Published : 28 Oct 2023 04:27 PM
Last Updated : 28 Oct 2023 04:27 PM
மூன்றே ஆண்டுளில் தான் விட்ட இடத்தைப் பிடித்தார் இந்திரா காந்தி. மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்று தனது பணியைத் தொடர்ந்தார். இந்த முறை, அவருக்கு உரித்தான அதிரடி முடிவுகள், அதிரடி நடவடிக்கைகள் குறைந்து, பேச்சில் கூட ஒரு வித மென்மை கூடி விட்டதாய்த் தோன்றுகிறது.
1980 ஆகஸ்ட் 15 - செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்குப் பிரதமர் இந்திரா காந்தி ஆற்றிய உரை: சில ஆண்டுகளுக்குப் பிறகு இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கும் கவுரவம் மீண்டும் எனக்குக் கிடைத்திருக்கிறது. இது மகிழ்ச்சிக்குரிய தருணமாக இருக்க வேண்டும். ஆனால் எனது இதயத்தில் வருத்தமே நிறைந்துள்ளது. இங்கிருந்து அருகில் உள்ள மொராதாபாத் எனும் இடத்தில் நிகழ்ந்த சம்பவம் நமது நாட்டுக்கே ரணத்தை ஏற்படுத்தி உள்ளது. இறந்து போனவர்கள், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட குடும்பங்ளுக்கு நமது அனுதாபங்கள். உங்கள் அனைவரின் சார்பாகவும் அவர்களுக்கு எனது அனுதாபங்கள். யார் தவறு செய்தார்களோ, யார் குற்றம் இழைத்தார்களோ, அதிகாரியாக இருந்தாலும் வேறு யாராக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப் படுவார்கள். மதவாதம், சாதியவாதம், பழிவாங்கும் உணர்ச்சி பரவ அனுமதிக்காதீர்கள்.
நகரத்தில் கிராமத்தில் எங்கு வாழ்ந்தாலும், அமைதி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தனது சக்தி முழுவதையும் பயன்படுத்த வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும். பல ஆண்டுகளாக நமது நாட்டில் மதவாதம் இருந்து வருகிறது. காந்திஜியின் தியாகம் மதவாதத்தை ஒழித்து விட்டது என்று நினைத்தோம். ஆனால் அது எத்தனை எளிதில் வெடித்துக் கிளம்பும் என்பதை இப்போது பார்க்கிறோம். சிறு வயதில் இருந்தே எனக்குக் கற்பிக்கப் பட்டது - எண்ணிக்கையில் அல்லது வறுமை, பிற்போக்குத்தனம் காரணமாய் நலிவுற்று இருக்கும் மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். அவர்களைப் பாதுகாப்பது, அவர்கள் மேலெழுந்து வர உதவுவது - நமது முதன்மைக் கடமையாகும். ஏனென்றால் அப்போதுதான் இந்த சமுதாயத்தில் அமைதி நிலவும்.
நாம் எல்லோரும் இந்தப் பணியில் இறங்கியாக வேண்டும். கட்டுக்குள் இருந்த இவை மூன்றாண்டுகளில் எப்படி மீண்டும் தோன்றுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். மதவாதம் மட்டுமல்ல; சாதியவாதமும் மிக வலிமையாகத் தலை தூக்குகிறது. ஏதேனும் சதி இருக்கலாம். ஒவ்வொரு பிரச்சினையின் மீதும், போராட்டம், சண்டை, வன்முறை.. இதனால் எந்த பணியும் நடைபெறாமல் போகிறது.
வன்முறை, சட்டம் ஒழுங்கு சீர்கேடு - நாடு முழுதும் பரவி இருக்கிறது. இதனைத் தடுப்பதில் நாம் வெற்றி பெறாவிட்டால் நம்மால் எதுவும் சாதிக்க இயலாமல் போய்விடும். கரைகளை உடைத்துக் கொண்டு எல்லா திசைகளிலும் பரவும் ஆற்று வெள்ளம் போன்றது இது. இந்தத் தண்ணீர் யாருக்கும் எந்தப் பயனும் தராது. மக்களுக்குத் தீங்கையே விளைவிக்கும். இன்றுள்ள நிலைமை இப்படித்தான் இருக்கிறது. கிடைப்பதைக் கொண்டு ஆதாயம் பெறுவோம் என்கிற தவறான நோக்கில் தீய கும்பல் ஊக்குவிக்கப்படுகிறது. நாட்டில் அவர்களுக்கான சூழல் ஏற்படுத்தப்படுகிறது.
பின்தங்கிய நிலையில் உள்ள ஏழை நாட்டில் ஒவ்வொருவருக்கும் ஏதேனும் ஒரு கோரிக்கை இருக்கத்தான் செய்கிறது. இவற்றில் சில நியாயமானவை. சில தேவைகள் மக்களுக்கு மிக அவசியமும் கூட. கேள்வி எல்லாம் - இந்தக் கோரிக்கைகளை எவ்வாறு எழுப்புவது? பிறர் மீது சுமைகளை ஏற்றும் போராட்டங்கள் நாட்டை முன்னேற்றுமா? நாடு முன்னேறவில்லை எனில், இந்த கோரிக்கைகளை எவ்வாறு நிறைவேற்றுவது?
இந்த சட்ட ஒழுங்கு சீர்கேட்டை நாம் தடுத்தாக வேண்டும். இளைஞர்கள் மத்தியில், ஒட்டுமொத்த சமுதாயத்தில், நிர்வாகத்தில் என்று எல்லா மட்டங்களிலும் நுழைந்துவிட்ட பலவீனத்தைக் களைய வேண்டும். நம்மிடம் முன்னர் இருந்த ஒழுங்கு, உழைப்பு, சேவை உணர்வு தற்போது மறைந்து போய் விட்டன. பல மாதங்கள் ஆகிவிட்டன ஒன்றும் நடைபெறவில்லை என்று மக்கள் கூறுகிறார்கள். பரவி வடிந்து போன தண்ணீரை எளிதில் எப்படி மீண்டும் சேகரிக்க முடியும்? நிர்வாகத்தில் மேன்மையைக் கொண்டு வரத் தீவிரமாக முயற்சிப்பேன் என்று உறுதி கூறுகிறேன். அப்போதுதான், அர்ப்பணிப்புணர்வு தேசபக்தி, துணிச்சலுடன் விரைந்து காரியங்களை ஆற்ற முடியும்.
ஊழல் மிகுந்து விட்டது. ஒவ்வொரு நிலையிலும் பெருகியுள்ள ஊழல் எனக்கு அதிர்ச்சி தருகிறது. பெரிய இடத்திலோ கீழ் மட்டத்திலோ, அரசியலிலோ, நிர்வாகத்திலோ, எங்கிருந்தாலும் ஊழல் வேரோடு களையப்பட வேண்டும். யாராக இருந்தாலும் அவர்கள் தடுக்கப்பட வேண்டும். இதனால் நமது கொள்கைகளுக்கான கருவிகள் கூர்மையாகும்; நமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும்.
சமூகத்தைக் காக்கும் கடமையைக் கொண்ட அரசு சேவைகளை வலுப்படுத்துதல் நமது முக்கிய பணிகளில் ஒன்று. இவர்கள் இன்னும் திறமையாக செயல்பட்டு மக்களின் நம்பிக்கை, நட்பைப் பெற வேண்டும். நாம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அறியாமல் இல்லை. அசாம் மாநிலத்தில் மிக வலுவான போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. அசாம் குழந்தைகளை மாணவர்களை என்னுடைய குழந்தைகளாக பாவிக்கிறேன். அவர்கள் மீது எனக்கு இரக்கம் உண்டு. அவளுடைய உண்மையான ஆழமான இன்னல்களை நீக்க முயல்கிறோம்.
அதே சமயம் நாட்டை ஸ்தம்பிக்க வைத்து நாட்டுக்குத் துன்பம் இழைப்பது சரியல்ல. இந்தப் போராட்டத்தின் மூலம் ஆதாயம் பெற ஒரு சிலர் முயற்சிக்கிறார்கள். எல்லா இடங்களிலும் எல்லா போராட்டங்களிலும் இது நடக்க கூடியதே. சில இடங்களில் சமூக விரோத சக்திகளும் வெளிவருகிறார்கள். சில இடங்களில் தேசவிரோத சக்திகளும் தலைதூக்குகிறார்கள். இந்தத் தீமை, இந்த நஞ்சு அடக்கப்படா விட்டால் மேலும் பரவும்; பெரும் சேதங்களை விளைவிக்கும். அஸ்ஸாம் மக்களும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள மக்களும் இந்த நஞ்சு பரவாமல், இந்தத் தீமையை துணிச்சலுடன் எதிர்த்து நிற்பார்கள் என்பதில் எனக்கு ஐயம் இல்லை.
விலைவாசி அதிகரித்து வருகிறது. இதனால் நமது மக்கள் படும் துயரங்கள், குறிப்பாக இல்லத்தரசிகள் மீதான சுமைகளை நான் நன்கு அறிவேன். விலைவாசி உயர்வுக்கான காரணங்களை அறிந்து கொள்ள வேண்டும். பெட்ரோல் டீசல் மற்றும் உரங்கள் போன்ற பொருட்களின் விலை நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் சில பொருட்களின் விலை மிக நிச்சயமாக நமது கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் சுற்றிலும் போராட்டங்கள் என்றால், சட்டம் ஒழுங்கு பராமரிக்க செலவிட வேண்டும் என்றால், மக்களின் கோரிக்கைகளை எவ்வாறு தீர்ப்பது?
சகோதர சகோதரிகளை இளைஞர்களை முதியவர்களை ஒட்டுமொத்த சமுதாயத்தை வேண்டுகிறேன் - நமக்கும் பொறுப்பு உள்ளது என்பதை உணருங்கள். மக்களின் இயலாமையை தமக்கு ஆதாயமாக பயன்படுத்திக் கொள்ளாமை, வணிகர்களின் பொறுப்பாகும். மக்களும், அத்தியாவசியமற்ற பொருட்களை வாங்கக் கூடாது. இந்த திசையில் ஒவ்வொருவரும் என்ன செய்யலாம் என்று பார்க்க வேண்டும்.
ஏதேனும் சரியாக இல்லை என்றால், பொதுவிநியோக கடைகள் (ரேஷன் கடைகள்) சரியாக இயங்கவில்லை என்றால், காரணம் இன்றி வணிகர்கள் விலை ஏற்றுவதாக அறிந்தால், தாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று மக்கள் யோசிக்க வேண்டும். அரசு உங்கள் பக்கம் துணையாக நிற்கும் என்று உறுதி கூறுகிறேன். மக்களின் உறுதியான ஆதரவு இல்லாமல் இந்தத் தீமையை ஒழிக்க முடியாது.
அதே சமயம், மக்களின் உதவி ஒத்துழைப்பு இருந்தால், தீர்க்க முடியாத பிரச்சினை என்று எதுவும் இல்லை. இதுவரை நாம் ஏதேனும் சாதித்து உள்ளோம் என்றால் அது வெளியில் இருந்து யாரேனும் கொடுத்த ஆதரவால் இல்லை; நம் மக்கள் நமக்கு தந்த ஆதரவு ஒத்துழைப்பு காரணமாகவே நிகழ்ந்தது. நமது தேசத்தின் சக்திகள் சிதறுண்டு போகாமல் ஒருங்கிணைத்தோம். இதனால் நீங்களும் அரசும் அபாரமான சாதனைகளை செய்ய முடிந்தது.
விவசாய உற்பத்தியும் தொழில் உற்பத்தியும் பெருகியது என்றால், அதற்கு இந்திய மக்களின் உழைப்பும் வியர்வையும் காரணம். இந்தக் கடின உழைப்பை இன்று நாம் மீட்டுக் கொண்டு வர வேண்டும். விவசாயிகள் நமது முதுகெலும்பு. இவர்கள் இல்லாமல் நாடு வாழ முடியாது; சுயச்சார்பு அடைய முடியாது. விலைவாசி உயர்வு உள்ளீடுகளுக்கு தட்டுப்பாடு காரணமாக இன்று விவசாயிகள் துன்பத்தில் இருக்கிறார்கள். இயன்ற வரை எல்லா வகைகளிலும் இவர்களுக்கு உதவ அரசு முயல்கிறது.
கடந்த ஆண்டின் கடும் வறட்சிக்குப் பிறகு இந்த ஆண்டு இதுவரை நல்ல மழை பெய்து வருகிறது. இது நமக்கு நிவாரணம் தருகிறது. சிலர் வெள்ளத்தினால் பாதிக்கப் பட்டிருக்கலாம். இவர்களுக்கு எனது அனுதாபங்கள். எல்லா வழிகளிலும் விவசாய உற்பத்தியைப் பெருக்க வேண்டும். அப்போதுதான் நமது தேவைகள் நிறைவேறும். மலைகளில் காடுகளில் பாலைவனங்களில் எங்கு வசித்தாலும் மக்களுக்கு உணவுப் பொருட்களும் மற்ற அத்தியாவசிய பொருட்களும் சென்று சேர்க்க முடியும்.
இதே போன்று ஒரு நவீன தேசத்துக்கு தொழிலாளர்கள் அடித்தளம் அமைக்கிறார்கள். தொழிற்சாலைகள் நன்கு செயல்பட்டு தொழில் உற்பத்தி பெருகினால் மட்டுமே நம்மால் விவசாயத்துக்கு உதவ முடியும். நமக்கு நிறைய பிரச்சினைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் தான் பொருளாதார நெருக்கடி இருக்கிறதா? இது உலகளாவிய போக்கு. இந்தியாவில் நிலவும் பிரச்சினைகள் போன்று மிகப்பெரிய நாடுகளிலும் இருக்கின்றன. இதை ஒரு சமாளிப்பாகக் கொள்ளக் கூடாது.
எந்த ஒரு நாடும் அல்லது நாடுகளின் தொகுப்பும் நமக்கு உதவ முடியாது. நாம்தான் நமது காலில் நின்று சுயசார்பை அடைய வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில் எழுந்த சுயநலம், ஒழுங்கீனத்தைப் பார்க்கிறபோது நமக்கான பாதையை தவற விட்டுவிட்டோம் என்று தோன்றுகிறது. நமது அடிப்படைக் கொள்கைகள் கோட்பாடுகள் நெறிமுறைகளை விட்டு வேறு புதிய பாதைகளைத் தேட ஆரம்பித்தோம். இவை உண்மையில் புதிய பாதைகள் அல்ல. அவை ஒவ்வொன்றும் வெவ்வேறு திசை நோக்கிச் செல்பவை. இதனால் நாமும் பிரிந்து போனோம். நமது வளர்ச்சி வேகம் குறைந்து போனது.
வறுமை, பிற்போக்குத்தனம் இருக்கும் இடத்தில் உள்நாட்டு அபாயமும் இருக்கும். இத்துடன் நமக்கு வெளி அபாயமும் இருக்கிறது. நமது நாட்டைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆயுதக்குவிப்பு நடந்து வருகிறது. முன்பு ஓரிரு திசைகளில் இருந்து ஆபத்து வந்தது. இன்று நீண்ட பெருங்கடல் முழுதிலும் ராணுவங்கள் குவிந்து கிடக்கின்றன. இதனால் நமக்கு ஆபத்து இன்னும் அதிகரித்து இருக்கிறது.
நட்புறவு தான் நமது கொள்கை. இதையே நாம் தொடர்கிறோம். குறிப்பாக அண்டை நாடுகளுக்கு நட்புக்கரம் நீட்டுகிறோம். மோதல் மூலம் எந்த நன்மையும் கிடைக்காது என்பதை இந்த அரசும் நம் நாட்டு மக்களும் நன்கு அறிவோம். நட்புறவு ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ள முடியும். நம்மை யார் பலவீனமாக்க முயற்சித்தாலும், அழுத்தம் தர முனைந்தாலும், நம் மீது பகைமை காட்டினாலும், நாம் ஒன்றுபட்டு அவர்களை எதிர்கொள்வோம். ஆயுதங்கள் மூலம், போர்களின் வழியே அல்ல; நமது வலிமை நமது நிலைத்தன்மை நமது ஒற்றுமை மற்றும் நமது கொள்கைகளின் அடிப்படையில் சந்திப்போம்.
துணைக்கண்ட நாடுகள் இணைந்து பணியாற்றி இணைந்து வாழ முடியும் என்று உலகத்துக்கு காட்ட வேண்டும் என்பதே நமது விருப்பம். ஆனாலும் நாடுகளுக்கு இடையே மோதல் இருந்து வருகிறது. இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டுக்கு யாரும் உதவ முடியாது. நாம்தான் நமது காலில் நிற்க வேண்டும். ஏதேனும் உதவி வந்தாலும் அது மிகவும் சொற்பமாகவே இருக்கும். நாம் விழுந்தால் நம்மை எழுப்ப யாரும் இருக்க மாட்டார்கள். நாமாகவே எழுந்தாக வேண்டும். நமது நாட்டின் பாதுகாப்பை நாமே உறுதி செய்வோம். பிறரை சார்ந்து இருக்க முடியாது. இதனால் தான் நாம் எந்த நாடு, எந்தப் பிரிவின் மீதும் சாய்வதில்லை.
நாம் இந்தியர்கள். நமது அக்கறை இந்தியா மட்டுமே. இந்தியாவைக் கட்டமைப்பதே நமது பணி. நமது கொள்கை எதுவாக இருந்தாலும், நாம் எந்தத் திசையில் செல்வதாக இருந்தாலும், எந்தத் திட்டங்களை முன்னெடுத்தாலும்... இவை எல்லாமே, வறுமை, பின்தங்கிய நிலையில் இருந்து மக்களை மீட்டு நாட்டை வலுப்படுத்துவதற்காக மட்டுமே இருக்கும். இது மட்டுமே நமது குறிக்கோள்.
நமது மக்கள் நட்பையே விரும்புகிறார்கள் என்று அண்டை நாடுகளுக்கு உறுதி கூறுகிறேன். நாங்கள் போரை விரும்பவில்லை. எல்லாவற்றிலும் எல்லாரும் உடன்பட்டுப் போக முடியாது. தனி நபர்களுக்கு இடையே இருப்பது போல நாடுகளுக்கு இடையிலேயும் மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். எங்கெல்லாம் ஒத்த கருத்துகள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து ஒன்றாய் உழைக்க ஒத்துழைப்பு தருவோம். இதை நாம் செய்தாலே மிகப்பெரிய அளவில் செலவுகள் குறையும். நமது நாடுகள் வலுப்படும். ஆனால் யாரேனும் எங்களை அச்சுறுத்த நினைத்தால், அதையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்.
நமது முப்படைகளின் வீரர்கள் இங்கே இருக்கிறார்கள். இவர்கள் எல்லா பாராட்டுகளுக்கும் உரியவர்கள். போரிலும் சமாதானத்திலும் இவர்கள் தொடர்ந்து மக்களுக்கு சேவையாற்றுகிறார்கள். சீருடை அணியாவிட்டாலும் நாம் இந்திய மக்கள் அனைவருமே ஒரு விதத்தில் ராணுவ வீரர்கள்தாம். நம்முடைய ஒற்றுமை மூலம் நமது பாதுகாப்புப் படைக்கு நாம் வலிமை சேர்க்க வேண்டும்.
என் முன்னால் மிகுந்த எண்ணிக்கையில் குழந்தைகளைப் பார்க்கிறேன். இவர்கள் தான் இந்தியாவின் நம்பிக்கை. இவர்களுக்கு நாம் எது மாதிரியான எதிர்காலத்தை உருவாக்க விரும்புகிறோம்? அந்த எதிர்காலத்துக்காக நாம் இன்று முதல் உழைக்க வேண்டும். நமது இளைஞர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர், இல்லத்தரசிகள், தொழில் செய்வோர்... கவலைகளில் மூழ்கி விடாமல், இன்றைய நெருக்கடியில் இருந்து வெளியில் வரா விட்டால் நாம் எவ்வாறு முன்னேறி எவ்வாறு நமது பயணத்தை நிறைவு செய்ய இயலும்?
நமது மக்கள் தொகையில் 28 கோடி பேருக்கு மேல் சுதந்திரத்துக்குப் பிறகு பிறந்தவர்கள். நாம் சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த கடுமையான வறுமை, நம்மீது திணிக்கப்பட்ட கண்ணியக் குறைவான அவமானங்கள் மற்றும் நமது சமயம் நமது பண்பாடு பற்றி இவர்களுக்கு எந்தக் கருத்தும் இருக்க முடியாது. இந்த சில ஆண்டுகளில் நம்ப முடியாத மாற்றங்கள் நிகழ்ந்து விட்டன.
நம்முடைய எல்லா பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விடவில்லை. ஆனால் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறோம். உங்களுடைய ஒத்துழைப்பு இருந்தால் மேலும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும். இந்த அரசை அமைத்த போது சொன்னேன் - என்ன நடந்ததோ அதை மறந்து விடுவோம். மீண்டும் அனைவரும் ஒன்றாய் இணைவோம். நமக்குள் வித்தியாசமான கொள்கைகள் இருக்கலாம்; ஒரே மாதிரியான திட்டங்கள் இல்லாமல் போகலாம். ஆனால் தேசத்தினை நிர்மாணிக்கிற பாதையில் தடைகளை ஏற்படுத்த வேண்டியது இல்லை.
அரசும் எதிர்க்கட்சிகளும் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு இணைந்து பணியாற்றினால் மட்டுமே ஜனநாயகம் செயல்பட முடியும். இதற்கு, எதிர்க்கட்சிகளுக்கு எதிர்ப்பதற்கு உரிமை இல்லை என்று பொருள் அல்ல. இந்த உரிமை ஜனநாயகத்தில் உடன் பிறந்தது. அதேசமயம் அரசாங்கத்தின் செயல்பாடுகளை முடக்குவதற்கு முயற்சிக்கக்கூடாது. பணிகள் தடைபட்டால் பாதிக்கப்படுவது அரசா? மக்களா? மக்கள் பாதிக்கப்படும்போது வறியவர்கள் குறிப்பாக பெண்கள் மிக மோசமாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். குழந்தைகளின் கல்விக் காலம் வீணாகிறது. இதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நமது தேசத்து வாழ்க்கையின் திருப்பு முனைப்பகுதியில் நாம் இருக்கிறோம். ஒன்று, எல்லா ஆதாயங்களும் பெறுவோம்; அல்லது எல்லா இழப்புகளும் அடைவோம். திட்டங்களை நடைமுறைப் படுத்துவது அரசின் பொறுப்பு தான். அதே சமயம் எதிர்க்கட்சிகளுக்கும் பொது மக்களுக்கும் பொறுப்பு இருக்கிறது.
விடுதலைப் போராட்டத்தின் போது நாம் அனைவரும் ஒன்றாய் கட்டுப்பாட்டுடன் நடை போட்டோம். அப்போது நமக்கென்று தனியே சிந்தனையோ கோரிக்கைகளோ இல்லை. அப்போதெல்லாம் கோரிக்கைகள் எங்கே போயின? அப்போது மட்டும் மக்களுக்கு வருத்தமும் துயரமும் இல்லாமல் போயிற்றா? அந்தக் காலத்தில் புதிய வேலை வாய்ப்புகளே இல்லை. பொருட்களுக்கு பற்றாக்குறை இருந்தது. ரயிலில் கூட மக்களிடம் பாகுபாடு காட்டப்பட்டது. எழுத்தறிவில்லாத பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரையும் காந்திஜி ஒன்றிணைத்து, உலகையே அதிர வைத்த வலுவான படையாக மாற்றி அமைத்தார். அதன் மிகச்சிறிய ஒரு பகுதியைத்தான் இப்போது செங்கோட்டையில் பார்க்கிறீர்கள். மற்றவர்கள் இந்த நாட்டில் எல்லா மூலைகளிலும் பரவி இருக்கிறார்கள்.
நாம் ஒரு வலுவான படை. பண்பாட்டுக்கான, அறிவுடைமைக்கான படை. வேறு எந்த நாட்டிலும் இதனைக் காண முடியாது. இது நமது சொத்து. கரைந்து போக விடலாமா? நமக்கென்று விலைமதிப்பற்ற பண்பாடு இருக்கிறது. அதனை எறிந்து விடுவோமா? இது எல்லாம் நாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தியாவை மகத்தான நாடாக வைத்திருப்பதே நமது குறிக்கோள். இந்தியாவை வலிமையாக்க வேண்டும். நாம் உலகத்திடம் இருந்து எதையும் கேட்கவில்லை. நாம் நாடுவது எல்லாம் அமைதி மட்டுமே. நமது சுதந்திரத்தை வலுவாக்கவே முயல்கிறோம்.
இந்தியாவில் உண்மையான ஜனநாயகத்தை நிறுவ விரும்புகிறோம். சிலருக்கானது மட்டுமல்ல; ஏழைகளிலும் ஏழைகளுக்கான ஜனநாயகம். இவர்களை வேலையில் அமர்த்தி இவர்களின் சுயமரியாதையைக் காத்து ஒரு நாளைக்கு இரண்டு வேளை அவர்கள் விரும்பிய உணவு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்கிற ஜனநாயகம். இது எல்லாம் நாம் இவர்களுக்கு வழங்க முடிந்தால் மட்டுமே, இங்கே முதன்முறையாக தேசிய கொடியேற்றி வைத்து ஜவஹர்லால் நேரு மேற்கொண்ட உறுதிமொழி நிறைவேறியதாகும்.
செய்வோம் அல்லது செத்து முடிவோம் என்று காந்திஜி குறிப்பிட்ட அந்த சுதந்திரம் கிடைத்து விட்டது. இன்னும் செல்ல வேண்டியது இருக்கிறது. நாம் அனைவரும் ஒன்றுபட்டு இருந்தால் நம்மால் இயலாத காரியம் இல்லை; நம்மால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் இல்லை; நாம் எதிர் கொள்ள முடியாத ஆபத்துகள் இல்லை. அனைவரும் ஒன்றுபட்டு எழுந்து முன்னே நடைபெறுவோம் வாருங்கள் என்று அழைக்கிறேன். நாம் விழுந்திருக்கிறோம். மீண்டும் விழலாம். ஆனால் மீண்டும் எழுவோம். தொடர்ந்து முன்னேறுவோம். நமது இலக்கை அடைவோம்.
சகோதர சகோதரிகளே, நிழல் காலத்தைப் பற்றியே சிந்திக்காமல், எதிர்காலத்தை நோக்குவோம். இந்தியாவில் எதிர்காலம், உங்களின் எதிர்காலம் - ஒளிமயமாகப் பிரகாசிக்கிறது. சில சமயங்களில், மிளிர்கிற இந்த ஒளி, நமது பார்வையை பாதிக்கலாம். ஆனாலும் மகத்தான எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம். நமது நாட்டை ஒரு புதிய தளத்துக்கு உயர்த்தி வைப்போம்.
ஜெய்ஹிந்த்!
(தொடர்வோம்)
> முந்தைய அத்தியாயம்: செங்கோட்டை முழக்கங்கள் 33 - ‘கடமைகளில் இருந்தே உரிமைகள் எழுகின்றன’ | 1979
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT