Published : 19 Dec 2017 04:04 PM
Last Updated : 19 Dec 2017 04:04 PM
இடது கைப் பழக்கமுடைய 4 வயது மகளுக்காக மும்பை தாய் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இடது கையில் சீவும் வகையிலான ஷார்ப்னரைத் தயாரித்து, இந்துஸ்தான் பென்சில் நிறுவனம் இணையவாசிகளின் மனதில் இடம்பிடித்திருக்கிறது.
இடது கைப் பழக்கம் உடையவர்கள் திறமைசாலிகள், வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவர்கள் என்று பல்வேறு ஆய்வு முடிவுகள் நிரூபித்துள்ளன. ஆனால் இன்னும் நம் சமூகம் இடது கையாளர்களை வித்தியாசமான கண்ணோட்டத்தில்தான் பார்க்கிறது. இதனால் ஏராளமான பெற்றோர் தங்கள் குழந்தைகளின் இடது கை பழக்கத்தை மாற்ற முயன்று, அதில் வெற்றியும் கண்டிருக்கின்றனர்.
ஆனால் இதில் இருந்து முற்றிலும் மாறுபட்டார் ஸ்வேதா சிங். மும்பையைச் சேர்ந்த இவர், 4 வயதுச் சிறுமியின் தாய். தன் மகளின் இடது கை பழக்கத்தால் அவர் பலவகைகளில் சிரமப்படுவதைக் கண்டிருக்கிறார்.
குறிப்பாக பள்ளியில் தன் மகள் இடது கையால் பென்சில் சீவ முடியாமல் அவதிப்படுவதைக் கண்டார் ஸ்வேதா. மகளுக்கு ஏற்றவகையில் ஷார்ப்னரைத் தேடிய அவருக்கு, கடைகளில் வலது கை பழக்கம் கொண்டவர்களுக்கு மட்டுமே ஷார்ப்னர்கள் இருந்தது தெரியவந்தது. ஆன்லைனில் தேடியபோது இடது கைக்காரர்களுக்கான ஷார்ப்னரின் விலை சுமார் ரூ.700 முதல் ரூ.1,200 வரை இருந்தது.
என்ன செய்யலாம் என்று யோசித்தார் ஸ்வேதா. முன்னணி பென்சில், ஷார்ப்னர் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் பென்சில் நிறுவனத்துக்கு ஒரு கடிதம் எழுதினார்.
ஷார்ப்னரை அனுப்பி இதயத்தை வென்ற நிறுவனம்
இந்துஸ்தான் நிறுவனம் உடனே ஸ்வேதாவை அழைத்து, உதவிசெய்வதாய் உறுதியளித்தது. ஒரு வாரத்துக்கு உள்ளாக அவருக்கு ஒரு கடிதமும் 5 பென்சில் சீவிகளும் அனுப்பப்பட்டன. கடிதத்தில், இந்துஸ்தான் நிறுவனத்தின் ஆர்&டி பிரிவு ஸ்வேதாவின் மகளுக்கென இடது கை ஷார்ப்னரைத் தனியாகத் தயாரித்ததாகக் கூறப்பட்டிருந்தது.
இதுகுறித்து ஸ்வேதா சிங் தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதியிருந்தார். அப்பதிவுக்கும் இந்துஸ்தான் நிறுவனத்துக்கும் இணையத்தில் பாராட்டுகள் குவிந்துவருகின்றன. ஏராளமானோர் அப்பதிவை லைக்கிட்டும் பகிர்ந்தும் வருகின்றனர்.
பதிவுக்கான இணைப்பு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT