Published : 13 Nov 2017 05:54 PM
Last Updated : 13 Nov 2017 05:54 PM
கைத்தட்டலும் விசிலும் டி.ஆர்.ராஜகுமாரியில் துவங்கி சரோஜாதேவி, சில்க் ஸ்மிதா வரை கடந்து, குஷ்புவுக்குக் கோயில் கட்டுவது வரை வளர்ந்திருந்தாலும், இப்படியொரு வரவேற்பையும் எல்லோருக்கும் பிடித்தமானவர் எனும் ஈர்ப்பையும் நான் நயன்தாராவிடம்தான் பார்க்கிறேன்.
இதுவரை எத்தனையோ நடிகைகள் மிகப் பெரிய உச்சத்தில் இருந்திருக்கிறார்கள். வருடத்துக்கு மளமளவெனப் படங்களில் நடித்து, பேரும்புகழும், காசும்பணமும் சம்பாதித்திருக்கிறார்கள். புகழ்பெற்ற நடிகர்களுடனும் இயக்குநர்களுடனும் இணைந்து பணியாற்றியிருக்கிறார்கள். ஆனால் ஆச்சரியம்... அவர்கள் அனைவரும் கூட, இவரளவுக்கு தனித்த அடையாளங்களுடனும் ஆளுமையுடனும் திகழவில்லை என அறிந்தால்... இன்னும் வியப்பும் இன்னுமான மலைப்புமே ஏற்படுகிறது.
'அறம்' படம் பார்த்தேன். அதிசயித்துப் போனேன். மதிவதனி எனும் கேரக்டராகவே மாறியிருந்தார் நயன். இதென்ன பெரிய விஷயம்... இப்படி உருமாறி, பாத்திரமாகவே ஒன்றிப்போனவர்களின் பட்டியல் பெரிதுதான் என்று எவரேனும் சொல்லலாம். ஆமாம்... நானே கூட பட்டியலிடுவேன். நெஞ்சு நிமிர்த்தி, கூர்மையாய் பார்த்து, பேசுபவரின் மொழி மற்றும் உடல்மொழி கவனித்து, சட்டென்று பதில் சொல்லி, அந்தப் பதிலுக்கு முன்னும் பின்னுமாக பாவனைகளால் கதாபாத்திரம் சொல்லும் நயனும் அந்தத் துணிவும் நமக்குப் புதுசுதான். அவருக்கேக் கூட!
'ஐயா'வில் துவங்கி, சந்திரமுகியில் கவனம் ஈர்த்து, வல்லவனில் இன்னும் எகிறி, பில்லாவில் பட்டையைக் கிளப்பி... எனும் நயனின் கிராஃப், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் ஏறியது என்றாலும் ரசிக மனங்களில் அப்போதே பச்சக்கென்று ஒட்டிக் கொண்டு, உறவாடத் துவங்கிவிட்டார்.
இந்த இடத்தில் தேவையில்லைதான். ஆனாலும் குறிப்பிட்டால்தான் எனக்கு நிம்மதி. எண்பதுகளில் ஏழாவதோ எட்டாவதோ படித்துக் கொண்டிருந்தபோது, என்னை சினிமாக்காரர் மூவரின் மரணம் இம்சை பண்ணியது. கண்ணதாசன், ஷோபா, படாபட் ஜெயலட்சுமி. இதில் கவிஞரின் மரணம் இயற்கையானதுதான் என்றாலும் ஏற்க முடியவில்லை. அந்த இரண்டுபேரின் இழப்பு, அவசர முடிவு. ஏதோவொன்றின் தோல்வி. அது காதலாகவோ... அன்பாகவோ இருக்கலாம். பிறகு 90களில், சில்க் ஸ்மிதாவின் மரணமும் இப்படித்தான் உலுக்கிப் போட்டது என்னை! ஏமாற்றத்தை தாங்க முடியாத வலி, எதிர்பார்ப்பின்படி நடக்கவில்லையே எனும் அவமானம் என என்ன காரணம் சொன்னாலும் இழப்பு இழப்புதானே!
கோயிலே கட்டும் அளவுக்கு வளர்ந்து, உயர்ந்த நடிகை குறித்து இரண்டு வரிகளை இங்கே சொல்வது பொருத்தமாகவோ என் மனதுக்கு ஆறுதலாகவோ இருக்கும்.
அந்தப் புகழ்மிக்க நடிகருடன் காதலும் ஒருகட்டத்தில் பிரிவும் வர... தமிழகத்தில் பாதிப்பேர் துடித்தே போனார்கள். 'என்னப்பா... எதுனா பண்ணிக்கப் போவுது' என கவலைப்பட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். ஆனால் அடுத்தடுத்த கட்டத்தில் கொஞ்சம் ஓய்வு, படம் இல்லாத தொய்வு, மீண்டும் ஓர் காதல், அடுத்து திருமணம், குழந்தைகள், இனிய வாழ்க்கை... என இருபது வருடங்களாக இன்றைக்கும் லைம்லைட்டில் இருக்கிற அந்த நடிகையின் மனத் தெளிவும் பிறழ்வற்ற திடமும் இப்போது எனக்கு நயன்தாராவை நினைவுபடுத்துகின்றன.
பில்லாவில் அஜித்துடன் பிகினி உடையில் வந்தவர், விஜய்யுடன் சிவகாசியில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட்டவர், இடையே மிகப்பெரிய அளவில் இரண்டு காதலையும் ஆறாத வலியையும் வாங்கியவர். ஆனால்... வலு குறையவில்லை. முகத்தின் அழகு மறையவில்லை. மனத்தின் தெளிவில் குழப்பமில்லை. இன்னும் இன்னும் உழைத்தார். இன்னும் இன்னும் ஜெயித்தார். அது... நயன்தாராவின் சக்ஸஸ் பார்முலா. தெளிவு... தெளிவு... தெளிவு.
இப்போது காதலர் என்று விக்னேஷ்சிவனைச் சொல்கிறார்கள். அவரும் மறுக்கவில்லை. இவரும் இல்லையென்று சொல்லவில்லை. இந்த இருவர் பற்றியும் குறிப்பிடும் போது, நானும் ரவுடிதான் நினைவுக்கு வருகிறது.
மிகச் சிறந்த திரைக்கதை, கைத்தட்ட வைக்கும் வசனங்கள், விஜய் சேதுபதியை, ராதிகாவை, அழகம்பெருமாளை, வில்லனாக இருந்த மன்சூரலிகானை காமெடியனாக்கி, அதே வில்லன் ஆனந்தராஜை சிரிப்பு வில்லனாக்கி, ஹீரோ பார்த்திபனை வில்லனாக்கி, நயன்தாராவை அப்படியே புதுச்சேரிப் பெண்ணாக்கி, காதம்பரியாகவே உருமாற்றியிருந்த விக்னேஷ் சிவன் மீது எனக்கு கேள்விகள் உண்டு.
படம் பார்த்துவிட்டு நண்பனிடம் போனில்... 'நயன் மாதிரி ஒருத்தி லவ்வராக் கிடைச்சும், இந்தப் படத்தை சரியா பயன்படுத்தி, ரொம்ப கவனமே ஹேண்டில் பண்ணி, அட்டகாசமா எல்லாரையும் வேலை வாங்கின்னு முழுசா உழைச்சிருக்காப்லயா இந்த விக்னேஷ் சிவன். அப்படீன்னா... இந்த ரெண்டுபேருக்குள்ளேயும் எவ்ளோ புரிதல் இருக்கணும். ஜெயிச்சிட்டாப்ல நயன்தாரா' என்றேன் உற்சாகமாய். வெற்றிதான் தடுமாற வைக்கும். தோல்வி, நிதானம் தரும். நயனுக்கு அப்படித்தான் கொடுத்திருக்கிறது. அதுவும் இரண்டுமுறை!
படப்பிடிப்பில் அடம் பிடிப்பதில்லை. முரண்டு காட்டுவதில்லை. வீண் செலவுகள் செய்து அதகளம் செய்வது கிடையாது. ஷூட்டிங்கிற்கு லேட்டாக வருவதோ சீக்கிரமாகச் செல்வதோ இல்லை. அனைத்திலும் ஒழுங்கு கடைபிடித்து, மிகத் தைரியமாக மாயாவையும் டோராவையும் ஒப்புக்கொண்டு, அதனை ஏற்று படம் எடுக்க ஒப்புக்கொண்ட புரொட்யூசர் என சுற்றி வளைத்துப் பார்த்தால், மார்க்கெட் வேல்யூவும் நடிப்பின் அடர்த்தியையும் புரிந்து கொள்ள முடிகிறது.
எனக்குத் தெரிந்து ஆளுமையுடன் நிறைய நடிகைகள் இருந்திருக்கிறார்கள். ஆனால் ஆளுமையும் அன்புமாக, சின்ன இயக்குநர்களையும் புதிய தயாரிப்பாளர்களையும் அரவணைத்து, கதைக்கு தன்னை முழுதுமாக ஒப்படைத்து, கர்வமோ அலட்டலோ இல்லாமல் 'அறம்’ நாயகி எடுத்திருப்பதும் அவருக்குக் கிடைத்திருப்பதும் மெகா மகா ‘மலை’த்தேன்! இத்தனைக்கும் அதிக சம்பளம் வாங்கும் முக்கிய நடிகைகளில், ஓர் இடம் தக்கவைத்திருப்பவர்.
பெரிய நடிகர்களுடன் மட்டுமே நடிப்பேன் என்று சொல்லாமல், சின்ன நடிகர்களாக இருந்தாலும் பரவாயில்லை என்று கதை கேட்டு, கதையின் கேரக்டர் கேட்டு, ஒவ்வொரு அடியையும் அவசரமே இல்லாமல் நின்று நிதானித்து எடுத்து வைக்கும் நயனிடம்... இன்றைக்கு பொசுக்கென வந்துவிட்டு குபுக்கென காணாமல் போகும் நடிகைகள் கற்றுக்கொள்ளவேண்டியிருக்கிறது!
வாழ்க்கைக்கென அறம் இருக்கிறது. தொழிலில் நேர்மை, அன்பில் பாசாங்கில்லாத தன்மை, புகழிலும் பணிவு, பணத்தில் பகட்டில்லாத நிலை என அறம் சார்ந்த விஷயங்கள் இங்கே நிறைய உண்டு. ’அறம்’ நாயகி நயனும்... அறம் கொண்ட மனுஷிதான்! அறம் எப்போதும் காக்கும்.
லேடி சூப்பர்ஸ்டார் என்கிறார்கள். இன்னும் என்னென்னவோ கொடுப்பார்கள். ஆனால் நயனின் கிராஃப் இன்னும் இன்னுமாய் இருக்கிறது. நீண்டுகொண்டே அந்தக் கோடு, உயர்ந்து கொண்டே பயணிக்கும் அது!
நயனின் முந்தைய தோல்விகள்தான்... இன்றைய வெற்றிகளுக்குக் காரணம். இதுவொரு அற்புதப் படிப்பினை. கொஞ்சம் யோசித்தால்... ஒவ்வொருவர் வாழ்விலும் உண்டு தோல்விகளும் படிப்பினைகளும்... அதையடுத்ததான வெற்றிகளும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT