Published : 27 Jan 2018 04:22 PM
Last Updated : 27 Jan 2018 04:22 PM
நாளுக்குநாள் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டு இருக்கிறது. எங்கோ அத்தி பூத்தாற்போல் பெண்மைக்கு சிலர் உரிய மரியாதையும் கவுரவமும் தரக்கூடும்.
அது பெரிய விஷயமல்ல. காரணம் பெண்களிடம் தரக்குறைவாக நடந்துகொள்ளுதலும் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற மனநிலையில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் பெண் சார்ந்த புரிதலற்றவர்களின் எண்ணிக்கையும்தான் அதிகம்.
நான் லீனியராக தொகுக்கப்பட்டுள்ள காட்சிகளில் கிஷோர், ஜெனோ, நிவேதா, மெல்ட்டன், கல்யாணி, ஷாந்தினி ஆகியோரின் நடிப்பில் 'வுமன் எச்டிஓ' குறும்படம் அதை அழுத்தமாகப் பேசியுள்ளது. நசுக்குபவர்களிடம் அழுத்துபவர்களிடமிருந்து வீறுகொண்டு எழும் பெண் சக்தியின் வீரியத்தையும் பேசத் தவறவில்லை.
காட்சிமொழி சார்ந்த கலை வடிவத்திற்கு எவ்வளவு உண்மையாய் இருக்கமுடியுமோ அவ்வளவு உண்மையாய் உழைத்திருக்கிறார்கள் இதில் பங்கேற்றவர்கள். அதில் முக்கியமானது வசனத்தை முன்னிறுத்தாமல் காட்சி ரீதியாகவும் உருவக ரீதியாகவும் முன்னிறுத்த முயன்றிருப்பது.
தரையில் படரும் நீராய், பாத்திரத்தில் நிறையும் நீராய், அடுப்பில் கொதிக்கும் நீராய், சில்லிடும் தட்பவெப்பத்தில் பனிக்கட்டியாகும் நீராய் ஆரம்பத்தில் பிடிபடாமல் போன உருவகக் காட்சிகள் பின்னர் நமக்குப் பிடிபடுகின்றன.... ''நீரோ இவள்.. துயரில் துயில்கிறாள், கண்ணீரோ இவள் விழிகளில் கசிகிறாள்... மழைச்சாரல் இவள் பூமியை நனைக்கிறாள்..'' என்ற பாடல் குறும்படம் முடிவதற்கு முன் வந்து நான் லீனியராக வந்த காட்சிகளை அழகாக அர்த்தப்படுத்துகிறது. இதன் இசையும் வரிகளும் ஜோசய்யா இம்மானுவேல் படத்தின் முக்கிய பலம்.
'வுமன் எச்டிஓ' எனும் இந்த நவீன முயற்சிமிக்க சங்கர நாராயணனின் படத்தொகுப்பு தகுந்த வேலைப்பாட்டுடன் முக்கிய பங்காற்றியுள்ளது
குறுங்குறு காட்சிகளால் சமூகத்தில் இன்றுள்ள பெண்ணின் இடத்தை கவனமாக பதிவு செய்துள்ளதோடு பெண் சக்தியின் பரிமாணங்களை உருவகமாகவும் காட்சிப்படுத்திய இயக்குநர் க்ருஷி பாராட்டுக்குரியவராகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT