Published : 08 Nov 2023 05:52 PM
Last Updated : 08 Nov 2023 05:52 PM
இந்தியாவின் இளைய பிரதமர் என்கிற பெருமை ஒருபுறம்; உலகத் தலைவர்களில் முக்கியமானவராகத் திகழ்ந்த, அன்புக்குரிய தாயார் இந்திரா காந்தியின் அகால மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி... 40 வயதில் இந்தியப் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்ட ராஜீவ் காந்தி, ஓர் இளைஞனுக்கே உரித்தான வேகம், நவீனத் தொழில்நுட்பத்தில் நாட்டம், புதிய முயற்சிகளில் ஆர்வம்... என்று இந்திய அரசியலுக்கு, புது ரத்தம் பாய்ச்சினார்.
1985 ஆகஸ்ட் 15 அன்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி வைத்து பிரதமராக ராஜீவ் காந்தி என்கிற இளைஞர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய முதல் உரையின் தொடக்கப் பகுதியே அபாரமாய் அமைந்தது. இதோ அந்த உரையின் முழு விவரம்: நாட்டு மக்களே. இந்திய சுதந்திரத்தின் 38-வது ஆண்டு தினத்தைக் கொண்டாடுகிறோம். இந்த சந்தர்ப்பத்தில் குடிமக்கள் எல்லாருக்கும், ஒவ்வொரு நகரத்திலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாயிகள், உழைப்பாளர்கள், நம் தாய் - சகோதரிகள், குழந்தைகள், ஆண்கள், பாதுகாப்புப் படையினர், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய உட்பட அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள்.
38 ஆண்டுகளுக்கு முன்பு இதே செங்கோட்டையில் முதன்முறையாக மூவண்ணக் கொடியை பண்டிதர் ஜவஹர்லால் நேரு ஏற்றி வைத்தார். இந்திராஜி இன்று இருந்திருக்க வேண்டும்; ஆனால் நம்மிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டார். இப்போது, பணி என் மீது விழுந்திருக்கிறது. சுதந்திரப் போராட்டத்தை நான் பார்க்கவில்லை. இங்கே முதன்முறையாக மூவண்ணக் கொடி ஏற்றப்பட்ட போது எனக்கு மூன்று வயது தான். இன்று இந்திய மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேர் என்னைப் போன்றவர்கள் - நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறாதவர்கள். ஒரு புதிய தலைமுறை உருவாகி இருக்கிறது. சுதந்திரப் போராட்டம் என்பது இமயமலை கங்கை நதி தக்காணப் பீடபூமி அஜந்தா தாஜ்மஹால் மகாபலிபுரம் இந்தியக் கலைகள் தத்துவம் அறிவியல் போன்றே மூதாதையரிடம் இருந்து பெற்ற செல்வம் அனையது) (The struggle for independence is as much our inheritance as the Himalayas, the Ganges, the Plateau of Deccan, Ajanta, Taj Mahal and Mahabalipuram, the arts, philosophy and science of India) புத்தர், கபீர், நானக், காந்திஜி... ஆகியோரை நினைக்கும் போது யாருக்குத்தான் பெருமையாக இருக்காது? நமது விடுதலைப் போராட்டத்தின் போது வாய்மை, அகிம்சைப் பாதையில் பயணித்த விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைக்கும்போது நாம் பெருமையில் திளைத்துப் போகிறோம்.
கடந்த 38 ஆண்டுகளில் நாம் கணிசமானா வளர்ச்சியை சாதித்து இருக்கிறோம். இத்தனை ஆண்டுகளில் நாம் 63 சதவீதத்துக்கு மேலான மக்களை வறுமைக் கோட்டுக்கு மேலே உயர்த்திக் கொண்டு வந்துள்ளோம். ஒரு புதிய நடுத்தர வர்க்கம் தோன்றியிருக்கிறது. உணவுப் பொருட்களில் நாம் தன்னிறைவு பெற்றிருக்கிறோம். நம்முடைய அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம், நம்முடைய சுயமான வெளியுறவுக் கொள்கை, நமது ஜனநாயகம் சுதந்திரம் சமயச்சார்பின்மை... நாம் எவ்வாறு நம்மை வடிவமைத்துக் கொண்டு உள்ளோம் என்று நம்மைப் பார்த்து மொத்த உலகமும் வியக்கிறது. மூன்று அல்லது நான்கு போர்களுக்குப் பிறகும் இந்தியாவின் ஒற்றுமையை ஒருமைப்பாட்டை பாதுகாத்து நாம் இத்தனையும் சாதித்து இருக்கிறோம். இதை நம்மால் செய்ய முடிந்தது; ஏனென்றால் நாம் காந்திஜி, பண்டிட்ஜி, இந்திராஜியால் சரியான பாதையில் வழிநடத்தப் பட்டோம். ஆனாலும் நமது பயணம் மிக நீளமானது, கடினமானது. நாம் வறுமையை எதிர்த்து அதை முற்றிலுமாக ஒழித்தாக வேண்டும். இது ஒன்றுதான் நாம் பின்பற்ற வேண்டிய பாதை. நம்மிடம் உள்ள எல்லா சக்தியையும் பயன்படுத்தி வறுமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
உலகில் உள்ள வளரும் நாடுகள் பலவும், இன்னல்களில் சிக்கி தமது (வளர்ச்சி) பாதையை விட்டு விலகிய போதும் இந்தியாவால் மட்டும் எப்படி இத்தனையும் சாதிக்க முடிந்தது? நம்மால் முடிந்தது; ஏனென்றால், வறுமையைப் போக்க நாம் அறிவியல் தொழில்நுட்பப் பாதையைத் தேர்ந்தெடுத்தோம். அறிவியல் தொழில்நுட்பம் சரியாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்தோம். இதற்கான முன்னெடுப்பு பண்டிகை ஜவஹர்லால் நேருவால் தொடங்கியது. பெரிய அணைகள் கட்டப்பட்டன; இரும்பு ஆலைகள் மற்றும் பிற ஆலைகள் தொடங்கப்பட்டன; அறிவியல் மேம்பாடு ஊக்குவிக்கப்பட்டது. நமது கவனம் எல்லாம் ஏழைகள் விவசாயிகள் மீதே குவிந்து இருந்தது. பண்டிதர் நேரு நாட்டிய அடித்தளத்தால், அறிவியல் தொழில்நுட்ப உதவியுடன் வேளாண் பெருமக்கள் தமது உற்பத்தியை மூன்று மடங்காகப் பெருக்க முடிந்தது. இது நமது சுதந்திரத்தைக் காத்தது; பெருமையுடன் நம்பிக்கையுடன் நம்மால் உலகை எதிர்கொள்ள முடிந்தது.
வறுமை ஒழிப்புக்கு இந்திராஜி புதிய உத்வேகம் கொடுத்தார். கடந்த சில ஆண்டுகளில் வறுமை கோட்டுக்கு மேலே கொண்டு வரப்பட்ட மக்களின் சதவீதம் 49 இல் இருந்து 63 ஆக உயர்ந்தது. கடந்த சில வாரங்களில் நாட்டின் பல பகுதிகளை நான் பார்வையிட்டேன். ஆதிவாசி மாவட்டங்கள், கிராமங்கள் மற்றும் தலித் குடியிருப்புகளுக்குச் சென்று வந்தேன். மலைகளில் இருந்து ராஜஸ்தான் பாலைவனம் வரை சென்று வந்தேன். நாட்டில் உள்ள எல்லா ஏழைகளின் பிரச்சினைகளும் ஒன்றே போல் இருக்கின்றன. மாநகரங்களிலும் ஏழைகளின் குடியிருப்புகளைச் சென்று பார்த்தேன். நோக்கம் ஒன்றுதான் - நமது திட்டங்களை இன்னும் எவ்வாறு மேம்படுத்தலாம், இந்த திட்டங்களின் பயன்களை ஏழை மக்கள் முழுமையாகப் பெறுவதை உறுதி செய்ய நிர்வாகத்தை எவ்வாறு சீரமைக்கலாம் என்பதைக் கண்டு கொள்ள வேண்டும்.
நாம் பின்பற்றுகிற பாதை பண்டிதர் ஜவஹர்லால் நேரு காட்டிய அதே பாதை தான் - ஏழைகளின் இல்லங்களுக்கு அறிவியல் தொழில்நுட்பப் பயன்களைக் கொண்டு செல்லுதல், ஏழைகளுக்கு அதிகபட்ச பயன் கிடைக்கிற வகையில் அறிவியல் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்தலாம், நமது குறிக்கோளை எவ்வாறு நிறைவேற்றலாம் என்பது குறித்தே ஆலோசித்து வருகிறோம். உதாரணத்துக்கு, ராஜஸ்தான் பாலைவனத்தில் ஒரு சொட்டு தண்ணீர் கூட காணக் கிடைக்கவில்லை. இருந்தாலும் நான் செயற்கைக்கோள் படங்களின் மூலம் நிலத்தடி நீர் எங்கு இருக்கிறது என்று கண்டறிய முடியும். இதேபோன்று, உற்பத்தி திறனை பெருக்குவதற்கு மேலும் தரமான விதைகளை விவசாயிகளுக்கு வழங்க முடியும். உற்பத்தியைப் பெருக்க, நமது நாட்டை மேலும் வலிமையாக்க, மின்சாரம் தண்ணீர் மற்றும் பிற உள்ளீடுகள், விவசாயிக்கும் தொழிலாளர்களுக்கும் கிடைப்பதை உறுதி செய்ய முயற்சிக்கிறோம். கிராமப்புற இந்தியா மேம்பட்டால்தான் இந்தியா, வளர்ச்சி நோக்கி நடைபோடும். கிராமப்புற இந்தியாவை உயர்த்துவதில் நமது முழு சக்தியையும் நாம் அர்ப்பணிக்க வேண்டும்.
நாட்டின் பல்வேறு பகுதிகளின் வளர்ச்சியில் நிலவும் மண்டல சமமின்மை (regional imbalance) மண்டல வேற்றுமைகள் நீக்கப்பட்டு எல்லா மாநிலங்களும் சம அளவில் முன்னேறுவதை உறுதி செய்ய வேண்டும். நமது நாட்டின் எல்லாக் குடிமக்களும் - தலித்துகள், ஆதிவாசிகள், பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினர் - இந்தியாவின் வளர்ச்சிக்கு தம் பங்கை அளிப்பதில் முழுமையாக வாய்ப்புகள் பெற வேண்டும். இதை நோக்கித்தான் ஏழாவது ஐந்தாண்டு திட்டத்தை வடிவமைத்து உள்ளோம். பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல இந்திய சமுதாயத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி, வலிமையும் இதன் இலக்கு ஆகும். இந்தத் திட்டத்தின் வரைவு விரைவில் உங்கள் முன்னால் வைக்கப்படும். இந்தத் திட்டத்திற்கு நாடு மிகக் கணிசமாக முன்னேறும்; இதற்கு முன் இல்லாத வேகத்தில் இந்தியா வளர்ச்சி நடை போடும் என்று நம்புகிறோம்.
நமது கொள்கைகளில் மாற்றம் இல்லை. காந்திஜி, பண்டிட்ஜி காட்டிய வழியில், நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் நமது வளர்ச்சி சென்று சேர வேண்டும் என்று விரும்புகிறோம். காந்திஜி சுதேசியம் பற்றி பேசினார். 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் ஒரு குண்டூசி கூடத் தயாரிக்கப் படவில்லை. அப்போது ஸ்வதேசி என்றாலே கதர் மட்டும்தான். (38 years ago not even a needle was made in India. Swadwesi then meant only khadi) பண்டிட்ஜி நமக்காக அறிவியல் தொழில்நுட்பப் பாதைகளைத் திறந்து வைத்தார். இந்தியா முன்னேறியது. இன்று நாம் சுதேசி என்று பேசினால் அது கதர் மட்டுமே அல்ல . உள்நாட்டுத் தொழில்கள், உள்நாட்டு கம்ப்யூட்டர்கள், உள்நாட்டு அணு மின்சாரம்... கடந்த 38 ஆண்டுகளில் சுதேசி என்பதற்கான பொருள் கடலளவு மாறிவிட்டது. இந்தியா எந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது என்பதை இது காட்டுகிறது. இதுவே நமது பெருமை.
பொருளாதாரத்தில் நாம் என்னதான் வளர்ந்து இருந்தாலும் முன்னேறி இருந்தாலும், இதன் காரணமாக நாம் நமது பாரம்பரியம், நமது மரபுகள், நமது கலாசாரம் நாகரிகத்தை இழந்து விட்டால், நாம் உண்மையில் வளர்ச்சி அடைந்ததாக நான் கருத மாட்டேன். பொருளாதார வளர்ச்சியுடன் நமது அறவாழ்க்கையும் வளர்வதை, வலுப் பெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த நோக்கத்துக்காகவே, நாம் ஒரு புதிய கல்வி மாதிரியை இந்த மாதமே அறிமுகப்படுத்துகிறோம். நாட்டின் ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு மூலையிலும் இது விழிப்புணர்வைக் கொண்டு வரும்; நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறோம். நாடு முழுதும் மனிதவள மேம்பாடு மிகுந்த எழுச்சியுடன் ஏற்படுவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நமது பாதையில் தடைகள் உள்ளன. அவற்றில் மதம், சாதி, மொழி, மண்டலம் சார்ந்த உள்நாட்டு பேதங்கள் மிகப் பெரியவை. இந்த வேற்றுமைகள் பயங்கரவாத வடிவம் பெறாமல் இருப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். இத்தகைய சச்சரவுகள் நமது ஜனநாயகத்தின் அடித்தளத்தை பலவீனம் ஆக்காமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும். இவை நாட்டை பலவீனமாக்கும்; வளர்ச்சியைப் பின்னுக்குத் தள்ளும்.
பயங்கரவாத நடவடிக்கைகளால் பலர் உயிரிழந்துள்ளனர். 38 ஆண்டுகளுக்கு முன்பு காந்திஜி... பத்து மாதங்களுக்கு முன்னர் இந்திராஜி உயிரிழந்தனர். மதச் சண்டைகள் நாட்டுக்கு மிகப்பெரிய தீங்கு விளைவித்து இருக்கிறது. நம்மிடையே உள்ள மதவாதத்தை அடியோடு வேரறுக்க வேண்டும். காந்திஜி, இந்திராஜியைப் பறித்தது மட்டுமல்ல; நாட்டில் ஒவ்வொருவருக்கும் அது தீங்கு விளைவித்து இருக்கிறது. காந்திஜி இந்திரஜி போன்ற மாபெரும் தலைவர்கள் மறைகிற போது அதன் தாக்கம், பாதிப்பு உலகம் முழுவதும் உணரப்படுகிறது. இந்திரா காந்தி, ஓர் இந்தியத் தலைவர் மட்டுமல்ல. உலகமே அவரை ஏழைகளின் தலைவராக ஏற்றுக் கொண்டது. உலகில் இது போன்று தமக்கென பெயர் பெற்ற தலைவர்கள் வெகு அரிது. மத வேறுபாடுகளை முடிவுக்கு கொண்டுவர நாடு உறுதி ஏற்க வேண்டும்; பயங்கரவாதத்துக்கு எதிராகக் குரல் எழுப்ப வேண்டும். நாம் அனைவரும் சகோதரர்களைப் போல வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதில் நமது சக்திகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
41 வாரங்களுக்கு முன்பு என் மீது ஒரு பொறுப்பைத் திணித்தீர்கள். இந்த 41 வாரங்களில் நமது உறுதி மொழிகளை மீட்டெடுக்க பலவற்றைச் செய்துள்ளோம். நம் முன் உள்ள மிகப் பெரிய சவால் - இந்தியாவின் ஒற்றுமை ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பது. இன்று இந்தக் கேள்வி எழவில்லை. இன்று இந்தியா உலகத்தின் முன், வெகு வலுவான தேசமாக நிற்கிறது. பஞ்சாபில் பயங்கரவாத பிரச்சினை இருந்தது. சில நடவடிக்கைகள் எடுத்தோம்; சில வாரங்களுக்கு முன்பு, ஓர் உடன்படிக்கை கையெழுத்தானது. பஞ்சாபில் முழு அமைதி திரும்பும், வளர்ச்சிப் பாதையில் இந்த மாநிலம் விரைந்து முன்னேறும் என்று நம்புகிறோம். பதட்டம் தணிந்து விட்டது; இனி நாடு, வேகமாக முன்னேறலாம்.
மற்றொரு பிரச்சினை - அசாம். பல ஆண்டுகளாக பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வந்தன. தீர்வு கிட்டவில்லை. நேற்று இரவு, உண்மையில் சொல்லப் போனால் இன்று அதிகாலை 2:15க்கு, இந்திய அரசுக்கும் அசாம் மாணவர்களுக்கும் இடையே உடன்பாடு கையெழுத்தானது என்பதை மகிழ்ச்சியுடன் சொல்லிக் கொள்கிறேன். இந்த உடன்படிக்கை கையெழுத்தானதால், பதட்டத்துக்கான மற்றொரு காரணம் விலகிவிட்டது; இனி நாடு விரைந்த முன்னேற்றத்தில் கவனம் செலுத்த முடியும்.
ஊழலுக்கு எதிராகப் போரிடுவோம் என்று தேர்தலின் போது வாக்குறுதி அளித்தோம். ஒரு ஜோடி நடவடிக்கைகள் எடுத்து உள்ளோம்; இந்தத் திசையில் மூன்றாவது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதலில் கட்சித்தாவல் தடை மசோதா கொண்டு வந்தோம். நிறைவேறியது; அமல் படுத்தப்படுகிறது; நமது அரசியலில் இருந்து ஒரு பெரிய குறை நீக்கப்பட்டுள்ளது. இரண்டாவதாக, அரசியல் கட்சிகள் நன்கொடைகளைப் பெற அனுமதித்தோம். இது ஊழலைப் பெரிதளவில் குறைக்கும். மூன்றாவது நடவடிக்கையாக லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தத் தயாராக இருக்கிறோம். இந்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும்; ஒரு மிக முக்கியமான குறை நீக்கப்படும் என்று நம்புகிறோம்.
கங்கை நதியைத் தூய்மைப் படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்திருந்தோம். கங்கை நதியின் தூய்மை, ஒவ்வோர் இந்தியனின் இதயத்திலும் சிறப்பு முக்கியத்துவம் வகிக்கிறது. ஆனால் ஏராளமான குப்பைகளை அதற்குள் கொட்டுவதால் கங்கை நதி மாசுபடுகிறது. கங்கையை தூய்மைப்படுத்த விரைவான உறுதியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
நமது நாட்டில் தரிசு நிலம் ஏராளமாக இருக்கிறது. இங்கு கோடிக் கணக்கில் மரங்களை நடப்போகிறோம். இதனால் கால்நடைகளுக்கு உணவும், ஏழைகளுக்கும் விறகுக் கட்டையும் கிடைக்கும். சமீபத்தில் நமது ஜவுளிக் கொள்கையைத் திருத்தி அமைத்தோம். இதனை மறுகட்டமைப்பு செய்ததன் விளைவாய், நெசவாளர்களால் அதிகம் விற்க முடியும்; கூடுதல் லாபம் ஈட்ட முடியும்.
அண்டை நாடுகளுடன் அமைதி ஏற்படுத்தப் பாடுபடுவோம் என்று உறுதி கூறினோம். இலங்கையுடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறோம்; பூடான் நாட்டுடன் பேச்சுவார்த்தை தொடர்ந்து வருகிறது. பஞ்சாப், அசாம், பிரச்சினைகளை நாம் தீர்த்துக் கொண்டது போல, இலங்கையிலும் அவர்கள் அமைதியைக் கொண்டு வருவார்கள் என்று நம்புகிறோம். இதனால் தெற்கே பதட்டம் குறையும், நமது மக்கள் அதிகம் வருத்தப்பட வேண்டி இருக்காது. பூட்டான் நேபாளம், சீனாவுடன் நட்புறவை மேம்படுத்த முயற்சித்து வருகிறோம். வழியில் பல தடைகள் உள்ளன. அணுசக்தி திட்டம் மூலமாக பாகிஸ்தான் அணுகுண்டு தயாரிப்பை நோக்கி நகர்கின்றனர். நம் இரு நாடுகளுக்கும் இடையே முழுமையான நட்புறவு நம்பிக்கை தோன்ற வேண்டுமெனில் பாகிஸ்தான் தனது திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கடந்த சில மாதங்களில் நான் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் சென்று வந்தேன். இந்தியக் கொடியை உயர்த்திப் பிடித்தேன். இன்று ஒவ்வொரு இந்திய குடிமகனும் கம்பீரமாய் நின்று உலகை நேருக்கு நேர் பார்க்க முடியும். எல்லா விதங்களிலும் இந்தியா சுதந்திரமாக வலிமையாக இருக்கிறது. யாரும் எந்த அழுத்தமும் தர முடியாது.
காங்கிரஸ் பேரியக்கம் தொடங்கிய விடுதலைப் போராட்டத்தை ஒட்டி உலகின் பல பாகங்களில் விடுதலைப் போராட்டங்கள் தொடங்கின. காங்கிரஸ் விடுதலையை சாதித்த போது, ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் பல நாடுகள் விடுதலை பெற முடிந்தது. ஆனால் காந்திஜி முதன் முதலில் தனது இயக்கத்தைத் தொடங்கிய தென்னாப்பிரிக்காவில் இன்னமும் மக்கள் அடிமைப்பட்டுக் கிடக்கின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். தமது சுதந்திரத்துக்காகப் பாடுபடும் தென் ஆப்பிரிக்க சகோதர சகோதரிகளுக்கு நமது முழு ஆதரவும் உண்டு. இதேபோன்று பிற நாடுகளும் குறிப்பாக வளரும் நாடுகளும் ஆதரவு தர வேண்டும் என்று விழைகிறோம். அடிமைத்தனம், குறிப்பாக தென் ஆப்பிரிக்காவில் நிலவும் அடிமைத்தனம், விரைவில் முடிவுக்கு வருவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.
நமது நாட்டில் இருந்து வறுமையை அகற்றாவிட்டால் நான் எடுக்கும் எல்லா நடவடிக்கைகளும் நாம் மேற்கொள்ளும் எல்லா உறுதி மொழிகளும் பயனற்றுப் போய்விடும். எனவே நாம் வறுமை ஒழிப்பு திட்டங்களில் சிறப்பு கவனம் செலுத்துகிறோம். இதில் எங்கே எல்லாம் தவறுகள் இருக்கின்றனவோ அவற்றை எல்லாம் சரி செய்து, இந்த திட்டங்களை தீவிரமாக செயல்படுத்த முயற்சிக்கிறோம். எங்கேயும் கூடுதல் உதவி தேவைப்பட்டால் வழங்குவதற்குத் தயாராக இருக்கிறோம். இவற்றை அவ்வப்போது ஆய்வு செய்கிறோம். விரைவில் மறு சீரமைக்கப்பட்ட திட்டத்தைக் கொண்டு வருவோம்; குறைந்த நிர்வாகச் செலவில் ஏழைகளுக்கு அதிக பயன்கள் கிடைப்பதை உறுதி செய்வோம். வறுமைக் கோட்டுக்கு மேல் கொண்டுவரப்பட்ட 63 சதவீதம் என்பது விரைவில் இன்னும் அதிக சதவீதத்தை எட்டும்; இந்தியாவிலிருந்து வருமை முக்கியமாக அகற்றப்பட்டு விட்டது இன்று உலகத்துக்குப் பிரகடனப்படுத்த முடியும் என்று நம்புகிறோம்.
இன்று, ஆகஸ்ட் 15 அன்று, இந்த நாட்டை வலிமையாக்கவும், நாட்டின் அறநெறிகளுக்குத் துணையாக நிற்கவும் ஒவ்வொரு குடிமகனும் உறுதி ஏற்க வேண்டும். நமது இலக்குகளை விரைவில் எட்டுவதற்கு நாம் (அனைவரும்) கைகோர்த்து நடை போடுவோம். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துகள். ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 38 - ‘ஏழைகளின் வளமை - தேசத்தின் வலிமை!’ | 1984
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT