Last Updated : 17 Oct, 2023 04:44 PM

 

Published : 17 Oct 2023 04:44 PM
Last Updated : 17 Oct 2023 04:44 PM

Bigg Boss 7 Analysis | சுட்டிக்காட்டலுக்குப் பிறகும் பாடம் கற்காத மாயா - பூர்ணிமா கூட்டணி!

வார இறுதியில் கமல்ஹாசனின் அறிவுரைகள் மற்றும் ஆடியன்ஸின் ரியாக்‌ஷன்களை பார்த்த பிறகும் கூட மாயா - பூர்ணிமா கூட்டணி பாடம் கற்றதாக தெரியவில்லை. இதே போன்ற ‘பலே’ கூட்டணிகள் முந்தைய சீசன்களிலும் உண்டு என்றாலும், வார இறுதியில் கமலின் அட்வைஸுக்குப் பிறகு ஓரிரு நாட்களாவது அடக்கி வாசிப்பார்கள். ஆனால், இந்தக் கூட்டணியோ அடுத்த நாளே பழைய பஞ்சாங்கத்தை பாடத் தொடங்கி விடுகிறது.

‘மண்டையை கழுவுகிறார்’, ‘வீட்டில் இருக்கவே தகுதியில்லை’ போன்ற சக போட்டியாளர்களின் விமர்சனங்களை எதிர்கொண்ட மாயாவும், விதிகளை மீறுவதாக கமலே நேரடியாக விமர்சித்த பூர்ணிமாவும் 15-ஆம் நாளில் சின்ன பிக் பாஸ் வீட்டுக்கு அனுப்பப்பட்டது இருவருக்குமே வசதியாகி விட்டது. நாள் தொடங்கியதுமே முதல் வேலையாக இருவரும் தங்கள் புறணியை தொடங்கினர். நாமினேஷன் குறித்து டிஸ்கஸ் செய்யலாம் என்று முந்தைய சீசன்களில் இருந்த கட்டுப்பாட்டை உடைத்தது யாருக்கு கொண்டாட்டமோ இல்லையோ? இவர்கள் இருவருக்கும்தான் படு கொண்டாட்டம். தாங்கள் யார் யாரை நாமினேட் செய்யவேண்டும். தங்களை யார் யார் நாமினேட் செய்வார்கள் என்று யுத்த உத்தி ரேஞ்சுக்கு விவாதித்துக் கொண்டிருந்தார்கள் இருவரும்.

நாமினேஷன் முடிந்து முடிவுகள் வெளியானது. இரண்டு வீடுகளையும் சேர்த்து நிக்சன், அக்‌ஷயா, மணி, விசித்ரா, ஐஷூ, விஜய், மாயா, பூர்ணிமா, வினுஷா, விக்ரம், பிரதீப் ஆகியோர் இந்த வார நாமினேஷனுக்கு தகுதி பெற்றிருந்தனர். இதில் அதிர்ச்சிகரமான ஆச்சர்யம் என்னவென்றால் ஜோவிகா தவிர்த்து யாரும் விஷ்ணுவின் பெயரை சொல்லததுதான். இதனால் அவர் நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டார். தன்னுடைய பெயர் நாமினேஷனில் இடம்பெறாதது குறித்து துள்ளிக் குதித்து உருண்டு புரண்டு பிக் பாஸ் வீட்டாருக்கு ‘லய் யூ’ சொல்லிக் கொண்டிருந்தார்.

வார இறுதிகளில் மக்களின் ரெஸ்பான்ஸ் பார்த்து தன்னுடைய ஆட்டத்தின் பாணியை விஷ்ணு மாற்றிக் கொண்டதாகவே தெரிகிறது. போன சீசன் போட்டியாளர்களை மனதில் வைத்தே அவர் எல்லாரிடமும் எடுத்தெறிந்து பேசுவதை ஒரு ஸ்ட்ராட்டஜியாக பயன்படுத்தியிருக்கக் கூடும். ஆனால் வார இறுதிகளில் தனக்கு கிடைத்த எதிர்வினைகளை பார்த்து தன்னுடைய பாணியை விஷ்ணு மாற்றியிருக்கிறார். இதனை மாயா, பூர்ணிமா இருவரும் கூட சரியாக கணித்தனர்.

வார இறுதியில் தனக்கு இந்த வீட்டில் இருக்க தகுதியே இல்லை என்று கூறியபோது எழுந்த கைதட்டலால் மாயா குழம்பியிருக்கிறார். தான் செய்வதெல்லாம் ‘கன்டென்ட்’ என்று நம்பிய அவர், அது தன்னையே டேமேஜ் செய்வதை உணர்ந்திருக்கிறார். ஆனால் இப்போதும் கூட கேமை எப்படி விளையாடுவது என்று தெரியாமல் பிரதீப் உடன் சேர்ந்து ‘ரூல் பிரேக்கர்’ ஆகிவிடலாமா என்று அவர் பூர்ணிமாவிடம் கேட்பதும், அதற்கு பூர்ணிமா ஆமோதிப்பதும், இவர்கள் இருவரும் இன்னும் வார இறுதி சம்பவங்களில் இருந்து பாடம் கற்கவில்லையோ என்று தோன்றவைக்கிறது.

கமல் சொன்னது போல கடந்த வாரம் 'அறுந்த வால்’களாக எந்நேரமும் அட்டாக் மோடிலேயே இருந்த போட்டியாளர்கள் பலரும் இந்த வாரம் தங்களுக்கு வெளியே கிடைக்கும் எதிர்வினையை ஓரளவு தெரிந்து கொண்டு அடக்கி வாசிப்பதாக தெரிகிறது. இதனால் பெரியளவில் முட்டல் மோதல் எதுவும் இல்லாமல் அமைதியாக இருக்கிறது பிக்பாஸ் வீடு. இந்த வாரம் முழுக்க இப்படியே தொடர்கிறதா? அல்லது பிக் பாஸ் புண்ணியத்தால் புதிய பிரச்சினைகள் எழுகிறதா? என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்து விடும்.

முந்தைய அத்தியாயம்: Bigg Boss 7 Analysis | பிரைவசி கேள்விகளை எழுப்புகிறதா ‘லவ் கன்டென்ட்'?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x