Published : 30 Dec 2017 08:17 PM
Last Updated : 30 Dec 2017 08:17 PM
'என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களே!', 'என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களே!'. இந்த வரிகளை ரஜினிக்கு முன்னதாக யாராவது அரசியல் தலைவர்கள் பேசியிருக்கிறார்களா. பேச்சாளர்களோ, எழுத்தாளர்களோ எங்காவது எடுத்தாண்டு உள்ளார்களா? இதை வாசிக்கும் உங்களுக்காவது தெரியுமா? ரஜினியே இந்த வசன கோர்வை வாக்கியத்தை அமைத்துக் கொண்டாரா? அல்லது வேறு யாராவது வசனகர்த்தாக்கள் அவருக்கெனவே எழுதிக் கொடுத்தார்களா என்பது தெரியவில்லை. இந்த வசனத்தை அவர் எப்போது பேச ஆரம்பித்தார் என்பதை அறிவீர்களா?
இதை உங்களிடம் கேட்பது போலவே எனக்குத் தெரிந்த மூத்த ரஜினி ரசிகர்கள் பலரிடம் கேட்டுவிட்டேன். அத்தனை பேருமே உதடு பிதுக்கினார்கள். ஆரம்ப கால அவரது உரைகளை வீடியோ கேசட்டில் போட்டுப் பார்த்து விட்டுச் சொல்கிறேன் என்றும் சிலர் சொன்னார்கள். இந்த விஷயத்தை எதற்காக தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறீர்கள் என பலரும் கேட்டபோது சொன்ன அதே பதிலைத்தான் இங்கேயும் குறிப்பிடுகிறேன்.
ரஜினிக்கு அரசியல் தெரியாது என்கிறார்கள் பலர். ரஜினி அரசியலுக்குள்ளேயே வரவில்லை என்கின்றனர் இன்னமும் பலர். 1996-ம் ஆண்டு தமாகா, திமுகவிற்கு வாய்ஸ் கொடுத்தபோதே அவருக்கான அரசியல் சந்தர்ப்பம் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள் அதை விடப் பெரும்பான்மையோர். எஞ்சியிருக்கிற இன்னமும் சிலர் கூட இந்த கருத்தை ஒட்டியே கருத்தை தெரிவிக்கிறார்கள். அதிலும் அதையொட்டி ரஜினியையும் சமகால அரசியலையும் இணைத்துப் பேசும்போது அது கேலிக்கும், கிண்டலுக்கும், எள்ளலுக்கும், ஏளனத்துக்கும் உள்ளாவது என்பது தொடரும் சாபமாகவே மாறிவிட்டது.
சமூக வலைதளங்களில் ரஜினியின் அரசியல் வாய்ஸிற்காக உலா வந்த மீம்ஸ் போல் வேறு எங்காவது ஒரு நடிகருக்கு வந்திருக்குமா என்பது சந்தேகமே. இந்த நேரத்திலும் ஒற்றை அரசியல் வார்த்தையை ரஜினி உதிர்த்தாலும் ஏராளமான அரசியல் தலைகளின் ஏளனத்திற்கும், நக்கலுக்கும் உள்ளாகிறது. அதுவே பலரும் அவரின் பலவீனமாகப் பார்க்கிறார்கள். அதை ஒரு சிலரே பலமாக பார்க்கிறார்கள். ரசிகர்கள் நிலையில் இல்லாமல் அப்படி தலைகீழ் பார்வையில் பார்ப்பவர்களும் மேற்சொன்னவர்களின் கண்டனத்திற்கும், நகையாடலுக்கும் உள்ளாகிறார்கள் என்பதே யதார்த்தம்.
இந்த இடத்தில் ஒன்று கேட்கத் தோன்றுகிறது. ரஜினி அரசியலுக்கு வரவேண்டுமென்றால் அல்லது அரசியலுக்குள் இருக்கிறார் என்றால், அவர் அரசியலில் தன் நிலைப்பாட்டை சொல்லியே ஆக வேண்டுமா? ஒரு முறை தமாகா-திமுகவிற்கும் வாய்ஸ் கொடுத்துவிட்டு, அடுத்த தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவுக் குரல் கொடுக்கக்கூடாதா? அப்படி ஆதரவுக்குரல் கொடுக்கப்பட்ட கட்சிகள் தேர்தலில் வென்றே தீர வேண்டுமா?
ஒரு முறை வாய்ஸ் கொடுக்கப்பட்ட கட்சி வென்றால் அது ரஜினியின் வெற்றியாகவும், அதே மறுமுறை வாய்ஸ் கொடுத்த கட்சி தோற்றால், அதை ரஜினியின் தோல்வியாகவே கொள்ள வேண்டுமா? மறுபடி தேர்தல் வந்தால் அதில் இந்த இரு அணிகளுக்கும் அல்லாமல் நடுநிலை வகிக்கக் கூடாதா?
உடனே அவர் மாற்று அரசியல் கொள்கையை உருவாக்கி ஜனங்களின் பல்ஸ் பார்த்து புதுக் கட்சியை ஆரம்பித்தே தீர வேண்டுமா? அதற்கு அவர் தலைவராகி தேர்தலை சந்திக்க வேண்டுமா? தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டுமா? அதன் தொடர்ச்சியாக நாட்டை ஆண்டே தீர வேண்டுமா? அதன் பிறகு அரசியலுக்கு முழுக்கு போட்டு விடக்கூடியவர் போல் முன்னரே தெரிந்தால், 'அவர் அரசியலுக்கு வரவே மாட்டார். வந்தாலும் நிற்க மாட்டார்!' என்றெல்லாம் இஷ்டம் போல் ஏற்கெனவே அரசியலில் ஊறி திளைத்த சிகாமணிகள் அறிவுஜீவித்தனமாக கருத்து சொன்னால், அதையும் சகித்துக் கொண்டு ரஜினி அரசியல் பேசினால் அதை கேட்கக்கூடாது. கேட்டாலும் பரவாயில்லை அதைப்பற்றி கருத்து சொல்லக்கூடாதா? கருத்து சொன்னாலும் பரவாயில்லை. அவர் கருத்துக்கு ஏற்ப பாசிட்டிவாக சிந்தித்தே விடக்கூடாதா?
ரஜினி பேசும் பேச்சுகளை ஏதோ ஒரு தெருப்போக்கன் பேசியதாகக் கருத வேண்டுமா? அப்படியே எல்லோரும் போய்விட்டாலும் கூட அதையும் தாண்டி அந்த மனிதர் (ரஜினி) கொஞ்சமும் கூசாமல் மறுபடி அரசியல் வாய்ஸ் உதிர விட்டால் அதை கடுமையாகத் தாக்கித்தான் தீர வேண்டுமா? இதற்கெல்லாம் ஒரே போடாக அந்த மனிதருக்கு அரசியலே தெரியாது என்று ஒரேயடியாக மூடி முத்திரையிட்டு சமாதியாக்கி நகர்ந்து விட வேண்டியதுதானா?
இப்படியான கேள்விகளில் ஒரு பகுதியை மட்டுமே யோசிக்காமல், இன்னொரு எதிர்நிலை பகுதியையும் யோசித்து பதில்களை ஏற்படுத்தி பாருங்கள். எது புரிகிறதோ இல்லையோ? இந்த விஷயத்தில் 'சரி, தவறு; பாசிட்டிவ், நெகட்டிவ்' என வரும் இருவேறு புலன்களிலும் அந்த ஒற்றை மனிதரே ஆதிக்கம் புரிந்திருப்பதை உணர முடியும். அதுதான் ரஜினி. அதை வைத்துத்தான் 'எனக்கு அரசியல் தெரிந்ததால்தான், அதன் ஆழும் தெரிந்ததால்தான் வருவதற்கு யோசிக்கிறேன். தெரியாவிட்டால் ஆகட்டும், ஓகேன்னு போயிட்டே இருந்திருப்பேன்!' என்கிறார்.
நம்முன் இருக்கிற நூல்களிலேயே உன்னத காப்பியம் மகாபாரதம் என்பதை அனைவரும் அறிவோம். அதில் இருக்கும் அரசியல் சூதுவாதுகள், சூழ்ச்சிகளுக்கு நிகராக எந்த ஒரு காவியமும், காப்பியமும் இந்திய சரித்திரத்தில் இல்லை என்பதை பெரும்பான்மையோர் ஒப்புக்கொள்ளவே செய்கிறார்கள். அதில் எத்தனை ஆயிரம் பாத்திரங்கள். துரியோதனாதிபதிகளும், பாண்டவர்களுக்குமான நிலவுடமைப் போரில் இந்த இருதரப்பு ரத்த உறவுகள் மட்டும்தானா போர்க்களத்தில் - அரசியல் களத்தில் நிற்கிறார்கள். மற்ற அதிரர்கள் அத்தனை பேருக்கும் என்ன வேலை? அவர்களைக் கூட நம் வாக்காளர்களாக, தொண்டர்களாக, ரசிக சிகாமணிகளாக கொள்வோம்.
ஆனால் சூதே நிரம்பிய சகுனிக்கும், சூழ்ச்சிகளால் முறியடிக்கும் கண்ணனுக்கும் அங்கே என்னதான் வேலை. அத்தனை பேருக்குள்ளும் பிரம்மாண்ட அரசியல் இயங்குகிறது. அதில் பீஷ்மருக்கான அரசியலில் தொடங்கி, அபிமன்யு, அஸ்வத்தாமன் அரசியல் வரையிலான ஒவ்வொரு பாத்திரங்களை நேசித்துப் பார்க்கிறேன். அதில் நிரம்பும் அரசியல் ததும்பலை தரிசித்து மிரள்கிறேன்.
அதில் ஏதோ ஒரு கண்ணியிலிருந்துதான் சுவாரஸ்யமிக்க ரஜினியின் அரசியலை இங்கே சிந்திக்கத் தொடங்குகிறேன். அவர் அரசியல் கட்சி தொடங்க வேண்டாம். ரசிகர் மன்றங்களை உருவாக்க வேண்டாம். தானே உருவான மன்றங்களையும் கலைக்க வேண்டாம். தேர்தலை சந்திக்க வேண்டாம். கட்சி தொடங்கி, தேர்தலை சந்தித்தாலும் வெற்றியும் பெற வேண்டாம். வெற்றி பெற்றாலும் ஆட்சியில் அமர வேண்டாம். ஆட்சியில் அமர்ந்தாலும், அநியாயமாக அக்கிரமமாக, நேர்மையாக, சத்தியகீர்த்தியாக எப்படி வேண்டுமானாலும் ஆட்சி செய்யட்டும். அதிகாரம் புரியட்டும்.
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று முசோலினியிடமும், ஹிட்லரிடமும் ஜெர்மன், இத்தாலி நாட்டவர்கள் எதிர்பார்த்தார்களா என்ன? இந்திய சுதந்திரத்திற்கு மகாத்மா காந்தி போன்ற தனிமனித ஒழுக்கசீலர் முன்னணியில் நிற்க வேண்டும், பண்டித ஜவஹர்லால் நேரு போன்றவர் பிரதமர் ஆகவேண்டும் என்று நாம் எதிர்பார்த்தோமா என்ன? அவரவர் அவரவர் பாணியில் இயங்கினார்கள். அதை அடியொற்றி சிலர் விருப்பப்பட்டார்கள். சிலரோ அதற்கு எதிர்நிலை எடுத்தார்கள். இன்னும் சிலரோ சுபாஷ் சந்திரபோஸ் போன்ற ஆகப்பெரும் வீரரே தேசத்தின் தலைவராக கொள்ள வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். ஆகப் பெரும்பான்மை என்ன விரும்பியதோ, அதுவே தேர்தலின் தேர்வாக மாறியது.
அப்படிப்பட்ட தனிமனித உன்னதங்களின் செயல்பாடுகளே அவரவரின் வரலாறாக மாறியது. அதில் ஹிட்லர், முசோலினிக்கான இடங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நேரு, காந்திகளுக்கான இருக்கைகளும் நிரம்பித்தான் இருக்கின்றன. அந்த நல்லது கெட்டதுமான அரசியல் வரலாற்றில் எல்லாமே சுவாரஸ்யம் மிக்கதாகத்தானே இருக்கிறது. அதற்காக இவர்களில் ஒருவராகத்தான் அரசியலும், அரசியல்வாதியும் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனம் என கொள்ள வேண்டியிருக்கிறது.
'ரஜினி அரசியலுக்கு வருவார்; வரமாட்டார்; வரக்கூடாது; வந்தாலும் நிற்க மாட்டார்; படுதோல்வி காண்பார்; அவர் உடல்நிலை தாங்காது; 1996 ஆம் ஆண்டுடன் அவரின் செல்வாக்கு போயே போச்சு!' என கமெண்ட் பண்ணுவதில் எல்லாமே அரசியலும் சுவாரஸ்ய வரலாறும் அடங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது. காரணம் இன்றைக்கும் நம் தமிழ் மக்கள் கண்டு களிக்கும் ஆகப்பெரும் ஊடகமான சினிமாத்துறையில் அவர்தான் முன்னணி கதாநாயகன். இன்றைக்கும் ஒரே ஜெயிக்கிற குதிரை. கோடானுகோடி தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகர். அவர் சினிமாவில் நடித்த படம் வெளியாகும்போது, அடித்துப்பிடித்து டிக்கெட் எடுத்து தியேட்டரில் சென்று படம் பார்க்கும் ரசிகனுக்கு, அவரின் அரசியல் நகர்வை கவனிப்பதிலும், அதில் ஆரவாரிப்பதிலும் தனி ஒரு சுகம். எதிர்பார்ப்பு.
- பேசித் தெளிவோம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT