Published : 04 Nov 2017 06:06 PM
Last Updated : 04 Nov 2017 06:06 PM
திருநெல்வேலி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் ஆண்டு முழுவதும் திருவிழாக்கள் நடந்தாலும், தேர் திருவிழாவும், ஐப்பசி திருக்கல்யாணமும் முக்கியமானவை.
மக்கள் அதிகஅளவில் கூடும் இந்த விழாக்கள் நெல்லையின் தனித்துவம் வாய்ந்தவை.
ஐப்பசி திருக்கல்யாணம் கொடியேற்றத்துடன் தற்போது துவங்கியுள்ளது. 14-ம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதற்கு முந்தைய நாள் 13-ம் தேதி காட்சி மண்டபத்தில் விழா நடக்கும்.
இந்த விழா நடக்கும் காட்சி மண்பமும், அதையொட்டிய கம்பா நதியும் நெல்லைவாசிகளின் உணர்வோடு கலந்து போனவை. இவை நெல்லையின் அடையாளங்கள்.
நெல்லையில் இருந்து பேட்டை செல்லும் சாலையில் இவை அமைந்துள்ளன. அந்த காலத்து சிமெண்ட் சாலையில் அடுத்தடுத்து இரண்டு கல் மண்டபங்கள் வித்தியாசமான முறையில் அமைந்திருக்கின்றன. அதையொட்டியே சிறிது தூரத்தில் கம்பா நதியும், மண்டபமும் அமைந்துள்ளன.
இந்த இடத்தில்தான் ஐப்பசி திருக்கல்யாண நிகழ்வின் முக்கிய நிகழ்ச்சியான காந்திமதி அம்பாள் தவக்கோல நிகழ்வும், அவருக்கு நெல்லையப்பர் காட்சி தரும் நிகழ்வும் ஆண்டுதோறும் நடைபெறுகின்றன.
சுவாமியும் அம்பாளும் ஆளுக்கொரு மண்டபத்தில் எழுந்தருள காட்சி தரும் நிகழ்வு நடைபெறுகிறது. முன்னதாக கம்பா நதி மண்டபத்தில் காந்திமதி அம்மை எழுந்தருளியவுடன், கம்பா நதியில் நீராடலும் நடைபெறும்.
அம்மை காந்திமதி தவக்கோலத்தில் எழுந்தருளும் மண்டபத்திற்கு எதிரே இருக்கும் சிறிய குளத்தை கம்பா நதி என நெல்லைவாசிகள் அழைக்கின்றனர். எப்போதும் வறண்டு இருக்கும் இந்த நீர்நிலை ஐப்பசி திருக்கல்யாண நேரத்தில் நீர் நிரப்பப்பட்டு நீராடுவது வழக்கம்.
திருக்கல்யாண நேரத்தில் மட்டுமே மண்டபம் அருகே உள்ள கோவில் திறக்கப்பட்டு திருவிழா நடைபெறும். கம்பா நதியும் உள்ளே இருப்பதால் மற்ற நாட்களில் அங்கு செல்ல வாய்ப்பில்லை.
நதி என்று அதைக் கூறினாலும் ஓடும் நீர் தானே நதி? பிறகு குளம் போல கட்டி நிற்கும் நீரை எப்படி நதி என அழைக்கிறார்கள். முன்பு இங்கு கம்பா நதி என ஒரு நதி ஓடியதாகவும், நெல்லையை செழிப்படையச் செய்யும் தாமிரபரணியின் துணை நதியாக இருந்ததாகவும் செவி வழிச் செய்திகள் கூறுகின்றன.
பிற்காலத்தில் ஆறு மறைந்து விட்டது. அந்த இடத்தில் கம்பா நதியின் நினைவாக தண்ணீர் நிரப்பி கம்பா நதியாக கருதி திருவிழா நடத்தப்படுகிறது இவை ஆன்மீக ரீதியான தகவல்கள்தான். ஆனால் வரலாற்று ரீதியாக இங்கு கம்பா நதி ஓடியதற்கான எந்த ஒரு சான்றும் இதுவரை இல்லை. இதுபற்றிய ஆராய்ச்சி எதுவும் நடைபெறவில்லை..
நெல்லையைச் சுற்றி எத்தனையோ வரலாற்று ஆய்வுகள் நடக்கின்றன. ஆனால் கம்பா நதியை பற்றி ஆய்வுகள் நடைபெறவில்லை. அதனால் இன்னமும் அது புராண நதியாகவே உள்ளது. ஆனால் நெல்லைவாசிகளின் மனதில் இருந்து காட்சி மண்டபமும், கம்பா நதியும் நீங்கா இடம் பெற்றுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT