Published : 12 Dec 2017 10:01 AM
Last Updated : 12 Dec 2017 10:01 AM

ஆர்கே நகரில் வாக்காளனாய் இருந்து உய்வேனோ!

செ

ன்னை மாநகரில் உள்ள ராதாகிருஷ்ணன் நகர் சட்ட மன்றத் தொகுதியில் மொத்தம் 59 வேட்பாளர்கள் களத்தில் இருக்கின்றனர். இடைத்தேர்தலுக்கென்றே பிறந்த தொகுதி. ‘ஆர்கே நகரில் வாடகைக்குக்கூட இருக்க முடியாம போச்சே’ என்று என் போன்ற நடுத்தர - ஏழை மக்கள் பிற தொகுதிகளிலிருந்து பொருமுகிற அளவுக்கு யோகமான ஜாதகம் உள்ள தொகுதி! ‘இந்த முறையாவது தேர்தல் நடக்குமா, மறுபடியும் ரத்துசெய்துடுவாங்களா’ என்று யாராவது பேசிக்கொண்டால் தொகுதி மக்களின் மனநிலை, அரக்கு மாளிகையில் பஞ்ச பாண்டவர்கள் இறந்தார்கள் என்ற செய்தியைக் கேட்ட (மகாபாரதத்தில் வியாசர் வர்ணித்த) திருதராஷ்டிரன் மன நிலையைப் போலத்தான் இருக்கிறது. அதாவது முகம் கோபத்தைக் காட்டுகிறது; ரத்து செஞ்சுட்டு மறுபடியும் நடத்தினாதான் என்ன என்று உள்ளூரக் குளிர்கிறது. தேர்தல் நடந்தாலும் நடக்காவிட்டாலும் ‘பட்டுவாடா’ நடக்கிறது அல்லவா?

செலவுக் கண்காணிப்பாளர், தேர்தல் பார்வையாளர் என்று எத்தனை ஐஏஎஸ்களை வேண்டுமானாலும் களத்தில் இறக்குங்கள், வழங்கலும் புழங்கலும் இல்லாமல் போய்விடுமா? சூட்கேஸ் முதல் கோர்ட் கேஸ் முதல் வரை பார்த்தவர்கள் களத்தில் இருக்கும்போது கண் ஜாடை வழியாகவே எல்லாம் கமுக்கமாக முடிந்துவிடாதா? நம்முடைய அமைப்பே எல்லா வசதிகளையும் கொண்டிருப்பதாகத்தான் எனக்குப் படுகிறது. சுயேச்சைகளுக்கான சின்னங்களைப் பாருங்கள், வேட்பாளர்கள் விரும்பினால், வாக்காளர்களுக்கு விநியோகிக்கக்கூடிய அளவில் எப்படியான சின்னங்களையெல்லாம் பார்த்து பார்த்து அல்லது சிந்தித்து சிந்தித்து உருவாக்கியிருக்கிறார்கள்!

மண் பானைலு, மெழுகுவர்த்திலு, விசிலு, பரங்கிக்காய்லு, டார்ச்-லைட்லு, தொப்பிலு, மோதிரம்லு, கேஸ் சிலிண்டர்லு, வாட்டர்-கேன்லு, பலூன்லு, ஒரு ஜோடி செப்புலு, ஹெல்மெட்லு, வெட்டறிவாளுலு, ஹாக்கி பேட்-பந்துலு, சங்கிலிலு, ஒரு பீஸ் வெட்டப்பட்ட கேக்குலு, பேனா நிப்புலு, பிளாஸ்டிக் பக்கெட்டுலு, செஸ் போர்டுலு, பென்சில்-அழி ரப்பருடன் பாக்ஸுலு, பைனாகுலர்லு (தேர்தலுக்குப் பிறகு எம்எல்ஏவைத் தொகுதியில் தேட உதவும்), பெட்டி, சுவரில் துளையிடும் டிரில்லர்லு, கத்தரிக்கோலலு, மாவுத் திரிகை (மெட்றாஸ் பாஷையில் ஏந்திரம்லு), மண்டை பெருத்த டெலிவிஷன்லு, செல்போன் சார்ஜர்லு (கொஞ்சம் செலவழித்தால் தொகுதி நிறைய கொடுக்கலாம் – ரிச்சி தெரு பக்கம்தான்லு), ஹார்மோனியம்லு, கிரிக்கெட் மட்டைலு (கோஷ்டிச் சண்டைக்குப் பயன்படும்), டிபன் கேரியர்லு (சாப்பிடும்போதெல்லாம் வேட்பாளர் நினைவு வரும்), கேரம் போர்டுலு, இஸ்திரிப் பெட்டிலு, கேமராலு, திராட்சைக் கொத்துலு, கப் அண்ட் சாசர்லு, டெலிபோன்லு, டிஷ்-ஆன்டெனாலு, வளையலு, தையல் எந்திரம்லு, கிளாஸ் டம்ப்ளர்லு (காலி கிளாஸ்ல எதாச்சும் ஊத்திக் கொடுங்க சார்), மிக்சி ஜாருலு, உலக உருண்டைலு (பொம்மைதேன்), பிளாக் போர்டுலு, கேஸ் அடுப்புலு, பிரஷர் குக்கர்லு! பணத்தைத் தவிர, இந்த முறை குக்கரும்(!) கிடைக்கலாம் என்று தொகுதிக்குள் பேசிக்கொள்கிறார்கள். கிடைத்தாலும் கிடைக்கும். எதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டும். பிறந்தாலும் ஆர்கே நகர் தொகுதியில் பிறக்க வேண்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x