Last Updated : 28 Dec, 2017 06:11 PM

 

Published : 28 Dec 2017 06:11 PM
Last Updated : 28 Dec 2017 06:11 PM

காலண்டர் புராணம்!

டிசம்பர் மாதம் முடிந்து தொடங்கப் போகிறது ஜனவரி. இது வெறும் ஜனவரியா. புத்தாண்டு. ஆங்கிலப் புத்தாண்டு. ஒருவருடம் முடிந்து அடுத்த வருடம் ஆரம்பம். 2017 முடிவதற்கு இன்னும் இரண்டு மூன்று நாட்களே உள்ளன.

ஒவ்வொரு முறை புத்தாண்டு நெருங்கும் போதும் எண்பதுகள், ஏனோ படபடவென நினைவுகளாய் வந்து பறந்தடிக்கும். இப்போதும் அப்படித்தான்.

அப்போதெல்லாம் காலண்டர் கிடைக்க, டிசம்பரின் தொடக்கத்திலேயே ஆரம்பித்துவிடுவார்கள். தினசரி காலண்டர், மாதக் காலண்டர் என்றிருக்கும். இந்த மாதக் காலண்டரிலும் பல வகைகள் உண்டு. அதாவது ஒரேயொரு சுவாமி படம் போட்டிருப்பார்கள். கீழே ஒவ்வொரு மாதத்தையும் சின்னதாகப் பிரிண்ட் செய்து இணைத்திருப்பார்கள். இன்னொரு காலண்டரில் பனிரெண்டு ஷீட்டுகள். பனிரெண்டு சுவாமி படங்கள். அந்தப் படங்களின் ஓரத்தில், அந்தந்த மாதத் தேதிகள், கிழமைகள், நாள் நட்சத்திரங்கள்! இன்னொரு வகை காலண்டர் உண்டு. வங்கிகளும் கூட்டுறவு வங்கிகளும் கட்டம்கட்டமாகப் போட்டு, சிகப்புக்கலரில் தேதியிட்டிருந்தால் விடுமுறை எனும் அர்த்தத்தை உருவாக்கித் தருவார்கள்.

‘ஏன் இப்படி காலண்டர் காலண்டர்னு பைத்தியமா இருக்கே’ என்று அப்பாவிடம் சண்டையே போட்டிருக்கிறேன். பிள்ளையார், முருகன், வேங்கடாசலபதி, காசைக் கொட்டிக் கொண்டே இருக்கும் மகாலக்ஷ்மி என்று எந்தப் படக் காலண்டரையும் விடமாட்டார். எல்லாக் காலண்டரும் சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும். மின்விசிறிக்கு படபடவென அடித்துக் கொண்டே இருக்கும்.

அப்பா என்றில்லை. அப்போது நிறைய பேர் வீட்டில், இப்படியான காலண்டர்கள்தான் இருக்கும். அதேபோல சலூன்கடைகளுக்கு என்றே சில காலண்டர்கள் எப்படித்தான் கிடைக்கிறதோ என்று பலமுறை யோசித்தது உண்டு. கிட்டத்தட்ட பத்துவருடங்களுக்கு முன்பு வரை, சலூன் கடைகளில் அப்படி இப்படியான படங்கள் கொண்ட காலண்டர்கள் சுவரில் பிரமாண்டம் காட்டி நிற்கும். முடிவெட்டும் அண்ணன்கள், அடிக்கடி வெட்டுபவரைப் பார்த்து, ‘சும்மா அண்ணாந்து அண்ணாந்து பாத்துக்கிட்டிருந்தா எப்படி வெட்டுறது ஓய்’ என்பார்கள். வாயை மூடிக்கொண்டு சிரிப்பார்கள் பலரும்.

பிறகு அப்போது வந்த பாம்பே டையிங் காலண்டர் கவிதை மாதிரி இருக்கும். கவிதை என்றால் கவிதை அல்ல. ஸ்ரீதேவி, பானுப்ரியா முதலான இன்னும் பல நடிகைகள், கம்பீரமாகவும் களையாகவும் கவுரமான ‘போஸ்’களுடன் அரை ஆள் உயரத்துக்கு இருக்கும். ஆனாலும் அந்த ‘அப்படி இப்படி’யான படங்களுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. நல்லவேளையாக, இப்போது சலூன்கடைகளில் அந்தக் காலண்டர்கள் மாட்டுவது இல்லை (அதான் எல்லாமே நெட்ல, செல்லுல கிடைச்சிருதே என்கிறார் சலூன் கடை அண்ணன்).

போன வருஷம் கொடுத்தீங்களே. குழலூதும் கிருஷ்ணர். இந்த முறை திருச்செந்தூர் முருகன் கொடுங்க அண்ணாச்சி என்று காலண்டருக்கும் அது என்ன படமாக இருக்கவேண்டும் என்பதற்குமாக ஆர்டர் செய்த வாடிக்கையாளர்களின் வம்சத்தினர், இன்றைக்கு புத்தாண்டு ஆஃபர் பேப்பர்களுடன் ஹைடெக் சூப்பர் மார்க்கெட்டில் இருந்து பரிதாபமாக வருகிறார்கள்.

அப்பாவிடம் இன்னொரு விஷயம். அங்கே இங்கே என்று எல்லா இடங்களிலும் காலண்டர் கேட்டு மாட்டிவைத்திருப்பார் இல்லையா. இந்தக் காலண்டர் படையெடுப்பு பிப்ரவரி, மார்ச் வரை தொடரும். வருஷக் கடைசியில் பார்த்தால், பீரோவின் மேல்பகுதி, பரண், ஷெல்ப்பின் இடுக்குப் பகுதி என்றெல்லாம் பயன்படுத்தாமல் ஜனவரி 1ம் தேதி காட்டியபடி பல்லிளிக்கும் காலண்டர்கள் பல இருக்கும். ‘சாமி படமா.. அதான் தூக்கிப் போடவும் மனசில்ல. யாருக்கும் கொடுக்கவும் மனசில்ல’ என்று செண்டிமெண்ட் பேசுவார்.

இதில் கொசுறு செய்தி... விவேகானந்தர் காலண்டர் தெரியுமா உங்களுக்கு. காலண்டருக்கு என உள்ள சைஸையே மாற்றிப் போட்ட தினசரி காலண்டர். அகலம் சிறுசு. உயரம் பெருசு. கம்பீரமாய் கைகட்டி நிற்பார் விவேகானந்தர். இந்தக் காலண்டரை வருடம் தவறாமல் காசு கொடுத்து வாங்கிவிடுவார் அப்பா.

இப்போது, சைக்கிள் கடை தொடங்கி சலூன் கடை வரை அவர்களே தங்கள் கடையின் பெயர் போட்டு, காலண்டர் அடித்துக் கொடுக்கிறார்கள். புத்தகக் கடை அண்ணன் வருடா வருடம் காலண்டர் கொடுத்துவிடுவார். கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் தம்பி, வாட்டர் கேன் சப்ளை யர்ஸ், போர்வெல்ஸ் அண்ணன், அடகுக் கடை சேட்டு, லோக்கல் ஜவுளிக்கடைக்காரர், மெஸ் நடத்தும் நாராயணன் அண்ணா, பழக்கடை வைத்திருக்கும் விருதுநகர் அண்ணாச்சி என காலண்டர்களுக்கு இப்போது பஞ்சமே இல்லை. காலண்டர்களில், தினமும் நல்ல நல்ல வாசகங்கள் இடம் பெறும். அத்துடன் ரிஷபம் - பணம், மிதுனம் - செல்வம் என்று பாஸிட்டீவ்வாகவே சொல்லியிருக்கிற விதமும் பாராட்டத் தக்கது .

இன்னொரு விஷயம்... தினசரி காலண்டரின் பின்பக்கத்தை, இந்த 365 நாளில் எத்தனை முறை திருப்பிப் பார்த்தீர்கள். அரசு விடுமுறை நாட்கள், முகூர்த்த நாட்கள், கரிநாள், நியூமராலஜி நம்பர்... என பலதும் இருக்கும். அதை எவரும் கவனிப்பதே இல்லை என்பதை காலண்டர் தயாரிப்பாளர்கள் கவனிக்கவும்.

‘அந்தக் கடைப் பக்கம் போகவேணாம். இந்தா காலண்டர்னு கொடுத்துருவான்’ என்று பயந்து பம்மி அடுத்த தெரு வழியே எஸ்கேப் ஆகிச் செல்லும் அளவுக்கு காலண்டர்களின் பெருக்கம் அதிகரித்துவிட்டன.

போதாக்குறைக்கு, லோக்கல் வட்டம், சதுரச் செயலாளர்கள் தன் தலைவர்களின் படங்களைப் போட்டு, கீழே கைகூப்பிய தன்னுடைய படத்தையும் போட்டு, டெய்லி காலண்டர் தருவார்கள். அதுவும் எப்படி. வீடுவீடாக வந்து தருவார்கள். இவர்களின் நூதனப் பிரச்சாரத்திலும் ஐக்கியமாகி விட்டது காலண்டர்.

‘முன்னாடிலாம் காலண்டரை ஆணியடிச்சு மாட்டிவைப்போம். இப்ப ஆணியெல்லாம் அடிக்கக் கூடாதுன்னு ஹவுஸ் ஓணருங்க பெருந்தொல்லை பண்றாங்க. அதனால காலண்டர் சும்மா பேருக்கு ஒண்ணு வைச்சிக்கிட்டு, அக்கம்பக்கத்துல கொடுத்துடுறது’ என்கிறார்கள் காலண்டர் தானம் செய்யும் கர்ணப் பிரபுக்கள்.

‘தேதியை காலண்டர்லதான் பாக்கணும்னு இருந்த காலமெல்லாம் போச்சுங்க. செல்போன்ல தேதி தெரியுது. கிழமை தெரியுது. டைம் தெரியுது. அதனால காலண்டர் சும்மா செவனேன்னு தொங்கிட்டிருக்கும். கடிகாரம் தேமேனு மாட்டிவைச்சிருக்கோம். காலம் ரொம்பவே மாறிருச்சுங்க’ என்கிறார்கள் பலரும்!

எது மாறினால் என்ன... காலண்டர் கனவுகள் சுவாரஸ்யமானவை. காலண்டர் கிடைத்தவர்களுக்கும் இனி கையில் பெறப்போகிறவர்களுக்கும் காலண்டரை தயாரித்து, நிறைய பேருக்கு வழங்குகிற காலத்துக்கேற்ற பரிசு தருவோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்!

இன்னும் நிறைய எழுதலாம்தான். நண்பர் ஒருவர், ஆலிலைக் கிருஷ்ணர் காலண்டர் தருகிறேன், வா என்று அழைத்ததால் அடுத்த 2018 டிசம்பரில் இன்னும் எழுதுகிறேன் காலண்டர் புராணத்தை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x