Published : 09 Nov 2017 10:37 AM
Last Updated : 09 Nov 2017 10:37 AM
2016-ம் ஆண்டு தொடக்கத்தில் மும்பைப் பள்ளி மாணவர் 10-ம் வகுப்பு படிக்கும் போதே பள்ளிகள் கிரிக்கெட்டில் 323 பந்துகளில் 1009 ரன்கள் எடுத்து முதல் முறையாக நான்கு இலக்க ஸ்கோரை எட்டி உலகைத் தன்பக்கம் திரும்ப வைத்தவர்தான், அப்போது 15 வயது நிரம்பியிருந்த மாணவர் பிரணவ் தனவாதே. இந்த இன்னிங்ஸில் 129 பவுண்டரிகளையும் 59 சிக்சர்களையும் அடித்து அசத்தினார் பிரணவ் தனவாதே. விக்கெட் கீப்பர் பேட்ஸ்மெனான இவர் தோனியை தனது லட்சிய ஆளுமையாகக் கொண்டவர்.
இவரது தந்தை ஆட்டோ ஓட்டுநர். இப்போதைய செய்தி என்னவெனில், அந்த உலக மகா இன்னிங்ஸுக்குப் பிறகே ஒன்றரை ஆண்டு காலமாக சொல்லிக் கொள்ளும்படியான இன்னிங்ஸ் எதையும் பிரணவ் தனவாதே ஆடவில்லை. ஆட்டம் திடீரென மங்கிப்போனதற்குக் காரணம் என்னவென்பதை அவரும் அவரது பயிற்சியாளரும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில், அந்த உலக மகா இன்னிங்ஸிற்குப் பிறகு எதிர்பார்ப்புகளின் சுமையைத் தாங்க முடியவில்லை, இது அவரது ஆட்டத்திலும் பிரதிபலித்து அதன் பிறகு அவர் ஆட்டத்தையே பாதித்தது. அந்த இன்னிங்ஸிற்குப் பிறகே அவருக்கு மாத உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. மும்பை கிரிக்கெட் சங்கம் மாதம் ஒன்றுக்கு அவருக்கு ரூ.10,000 உதவித்தொகையை 5 ஆண்டுகளுக்கு வழங்குவதாக அறிவித்தது. அந்த இன்னிங்ஸிற்குப் பிறகு நட்சத்திர அந்தஸ்து பெற்ற தனவாதே அதன் பிறகான எதிர்பார்ப்புகளுக்கு இணங்க ஆட முடியவில்லை. இதனால் தனக்கு உதவித்தொகை வேண்டாம் என்று ஆட்டோ ஓட்டுநரான அவரது தந்தை பிரஷாந்த் மும்பை கிரிக்கெட் சங்கத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இங்குதான் ஒரு முக்கியமான உதாரணத்தை நாம் சுட்டிக் காட்ட வேண்டியுள்ளது, சச்சின் டெண்டுல்கருடனேயே கிரிக்கெட்டில் வளர்ந்தவர்தான் வினோத் காம்ப்ளி, சச்சின் டெஸ்ட் போட்டிக்குள் வந்து சிறு வயதில் நட்சத்திர அந்தஸ்து பெற்றார், அந்த புகழ் மயக்கத்தை சச்சின் நன்றாக நிர்வகிக்கக் கற்றுக் கொண்டார், அவரது அண்ணன், சுனில் கவாஸ்கர் போன்ற நம்பிக்கை அறிவுரையாளர்கள் சச்சினுக்கு புகழ் மயக்கத்தின் பாடங்களைப் புகட்டினர், புகழ் மயக்கத்தை ஒரு பொருட்டாகவே சச்சின் கருதவில்லை சுயமுன்னேற்றமே (careerism)குறிக்கோள் என்று சச்சின் மேலும் மேலும் சென்று கொண்டேயிருந்தார், மாறாக வினோத் காம்ப்ளி 2 இரட்டைச் சதத்தை டெஸ்ட் போட்டிகளில் எடுத்தவுடன் சச்சினை விடவும் திறமைசாலி என்ற புகழ்வலை சூழ ஆரம்பித்தது, அதில் அவர் சிக்கினார், அது அவரது ஆட்டத்தையும், உணர்வையும் பாதித்தது, இதனுடன் சேர்த்து அவரது முன்னேற்றம் பாதிக்கப்பட்டு அருமையாக வந்திருக்க வேண்டிய கிரிக்கெட் வாழ்வு, தொடங்கும் முன்பே முடிந்தது.
சச்சின், தோனி, கோலி போன்ற சுயமுன்னேற்றவாதிகள் புகழின் வலையில் சிக்க மாட்டார்கள், இந்த விதத்தில் அவர்கள் கறாரான வணிக மனநிலை கொண்ட careerists என்று கூற முடியும். ஆனால் காம்ப்ளி உள்ளிட்ட சிலர் கலைஞர்களை (artists) போன்றவர்கள். புகழ் மயக்கத்தில் சுய ஏக நிச்சயவாதத்தின் போக்குக்குச் செல்வார்கள், தங்கள் செய்ததன் மீது அதீத கர்வம் கொண்டவர்கள், இது கலைஞர்களின் மனநிலை, எனவே கலைஞர்களா, சுயமுன்னேற்றவாத வணிகர்களா என்று பார்த்தால் நாட்டுக்கு அவசியமானவர்கள் சுயமுன்னேற்றவாதிகளே என்று பலரும் கூறக்கூடும். சேவாக், காம்ப்ளி, தற்போது பிரணவ் தனவாதே இன்னும் எத்தனை பேர்களோ தன்னலமற்ற கலைஞர்கள் என்றுதான் கூற வேண்டும், இங்கு கலைஞர்கள் என்பதை தத்துவார்த்த பார்வையிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் தனவாதே புகழ்வலையில் சிக்கித்தான் ஆட்டம் அவரிடமிருந்து போனதா என்று துல்லியமாகக் கூற முடியாவிட்டாலும் எதிர்பார்ப்பின் சுமைகள் ஆட்டத்திறன் மீதான ஒரு அச்சத்தை ஏற்படுத்தி (performance fear)அவர் அதன் பிறகு ஒன்றுமே செய்ய முடியாமல் போனது. மும்பை அண்டர்-19 உத்தேச அணியிலும் பிரணவ் தனவாதே இடம்பெறவில்லை.
ஆட்டோ ஓட்டுநரான இவரது தந்தை பிரஷாந்த், தனவாதேயின் பயிற்சியாளர் மோபின் ஷைக் ஆகியோர் தன்வாதே உள்ளூர் போட்டிகளில் ரன் எடுக்க முடியவில்லை என்பதை ஒப்புக் கொண்டனர்.
இந்நிலையில் சுயமரியாதை மிக்க தந்தை மும்பை கிரிக்கெட் சங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளார், இக்கடிதத்தின் நகல் மும்பை மிட் டே ஊடகத்தின் வசம் உள்ளது, அதில் தன் மகன் சரியாக ஆடாததால் உதவித்தொகைக்கு தகுதியுடைவரல்ல, அதனால் உதவித்தொகை வேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் கூறிஉள்ளார்.
அதில், “மும்பை கிரிக்கெ சங்கம் அறிவித்த உதவித்தொகைக்கு நன்றி. பிரணவ் பிற்பாடு நன்றாக ஆடத்தொடங்கினால் மும்பை கிரிக்கெட் சங்கம் உதவித்தொகையை வழங்குவது பற்றி ஆலோசிக்கட்டும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பிரணவ் ஆட்டம் சுணங்கியுள்ளது. எனவே உதவித்தொகையை ஏற்றுக் கொள்வது சரியாக இருக்காது. இப்போதைக்கு உதவித்தொகை நிறுத்திக் கொள்ளுமாறு வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அந்தக் கடிதத்தில் ஆட்டோ ஓட்டுநர் தந்தை மிக்க சுயமரியாதையுடன் கேட்டுக் கொண்டுள்ளார். தகுதியில்லாமலேயே பணத்தை சுருட்டி வாயில் போட்டுக் கொள்ளும் இந்தக் காலத்தில் மகன் சரியாக விளையாடவில்லை எனவே உதவித்தொகை வேண்டாம் என்று கூறும் ஒரு நேர்மையாளரைக் காண்பது மிக மிக அரிது.
மும்பை கிரிக்கெட் சங்கம் 2-ம் ஆண்டுக்காக ரூ.120,000 அறிவித்திருந்தது, ஆனால் தந்தை பிரஷாந்த் அதனை வேண்டாம் என்று கடிதம் எழுதிவிட்டார்.
சமூகத்தின், சகமனிதர்களின் பொறாமை, அவதூறு:
பிரணவ் தனவதேயின் பயிற்சியாளர் மொபின் ஷைக் மும்பை மிட் டே பத்திரிகையில் கூறும்போது, “நிறைய பேர் 1009 ரன்கள் மூலம் பிரணவ் நிறைய பணம் பண்ணி விட்டார் என்றும் இனி அவர் கிரிக்கெட் ஆடத் தேவையில்லை என்றும் பலரும் அவதூறு பேசத் தொடங்கினர். மேலும் பாந்த்ராவில் வீடு வாங்கிவிட்டார் பிரணவ் என்றும் கதைகட்டி விட்டனர். இத்தனைப் பொய்ப்பேச்சுகளும் எங்களை காயப்படுத்தியது. எதிர்ப்பார்ப்புக்கு இணங்க ஆட முடியவில்லை என்று பிரணவுக்கு மன உளைச்சலைத் தந்ததோடு ஊர் பேச்சும் உளைச்சலை அதிகப்படுத்தியது. எனவே உதவித்தொகையைப் பெற்று அதன் மூலம் எந்த வித சமூகக் குற்றச்சாட்டுகளுக்கும் நாங்கள் ஆளாக விரும்பவில்லை. அந்த 1009 ரன் இன்னிங்ஸ் பற்றிய் அனைத்து நினைவுகளையும் அழிக்க விரும்புகிறோம். உயர்மட்ட கிரிக்கெட் ஆடுவதுதான் லட்சியம், அதற்காக மானத்தையும் கவுரவத்தையும் விட்டுக் கொடுக்க முடியாது. 1009 ரன்கள் அடிக்கும் முன்பு பிரணவ் கிரிக்கெட்டை எப்படி மகிழ்ச்சியுடன் ஆடினானோ அப்படியே மீண்டும் ஆட வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என்றார்.
தந்தை பிரஷாந்த், மேலும் மிட் டேவுக்கு கூறும்போது, “நாங்கள் எப்போதும் பண உதவியை நாடியதில்லை. விளையாட்டுக்கு உகந்த உள்கட்டமைப்பு வசதிகள் தேவை என்றுதான் கேட்டு வந்தோம். பலரும் பிரணவின் கல்வி செலவுகளை பார்த்துக் கொள்கிறேன் என்றெல்லாம் முன் வந்தனர். ஆனால் கிரிக்கெட் ஆட்டத்திற்குரிய வசதிகளைத்தான் நாங்கள் கோரினோம். முறையான பயிற்சி வசதிகள், தரமான பிட்ச்கள் என்றுதான் கோரிக்கை வைத்தோம். பசிக்கு உணவுதான் தேவையே தவிர ஆடைகள் அல்ல” என்றார்.
1009 இன்னிங்ஸிற்குப் பிறகே தனவாதேயின் ஒவ்வொரு இன்னிங்ஸும், ஒவ்வொரு ஷாட்டும் கூர்ந்து கவனிக்கப்பட்டன, இதனால் அவர் சுதந்திரம் பறிபோனது அவரது ஆட்டத்தைப் பாதித்தது.
இந்நிலையில் பயிற்சியாளர் மொபின் ஷைக் கூறும்போது, “நாங்கள் புதிதாகத் தொடங்கவிருக்கிறோம். இப்போதைக்கு குழந்தையின் நடைபோன்றுதான், ஆனால் பிரணவ் நிச்சயம் தன் திறமைகளை மீட்டெடுப்பான். மிகவும் தீவிரமாக உழைத்து வருகிறான், ஆனால் ரன்கள் வரவில்லை. முன்னெப்போதையும் விட நாங்கள் கடினமாக உழைத்து வருகிறோம்” என்றார்.
அதிசய சாதனைகளும் ஒருவரது வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதற்கு பிரணவ் தனவாதே ஒரு உதாரணம், ஆனால் இது நிரந்தர உதாரணமாக மாறி விடாமல் அவர் மீண்டும் பெரிய அளவில் எழுச்சியுற்று இந்திய அணிக்கு ஆட வேண்டும் என்பதே பலரது விருப்பமாக இருந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT