Last Updated : 07 Dec, 2017 12:14 PM

 

Published : 07 Dec 2017 12:14 PM
Last Updated : 07 Dec 2017 12:14 PM

சோ’ எனும் ஒற்றை எழுத்து ஆச்சரியம்!

சினிமாவில் இருந்துகொண்டு, பத்திரிகைக்கு வருவது என்பது லேசுப்பட்ட காரியம் அல்ல. அப்படியே பத்திரிகை நடத்த வந்தாலும் அதை வெற்றிகரமாக நடத்துவது என்பது அத்தனை சுலபமும் அல்ல. ஆனால் அங்கே வெற்றிக்கொடி நாட்டியவர் சோ.

இன்னொரு விஷயம்... சுதந்திரப் போராட்ட காலத்தில், ஆங்கிலேயர்கள் காலத்தில், அவர்களை எதிர்க்கவும் நாட்டுவிடுதலை உணர்வை மக்களிடையே விதைக்கவும் பத்திரிகைகள் மிகப்பெரிய ஊக்க சக்தியாகத் திகழ்ந்தன. கிட்டத்தட்ட, அந்தப் பத்திரிகை வாயிலாகத்தான் மக்கள் எழுச்சி அடைந்தார்கள். சுதந்திரத்துக்காகப் போராடினார்கள். இன்றைக்கு அரசியல், புலனாய்வுப் பத்திரிகைகள் அதிகரித்திருக்கின்றன. ஆனால் அரசியலையும் அரசியல்வாதிகளையும் கேலியும் கிண்டலுமாக, நக்கலும் நையாண்டியுமாகச் சொல்வதற்காகவே பத்திரிகையை நடத்தி, அதில் தனித்த அடையாளத்துடன் ஜெயிக்கவும் செய்தவர் துக்ளக் சோ.

சினிமாவில் காமெடி நடிகர்தான் சோ. ஆனால் பத்திரிகை உலகில், அரசியல்வாதிகளுக்கு வில்லனாகவே திகழ்ந்தார். ஒருகட்டத்தில், மக்களின் பிம்பமாக, உணர்வாக இருந்து இவர் எதிர்த்த தருணங்களில், ஹீரோவாகவே ஒளிர்ந்தார்.

சோ நடித்த காலகட்டத்தில் வலம்வந்த நகைச்சுவை நடிகர்ளுக்கு இருந்த மார்க்கெட்டோ,  அவர்கள் தந்த சூப்பர் ஹிட் காமெடியோ சோ கொடுத்ததில்லைதான். ஆனால் தன் எழுத்தால், திரைக்கதையால், கதையால், நாடகத்திலும் சினிமாவிலும் சிறந்துவிளங்கினார். தவிர, கோழிமுட்டைக் கண்களைக் கொண்டு இவர் பார்ப்பதே காமெடியாயிற்று.

காங்கிரஸை எதிர்ப்பார். திடீரென ஜனதாவின் பக்கம் செல்வார். தமிழகத்தில், கருணாநிதியை கிழிகிழியெனக் கிழிப்பார். ஒருகட்டத்தில், எம்.ஜி.ஆரை கேலி செய்வார். இந்திராகாந்தியை எதிர்த்தாலும் இந்தியை ஆதரித்தார். இந்துத்வாவை ஆதரித்தார். இந்து மத பாரம்பரியங்கள் குறித்தும் மகாபாரதம் குறித்தும் நூல்கள் எழுதினார்.

பத்திரிகை உலகில், தமிழ்வாணன் கேள்வி பதில்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. அதையடுத்து அந்தப் பெருமையை தட்டிக் கொண்டவர் சோ. நான்கைந்து பக்கத்துக்கு கேள்வி பதில் இருக்கும். ஒவ்வொரு கேள்வியிலும் நக்கலும் நகைச்சுவையும் இருக்கும். கிண்டலும் நையாண்டியும் பண்ணுவதில் சூரன்.

அதேசமயம், எதிர்பாராத கேள்விக்கும் எவரும் யோசிக்கவே யோசிக்காத பதில்களைத் தந்து மொத்த பேரையும் தன்பக்கம் திருப்புவதில் சாமர்த்தியக்காரர். ஒருமுறை, 'திருமுருக கிருபானந்த வாரியார் வெளிநாட்டில் பிறந்திருந்தால்...?’ எனும் கேள்வியை வாசகர் ஒருவர் கேட்டிருந்தார். இதற்கு என்ன பதில் சொன்னார் தெரியுமா... ‘ஒண்ணும் ஆகியிருக்காது. வெளிநாட்டில் பிறந்திருந்தால், இத்தனை ஞானநூல்கள் அவருக்குக் கிடைத்திருக்காதே!’ என்று பதிலளித்தார்.

