Published : 13 Nov 2023 10:25 AM
Last Updated : 13 Nov 2023 10:25 AM
பிரதீப்புக்கு தான் ரெட் கார்டு கொடுத்த விவகாரம் சமூக வலைதளங்களில் இந்தளவுக்கு பூதாகரமாக வெடிக்கும் என்று கமல் எதிர்பார்த்திருக்க மாட்டார். வார இறுதி எபிசோடில், அவருடைய பேச்சிலேயே அது தெரிந்தது. பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களிடம் பேசும் சாக்கில் தன்னுடைய ரெட் கார்டு நடவடிக்கை சரியானதுதான் என்பதை ஆடியன்ஸுக்கு நிரூபிக்க மிகவும் பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தார். அதற்கு ஏற்றபடி ஆடியன்ஸ் கூட்டத்தில் முன்வரிசையில் உட்கார வைக்கப்பட்டிருந்தவர்களும், ஐந்து ரூபாய்க்கு நடிக்க சொன்னால் 500 ரூபாய்க்கு நடிப்பது போல ஓவர் ரியாக்சன்களுடன் கைதட்டிக் கொண்டே இருந்தனர்.
உங்கள் கேள்விகளுக்கான தெளிவு இன்று உங்களுக்கு கிடைத்துவிடும் என்று நிகழ்ச்சியை தொடங்கிய கமல், பிக்பாஸ் தமிழில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு நீண்ட குறும்படத்தை திரையிட்டுக் காட்டினார். கடந்தவார இறுதியில் பிரதீப்பின் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடங்கி, அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள் அதில் இடம்பெற்றிருந்தன. வந்ததும் வராததுமாக கமல் இந்த குறும்படத்தை போட்டு காட்டியது பிக்பாஸ் வீட்டில் இருப்பவர்களுக்கு என்று கூறப்பட்டாலும், அது முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் தன் மீது வீசப்படும் கேள்விகளை தட்டிவிடுவதற்காகவே என்பதை புரிந்துகொள்ளமுடிந்தது.
அதுமட்டுமல்லாமல், எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு அதிக குறும்படங்களும் காட்டப்பட்டது இந்த எபிசோடில்தான். இதன் மூலம் மிகத்தெளிவாக ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கும் தனக்கும் துளியும் சம்பந்தம் இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டே இருந்தார் கமல். மாயா குரூப்பையும், திரும்ப திரும்ப அவர்கள் வாயாலாயே இதனை சொல்ல வைத்ததை பார்க்கும்போது கமல் எதை நிரூபிக்க இவ்வளவு போராடுகிறார் என்று தோன்றியது. எந்த சீசனிலும் கமலிடம் இப்படியான தடுமாற்றத்தை பார்த்ததாக தெரியவில்லை. ரெட் கார்டு கொடுக்கும் அளவுக்கு அங்கே என்ன நடந்தது என்பதை தொகுத்து ஒரு குறும்படம் வெளியிட்டிருந்தால் கூட அவர் இவ்வளவு சமாளிக்க வேண்டிய நிலை வந்திருக்காது. அதைவிடுத்து நடந்த பிரச்சினைக்கும் தனக்கு சம்பந்தமே இல்லை என்று கமல் ஒதுங்கிக் கொண்டது ரசிக்கத்தக்கதாக இல்லை.
ரெட் கார்டு கொடுப்பதற்காக அவர்களை தனித்தனியே அழைத்து கருத்து கேட்டது வரை சரிதான். ஆனால் இறுதி முடிவு எடுத்தது கமல்தானே. முன்பே குறிப்பிட்டது போல இத்தனை கேமராக்கள் இருக்கும் இடத்தில், ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படும்போது கிராஸ் செக் செய்யாமலா வெளியே அனுப்பினார்கள் என்ற கேள்வி எழுகிறது. குறும்படம் மேல் குறும்படம் போட்டு தன் மீது தவறே இல்லை என்று கமல் நழுவியது அவர் எடுத்த முடிவின்மீது அவருக்கே நம்பிக்கை இல்லையோ என்ற சந்தேகத்தை வலுப்பெறவே செய்தது. இத்தனை குறும்படங்கள் வெளியிட்டதற்கு பதில் பிரதீப் செய்த தவறுகளை (ஒருவேளை அப்படி செய்திருந்தால்) அதனை வெளியிட்டு விமர்சிப்பவர்களின் வாயை அடைத்திருக்கலாமே?
இந்த வாரத்தில் மாயா குரூப்பையும் சமாளித்து, வார இறுதியில் கமலிடமும் தன்மையான விளக்கத்தை அளித்து ஸ்கோர் செய்தவர் விசித்ராதான். இன்னும் சொல்லப் போனால், பிரதீப்பால் (ஆடியன்ஸுக்கு தெரிந்து) நேரடியாக பாதிக்கப்பட்டவர் அவர்தான். பல்வேறு தருணங்களில் பிரதீப் நேரடியாகவே விசித்ராவை தரக்குறைவாக பேசினார். இது மெயின் எபிசோட்களிலுமே காட்டப்பட்டிருந்தது. அப்போது கமலுமே பிரதீப்பிடம் இதனை கண்டிப்புடன் சுட்டிக் காட்டியதாக தெரியவில்லை. ஆடியன்ஸின் கைதட்டல் காரணமாக இருந்திருக்கலாம். கடந்த வாரம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பியபோதும், அவர் பேசியதை மனதில் வைத்துக் கொள்ளாமல் அவருக்காக வந்து பேசியவரும் விசித்ராதான்.
வழக்கமாக, இதற்கு முந்தைய சீசன்களில், இது போல ‘தாய் ஸ்தான’ கேட்டகிரியில் வரும் போட்டியாளர்கள் மிஞ்சி மிஞ்சிப் போனால் இரண்டு வாரம், அல்லது மூன்று வாரங்கள் மட்டுமே தாக்குப் பிடிப்பார்கள். அதற்கு மேல் அவர்களுக்கும் மற்ற இளம் போட்டியாளர்களுக்கு முட்டிக் கொள்ளும். அல்லது கன்டென்ட் இல்லாமல் அவர்களாகவே வெளியேறிவிடுவார்கள். ஆனால் விசித்ரா அப்படி இல்லாமல் தவறை தட்டிக் கேட்கவேண்டிய நேரத்தில் தட்டிக் கேட்டும், மாயா குரூப் இந்த வாரம் முழுவதும் கொடுத்த தொல்லைகளுக்கு தரம் தாழ்ந்து போகாமல் எதிர்வினை ஆற்றியதிலும் மனம் கவர்ந்தார். பிரதீப் விஷயத்தில் மாற்றி மாற்றி பேசியது, அபத்தான காரணங்களை முன்வைத்தது உள்ளிட்ட ஒரு சில பிரச்சினைகள் அவரிடம் இருந்தாலும், வன்மத்துடன் அணுகிய மாயா குரூப்பை அவர் எதிர்கொண்ட விதம் சிறப்பு.
வாரம் முழுக்க மாயா, பூர்ணிமா தலைமையில் நடந்த சமபவங்கள் தொடர்பான விசாரணையின்போது ஆடியன்ஸிடமிருந்து எழுந்த கைதட்டல்களைக் கண்டு ஒருகணம் மாயா குரூப் ஆடிபோனது அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. தினேஷ் பேச எழுந்ததும், எழுந்த கைதட்டலை கண்டு தான் சொல்லவந்த விஷயத்தையே மறந்துபோனார் பூர்ணிமா. இந்த எபிசோட் முழுக்கவே அவர்களிடம் ஒருவித பதற்றம் இருந்தகொண்டே இருந்தது.
42ஆம் நாள் எபிசோடில் புதிய தலைவராகும் டாஸ்க்குக்கு தினேஷ், ஜோவிகா, ஐஷு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆனால் டாஸ்க் தொடங்கியதுதான் தாமதம், ‘வாம்மா மின்னல்’ என்பதைப் போல கண்ணிமைக்கும் நோடியில் டாஸ்க்கை செய்து முடித்து வெற்றிபெற்றார் தினேஷ். என்ன நடந்தது என்று ஜோவிகாவும், ஐஷுவும் யோசிப்பதற்கு முன்பே எல்லாம் முடிந்து போனது. அடுத்ததாக மாயாவின் கேப்டன்சியில் இருந்த பிரச்சினைகளை ஒவ்வொருவராக கூறச் செய்தார் கமல். இதில் பெரும்பாலானவர்கள் மாயாவிடம் இருந்த பிரச்சினைகளை முன்வைத்தனர். இறுதியில், மாயா தான் சொல்லும் விஷயங்களை, பிறர் காதுகொடுத்து கேட்கும் சொல்லவேண்டும், இல்லையென்றால் அது உங்கள் பக்கமே திரும்பி விடும் என்று கமல் அட்வைஸ் செய்து முடித்தார்.
வழக்கமாக ஒவ்வொருவராக சேவ் செய்து, ட்விஸ்ட் எல்லாம் வைத்து எலிமினேட் செய்யப்பட்ட நபரை அறிவிப்பார் கமல். ஆனால் இந்த முறை பேசிக் கொண்டிருந்த போதே ‘படார்’ என்று கார்டை எடுத்து ஐஷுவின் பெயரை காண்பித்தார். ஆரம்பத்தில் தன் தெளிவான பேச்சால் வலுவான போட்டியாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஐஷு, பின்னர் திசைமாறி கேமை விட்டு தடம் மாறினார். எலிமினேஷனுக்குப் பிறகும் கண்ணீர் வடித்துக் கொண்டே இருந்த நிக்சன், ஐஷுவின் வெளியேற்றத்துக்கு காரணமாக ஆடியன்ஸையும், வைல்டு கார்டு போட்டியாளர்களையும் குற்றம் சொல்லிக் கொண்டிருந்தார். ஐஷு வெளியேறியதற்கு உண்மையான காரணம் தான் தான் என்பதை கடைசிவரை அவர் உணரவே இல்லை.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட தினேஷின் நடவடிக்கைகளை பொறுத்தே இந்த வார எதிர்வினைகள் இருக்கும். ஆடியன்ஸின் மனநிலை தங்களுக்கு எதிராக இருக்கிறது என்பதை வார இறுதி எபிசோட்களின் மூலம் மாயா, பூர்ணிமா குரூப் உணர்ந்திருப்பார்கள் என்றே தோன்றுகிறது. இனியும் தங்களுடைய ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறார்களா அல்லது அதே பழைய பாணியிலேயே தொடர்கிறார்களா என்பது போகபோகத்தான் தெரியும்.
முந்தைய அத்தியாயம்: முகத்திரைகளை அம்பலப்படுத்திய நீதிமன்ற டாஸ்க்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT