Published : 17 Jul 2023 06:34 AM
Last Updated : 17 Jul 2023 06:34 AM
சென்னை: டென் ஆலி நாடக விழா சென்னையில் தொடங்கியது. இதில் நடைபெறும் நாடகப் போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நாடகக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த நிகழ்வை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவமுள்ள நாடக ஆளுமையான ஆர்.கிரிதரனை வழி காட்டியாகக் கொண்ட தியேட்டர் மெரினா ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நாடகப் போட்டியானது, ஆர்வமுள்ள நாடக ஆசிரியர்களை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். மேலும் திறமையான நடிகர்கள்மற்றும் ஆர்வமுள்ள நாடக ஆர்வலர்கள், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கான களமாக இந்த நாடகவிழா நடக்கிறது. இதில் பங்கேற்பாளர்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், அங்கீகாரம் பெறவும், தொழில் வல்லுநர்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதியாக இவ்விழா நடத்தப்படுகிறது. பலதரப்பட்ட நாடகங்களை கவனமாகத் தேர்ந்தெடுத்து, பலவிதமான கதைகளை அரங்கேற்றி பார்வையாளர்களை மகிழ்விப்பதே நோக்கமாகக் கொண்டு அரங்கேற்றப்படுகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து கலைஞர்கள் பங்கேற்ற இந்த நாடக திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் அரங்கேற்றப்பட்ட 7 விதமான நாடகங்கள் பார்வையாளர்களைக் கவர்ந்தன. இந்த நாடக விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கில் நடக்கிறது. கால் இறுதி போட்டிகள் நேற்றுமுன்தினம் முடிந்த நிலையில் அதில் 28 அணிகள் பங்கேற்றன.
இதையடுத்து அரையிறுதிப் போட்டிகள் இம்மாதம் 29-ம் தேதி நடக்கிறது இதில் 14 குழுவினர் பங்கேற்பர். இதில் இருந்து 7 குழுக்கள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகும். இதற்கான போட்டி வரும் 30-ம் தேதி நடக்கிறது. நாடகம் நடைபெறும் நேரம் 12 நிமிடங்களாகும். நிறைவாக சிறந்த திரைக்கதை, எழுத்தாளர், இயக்குநர், நடிகர் மற்றும் நடிகைகள் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்படவுள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT