Published : 13 Nov 2017 05:31 PM
Last Updated : 13 Nov 2017 05:31 PM
''அந்தப் படத்துல கதையே இல்லப்பா என்பார்கள்.'' அப்படி சொன்னாலும்கூட அப்படம் உருவாக ஒரு திரைக்கதை தேவையிருக்கிறது. அத்திரைக்கதை உருவாக நிச்சயம் கதை என்று சிறியளவிலேனும் ஒன்றாவது இருக்கும். ஹாலிவுட்டின் பிரமாண்ட திரைக்காவியமான 'டென் கமாண்ட்மென்ட்ஸ்' என்ற திரைப்படத்தின் மூலக்கதை பைபிளின் மோசஸ் பற்றிய பகுதியில் இருந்த இரண்டு வரிகளிலிருந்தே உருவானது.
இப்படி கதை உருவாக எதுவேண்டுமானாலும் உந்துதலாயிருக்கலாம். ஆனால் அதற்கும் ஒரு முழுமையான கதை வடிவம் வேண்டியிருக்கிறது. அதற்காக திரைப்பட இயக்குநர் தேடல் மிக்கவராக இருக்க வேண்டும். மோசசின் டென் கமாண்ட்மென்ட்ஸ் உருவாக்கவும் ஒரு கதை வேண்டும்.
அதை முழுமையான கதையில் வடிக்க இரண்டு நாவல்கள் உதவியாக இருந்தன. அதற்காக டோரதி கிளார்க்கே வில்சன், ஜே.எச்.இன்கிரஹாம் ஆகியோரின் இரண்டு முக்கியமான நாவல்களை எடுத்துக்கொண்டு தன்னளவில் ஒரு முழுமையான கதை வடிவத்தை இயக்குநர் செசில் பி.டிமில்லே உருவாக்கியிருப்பார்.
எதற்கு இந்த பீடிகை என்றால் இக்காலத்தில் இப்போது வெளியாகும் படங்களில் 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' என்று போட்டுக் கொள்வதையே தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் பெரிதும் விரும்புவது போலத் தெரிகிறது. திரைப்படத்திற்கு அடிப்படையான கதை அவர்களுடையது இல்லை என்றாலும்கூட அது யாருடைய கதையையோ தன்னுடைய பெயரில் போட்டுக்கொள்வதும் சினிமா துறையில் சகஜமாக இருக்கிறது.
இந்த சகஜம் என்பது பலருக்கு வலியைத் தரக்கூடியது. ஏனெனில் ஒரு கதையை எழுதவோ, உருவாக்கவோ அந்தக் கதாசிரியன் அதற்காக கடுமையாக உழைத்திருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையில் அதை தன்னுடையதாக்கி தன் பெயரைப் போட்டுக்கொண்டு கதை, திரைக்கதை வசனம், இயக்கம் என்ற நான்கு வகையான உழைப்பையும் தன்னுடைய உழைப்பு என்ற வகையில் போலியாக வெளிப்படுத்தும் வகையில் இப்போதுள்ள சில தமிழ்த்திரைப்பட இயக்குநர்கள் செயல்பட்டு வருகிறார்கள்.
ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. 'ரஷோமான்' என்ற திரைப்படம் உலக அளவில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கிக்கொண்டிருந்த காலம் அது. அப்படத்தை தமிழில் அப்படத்தின் உள்ளடக்கமாகவே தரமுடியாவிட்டாலும் அப்படத்தின் அவுட்லைன் வடிவத்தையாவது தமிழில் தந்தால் நன்றாயிருக்கும் என்று தோன்றியது தமிழின் முக்கிய ஆளுமையான இயக்குநர் எஸ்.பாலச்சந்தருக்கு (வீணை எஸ்.பாலச்சந்தரேதான்). அதுவே நடிகர்திலகம் நடிக்க 'அந்தநாள்' என்ற பெயரில் உருவானது. இதற்காக 'ரஷோமான்' படத்தின் இயக்குநர் அகிரா குரோசோவிடம் ஜப்பானுக்கு நேரடியாக சென்று அனுமதி பெற்று திரும்பிவர படத் தயாரிப்பாளர் ஏவி மெய்யப்ப செட்டியார் இயக்குநர் பாலச்சந்தருக்கு உதவினார்.
இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் இரு படங்களையும் பார்த்தவர்களுக்குத் தெரியும் ஜப்பானிய 'ரஷோமான்' படத்திற்கும் தமிழின் 'அந்தநாள்' திரைப்படத்திற்கும் ஒரு கொலையை அடிப்படையாக வைக்கப்பட்டுள்ளதைத் தவிர, காட்சியோ கதையோ பெரிய ஒற்றுமைகளைக் கொண்டிருக்கவில்லை என்பது. ஒரே ஒரு ஒற்றுமை கொலைகாரன் யார் என்பதுதான் கேள்வி. இரு படத்திலும் ஒருவர் கொலை செய்யப்படுகிறார். இரு படத்திலும் கொலைக்கு சம்பந்தப்பட்டவர்கள் அழைத்து விசாரிக்கப்படுகிறார்கள்.
ஜப்பானிய ரஷோமான் படம் கொலைச் சம்பவத்தை யொட்டி தத்துவார்த்த பின்னலை முன்வைக்கிறது. அதாவது இந்த உலகத்தில் உண்மை என்று எதுவும் இல்லை. அது பார்க்கும் பார்வையிலிருந்து சொல்லப்படுவது. தமிழ்ப் படமான அந்த நாளும் கொலைகாரன் யார் என்ற கேள்வி முன்வைக்கிறது. இப்படத்தின் நாயகனான சிவாஜிகணேசன் படத்தின் ஆரம்பத்திலேயே கொலை செய்யப்படுகிறார். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என அவருடன் சம்பந்தப்பட்டவர்களையெல்லாம் சந்தித்து விசாரணை நடத்துகிறார் விசாரணை அதிகாரி. ஆனால் இது தத்துவார்த்த பின்னல் அல்ல. உண்மை என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது மறைந்திருக்கிறது. அதை மிக கவனமாக துப்பறிந்து விசாரித்து கண்டுபிடிக்க வேண்டும். இதைக் கண்டுபிடிப்பவர் ஜாவர் சீத்தாராமன். இவர்தான் 'அந்தநாள்' படத்திற்கு தேவையான முழுமையான கதைவடிவத்தை உருவாக்கியவர். அதை வீணை எஸ்.பாலச்சந்தர் மிகச்சிறப்பாக இயக்கியிருப்பார். டைட்டில் கார்டில் டைரக்ஷ்ன் எஸ்.பாலச்சந்தர் என்று போட்டிருப்பார்கள்.
கதையும் அகிரோவுடையது அல்ல. திரைக்கதையும் அவருடையது அல்ல. வசனமும் அவருடையது அல்ல. இயக்கமும் அவருடையது அல்ல. வேறு எதற்காக ஜப்பானுக்கு செலவு செய்து அந்த இயக்குநரிடம் அனுமதி பெற்று வரவேண்டும். வந்திருக்கிறார்கள்? ரஷோமானை தழுவி எடுக்கப்படுகிறது. அதற்குரிய அனுமதி பெற வேண்டும் என்பதுதான் அது. தழுவல் என்பதற்கு கூட அனுமதி. அக்கால தமிழ் திரையுலகத்தின் நேர்மை இது. 'ஜேன் அயர்' நாவல் பல்வேறு வடிவங்களில் திரைப்படமாக வந்துள்ளது. இது தமிழில் எடுக்கப்படும்போது சாந்தி நிலையம் உருவானது. இதில் கதை என்று போடமாட்டார்கள். இயக்கம் என்று ஜி.எஸ்.மணி என்றுதான் டைட்டிலில் போடுவார்கள்.
இந்த மாதிரி நிறைய தமிழில் சினிமாவில் அக்காலப் படங்களில் நீங்கள் பார்த்திருக்கக் கூடும் . அதற்கு என்ன அர்த்தம் என்றால் கதை எங்களுடையது அல்ல என்பதுதான். இந்தக் குறைந்தபட்ச நேர்மை இன்று சாத்தியமா?
கதையைப் பொறுத்தவரை இயக்குநர்தான் யோசிக்க வேண்டும் என்பதில்லை. பல திரைப்படங்களில் நாம் பார்த்துள்ளவாறு ஜெமினி கதை இலாகா, ராஜ்கமல் கதை, ஏவிஎம்கதை இலாகா என்றெல்லாம் டைட்டிலில் போடுவார்கள். அதேநேரம் மக்களிடம் வெற்றிபெற்ற கதைகள் அல்லது கதாசிரியர்கள் என்றால் அவர்கள் பெயர்களை டைட்டிலில் பயன்படுத்துவது தனிச்சிறப்பாகக் கொண்டாப்பட்டது அக்காலங்களில். கதையைச் சொல்லி ஒரு தயாரிப்பாளரை அதற்கான படத்தை எடுக்கச் சம்மதிக்க வைப்பவர் இயக்குநர்தான். அதை நாம் மறுக்க முடியாது. ஒரு தயாரிப்பாளரை திரைப்படத்திற்கு செலவு செய்ய வைப்பது சாதாரண காரியமல்ல.
அந்தக் காலத்தில் கதை வசனம் 'பாரதிதாசன்', 'கல்கி'. என்று போடுவார்கள். அதற்குப் பின்னர் கதை வசனம் என கலைஞர் கருணாநிதிக்கு தனி கார்டு போட்டதார்கள். கதை வசனம் ஜெயகாந்தன் எனவும் கார்டு போட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். கதை ஜெயகாந்தன் எனவும் வசனம் கலைஞர் கருணாநிதி எனவும் கார்டு போடுவார்கள். புகழ்பெற்ற நாவலாசியர்களின் கதையை இயக்கிய பல இயக்குநர்களின் பெயர்களே கூட இன்று மறந்துவிட்டது. இதெல்லாம் சிவசங்கரி, மகரிஷி, அழகாபுரி அழகப்பன், அனுராதா ரமணன், சுஜாதா, பாலகுமாரன் என்று உள்ளிட்டு இன்று சுபா, ஜெயமோகன், இரா.முருகவேள் வரை பிரபல எழுத்தாளர்களுக்கு இந்த அனுகூலம் கிடைத்து வந்தது.
பல நேரங்களில் இயக்குநரை விட கதாசிரியருக்கு முழுப்புகழும் போவதற்கான சூழ்நிலைகளும் ஏற்படுவதும் உண்டு. இதனால் படத்திற்கான மூலப்பிரதியான 'கதை' (story) யாருடையது என்பதை தவிர்க்கவே இப்படி செய்வதாக சொல்லப்படுகிறது. இப்படம் வெளியான பிறகு பல்வேறு கட்டங்களை சந்திக்கும் இடங்களில் எல்லாம் கதை யாருடையது என்கிற கிரெடிட் தவிர்க்க முடியாததாகிறது.
ஒருமுறை ஒரு இலக்கிய கூட்டத்தில் கணையாழி கூட்டம் என்று நினைவு. திருவான்மியூரில் நடைபெற்ற அக்கூட்டத்தில் நான் நாஞ்சில் நாடனின் எட்டுத்திக்கும் மதயானை நாவலைப் பற்றி பேசிவிட்டு கூட்டம் முடிந்தபின்பு நண்பர்களிடம் சற்று அளவலாவிவிட்டு பேருந்துநிலையத்திற்கு வந்தேன். அங்கு கூட்டத்திற்கு வந்திருந்ததாகவும் நாவலைப்பற்றி தாங்கள் பேசியது நன்றாக இருந்தது என்றும் கூறிஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். ஒரு பிரபலஇயக்குநரிடம் உதவி இயக்குநராக பணியாற்றுவதாகவும் கூறினார்.
''சார் இந்தமாதிரி நல்ல நாவல்கள் இருந்தா கொஞ்சம் சொல்லுங்க சார் படிக்கணும்'' என்று அவர் சொன்னதும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகிவிட்டது. ஒரு திரைப்படத் துறையைச் சார்ந்தவர் நாவல்களை வாசிக்க விரும்புகிறாரே. பரவாயில்லை தமிழ் சினிமா நல்ல மாற்றத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறது என்று மகிழ்ந்து ''கண்டிப்பா சொல்றேன். நல்ல நாவலா இருந்தா அதை படமாக்குவீங்களா... அந்த நாவலாசிரியருக்கும் ஒரு கிரடிட் கிடைக்கும் இல்லைங்களா?'' என்றேன்.
''அட நீங்க வேற சார்... எங்க டைரக்டர்... நல்ல நாவல்களைப் படிச்சி.. அதுக்கு பேரல்லலா கதையை உருவாக்கி திரைக்கதை எழுதிட்டுவான்னு சொல்லியிருக்கார்'' என்றார். எனக்கு ஒரு கணம் ஆடிப்போய்விட்டது. அதற்குப் பின்வந்த இரவில் எந்த பஸ்ஸையும் அவர் பிடித்து செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
ஒரு நாவலாசிரியனோ சுயசரிதை எழுதுபவரோ திரைத்துறைக்கு முயற்சிக்கும் லட்சியவாதியோ உருவாக்கும் கதையில் அவனது கரைந்துபோன பல ஆண்டுகளின் வாழ்க்கை இருக்கும். அதை அவ்வளவு எளிதாக சுட்டுவிடலாமா?
உலக சினிமாக்களையும் பழைய தமிழ்சினிமா பாரம்பரியத்தையும் இலக்கிய படைப்புகள் திரைப்படமாக்கப்படுவதில் உள்ள நேர்மை நிகழ்ந்த வரலாற்றையும் அவருக்கு எடுத்துக்கூறினேன். பின்னிரவில் அவர் தன் அறைக்குத் திரும்பும் போது என்னை எவ்வளவு திட்டினார் அல்லது எவ்வளவு புதுமாற்றம் பெற்றார் என்பது எனக்குத் தெரியாது. பேருந்து, வேறு வாகனங்கள் எதுவும் கிடைக்காமல் நானும் நடந்தே அறைக்குத் திரும்பும் இரவாக அது இருந்தது.
நாவல் ஆசிரியர்கள் என்றில்லை. வாய்ப்பு தேடி வாசல் வாசலாக ஏறி திரைத்துறைக்கு வந்தவர்களின் கதையையே திருடி திரைப்படமாக்கிவிட்டு திரைத்துறையில் பின்னாளில் மிளிர வேண்டிய படைப்பாளிகளையும் நசுக்கிவிட்டு மேலே வரும் இயக்குநர்கள் குறைந்தபட்ச படைப்பு நேர்மை இன்றி அறம்பேசுவதும், சிறிதும் குற்ற உணர்ச்சியின்றி படைப்பாளிகள் பெயரை மறைப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. திரைவெளிச்சத்தில் மட்டும் அறம் வெல்லட்டும் என பேசுபவரை அல்ல திரைக்கு வெளியேயும் அறம் வெல்ல உறுதுணையாயிருக்கும் திரையுலகப் படைப்பாளிகளையே உலகம் என்றென்றும் நினைவில் வைத்திருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT