Published : 05 Jan 2018 08:05 PM
Last Updated : 05 Jan 2018 08:05 PM

ரஜினி அரசியல்: 7 - லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய்!

தமிழகத்தில் அதிமுக ஆட்சி சீக்கிரமே கவிழ்ந்துவிடும். வரும் 2019-ம் ஆண்டிற்குள்ளாவது ஆட்சியைக் கலைத்து அப்போது நடக்க உள்ள மக்களவைத் தேர்தலோடு சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடக்கும் என நம்புகிறார்கள் பொதுமக்கள்.

ஸ்டாலின் உட்பட தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த ஆட்சி ஒரு மாதம் நிலைக்காது; இரண்டு மாதம் கூட நிலைக்காது என சொல்லி வருகிறார்கள். சமீபத்தில் ஆர்.கே.நகரில் தேர்ந்தெடுக்கப்பட்ட தினகரன் கூட, வரவிருக்கும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே இந்த ஆட்சி கவிழும் என்று அதிரடியாக அறிவிக்கிறார். யாரும் இப்படி பேசுவது, அதிரடி அறிவிப்பு செய்வது சரிதானா? தர்மம்தானா? அரசியல் சட்டத்திற்கு, இறையாண்மைக்கு, மதமாச்சர்யங்களுக்கு உட்பட்டதா? அட்லீஸ்ட் அடிப்படை நேர்மையாவது அந்த வார்த்தைகளில் உள்ளதா என்று யோசித்துப் பாருங்கள்.

சட்டப்படி, விதிமுறைப்படி, இறையாண்மை, தர்மப்படி ஐந்தாண்டுகளுக்கென தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியில் இருக்கவும், அவர்கள் தேர்ந்தெடுத்த அமைச்சரவை பதவி வகித்தேதான் தீர வேண்டும். அந்தக் கட்சிக்கும், அதன் தலைவரை மட்டுமே முன் வைத்து ஓட்டு போட்ட மக்கள், அந்தத் தலைவர் காலமானதால் (ஜெயலலிதா) இப்போது இருக்கும் ஒட்டுமொத்த தலைமையையே விரும்பவில்லை. அல்லது அது நீடித்தே தீர வேண்டும் என்ற புரிதல் அவர்களுக்குள் இல்லை. அறிவுப்பூர்வமாக இல்லாமல், நேர்மைப்படி இல்லாமல், தலைவர் எப்படி இறந்தார் என்பதில் கூட சந்தேகங்கள் கிளப்பி இந்த அரசியலில் குளிர்காயத் திரிவதும், அதையொட்டி மக்களின் உணர்வுகளை தூண்டி ஆட்சியை கவிழ்க்க நினைப்பதும்தான் அந்த அரியணையில் அமரத் துடிப்பதும் எந்த வகையில் தர்மம்? எந்த வகை நேர்மை?

இந்த சூழலில் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். அதுவும் ஆன்மிக அரசியக் செய்யப் போவதாக அவர் கூறியுள்ளார். இதை எப்படி உணர்ந்துகொள்வது?

''இப்போதைக்கு நமக்கு அமைப்பாக திரள்வது வேலை. அதை முழுமையாக முடிக்கும்போது தேவையில்லாமல் அரசியல் பேசினால் வம்பு வழக்குகள் வரும். வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவார்கள். அதில் யாரெல்லாம் தம் ரசிகர்களோ, தம் கள உழைப்பாளர்களோ, தம் செயல்வீரர்களோ தாக்கப்படுவார்கள். சிறைப்படுத்தப்படுவார்கள். பொய்குற்றச்சாட்டுகளின் பேரில் பொய் வழக்குகள் கூட போடப்படலாம். அவர்கள் குடும்பங்கள் கூட தாக்கப்படலாம். அது எதற்கு தேவையில்லாமல். அரசியல் கட்சிக்கான முன்னோட்ட அமைப்பை ஆரம்பிக்கும் போது நாம் அரசியல் பேச வேண்டியதில்லையே. அதைப் பேசி நாம் ஏன் 'டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், எவ்ரி திங்க் வேஸ்ட்' என்று நாம் திரிய வேண்டும்.

அது நேர்மையும், தர்மமும் அல்லவே. இந்த செயல்பாடுகளை கூட ஆன்மிக அரசியலுக்குள் கொண்டு வருகிறாரோ ரஜினி என்று தோன்றுகிறது. அந்த அரசியல்வாதி அப்படி, அந்த முன்னாள் தலைவர் இப்படி, அவர் ஊழல் செய்தார், இவர் ஊழல் செய்தார் என்று நாம் ஏன் நெகட்டிவ் விஷயங்களை கோடிட்டுக் காட்டி ஓட்டு வாங்க வேண்டும்.

இதுவரை நடந்தது நடந்ததுதான். கதம், கதம். இனி நடக்கப் போவதற்கு என்ன செய்ய வேண்டும். அதை மட்டும் யோசித்து, சிந்தித்து செயல்படுத்தி மக்கள் மத்தியில் கொண்டு போவதுதானே நம் சரியான செயல்பாடாக இருக்கும்? எனக்கு நடிப்பது வேலை. அதைச் செய்து கொண்டிருந்தேன். அப்போது யாராவது தமிழன், கர்நாடகாக்காரன், காவிரி தண்ணி என்று பிரச்சினை கிளப்பினால் மட்டுமே வேறு வழியில்லாமல் அதில் தன் நிலைப்பாட்டை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டி நிலையும், சில காரியங்கள் செய்ய வேண்டி நிலையும் வந்தது. அவ்வளவுதான்.

இப்போதைய என் அரசியல் வருகை தயாரிப்பு என்பது முற்றிலும் வேறு. அதை எம்ஜிஆருடனோ, என்.டி.ஆருடனோ, சிவாஜி கணேசனுடனோ, சிரஞ்சீவியுடனோ, ஏன் அமிதாப்பச்சன் கூடவும் ஒப்பிட முடியாது. இனி நான் அரசியல் கட்சி ஆரம்பித்து அதில் குதிக்கட்டும். இலங்கை பிரச்சினையிலிருந்து, காவிரி பிரச்சினை வரை அரசியல் தலைவராக இருந்து என்ன கருத்து தெரிவிக்கிறேன். என்ன செய்யப்போகிறேன் என்பதை அனுபவத்தால் உணர வைக்கிறேன்!''

இப்படியான பொருளாகவே ரஜினி சொல்லும் ஆன்மிக அரசியலை உணர முடிகிறது. ரஜினி குறித்த எனக்கான சமீப காலப் புரிதல் இப்படியாக இருப்பதாலேயே இதைச் சொல்கிறேன். இதற்கு மாறுபட்டுக்கூட இருக்கலாம்தான். அதனால் என்ன இருந்து விட்டுப் போகட்டுமே. இதையெல்லாம் சொல்வதன் மூலம் ரஜினி வந்தால் தேர்தலில் வென்று விடுவார்; நல்லாட்சி கொடுத்து விடுவார் என்றெல்லாம் சொல்லவில்லை. அப்படி சொன்னால் எனக்கும், சராசரி சினிமா ரசிகர்களுக்கும், அரசியல் தொண்டர்களுக்கும், ஆர்.கே. நகர் வாக்காளர்களுக்கும் வித்தியாசமில்லாமல் போய்விடும். அப்படியான வித்தியாசத்தை புரியாததையும் புரிந்துகொள்ளும் தன்மைக்கு நாம் ரஷ்ய இலக்கிய மேதை லியோ டால்ஸ்டாயின் வாழ்க்கை சம்பவம் ஒன்றை இந்த இடத்தில் அறிந்து கொள்வது நல்லது.

லியோ டால்ஸ்டாய் என அழைக்கப்படும் லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய். போரும்; வாழ்வும், அன்னா கரேனினா, புத்துயிர்ப்பு போன்ற உலகப் புகழ் பெற்ற இலக்கியங்களை கொடுத்தவர். தத்துவார்த்த கோட்பாடுகளிலான படைப்பிலங்கியங்களுக்கு புத்துயிர் கொடுத்தவர் மட்டுமல்ல; தம் வாழ்க்கையில் அனுபவித்தில் உணர்ந்தவற்றையே எழுதிப் புகழ் பெற்றார்.

அதைவிட அவர் மிகப்பெரிய பிரபுத்துவ வம்சத்தை சேர்ந்தவர். அவரின் நிலபுலன்கள் பல லட்சக்கணக்கான ஏக்கரில் நாடுகள் கடந்து விரிந்து கிடந்தது. அவற்றை பரிபாலிக்க மேலாளர்கள், கங்காணிகள், மேஸ்திரிகள் ஆயிரக்கணக்கில் இருந்தனர். அவர்களின் கொடுங் கட்டுப்பாட்டில் கூலி மற்றும் குத்தகை விவசாயிகள் அடிமைகளாகவே நடத்தப்பட்டனர். இது அந்தக் காலத்தில் இயல்பான வாழ்நிலையாகவே இருந்தது.

இப்படி அவல வாழ்க்கை வாழும் விவசாயிகளின் நிலையையும் சுரண்டலில் கொழுக்கும் அதிகார வர்க்கத்தையும் கண்டு மனமுருகிய டால்ஸ்டாய் ஒரு கட்டத்தில் தம் வசமுள்ள நிலங்களை உழுபவர்களுக்கே சொந்தமாக்க முடிவு செய்தார். தம் நிலங்கள் நீண்டிருக்கும் மாகாணங்கள், நாடுகள் என பயணம் செய்தார்.

அங்கு தம் குடும்பத்தாரால் நியமிக்கப்பட்ட மேலாளர்கள், கங்காணிகள், மேஸ்திரிகளை சந்தித்தார். தன் பூர்வீக நிலங்களை உழுபவர்களுக்கே சொந்தமாக்க முடிவு செய்திருப்பதையும், அதற்கான ஏற்பாடுகளை செய்யும்படியும் பணித்தார்.

அவர்கள் தங்கள் அதிகாரம் பறிபோவதை எண்ணி, அதற்கு பல்வேறு முட்டுக்கட்டைகள் போடப் பார்த்தனர். அதற்கேற்ப டால்ஸ்டாயிடம் பல்வேறு ஆலோசனைகள் சொன்னார்கள். தந்திரங்கள் செய்தார்கள். உழுபவர்களிடம் நிலத்தைக் கொடுத்தால் அவர்கள் தங்கள் வறுமைக்காக நிலத்தை மற்றவர்களுக்கு விற்று விடுவார்கள் என்றெல்லாம் கூட உபதேசித்தார்கள்.

அதனால் எல்லாம் தம் முடிவிலிருந்து மாறவில்லை டால்ஸ்டாய். எனவே விவசாயிகள் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. டால்ஸ்டாயின் முடிவு அறிவிக்கப்பட்டது. உடனடியாக அந்தந்த நிலங்களை உழும் விவசாயிகளிடமே அதை ஒப்படைப்பு செய்ய பத்திரங்கள் பதிவிட ஏற்பாடுகள் செய்யப்படுவதாக தெரிவித்தார் லியோ டால்ஸ்டாய். அதற்கு எதிர்பாராதவிதமாக விவசாயிகளிடமே எதிர்ப்பு கிளம்பியது.

பேசித் தெளிவோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x