Published : 07 Nov 2016 09:58 AM
Last Updated : 07 Nov 2016 09:58 AM

கமல்ஹாசன் 10

பிரபல நடிகர், இயக்குநர்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், திரைக்கதை ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர், நடன அமைப்பாளர் என பன்முகப் பரிமாணம் கொண்ட சாதனை நாயகன் கமல்ஹாசன் (Kamal Haasan) பிறந்தநாள் இன்று (நவம்பர் 7). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் (1954) பிறந்தவர். தந்தை வழக்கறிஞர். தாயின் சிகிச்சைக்காக குடும்பம் சென்னை வந்தது. பரமக்குடி, சென்னை சாந்தோம் பள்ளிகளில் படித்தார். சிறு வயது முதலே சினிமாவில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார்.

* ‘களத்தூர் கண்ணம்மா’ திரைப்படம் மூலம் 1960-ல் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். முதல் படத்திலேயே திரையுலகை திரும்பிப் பார்க்க வைத்தார். பல படங்களில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்களுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

* இவரது கலை ஆர்வத்தை உணர்ந்த பெற்றோர், இவரை டி.கே.ஷண்முகம் நாடக சபாவில் சேர்த்தனர். அங்கு நடிப்புடன் நடனமும் கற்றார். 7 ஆண்டுகளுக்குப் பிறகு, தொழில்நுட்பக் கலைஞராக சினிமாவுக்குள் மீண்டும் நுழைய இருந்த இவருக்கு 1970-ல் ‘மாணவன்’ என்ற படத்தில் சிறு வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

* துணை இயக்குநராகவும் பணியாற்றினார். தொடர்ந்து சிறு வேடங்களில் நடித்தார். 1973-ல் வெளிவந்த கே.பாலசந்தரின் ‘அரங்கேற்றம்’, ‘அவள் ஒரு தொடர்கதை’ ஆகிய படங்கள் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தன. ‘கன்னியாகுமரி’ என்ற மலையாளத் திரைப்படம் மூலம் கதாநாயகன் அந்தஸ்து பெற்றார். தமிழில் ‘அபூர்வ ராகங்கள்’ மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

* 1977-ல் ‘கோகிலா’ என்ற கன்னடப் படம், ‘கவிதா’ என்ற பெங்காலி படத்தில் நடித்தார். பாலசந்தரின் ‘மரோசரித்ரா’ மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் நடித்து தென்னிந்தியா முழுவதும் புகழ்பெற்றார். ‘ஏக் துஜே கேலியே’ மூலம் இந்தியிலும் தடம்பதித்து நாடு முழுவதும் பிரபலமானார்.

* பார்வை இழந்தவராக முத்திரை பதித்த ‘ராஜபார்வை’, இவரது 100-வது படம். இதில் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார். ராஜ்கமல் என்ற திரைப்பட நிறுவனத்தை தொடங்கினார்.

* எந்தக் கதாபாத்திரத்துக்கும் பொருத்தமானவராக, அனைத்து முகபாவங்களையும் அநாயாசமாக வெளிப்படுத்தும் அசாதாரணத் திறன் படைத்தவர். இவருக்கு நகைச்சுவையும் கைவந்த கலை. நடிப்பு, கதாபாத்திரம் என்று வந்துவிட்டால், இமேஜ் பற்றி கவலைப்படமாட்டார்.

* பல மொழிகளில் ஏறக்குறைய 70 பாடல்கள் பாடியுள்ளார். இவர் நடித்த 6 திரைப்படங்கள் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டன. இவர் 10 வேடங்களில் நடித்த ‘தசாவதாரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலைக் குவித்தது. ‘நந்தி’ உட்பட 4 விருதுகளையும் பெற்றுத் தந்தது.

* சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது உட்பட மொத்தம் 5 முறை தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மபூஷண், பிரெஞ்ச் அரசின் ‘செவாலியே’ விருது, 19 முறை ஃபிலிம்ஃபேர் விருதுகள், மத்திய அரசின் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ என ஏராளமான விருதுகள் பெற்றவர்.

* 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது தனது ‘சபாஷ் நாயுடு’, ‘விஸ்வரூபம்-2’ படங்களுக்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரையுலகில் தனி இடத்தை தக்கவைத்துள்ள ‘உலக நாயகன்’ எனப் போற்றப்படும் கமல்ஹாசன் இன்று 63-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x