துக்ளக் பத்திரிகை வாங்கியவர்கள், தொடர்ந்து வாங்குபவர்களாகவே, படிப்பவர்களாகவே இருந்தார்கள் என்பதுதான் சோ அடைந்த வெற்றி. ஆனால் இதில் ஆச்சரியம்... ‘துக்ளக் பாத்தீங்களா. சோ பளிச்சுன்னு அடிச்சாரு பாத்தீங்களா. செம தில்லுக்காரருங்க’ என்று ஒவ்வொரு பதிலையும் சிலாகித்து சிலாகித்துப் படித்தார்கள்.

அதேசமயம், ஜெயலலிதாவுடன் நட்பு பாராட்டியவர், திடீரென விலகி திமுக., - தமாகா என கூட்டணி அமைக்கவும் அந்தக் கட்சிகளுக்கு ரஜினி வாய்ஸ் கொடுக்கவும் செய்ததில் முக்கியப் பங்கு வகித்தார். அந்தத் தேர்தலில், திமுகவை ஆட்சியில் அமர்த்தினார்கள் மக்கள். தமாகாவை ஏற்றுக் கொண்டார்கள். ரஜினியைப் புகழ்ந்தார்கள். ஆனால் ஏனோ தெரியவில்லை... சோவுக்கான அங்கீகாரத்தை மட்டும் தரவே இல்லை.

அதையடுத்து வந்த ஜெயலலிதா ஆட்சியில் என்னென்னவோ நடந்தன. சசிகலா வகையறாக்கள் கோலோச்சின. அவர்களின் ராஜ்ஜியங்கள், மிடாஸில் தொடங்கி, ஜாஸ் சினிமாஸ் வரை நீண்டன. இவற்றிலெல்லாம் சோவும் பங்குதாரர் என்பதாக வந்த செய்திகளை ரசிக்கமுடியவில்லை.

‘ஜெயலலிதாவுக்கு ரொம்பவே நெருக்கமானவர் சோ. ரெண்டுபேரும் ஒரே ஆஸ்பத்திரில கடைசிகாலத்துல இருந்தாங்க. ஜெயலலிதா இறந்ததாச் சொல்லப்படுற டிசம்பர் 5-ம் தேதியும் அவரை அடக்கம் செய்த 6-ம் தேதியும் மறக்கவே முடியாத சோகங்கள். அடுத்த நாளான 7-ம் தேதி சோ மரணச் செய்தி; துக்கம்!

‘சோ’ எனும் ஒற்றைவரிப் பெயரைக் கொண்டு மக்கள் மனதில் நின்ற வசீகரம், தன் மொட்டைத் தலையை மைனஸாக நினைக்காமல், பிளஸ்ஸாக்கிக் காட்டிய தைரியம், பழக்கமானவர்கள் நிறையபேர் விட்டாலும் கூட, கடைசிவரை விடாத அந்த ‘பைப்’ ஸ்மோக்கிங், பச்சைக்கலரில், ராணுவ ஸ்டைலில், அவர் எடையையும் தாண்டிய கெட்டியான, வெயிட்டான சஃபாரி டிரஸ், பழசை மறக்காமல் நாடக நண்பர்களுடன் தொடர்பு, ஏரியா கவுன்சிலர் தொடங்கி தலைநகர் டெல்லி வரைக்கும் பரவியிருக்கிற அரசியல் தொடர்புகள்,.. என சோ செய்து காட்டிய விஷயங்கள் எல்லாமே... ஸோ ஸ்வீட் ரகங்கள். அதிரிபுதிரி சரவெடிகள்!

'பத்திரிகை தொடங்கலாம் என்றிருக்கிறேன். தொடங்கட்டுமா, வேண்டாமா' என்பதை பத்திரிகையின் முதல்பக்கத்தில் விளம்பரம் போட்டு, மக்களின் மனதை 'பல்ஸ்' பிடித்துப் பார்த்து அரங்கேற்றினார், துக்ளக் பத்திரிகையை!

ஆனால் 'போய் வரட்டுமா' என்று கேட்காமலேயே சென்றுவிட்டாரே என்று ஏங்கித் தவிக்கிறார்கள் துக்ளக் வாசகர்கள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x