Published : 10 Nov 2017 03:57 PM
Last Updated : 10 Nov 2017 03:57 PM
திரைப்படங்கள், குறும்படங்கள் இன்னும் எந்தவகை படைப்பாகவும் இருக்கட்டும், அதன் பின் நீதிபோதனை இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. ஆனால், அது போலி கற்பிதங்களைக் புகட்டாமல் இருப்பது அந்த படைப்புக்கான அடிப்படை உயிர்நாடி.
கடந்த ஒருவாரமாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவிவரும் லஷ்மி குறும்படத்தைப் பார்க்க நேர்ந்தது. 18 நிமிடங்கள் காட்சிகள் நீள்கின்றன.
முதல் ஒரு நிமிடத்திலேயே ஓர் இயந்திரத்துக்கும் லஷ்மிக்கும் இருக்கும் வித்தியாசம் உயிர் மட்டும்தான் என்பதை நாம் புரிந்து கொள்ளமுடியும்.
குக்கர் விசிலில் தொடங்கி கணவனின் இச்சையுடன் முடியும் அன்றாட நாட்களில் இருந்து விடுபட்டு ஒருநாள் சுதந்திரமாக அவளுக்காக மட்டுமே வாழ முடிவெடுக்கும் லஷ்மியை பாரதி கண்ட புதுமைப்பெண்ணாக உருவகப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் கே.எம். சர்ஜூன்.
இங்குதான் இப்படம் விமர்சனங்களுக்ககு வழிவகுத்துள்ளது. தன் கணவருக்கு வரும் தொலைபேசி அழைப்பில் எதிர்முனையில் ஒரு பெண் பேசுகிறாள். கணவனுக்கு ஏதோ வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருக்கிறதோ என சந்தேகப்படுகிறாள் லஷ்மி.
"தினமும் காலைல எந்திருச்சி ஆபிஸூக்கு போய்ட்டு வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வந்து.. ஆயிரம் முறை சுத்தற மாதிரி சுத்துற கிரைண்டர் மாதிரி அலுப்பான வாழ்க்கை வாழ்ந்தால் யாருக்குத்தான் தப்பு பண்ண தோணாது. எனக்கும் தோணுச்சு" என லஷ்மியின் எண்ண அலைகள் ஓடுகிறது. இதைத்தான் இயக்குநர் படத்தின் திருப்புமுனையாகக் காட்டுகிறார்.
ஒருவர் தவறு செய்கிறார் என்பதற்காக நாமும் தவறு செய்வது சாதனை அல்ல. அது ஒருவகை பழிவாங்கல் உணர்ச்சியே. லஷ்மியின் செய்கையையும் அந்த வகையில்தான் பார்க்க வேண்டும். ரயில், பஸ் ஓடாததால் வீட்டுக்குச் செல்ல வழி தெரியாமல் நிற்கும் லஷ்மி கணவனுக்கு போன் செய்ய, அவனோ 'அதற்கு நான் என்ன செய்ய வேண்டும்' என்கிறார். அந்த எரிச்சலில் கதிருடன் செல்கிறாள் லஷ்மி. அங்கே நடப்பதற்கும் பாரதி கண்ட புதுமைப் பெண்ணுக்கு நிச்சயம் எந்த சம்பந்தமும் இல்லை.
மிச்சத்தை இங்கே இந்த வீடியோவைப் பார்த்து நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.
லஷ்மி, இப்போது இன்னும் உங்களுக்கு பரிச்சியப்பட்டிருப்பாள். குறும்பட லஷ்மியை பாலுமகேந்திராவின் இயக்கத்தில் வெளியான 'மறுபடியும்' கதாநாயகி துளசியுடன் (நடிகை ரேவதி ஒப்பிட்டு பார்ப்போம்.
துளசி - முரளிகிருஷ்ணா (நிழல்கள் ரவி) தம்பதிக்கு இடையே நுழைகிறாள் கவிதா (ரோகிணி). அந்த உறவை முரளி மறுக்கவில்லை. கவிதாவும்தான். துளசியின் கெஞ்சல்கள் நிராகரிக்கப்படுகின்றன. விவாகரத்தும் ஆகிறது. நிர்கதியாய் நிற்கும் துளசிக்கு ஆறுதல் தருகிறார் கெளரிசங்கர் (அர்விந்த் சாமி). ஏன், கதிரைப் போல் அந்த இரவுக்காக அல்லாமல் வாழ்க்கைத்துணையாக இருக்கிறேன் என வாக்குறுதி அளிக்கிறார். 'ஒரு பொய்யான வாழ்க்கையை நடத்த முயற்சிக்காதீர்கள்' 'பழைய நினைவுகளுடன் வாழ நினைக்காதீர்கள்' உங்களுக்கு என்று ஒரு பெர்சனல் லைஃப் வேண்டாமா? என்றெல்லாம் யதார்த்த அக்கறைகளை முன்வைக்கிறார்.
ஒரு கட்டத்தில் கவிதா, முரளியை ஏற்க மறுக்க மீண்டும் துளசியிடமே வருகிறார். அப்போது, துளசி பேசும் வார்த்தைகள்தான் உண்மையான பெண்ணியம். "நீங்கள் எனக்கு பண்ண மாதிரி நான் உங்களுக்குப் பண்ணியிருந்தால். வேறு யாரோடுவாவது குடும்பம் நடத்திவிட்டு திரும்பிவந்திருந்தால் என்னை ஏற்றுக்கொண்டு இருப்பீர்களா? எனக்கும் அப்படித்தான். உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள். குட்பை" என்று வார்த்தைகள் அவளது சுயமரியாதையின் வெளிப்பாடு.
அதேபோல், கெளரிசங்கரிடம், துளசி முன்வைக்கும் வாதம்தான் அவளை பாரதியின் புதுமைப் பெண்ணாக உயர்த்திப்பிடிக்கிறது. "துளசி சக்திவேல் , துளசி முரளிகிருஷ்ணன் என்றெல்லாம் வாழ்ந்துவிட்டேன். இனி துளசியாகவே வாழப்போகிறேன் வெறும் துளசி. இது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களுடன் இருந்தால் நான் கோழையாகிவிடுவேன். எல்லாத்தையும் உங்க மேல தூக்கிப்போட்டு ரிலாக்ஸ் ஆகிவிடுவேன்" என்று அவள் கூறுவதும் உங்கள் தன்னம்பிக்கையை மதிக்கிறேன். உங்களைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திரும்பிப் பார்க்காமல் போய்ட்டே இருங்கள் என்று கூறும் கொளரிசங்கரின் நேர்மையும் பாராட்டுதலுக்குரியது.
இந்த ஒப்பீட்டின் மூலம், பெண் மறுமணம் செய்து கொள்வது தவறு என்றும் கணவன் எப்படி இருந்தாலும் லஷ்மிக்கள் மவுனியாக இருக்க வேண்டும் என்றும் நியாயப்படுத்தவில்லை. ஆனால், சிறையை உடைப்பதாகக் கூறி இன்னொரு சிக்கலான உறவுக்குள் செல்வதே பெண்ணியம் என்பது போன்ற போலி கற்பிதங்களைக் கற்பிக்க வேண்டாம் என்றுதான் சொல்ல வருகிறேன்.
இந்த குறும்படம் தொடர்பாகவும் அதற்கு பாரதியாரின் கவிதை வரிகளை பயன்படுத்தியது தொடர்பாகவும பாரதியாரின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் பாரதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு கூறியிருக்கிறார்:
லட்சுமியை சந்திக்கும் இடத்தில் அவள் காதலர் பாரதியாரின் புதுமைப்பெண் கவிதையைச் சொல்கிறார்..
"அமிழ்ந்து பேரிருளாம் அறியாமையில்
அவலம் எய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம் ஆகுமாம்
உதய கன்னி உரைப்பது கேட்டிரோ!"
அந்தப் பெண் பேரிருளில் அவலம் எய்தி கலையின்றி வாழ்வது உண்மைதான். அதனை உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணறம்தான். ஆனால் அதற்காக தன் கணவனைப் போல் அவளும் நிலை தாழ்ந்து இன்னொருவனிடம் உறவு கொள்ள வேண்டும் என்று அவசியமில்லை. அதை பாரதியாரும் ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார் என்றே நான் கருதுகிறேன்.
அத்தகைய கணவனை உதறி தன் குழந்தையையும் பேணி யாரையும் சாராமல் அந்தப் பெண் வாழ்வதே அவளது வெற்றி என்றே பாரதியார் எண்ணியிருப்பார். அதுவே அவரது வரிகளுக்கு நியாயமான அர்த்தம் கொடுத்திருக்கும்.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள், திமிர்ந்த ஞானச்செருக்கு இவையே செம்மை மாதருக்கு அழகு என்கிறார் பாரதியார். அத்தகைய பெண் இத்தகைய முடிவை எடுத்திருக்க மாட்டாள் என்பதே என் கருத்து.
இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.
இந்தக் குறும்படம் கவனிக்கப்படாமலேயே போயிருக்கலாம் பாரதியாரின் வரிகளைப் பயன்படுத்தியிருக்காவிட்டால். மிகப் பெரிய ஆளுமையின் சக்தி வாய்ந்த வரிகளை தவறான கற்பிதத்தை வெளிப்படுத்தும் தொனியில் பயன்படுத்தியது மட்டும்தான் லஷ்மியைப் பேச வைத்திருக்கிறது.
தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT