Published : 31 Dec 2017 01:07 PM
Last Updated : 31 Dec 2017 01:07 PM

ரஜினி அரசியல்: 2 - என்னை வாழவைக்கும் தெய்வங்கள்!

'நடிகனுக்கு நாடாளத் தெரியுமா?' என்றார்கள். கூத்தாடிக்கு ஓட்டுப்போடலாமா என்றார்கள். அவர்தான் பத்தாண்டுகள் தொடர்ந்து முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார். எதிர்க்கட்சியான திமுக தவிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மாறி, மாறி அவர் கட்சியில் கூட்டணி கண்டன. 'நாட்டியக்காரிக்கு ஓட்டு போடலாமா?' என்பதோடு, சொல்லவே நா கூசும் விஷயங்களை எல்லாம் மேடையேற்றி அசிங்கப்படுத்தினார்கள்.

அதே ஜெயலலிதாதான் சகலத்தையும் துச்சமாக நினைத்து மக்கள் செல்வாக்கால் அகற்றி அரியணையில் பல முறை அமர்ந்தார். அவர் மீது விழாத ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை. கடைசியாக சொத்துக் குவிப்பு வழக்கில் இறந்த பின்னும் குற்றவாளி தீர்ப்புக்குள்ளானார். அதுவும் கூட தனி வரலாறாகத்தானே ஆனது?

இது மட்டுமா, ஜெயலலிதா ஒரு பாவமும் அறியாதவர். மன்னார்குடி குடும்பம்தான் அவரை அநியாயத்திற்கு பழிபாவங்களை சுமக்க வைத்திருக்கிறது என்றார்கள். இப்போது சசிகலா சிறையில் இருந்தாலும், அவர் மீது, அவர் குடும்பத்தினர் மீதும் ஆயிரம் களங்கங்கள் கற்பிக்கப்பட்டாலும் இன்றைக்கு கட்சிகளை, சின்னங்களை எல்லாம் தாண்டி அவர் குடும்பத்தின் கவசமாக தினகரன் ஆர்.கே. நகரில் வெற்றி பெற்றிருக்கிறார்.

இவையெல்லாம் நேர்மையாளர்களும், சிந்தனையாளர்களும், விமர்சகர்களும், இன்ன பிற அறிவுஜீவிகளும் விரும்பியபடியா நடக்கிறது. இல்லையே! அப்படி ஒரு வியூகத்தை அவர்கள் அமைக்கிறார்கள். வெற்றி கொள்கிறார்கள். அதில் பணமும், பதவியும், அதிகாரங்களும் பெரும்பங்கு வகிக்கிறது. அதுவே வரலாறாகி விடுகிறது.

அந்த வகையில் ரஜினிக்கு 1970கள் தொடங்கி இன்று வரையிலான சினிமா பிரபல்யம் இருக்கிறது. அது மற்ற நடிகர்களுக்கு இல்லாத விதமாக எழுச்சியுடன் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி அவருக்கு பிடித்ததை தேடுகிறார். பிடித்த ஒன்றை மையப்புள்ளியிட்டு பேசுகிறார். அந்த மையப்புள்ளியில் ஒன்று அரசியலாக இருக்கிறது.

அது இங்கே ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும், இன்னபிற அரசியல்வாதிகளுக்கும் மட்டுமல்ல மக்களுக்கும் கூட இனிப்பாக அல்லது கசப்பாக இருக்கவே செய்கிறது. இனிப்பும், கசப்பும் இரண்டுமே இல்லாதிருந்தால் ரஜினி என்கிற சினிமா சக்தி கண்டு கொள்ளப்படாமலே போயிருக்கும் என்பதை இதில் உணர வேண்டும். அப்படித்தான் அவரின் அரசியலையும் நான் பார்க்கிறேன்.

அவர் 1995ல் தனது போயஸ் கார்டனுக்கு செல்லும் வழியில் பாதுகாப்புக் காவலர்களால் மறிக்கப்பட்டார். ஜெயலலிதா அரசாங்கத்தின் போக்கை அப்போதுதான் அவர் உணர்ந்து கொண்டார். அதன் நிமித்தம் தன் வீட்டிற்கு சில மீட்டர் தூரம் நடந்தே சென்றார். அதை ஒட்டியே ஜெயலலிதாவிற்கு எதிர் நிலை எடுத்தார். 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலேயே காப்பாற்ற முடியாது!' என்று 1996-ல் பேசினார்.

இதன் பின்னணியில் தமாகா கட்சி மூப்பனார் தலைமையில் உருவெடுத்தது. திமுகவுடன் கூட்டணி வைத்தது. ஏற்கெனவே காங்கிரஸ் மீதான நல் அபிமானத்தில் இருந்த ரஜினி இந்த கூட்டணிக்கு ஆதராவாக வாய்ஸ் கொடுத்தார். அதனால் அந்த கூட்டணி வென்றது. அதிமுக படுதோல்வி கண்டது. அதிலும் ஜெயலலிதாவே தான் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் கடுமையாக தோற்றார்.

இதுதான் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கான முதல் அஸ்திரம் என்பதுதான் பெரும்பான்மையோரின் எண்ணம். எனக்கு அப்படி தோன்றவில்லை. அது வெளிப்படையான அவரின் அரசியல் பிரவேசம் என்று வேண்டுமானால் கொள்ளலாம்.

ஆனால் எப்போது 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே, ரசிகப் பெருமக்களே!' என தனது மேடைப்பேச்சின் முதல் வரியை உச்சரிக்க ஆரம்பித்தாரோ, அப்போதே அவரின் அரசியல் பேச்சும் தொடங்கி விட்டது என கருதுகிறேன். இந்த மாதிரியான திராவிட மாயை பேச்சுகள்தான் 1969 வரை ஆண்டு கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியை காலி செய்தது என்பது தமிழகத்தின் வரலாறு என்பதால்தான் இதைக் கூறுகிறேன்.

திராவிடக் கட்சிகளின் முதல் தோன்றல், 'அருமைத் தம்பிகளே!' என்றழைத்தார் அறிஞர் அண்ணா. இளைஞர் பட்டாளம் அலைகடலென அண்ணாவின் அந்த குரல் நாதத்தில் மயங்கி ஆரவாரித்தனர். அதனை அடியொற்றி, 'என் உயிரினும் மேலான அருமை உடன்பிறப்புகளே!' என்றார் கருணாநிதி. அந்த அழுத்தமான கணீர் குரலுக்கு மகுடிக்கு கட்டுப்பட்ட பாம்புபோல் இனம்புரியா சிலிர்ப்பை வெளிப்படுத்தியது அவரின் தொண்டர் படை. அண்ணாவுக்கும், கருணாநிதிக்குமான சங்கநாதம் ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் வேண்டும் என்பதை அனுபவப்பூர்வமாகவே உணர்ந்தார்.

எழுத்தாளர்களுக்கு எப்படி கதைக்கு ஆரம்பம் முக்கியமோ, செய்தியாளனுக்கு எப்படி ஓப்பனிங் அவசியமோ அதே போலத்தான் அரசியல் தலைவர்களாக உருவெடுக்கும் வரலாற்று நாயகர்கள் தம் தொண்டர்களை காந்தமென ஈர்க்கும் வார்த்தை ஜாலங்களை கொண்டிருக்க வேண்டும். அதுவே உரையின் துவக்கப்புள்ளியாகவும் மினுங்க வேண்டும் என்பதை இயல், இசை, நாடக அனுபவங்களிலிருந்து சினிமா என்கிற மாயசக்தியிலும் கொண்டு வந்தவர் அல்லவா எம்ஜிஆர்.

அந்த உணர்வை ரத்த நாளங்களிலும், அணு செல்களிலும் பரவ விடுகிற மாதிரி, 'என் ரத்தத்தின் ரத்தமான இனிய உடன்பிறப்புகளே, உயிரினும் மேலான தாய்க்குலங்களே!' என்றார். அந்த குரல் நாதத்தின் வெளியே கட்டுக்கடங்காத வெள்ளமென புறப்பட்டது தொண்டர் படை. எம்ஜிஆரிடமே வெள்ளி செங்கோல் பெற்று, 'நானே வாரிசு!' என பிரகடனப்படுத்திக் கொண்ட, எப்பேர்பட்ட தொண்டர்படையையும் தன் ஆளுமை மிக்க கூரிய பார்வையால் அடக்கி ஆண்ட ஜெயலலிதா இந்த விஷயத்தில் சும்மாயிருப்பாரா? 'நம் இதயதெய்வம் புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே, தாய்மார்களே!' என பேச்சை தொடங்கி திரும்பின திக்கெல்லாம் ஆராவாரக்குரல்களை தனக்கு சாதகமாக ஒலிக்கச் செய்தார் ஜெயலலிதா.

அண்ணா முதல் ஜெயலலிதா வரை, அவர்களைத் தாண்டி பாக்யராஜ், டி.ராஜேந்தர் உள்பட தங்கள் அளவில் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் கூட இதே துவக்கப் பேச்சின் வலிமையை உணர்ந்தே மேடைப்பேச்சுக்கு தொடக்க வரியை வைத்திருந்தார்கள். அந்த வரிகள் தம் வழி வருபவர்களின் உணர்வை மீட்டுவதாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தே அதை தேர்ந்தெடுத்து தயாரித்தனர். இவர்கள் எல்லாம் இயக்கம் ஒன்று கண்டு, கட்சியாக அதை உருவெடுக்க வைத்து அதற்குள்தான் இந்த ஜோடனை வார்த்தைகளை மக்களுக்காக உருக்கியெடுத்துக் கொடுத்தார்கள்.

ரஜினியோ, இயக்கம் காணவில்லை. கட்சி ஆரம்பிப்பதாக கூட சொல்லவில்லை. தனக்கென உருவான - உருவாக்கப்பட்ட ரசிகர் மன்றங்களுக்கு கூட ஒரு பகுதிக்கு பதிவு எண் கொடுத்து விட்டு, இருபது ஆண்டுகளாக அதையும் கொடுக்காமல் நிறுத்தி விட்டார். அப்படிப்பட்டவர்தான் இருபது ஆண்டுகளுக்கு மேலாக தன் உரையின் தொடக்கத்திலேயே உரைக்கிறார், 'என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே, என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே!' என்று. இதன் உட்பொருள் என்ன?

அந்த உட்பொருள் என்னவோ இருக்கட்டும். எதற்காக எடுத்த எடுப்பில் இப்படியொரு வரியை தன் ரசிகர்களுக்காக போட்டு உணர்வை மீட்ட வேண்டும்.

சரி, அதைக்கூட விடுங்கள். ரசிகர்கள் சந்திப்பு மட்டுமல்ல, தன்னை முன்னிறுத்தி ஏற்பாடு செய்யும் விழாக்கள், சிறப்பு நிகழ்ச்சிகளில் எல்லாம் 'பாபா' லோகோவையும், தாமரை லச்சினையையும் பின் பக்கத்திரையில் பயன்படுத்துவதை 10 ஆண்டுகளுக்கு மேலாக வைத்திருக்கிறார். இதற்குள் அரசியல் இருக்குமா இருக்காதா? அதற்குள்ளிருக்கும் ரஜினிக்குள் அரசியல்வாதி இருக்கிறாரா? இல்லை தன்னை வாழவைத்த மக்களின் மீதான நேசத்தையும், விசுவாசத்தையும் வெளிப்படுத்தும் சாதாரண மனிதர்தான் இருக்கிறாரா? அப்படிப்பட்ட மனிதருக்கு வார்த்தை ஜோடனைகள் எதற்கு?

தாடியை மழிக்காமல், மீசையை ட்ரிம் செய்யாமல் எதையும் லட்சியம் செய்யாத சராசரி பாமர மனிதன் போல் தோற்றம் கொண்டு மேடையேறும் ரஜினி. 'சினிமாவில் மட்டுமே நடிக்கிறேன். ஏனென்றால் வெளியில் நடிப்பதற்கு எனக்கு யாரும் ஊதியம் தருவதில்லை!' என்று சொல்லும் ரஜினி. தாம் மேடையேறும் நிகழ்ச்சிகளில் பேசும்போது தினுசுக்கு ஒன்றாக தொடக்க வரிகளை வைக்க வேண்டியதுதானே? அதிலும் ரசிகர்களையும், மக்களையும் ஈர்க்கும் வண்ணம், அவர்கள் உணர்வுகளை மீட்டும் வண்ணம் வார்த்தை ஜாலங்களை வைத்து அழைக்க வேண்டிய அவசியம் என்ன? அங்கேயே தொடங்குகிறது அவரின் அரசியல்.

உரையின் அந்த தொடக்க வரிகளில் கோர்க்கப்பட்ட வார்த்தைகளில் மட்டுமல்ல, 'சூப்பர் ஸ்டார்' என்று அகண்ட திரையில் ஜொலிக்க வைக்கும் வண்ணங்களில் டைட்டில் கார்டு போட்டுவிட்டு, சாமன்ய மழிக்கப்படாத தாடி மீசையுடன் மேடைக்கும் வரும் சாமன்ய மனிதனாக தோற்றம் காட்டும் அந்த தோற்றத்திற்குள்ளும் அரசியல் இருக்கிறது.

அப்படியான எளிமைதான் தன்னை மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் என்கிற சூட்சுமமான ஆளுமை அது. இருக்கும் அழகிலேயே அரிதிலும் அரிதான அழகு, இயல்பாக இருந்ததலில்தான் உள்ளது என்பதை உணர்ந்து கொண்ட தன்மை அது. அந்த தன்மை தன்னை நேசிக்கும் மக்களை இன்னமும் நேசிக்க வைக்கும் என்பதற்கான சங்கநாதமும் அதுதான்.

- பேசித் தெளிவோம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x