிந்து வரவேற்ற அன்புத்தம்பி ரஜினிகாந்தின் ராகவேந்திரா திருமண மண்டபத்தை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்குவதில் பெருமைப்படுகிறேன். பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். ஏதோ நான் ஆட்சிப்பொறுப்பில் உள்ள இப்போதுதான் அன்புத்தம்பி ரஜினிகாந்த் என்னிடத்தில் அன்பு கொண்டவர் அல்ல. ஆட்சிப் பொறுப்பில் இல்லாது பல்வேறு அல்லல்களை நான் அனுபவித்துக் கொண்டிருந்தபோதே என்னிடம் மாறாத அன்பு கொண்டிருந்தவர். அதை அவர் எப்போதும் வெளிப்படையாக காட்டிக் கொள்ளாவிட்டாலும் ரகசியமாக என்னிடத்தில் பாசத்துடன் பழக்கம் கொண்டிருந்தவர். அவருடைய விழாவில் நான் கலந்து கொண்டதை நன்றிப் பெருக்குடன் ஆற்றும் கடமையாக கருதுகிறேன்.

இந்த விழா தொடக்கத்தில் ரஜினிகாந்த் பேசும்போது தனது தந்தை தமிழகத்தில் கிருஷ்ணகிரி அருகில் உள்ள நாச்சிக்குப்பத்தில் பிறந்தவர் என்றார். அதைக்குறிப்பிட்டு இங்கே பேசிய நண்பர் வாழப்பாடி ராமமூர்த்தி, ரஜினிகாந்த் எனது கிருஷ்ணகிரி தொகுதியைச் சேர்ந்தவர். அதனால் மண்ணின் மைந்தர் என்று குறிப்பிட்டும் பேசினார். மண்ணின் மைந்தர் கொள்கையை அகில இந்திய காங்கிரஸ் கட்சி ஒப்புக் கொள்வதில்லை. ஆனாலும் வாழப்பாடி ராமமூர்த்தி மணணின் மைந்தர் என்று சொன்னதைக் கேட்டதும் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று பாடிய கணியன் பூங்குன்றனார் நினைவுக்கு வருகிறார். ஏழை எளியோரக்கும் திருமணம் நடத்த இங்கே இடம் அளிக்கப்படும் என்று ரஜினிகாந்த் இங்கே சொல்லியிருப்பது மகிழ்ச்சிக்கும், பாராட்டுக்கும் உரியது. இது எனது குடும்ப விழா. இதில் கலந்து கொள்வதில் மீண்டும் எனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறேன்!'' என்றார் கருணாநிதி.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x