Published : 13 Jan 2018 02:41 PM
Last Updated : 13 Jan 2018 02:41 PM

ரஜினி அரசியல்: 10 - சர்ச்சைகளில் புகுந்து வெளிவரும் சாமர்த்தியம்!

'பாட்ஷா' படம் தமிழகம் முழுக்க சக்கை போடு போட்டுக் கொண்டிருந்த நேரம். என் மைத்துனர் சென்னை சென்றிருக்கிறார். தன் நண்பர்களுடன் ரஜினியின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார். தன்னைக் காண ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்றவுடன் வாசல் வரை வந்து அழைத்து சென்று ஹாலில் நிறுத்தி தனித்தனியாக புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

என் மைத்துனர் ஆட்டோ டிரைவர். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். அவருடன் சென்றவர்களும் ஆட்டோ டிரைவர்கள்தான். அவர்களும் வெவ்வேறு கட்சிகளை சார்ந்தவர்கள். அவர்கள் எல்லாம் இன்று வரை, 'ரஜினி போல் ஒரு எளிமையான மனிதரை பார்க்கவே முடியாது. அப்ப அவரை பார்க்கப்போனபோது அவர் ரெண்டு கைகளையும் நீட்டி வாங்கன்னு வேகமா வந்ததையும், ஜோடியாக இடுப்பில் கைபோட்டபடி போஸ் கொடுத்து போட்டு எடுத்துக் கொண்டதையும், மனைவி குழந்தைகளை கவனிங்க, அம்மா, அப்பாவை காப்பாத்துங்க. உழைச்சு சாப்பிடுங்கன்னு அவர் சொல்லியனுப்பியது இருக்கே. அதை வாழ்நாளில் மறக்க மாட்டோம்!' என சொல்லிக் கொண்டிருப்பவர்களாகவே உள்ளனர்.

இத்தனைக்கும் இவர்கள் இன்று வரை எந்த ஒரு ரசிகர் மன்றத்தையும் ஆரம்பிக்கவில்லை. எந்த ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராக இல்லை. ஆனால் ரஜினி படம் போட்டால் எப்படியாவது டிக்கெட்டை தேடி வாங்கி, முதல் ஷோ பார்ப்பவர்களாகவே அவர்கள் உள்ளனர்.

இவர்களின் நேசம் இப்படி. ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் நிலை எப்படி?

என்னைப் பாதித்த ஒரு மனிதரின் கதையைக் கேளுங்கள்.

தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் ஒன்றின் ரஜினி ரசிகர் மன்றத் தலைவராக ஆரம்ப காலம் முதலே இருந்தவர் அவர். இப்பவும் அவர் வகித்த மன்ற பொறுப்புக்கு மாற்றாக வேறு நபர் நியமிக்கப்படவேயில்லை. அவர் 10 ஆண்டுகளுக்கு முன்பே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்தார். கோமா நிலைக்கு சென்று, உயிருக்கும் போராடிக் கொண்டிருந்தார்.

வெறும் ரஜினி ரசிகராகவே இருந்து குடும்பத்தையும் கவனிக்காமல் இருந்து, இப்போது என்ன கண்டார் என்ற குற்றச்சாட்டு அவரின் உறவுக்காரர்களிடமிருந்து மட்டுமல்லாது, ஏனைய ரசிகர்களிடமிருந்தும் கிளம்பியது.

ரஜினி மன்றங்கள் எல்லாம் செயல்படாமல், புதிய மன்றங்கள் எவையும் பதிவு செய்யாமல் இருந்த காலகட்டம் அது. ரசிகர்களுக்கும், ரஜினிக்கும் பெரிய இடைவெளி. அதனால் அந்த ஆதிகால ரசிகர் மன்றத் தலைவரின் நிலை ரஜினியின் கவனத்திற்கே செல்லவில்லை என்பது நீண்டகாலம் கழித்தே தெரிந்தது. அதுவும் ஒரு முக்கிய படத் தயாரிப்பாளரே இப்படி மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத்தலைவர் கஷ்டப்படுகிறார் என்பதை கண்டுபிடித்தார். அதை அவரே சென்று ரஜினியிடம் சொல்லியிருக்கிறார். உடனே பதறிப்போன ரஜினி, அந்த தயாரிப்பாளரையே விட்டு, அந்த ரசிகர் மன்றத் தலைவரை தன் இருப்பிடத்திற்கு அழைத்து வரச் செய்திருக்கிறார்.

காரில் படுத்த நிலையிலேயே, குடும்பத்தோடு அழைத்துச் செல்லப்பட்ட அந்த ரசிகர் மன்றத் தலைவரால் ரஜினியிடம் பேசக்கூட முடியவில்லை. அடிக்கடி நினைவு தப்பியவராக இருந்தவரின் கண்கள் ரஜினியைக் கண்டதும் ஒளி விட்டுள்ளது.

அவரைப் பெயர் சொல்லி அழைத்த ரஜினி, 'என்னைத் தெரியுதா? உங்க உடம்புக்கு ஒண்ணுமில்லே. நான் இருக்கேன். கைவிடமாட்டேன்!' என்றெல்லாம் சொல்லி தேற்றியிருக்கிறார். அதில் கண்ணீர் உகுத்த ரசிகர் மன்றத் தலைவர் தத்தளிப்பில் ஆழ, தொடர்ந்து அவருடைய உடல்நிலையிலும் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது.

ஒரு தொகையை மருத்துவ செலவுக்காக அவருக்கு கொடுத்த ரஜினி, 'எந்த நேரம் எந்த உதவி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள்!' என்று சொல்லி அந்த ரசிகர் குடும்பத்துக்கு விடை கொடுத்து அனுப்பியிருக்கிறார் ரஜினி. அடிக்கடி அவர் உடல்நிலை எப்படி என்பதை அந்த தயாரிப்பாளர் மூலமும் விசாரித்து வர செய்திருக்கிறார்.

இன்றைக்கு இந்த உடல்நலம் விசாரிப்பு நடந்து 4 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அந்த ரசிகர் மன்றத்தலைவர் படுக்கையில்தான் இருக்கிறார். அவரின் மகன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறார். ரஜினியின் உதவிகள் பற்றியும், அந்த ரசிகர் மன்றத் தலைவர் குறித்தும் பத்திரிகையில் எழுத அவர் மகனை சமீபத்தில் அணுகினேன்.

'இல்லை. வேண்டாம். அதை ரஜினியே விரும்ப மாட்டார். எங்களுக்கும் விருப்பமில்லை!' என மறுத்துவிட்டார்.

இவற்றை எல்லாம் ஏன் இங்கே குறிப்பிட வேண்டும்? 'தனக்கு உதவி செய்தவர்களை மறக்கலாகாது, தன்னை நம்பி வந்தவர்களை கைவிடக்கூடாது' என்று எம்ஜிஆரின் இருந்த பண்பாடு ரஜினியிடம் இயல்பாகவே அமைந்திருக்கிறது என்பதை சுட்டிக் காட்டுவதற்கு சின்ன சின்ன உதாரணங்கள்தான் இவை.

எம்.ஜி.ஆரால் அறிமுகமாகி, ரஜினியுடனும் நடித்த கதாநாயகி நடிகை லதா எம்ஜிஆரை ஒப்பிட்டே ரஜினியின் நல்ல குணங்களை பட்டியலிட்டிருக்கிறார். இத்தனைக்கும் அவர் அதிமுகவில் இருக்கிறார். ரஜினியுடன் நடித்த குஷ்பு காங்கிரஸ் கட்சி நிர்வாகிப் பொறுப்பில் இருந்தாலும் ரஜினியின் அரசியல் வருகையை மலர்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார். நடிகர் கமலும், வரவேற்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் மகன் அழகிரியோ ரஜினி வருகை தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை கொடுக்கும் என்கிறார். திமுக செயல்தலைவர் ஸ்டாலினோ, ரஜினி வருகையால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என சூசகமாக அறிவிக்கிறார்.

இந்த குழப்பங்களூடே ரஜினியோ எடுத்த எடுப்பில் சில ஆன்மிக தலைவர்களை சந்திக்கிறார். ஆசி பெறுகிறார். அது அவரின் ஆன்மீக அரசியல் 'பஞ்ச்'-க்கு ஏற்ப புதுவித சர்ச்சைகளை உருவாக்குகிறது.

இவர் மடங்களையும், மடாதிபதிகளையும் அரவணைப்பவர். அவர்களின் சொல் கேட்டு நடப்பவர். இவர் பாஜகவின் காவிச் சிந்தனையின், மதச்சார்புத் தன்மையின் இன்னொரு வடிவம் என்றெல்லாம் விமர்சனங்கள் புறப்படுகிறது. அந்த விமர்சனங்கள் ஒரு திக்கை அடைவதற்குள்ளாக அடுத்த அதிர்ச்சி, ரஜினி திமுக தலைவர் மு.கருணாநிதியை சந்திக்கிறார். பொன்னாடை போர்த்துகிறார். அவருடன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்.

ரஜினி - கருணாநிதி சந்திப்பு திமுகவில் புதுவித சலசலப்பையும், சிக்கலையும் ஏற்படுத்துகிறது. கருணாநிதியையும் தன் அரசியலுக்கு ரஜினி பயன்படுத்தும் உத்தியே தவிர வேறில்லை. இதை நாங்களே எதிர்பார்க்கவில்லை என்றெல்லாம் மனம் புழுங்குகின்றனர் திமுகவினர்.

இந்த புழுக்கத்தை தாண்டி அடுத்ததாக ஆர்.எம்.வீரப்பனை சந்திக்கிறார். அதைத் தொடர்ந்து ஆர்.எம்.வீரப்பன் ரஜினியை வைத்து எடுத்த பாட்ஷா திரைப்படமும், அதன் வெற்றி விழாவில், 'தமிழகத்தில் வெடிகுண்டு கலாச்சாரம் பரவிக்கிடக்கிறது!' என ரஜினி பேசிய பேச்சும், அதனால் ஜெயலலிதா அமைச்சரவையில் ஆர்.எம்.வீரப்பன் பதவி பறிக்கப்பட்டதும் புதுவித அரசியல் சர்ச்சைகளாய் தமிழக அரசியலில் மையம் கொள்கிறது.

இதுவெல்லாம் எந்த வகையிலான அரசியல்? இதில் எந்த மாதிரியான அரசியல் புயல் நுழையும் என்று புரிபடாமலா அடுத்தடுத்து இந்த சர்ச்சைகளுக்குள் புகுந்து வெளிவருகிறார் ரஜினி? இதற்கும் பின்னூட்ட அரசியல் நிகழ்வுகள் உள்ளன. அதைத் தாண்டிய அரசியல் வரலாறும் இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள கொஞ்சம், கொஞ்சமாக காலத்தை பின்னோக்கி நகர்த்துவோம்.

- பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x