Last Updated : 08 Jan, 2018 03:03 PM

 

Published : 08 Jan 2018 03:03 PM
Last Updated : 08 Jan 2018 03:03 PM

யூடியூப் பகிர்வு: என்றென்றும் இதயத்தோடு கலந்துவிட்ட அன்னாவின் கதை

வாழ்க்கையில் நாம் கடந்துவந்த சில உணர்வுகளை சற்றே புரட்டிப் பார்ப்பதுபோல் உள்ளது அன்னா எனும் மலையாளக் குறும்படத்தைப் பார்க்கும்போது. எட்டரை நிமிடத்திற்குள் அப்படியொரு கதையை சொல்லிவிடமுடியுமா? அதுவும் மனசைத் தைக்கும் விதமாக.

சில விநாடிகளிலேயே கடந்துபோகும் விளம்பரத்தில் கூட ஒரு சின்னஞ்சிறு கதையை சொல்லிவிடுகிறார்கள். ஆண் பெண் அன்பைப் பற்றி பேசும் 'அன்னா' என்ற எட்டு நிமிட மலையாளக் குறும்படம்கூட அத்தகைய அழகோடுதான் மிளிர்கிறது.

கடற்கரையில் தோன்றி பேசிச் செல்கிறான் அபி எனும் இளைஞன்.

''என் பெயர் அபி, நான் என்னைப்பத்தி எதுவும் சொல்ல விரும்பலை, ஏன்னா என்னப் பத்தி சிறப்பா சொல்ல எதுவும் இல்லை. ஆனா எனக்கு அன்னாவைப் பத்தி நிறைய சொல்லணும். என் அன்பிற்குரிய அன்னா எனக்கே சொந்தமானவள். ஆரம்பத்துல அவளை மத்த பொண்ணுங்களை பாக்கற மாதிரிதான் பார்த்தேன்...

என்ன சொல்றது பெண் சுகத்தைத் தரக்கூடியவள்... இப்படித்தான் என் பார்வை இருந்தது. நான் உல்லாசமாக ஊர் சுத்திக்கிட்டிருந்தேன். அதே நோக்கத்திலேயே அவளிடம் அதிகப்படியான உரிமைகளை எடுத்துக்க விரும்பினேன்.. ஆனால் அதற்கு அவள் உடன்படவேயில்லை... என் விருப்பத்துக்கு இணங்கவேயில்லை...

இதனால அவளை வெறுத்தேன். அவளைப் புறக்கணிச்சேன்... ஆனாலும் அவள் என்னைவிட்டுவிலகலை....'' என்று தன் வாழ்வில் இடம்பெற்ற காதலியைப் பற்றித்தான் ஆரம்பத்திலிருந்து படத்தின் கடைசிவரை அவன் பேசி முடிக்கிறான்.

இதற்கிடையில் சின்னச்சின்ன பிரேம்களில் ஒரு அழகிய காதல் கதை விஷுவலாக நம்மைக் கடந்துபோகிறது. இதில் என்ன இருக்கிறது? வழக்கமான கதைதானே என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? அவசரப்படாதீர்கள்... படத்தைப் பாருங்கள்.. கடைசிவரை.... வாழ்க்கைக் கடலில்தான் எவ்வளவு பெரிய அலைகள் என்பதை உணர்வீர்கள்...

அபியாக வரும் தினுபால், காதலியாக வரும் ஜாய்மி ஆஃப்செல் சிறப்பாக பங்கேற்று நடித்துள்ளனர். உன்னி அபிஜித் குழுவினரின் ஒளிப்பதிவு கண்ணை உறுத்தாத அதேநேரத்தில் மெல்லிய அழகியலோடு வெளிப்பட்டுள்ளது.

நாயகனைப் பற்றி பாவனைகள் அற்ற அறிமுகம் மனசோடு பேசும் உணர்வோட்டம் மிக்க தருணங்கள், சின்னஞ்சிறு பிரேம்களிலேயே நாயகியின் கதையோட்டத்துடனான மனோ பாவங்களைக் வெளிக்கொணர்ந்திருப்பது என நல்லதொரு இக்குறும்படத்தைத் தந்த இயக்குநர் எல்தோஸ் லோமி பெரிய திரைப்படத்தை தரமாக தரக்கூடிய எதிர்பார்ப்பை தருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x