Published : 09 Oct 2023 11:00 AM
Last Updated : 09 Oct 2023 11:00 AM
பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு சீசனிலும் ‘எதிர்பாராததை எதிர்பாருங்கள்’ என கமல் சொல்வதுண்டு. உண்மையில், அது இந்த சீசனின் தொடக்கத்திலேயே உண்மையாகிவிட்டது. வார இறுதியில் குறைவான ஓட்டுக்களைப் பெற்ற அனன்யா எவிக்ட் செய்யப்பட்ட நிலையில், அதற்கு மறுநாளே யாரும் எதிர்பார்க்காத வகையில் பவா செல்லதுரையும் வெளியேறியிருக்கிறார்.
வாரம் முழுவதும் பிக் பாஸ் வீட்டில் நடந்த பஞ்சாயத்துகளை வார இறுதியான சனி, ஞாயிறுகளில் கமல்ஹாசன் விசாரித்தார். சனிக்கிழமை நிகழ்ச்சியின் பெரும்பாலான பகுதியை ஜோவிகா - விசித்ராவின் படிப்பு தொடர்பான விவகாரமே ஆக்கிரமித்துக் கொண்டது. உயிரை கொடுத்தாவது படிப்பு என்ற கொள்கைக்கு எதிரானவன் நான் என்று ஜோவிகாவின் கருத்துக்கு ஆதரவாக பேசிய கமல், தலைமுறை இடைவெளி குறித்தும், இன்றைய தலைமுறையின் மனநிலை குறித்தும் விசித்ராவுக்கு அட்வைஸ் செய்தார். கல்வி குறித்து அவரது பார்வை மழுப்பலானதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அதன்பின், ஞாயிற்றுக்கிழமை நிகழ்வின் தொடக்கத்திலேயே கல்வியின் அவசியம் குறித்து ஆணித்தரமாக எடுத்து வைத்தார்.
தொடர்ந்து முதல் வார தலைவரான விஜய் வர்மாவின் செயல்பாடுகளுக்கான பாராட்டுகளை தெரிவித்தவர், பிரதீப்பிடம் விஜய் பேசிய வன்முறை பேச்சு தொடர்பான விஷயங்களை நினைவூட்டினார். இதில் இதுவரை எந்த சீசனிலும் நடக்காத ஒரு விஷயம் நடந்தது. வெளியில் வந்தால் பார்த்துக் கொள்வேன் என்று இதற்கு முந்தைய சீசன்களிலும் பல போட்டியாளர்கள் சொல்லியிருந்தாலும், அதனை கமல் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டார். ஆனால், இம்முறை ஸ்ட்ரைக் கார்டு என்ற ஒன்றை காட்டி, தொடர்ந்து மூன்று முறை அந்த மஞ்சள் கார்டு வழங்கப்பட்டால் பெட்டியை கட்டிக் கொண்டு இப்படியே வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று சற்று கடுமையான தொனியிலேயே கூறினார்.
நாமினேஷன் செய்யப்பட்டவர்களில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று ஒவ்வொரிடமும் கமல் கேட்டபோது, ஒட்டுமொத்தமாக சொல்லிவைத்தாற்போல், பெரும்பாலானோர் பவாவின் பெயரை கூறினார். இது பவாவுக்கு கடும் அதிருப்தியை தந்தது அவரது முகத்திலேயே தெரிந்ததை பார்க்க முடிந்தது. ஆனால், ஒருவர் கூட அனன்யாவின் பெயரை சொல்லாத நிலையில், குறைவான ஓட்டுகளை பெற்ற காரணத்தால் அனன்யா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். அனைவரிடமும் கைகுலுக்கி, காலில் விழுந்து, கட்டியணைத்து விடைபெற்றுக் கொண்டவர், விசித்ராவிடம் மட்டும் எதுவும் சொல்லாமல் சென்றார். முன் தினம் நடந்த அந்த டாட்டூ பஞ்சாயத்து காரணமாக இருக்கலாம்.
எபிசோடின் இறுதியில் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட சரவணனிடம், இந்த வாரம் ஸ்மால் பாஸ் வீட்டுக்கு அனுப்ப வேண்டிய ஆறு பேரை தேர்வு செய்யுமாறு கூறப்பட்டது. அதற்கான சில அடையாளப் பெயர்களும் கூறப்பட்டன. முதலிலேயே சோம்பேறி யார் என்று பிக் பாஸ் கேட்டதற்கு யோசிக்காமல் பவாவின் பெயரைச் சொன்னார் சரவணன். அடுத்து கூல் சுரேஷுக்கு தொட்டாச்சிணுங்கி, விஜய் வர்மா சுவாரஸ்யமற்றவர் என்று ஒவ்வொரு பெயருக்கும் ஒரு போட்டியாளரைக் கூறி ஆறு பேரை தேர்வு செய்தார். தன் பெயரை சரவணன் சொன்னதுமே அருகில் இருந்தவரிடம் தன்னுடைய அதிருப்தியை பவா வெளிப்படுத்தினார்.
சூழலில் இப்படியிருக்க, பிக் பாஸிடம் பேச வேண்டுமென்று இரண்டு மணி நேரம் கோரிக்கை வைத்த பவாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கன்ஃபெஷன் அறையில் பிக் பாஸிடம் பேசிய பவா, இப்போதுதான் இந்த விளையாட்டை புரிந்துகொண்டதாகவும், இனிமேல் ஒரு நாள் கூட தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறினார். அதற்கான காரணம் என்னவென்று பிக்பாஸ் கேட்டதற்கு பதில் அளித்த அவர், ‘இங்கு மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுகின்றன. இதற்கு மேல ஒரு சதவீதம்கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது என்று ஆணித்தரமாக தெரிவித்தார். அதன் பிறகு பிக் பாஸ் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பவா இறங்கி வரவே இல்லை. நீங்கள் சொல்வது வரையிலும் இங்கேயே தான் இருப்பேன் என்று கன்ஃபெஷன் அறையிலேயே அமர்ந்திருந்தார்.
இதனையடுத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து பவா செல்லதுரை வெளியேறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய முதல் ப்ரோமோவிலும் அவர் இடம்பெறவில்லை. பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளில் பவா செல்லதுரை சற்றே இறுக்கமாக காணப்பட்டாலும், அடுத்தடுத்த நாட்களில் தன்னால் இயன்றவரை மற்ற போட்டியாளர்களிடம் பழக முயற்சித்து வந்தார். அவர் கூறும் கதைகள் பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் மட்டுமின்றி வெளியே இருப்பவர்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை கிளப்பின. மற்ற போட்டியாளர்கள் மத்தியில் அவரது கதைகள் தாக்கத்தை ஏற்படுத்தியதை பார்க்க முடிந்தது.
எனினும் தொடர்ந்து வீட்டிலிருந்து அவரது முகத்துக்கு நேரே மற்ற போட்டியாளர்கள் அவரது குறைகளை சுட்டிக் காட்டுவது, வயது குறித்து பேசுவது உள்ளிட்ட விஷயங்களை அவரால் ஏற்றுக் கொள்ளமுடியாமல் இருந்திருக்கலாம். அதே போல அவர் சொன்ன கதையில் இருந்த முரண்பாடுகள் தொடர்பாக வீட்டில் இருந்த மற்ற போட்டியாளர்கள் சுற்றி வளைத்து தன்னிடம் கேள்வி கேட்டதையும் அவர் ரசித்ததாக தெரியவில்லை. அவரது கதை சொல்லல் முறையில் இருந்த பிழைகளை வார இறுதி எபிசோடில் கமல் மிக இயல்பாக சுட்டிக்காட்டினார்.
அதாவது, பாலச்சந்திரன் சுள்ளிக்காடு கதையை போட்டியாளர்களிடம் சொல்லிய பவா, பாலச்சந்திரன் பெரிய எழுத்தாளர் என்று தெரிந்ததும் அந்த ஊறுகாய் விற்கும் பெண் மன்னிப்புக் கேட்டதாக கூறியிருந்தார். ஆனால், அதை பற்றி கூறிய கமல் அந்த பெண் மன்னிப்பு கேட்டதற்கான உண்மையான காரணத்தை விளக்கினார். அதன் பிறகு ஜெயகாந்தன், கமல் பட விழாவுக்கு வந்த கதையில் இருந்த பிழையையும் கமல் திருத்திக் கூறினார். ஒருவேளை இது கூட பவாவின் மனதை தைத்திருக்கலாம். ஆனாலும் எச்சில் துப்பிய விவகாரத்தில் கமல் மற்றவர்களிடம் கண்டிப்பு காட்டிய அளவு கூட பவாவை கண்டிக்கவில்லை. மிகவும் இயல்பாகவே சுட்டிக்காட்டினார்.
போன சீசனில் இதே போல தன் மகனின் உடல்நிலையை காரணமாக சொல்லி இரண்டே வாரத்தில் ஜி.பி.முத்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார். அதைவிட ஒருபடி மேலாக ஒரே வாரத்தில் வெளியேறியுள்ளார் பவா செல்லதுரை. பவா வெளியேறிவிட்டதால் இந்த வாரம் நாமினேஷன் இருக்குமா அல்லது எவிக்ஷன் அடுத்த வாரம் தள்ளிவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். முதல் வாரத்திலேயே பல ‘கன்டென்ட்டு’களை கொடுத்த பவா செல்லதுரை, பாதியில் வெளியேறியது பிக் பாஸுக்கு மட்டுமல்ல, நமக்கு அதிர்ச்சி கலந்த இழப்புதான்!
முந்தைய அத்தியாயம்: Bigg Boss 7 Analysis 3: விசித்ராவின் அதிகாரமும், ஜோவிகாவின் அறியாமையும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment