Published : 18 Jan 2018 03:24 PM
Last Updated : 18 Jan 2018 03:24 PM
ஜீப்ரா கிராஸிங்:
''நல்லெண்ணம், நல்லார்வம், நன்னடத்தை, நல்முயற்சி, நற்கொள்கை, நன்மொழி, நல்வாழ்வு, நற்சிந்தனை...இந்த எட்டு வழிகள் மிக மிக முக்கியமானவை. வாழ்க்கை முறையாக அமைய இந்த எட்டு வழிகளை பின்பற்றத்தான் வேண்டும்!''
- புத்தர்
-------------
ஜீப்ரா கிராஸிங்:
அப்ராஜின் என்கிற இளைஞனுக்கு ஆகாயத்துக்குக் கீழே உள்ள ஒவ்வொரு தகவலையும் விரல்நுனியில் சேகரம் செய்ய வேண்டும் என்று ஆசை. பேராசை. அதற்காகவே அந்த இளைஞன் விழித்திருக்கும்போதெல்லாம் உழைத்துக்கொண்டிருந்தான். ஞானத் தேடலில் அவனுடைய பகல் வெய்யிலை இழந்திருந்தது. அவனுடைய இரவு நிலவை இழந்திருந்தது.
ஒருநாள் - அவன் வென்குவானங் என்கிற ஜென் குருவை சந்தித்தான்.
தன்னை குடையும் மனசின் கேள்விகளை ஜென் குருவிடம் கேட்க நினைத்து, முதல் கேள்வியை அவரிடம் கேட்டான் அப்ராஜின்.
'' 'ஜீவாமிர்தம்' பற்றி ஒரு நூலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில், 'ஒரு கிராம் மண்ணில் ஐந்து கோடிக்கும் அதிகமான நுண்ணுயிரிகள் இருக்கின்றன' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த நூலில் உள்ள பல விஷயங்கள் எனக்குப் புரியவே இல்லை. நீங்கள்தான் படித்துவிட்டு எனக்குப் புரிவதைப் போல விளக்க வேண்டும்!'' என்றான்.
''அப்படியா... எனக்குத்தான் எழுத, படிக்கத் தெரியாதே... வேண்டுமானால் அந்தச் செய்திகளை நீ எனக்கு முன்னால் வாய்விட்டுப் படி... அதில் இருந்து நான் விளங்கிக்கொண்டதை உனக்கு நன் விளக்குகிறேன்!'' என்றார் குரு.
''உங்களுக்குத்தான் படிக்கவே தெரியவில்லையே... வாசிக்கவே முடியாத உங்களால் எப்படி ஜீவாமிர்தத்துக்குரிய சந்தேகங்களை உள்வாங்கிக்கொண்டு நீங்கள் விளக்கமளிக்க முடியும்? நான் படிக்கும் சொற்களின் பின்னால் இருக்கிற நிஜத்தை எப்படி நீங்கள் புரிந்துகொள்வீர்கள்?'' என்றான் அப்ராஜின்.
அப்போது குருதேவர் ஆகாயத்தைப் பார்த்து தனது சுட்டுவிரலை காட்டி… ''அதோ பார்… அப்ராஜின், நிஜம் என்பது அதோ அந்த வெள்ளை நிலாவைப் போன்றது. இதோ என்னுடைய விரல்களைப் போன்றவை - சொற்கள்.
நான் நிலாவை சுட்டிக் காட்டுவதற்காகவே என் விரலைப் பயன்படுத்துகிறேன். ஆனால் நிஜத்தில் என் விரல்கள் நிலா கிடையாது. இதைப் போலவே அந்த வெள்ளை நிலாவை காண்பதற்கு எனது விரலும் முக்கியமானது இல்லை!'' என்றார் குருதேவர்.
வாயடைத்து நின்றான் அப்ராஜின்.
-------
ஜீப்ரா கிராஸிங்:
புத்தர்
உனக்கு பதிலாக
தாம் பிணையாக வந்து
நிற்க மாட்டார்!
- பாஷோ
--------
ஜீப்ரா கிராஸிங்:
அந்தக் கதவு தட்டப்பட்டது...
''நான் உங்கள் மகளை திருமணம் செய்துகொள்ளப் போகிறேன்!''
அந்தக் கதவு திறக்கப்படவே இல்லை.
மீண்டும் அந்தக் கதவு தட்டப்பட்டது...
''உங்கள் மகள் என்னை திருமணம் செய்துகொள்ளப் பொகிறாள்.
அந்தக் கதவு திறக்கப்படவே இல்லை.
மறுபடியும் கதவு தட்டப்பட்டது...
''நாங்கள் திருமணம் செய்துகொள்ளப் போகிறோம்!''
கதவு திறந்தது!
-----------------------------------
ஜீப்ரா கிராஸிங்:
''பிரார்த்தனைகளை விட
மிக உயர்ந்தது பொறுமை!''
- புத்தர்
----------------------
ஜீப்ரா கிராஸிங்:
புத்தர் வரலாறு - 3:
தன்னுடைய தந்தை அஞ்சனரும் தாய் சுலக்க்ஷனாவும் வசிக்கிற தேவதகா கிராமத்துக்குப் புறப்பட்டுச் சென்றாள் மகா மாயாதேவி.
கலங்கிய குளமாக இருந்த மனசுக்கு கொஞ்சம் நிம்மதி தேவைப்பட்டது. மகா மாயாதேவி அதை நன்கு உணர்ந்திருந்தாள். ஊர் முழுக்கவும் வீதி முழுக்கவும் குழந்தைகளால் நிறைந்திருக்கிற அழகை அவளால் ரசிக்க முடியவில்லை.
தன்னுடைய வீட்டுக் கூடத்தில் தொட்டில் தொங்க வாய்ப்பில்லாபோது ஊர் முழுக்க மழலைப் பட்டாளம் திரிந்தால் தனக்கென்ன? தன்னை எப்போதும் வெறுமை மேகங்கள் சூழ்வதை அவள் விரும்பவில்லை. அதற்கு மாற்றாகத்தான் இந்தப் பயணத்தை அவள் தொடங்கியிருக்கிறாள்.
ஓர் அந்திப் பொழுதில் தேவதகா கிராமத்தை மகாமாயாதேவி சென்றடைந்தபோது - கோலியர்கள் அத்தனை பேரும் திரண்டு வந்து... கூடை கூடையாக மாதுளம் பழங்களை அவளுக்குப் பரிசளித்து வரவேற்றனர். தேவதகா கிராமத்து வீதிகள்தோறும் மாதுளைகள் உருண்டோடின.
தங்களின் விருப்பமான அஞ்சனர் - சுலக்ஷ்னா தம்பதியின் மகள் என்பதனால் மட்டும் மாதுளம் பழங்களைப் பரிசாக அவர்கள் தேர்ந்தெடுக்கவில்லை. அதற்குள் ஒரு உட்பொருள் பொதிந்து இருந்தது. பெண்களின் கருப்பைக்கு வளம் சேர்க்கும் வலிமை மாதுளம் பழத்துக்கு உண்டு என்பதை கோலியர்கள் அறிவார்கள்.
ஏனெனில் - அன்றைய இந்தியாவில் கோலியர்கள் மருத்துவ ஞானமிக்கவர்களாக இருந்தார்கள்.
மகப்பேறு அடைவதில் சிக்கல் உடையவளாக இருப்பதனாலும் கோலியர்கள், மகாமாயாதேவியை வரவேற்க மாதுளம் பழங்களைத் தெரிவு செய்தார்கள் என்பதுதான் அதில் இருக்கும் உட்குறிப்பு.
தேவதகா கிராமத்துக்குச் சென்ற மகாமாயா தேவியால் தொடர்ந்து சுத்தோதனரைப் பிரிந்து இருக்க முடியவில்லை. ஒவ்வொரு நிமிடமும் அவளைப் பிறாண்டியது. நாட்கள் ஆக ஆக தனது தந்தை அஞ்சனரிடமும் தாய் சுலக்ஷ்னாவிடாமும் பேசவே பிடிக்கவில்லை அவளுக்கு. மகளின் துயரை எண்ணி வருந்தினர் பெற்றோர்.
இனிமேலும் சுத்தோதனரரைப் பிரிந்து தேவதகா கிராமத்தில் இருக்க முடியாது என்று தீர்மானித்தாள் மகாமாயாதேவி.
''தந்தையே என்னை... மீண்டும் சுத்தோதனரிடமே அனுப்பி வையுங்கள். என்னால் இனி ஒரு நிமிடம் கூட அவரைப் பிரிந்து இங்கு வாழ முடியாது. எந்த நிம்மதியைத் தேடி இங்கு வந்தேனோ? எது மகிழ்வூட்டும் என்று நம்பினேனோ அது எல்லாமும் தவறான கணிப்புகளாயிற்று. நான் மீண்டும் சுத்தோதனரிடமே போகப் போகிறேன்!'' என்றாள்.
மகா மாயாதேவி மீண்டும் தனது கணவர் - சுத்தோதனரிடம் செல்லத் தயாராக இருந்தாள்.
''மகளே நாளை ஒரு நாள் மட்டும் நீ தேவதகா கிராமத்தில் இருக்க வேண்டுமம்மா.
நாளை முழுநாள் பவுர்ணமி. கோலியர்கள் பூரண முழுநிலா நாளை கோலாகலமாக கொண்டாடுவார்கள் என்பது உனக்குத் தெரியுமல்லவா? ஏனெனில் கோலியர்களின் கடவுளான தேந்திரிய கடவுளுக்கு உகந்த நாளான பவுர்ணமி அன்று, சிறப்பு பூஜைகள் நடக்கவுள்ளன. அதில் நீ அவசியம் கலந்துகொள்ள வேண்டும் மகளே. அது முடிந்த மறுநாள் நிச்சயமாக உன்னை உனது கணவரிடம் கொண்டு சேர்க்க வேண்டியது என் பொறுப்பு!'' என்று மகளிடம் வேண்டிக்கொண்டாள் அஞ்சனர்.
கணவரின் ஞாபத் தீ மனசுக்குள் அனல் மூட்டினாலும் தந்தையின் வார்த்தைகளுக்கும் மரியாதை கொடுக்க விரும்பினாள் மகாமாயாதேவி.
''சரி தந்தையே... நீங்கள் சொல்வது போலவே செய்கிறேன். நாளை ஒரு நாள் உங்கள் விருப்பத்துக்கு இணங்க இந்த தேவதகா கிராமத்தில் தங்கியிருக்க சம்மதிக்கிறேன்!'' என்றாள்.
மறுநாள் முழுநிலா நாள். கோலியர்கள் புத்தாடை உடுத்தி, குழந்தைகள், பெரியவர்கள், இளைஞர்கள் என எல்லோருமாக தங்களுடைய இஷ்ட தெய்வமாக தேந்திரிய கடவுளை வணங்க, சில்வி நதிக்கரைக்கு சென்றுகொண்டிருந்தனர். ஊர் திருவிழா முகத்தை அணிந்துகொண்டிருந்தது.
தாய் - சுலக்ஷனாவுடனும் தந்தை - அஞ்சனருடனும் மகாமாயாதேவியும் ஊர் மக்களுடன் சேர்ந்து செயற்கையானதொரு மகிழ்ச்சியை வரவழைத்துக்கொண்டு, சில்வி நதிக்கரைக்குச் சென்றாள். கோயிலில் அவளை கண்டுகொண்ட தோழிகள் எல்லாம் அவளை கேள்விகளால் குடைந்து எடுத்தனர்.
'ஏன் குழந்தை பெற்றுக்கொள்வதில் இவ்வளவு தாமதம்?' என்கிற ஊராரின் கேள்விகளூக்கு அவளால் பதில் சொல்லி மீள முடியவில்லை.
சில்வி நதிக்கரையில் இருந்து எவ்வளவு வேகமாக வீடு திரும்ப முடியுமோ, அவ்வளவு வேகத்தில் வீடு திரும்பினாள் மகா.
மறுநாள் சுத்தோதனரிடம் செல்லப் போகிறோம் என்கிற மன மகிழ்ச்சியுடனேயே அவள் உறங்கச் சென்றாள்.
நல்ல உ....ற...க்...க...ம்!
அப்போது மகா மாயாதேவிக்கு கனவு வந்தது?
அந்தக் கனவுக்குள் இந்த உலகுக்கான ஒரு ஞானச் செய்தி இருந்தது.
- இன்னும் நடப்போம்...
மானா பாஸ்கரன், தொடர்புக்கு: baskaran.m@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT