Published : 30 Oct 2017 02:53 PM
Last Updated : 30 Oct 2017 02:53 PM

நினைவலைகள்: உயிரில் விழுந்து உணர்வில் கலந்த மேலாண்மை பொன்னுசாமி!

கல்கி போட்டிக்கு நான் எழுதி அனுப்பிய மூன்று சிறுகதைகளும் திரும்பி வந்தன. மேலாண்மை பொன்னுசாமியின் 'சிபிகள்' என்ற கதைக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. அகில இந்திய வானொலியில் மட்டுமல்லாது, கல்கி, தாய், ஜனரஞ்சனி, சாவி என வரும் பிரபல இதழ்களில் என் கதைகள் பல கடைவிரிக்கப்பட்டிருந்த காலம் அது.

யார் இந்த மேலாண்மை பொன்னுசாமி, நம்மை விட பெரிசாக என்ன எழுதி விடப் போகிறார் என்றுதான் அக்கதையை வாசித்தேன். சினைப்பன்றி ஒன்று பண்ணையார் ஒருவரது தோட்டத்தில் குட்டிகளை ஈன்றிட, அது அந்த தோட்டத்து விளைச்சலையே பாழ்படுத்திட, அதற்காக அந்த பன்றிக்கார சிறுவனை பண்ணையார் கொடுமைப்படுத்தும் கதை. ஒரு காலத்தில் சிபி சக்கரவர்த்தி போல் இருந்தவர். தன் சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடாத சாதியாக அச்சிறுவன் இருந்ததால் அடித்து துவம்சிக்கப்படும் கோலம். வார்த்தைக்கு, வார்த்தை, வரிக்கு வரி மொழியில் ரத்தத்தையும், ரணத்தையும் இப்படி எந்த எழுத்தாளராலும் படைத்திட முடியுமா? சந்தேகம்தான். 'இதுவல்லவோ எழுத்து!' பலமுறை அதை வாசித்து நின்ற வேளை, அந்த மேலாண்மை பொன்னுசாமி குறித்த வாழ்க்கை குறிப்பு அடுத்த இதழில் வெளியானது.

'வெறும் 5-ம் வகுப்பு படிப்பு. பெட்டிக்கடை வைத்திருப்பவர். செம்மலர் இதழில் 200க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வெளியாகியுள்ளன. தமுஎகச மாநிலத் துணைத் தலைவர். 1985-ம் ஆண்டு ஜனரஞ்சனி இளைஞர் சிறுகதைப் போட்டியில். அன்னபாக்கியன் எனும் புனைபெயரில் 'சுயரூபம்' என்ற கதை எழுதி முதல் பரிசு..!' என அடுக்கடுக்கான தகவல்களைப் பார்த்து மெய்சிலிர்த்துப்போனேன்.

ஜனரஞ்சனியில் எந்த போட்டியில் முதல் பரிசு அவர் பெற்றிருந்தாரோ, அதே களத்தில் என் சிறுகதை 'துரோகம்' ஆறுதல் பரிசு பெற்றிருந்தது. அந்த முதல் பரிசு சிறுகதையை எடுத்து வாசித்தேன். பூவனத்துக்கு முத்து என்றால் உயிர். வைக்கோல் போர் ஏற்றின வண்டி நுகத்தடி முறிந்து அதன் சக்கரத்தில் சிக்கி நசுங்கி செத்துப் போனானே அண்ணன் முத்து. அவனின் அச்சு முத்து!' எனத் தொடங்கும் அந்த கதை முழுக்க, 'சிபிகளை' தூக்கிச் சாப்பிடும் உணர்ச்சி பிரவாகம்.

வயக்காட்டு கூலிப்பெண் பூவனம். வாட்டும் வறுமை. பல முறை சென்றும் கிடைக்காமல் போன கோலம். ரேசன் பொருள் போடுகிறார்கள் என்றதும் அடித்துப் பிடித்து வயல்வெளியிலிருந்து ஓடுகிறாள். எதிரில் ஏதோ கேட்டு, அடம்பிடித்து அழுது வரும் மூன்று வயதுப் பிள்ளை முத்து. அவனை தன் பிடியிலிருந்து விலக்க முடியவில்லை. இறுதியில் முதுகில் வைக்கிறாள் ஒரு சாத்து. ரெளத்திர காளியாய் தன் அன்னையைப் பார்த்து அதிர்கிறான் பிஞ்சு.

இவள் ரேசன் கார்டை எடுத்துக்கொண்டு போய் கூட்டத்தில் முண்டியடித்து பொருட்களை வாங்கிக்கொண்டு ஏதோ யுத்த களத்தில் வென்ற வீராங்கனையாய் வீடு வருகிறாள். பூட்டப்பட்ட வீட்டுவாசல் கதவில் ஒருக்களித்து கைசூப்பியபடி துாங்கிப்போயிருக்கிறான் முத்து. கன்னத்தில் கண்களிலிருந்து தாரையோடிய கண்ணீர். முதுகில் இவள் வைத்த அடியின் தாரை. சிவப்புக்கந்தல். 'அடிபாதரவே! என்ன காரியம் செஞ்சுட்டேன், என் புள்ளைய!' தாவி எடுக்கிறாள். ஓவென அழுகிறாள். பிள்ளை விழிக்கிறான். அலங்க மலங்க பார்க்கிறான், புரிபடாத வாழ்க்கை மாதிரி.

அதற்குப் பின் மேலாண்மை குறித்த தேடல்கள்தான். அதுவாகவே நான் மாறிப்போனேன். தீக்கதிர், செம்மலர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் எல்லாமே அறிமுகமானது அப்போதுதான். எழுதினால் மேலாண்மையைப் போல் எழுத வேண்டும் என்ற வெறி. அவரை கோவை சிங்காநல்லூரில் தமுஎகச கிளை மாநாடு நடந்தபோது எழுத்தாளர் சூர்யகாந்தனுடன் சந்தித்தேன். குழந்தையிடம் கொஞ்சும் கொஞ்சலை என்னிடம் அவர் காட்ட மிரண்டு போனேன். அவரிடம் இருந்த எளிமை, அவர் சார்ந்த முற்போக்காளர்களிடம் இருந்த யதார்த்தம். எனக்குள் நிறைந்த கணங்கள் அது.

அதுதான் என்னை குற்றாலத்தில் அவர்கள் நடத்திய சிறுகதைப் பயிலரங்கிற்கும் செல்ல வைத்தது. அங்கே பயிற்சிக்கு கலந்து கொண்ட 41 எழுத்தாளர்களில் பலரும் ஓற்றை இலக்கத்திலேயே கதைகள், கவிதைகள் எழுதியிருக்க, 100க்கும் மேற்பட்ட கதைகள் எழுதியவனாக நான் இருந்தது கண்டு, 'இதோ பாருடா, இன்னொரு மேலாண்மை!' என மறைந்த எழுத்தாளர் கந்தர்வன் உரக்கக் கூவியதும், அந்த மேடையில் அமர்ந்திருந்த மேலாண்மை கூச்சத்தால் நெளிந்ததும் நேற்று போல் இருக்கிறது. அதுதான் எனது முதல்சிறுகதை நூல் 'பொய்த்திரை'க்கு மேலாண்மையிடம் முன்னுரை வாங்கச் சொன்னது.

அந்த நூலை வெளியிட முன்னெடுத்த திருப்பூர் தோழர் டி.எம்.ராஜாமணி நான் சொன்னதை விட்டுவிட்டு, சு.சமுத்திரத்திடம் முன்னுரை வாங்கி வந்துவிட்டார். அதற்காக நான் கோபித்துக் கொள்ள, 'மேலாண்மையை விட பிரபலமானவர் சு.சமுத்திரம். உன் புத்தகம் நன்றாக வரும்!' என டி.எம்.ஆர் ஆறுதல்படுத்த நான் தணியவில்லை. 'சு.சமுத்திரம் பிரபலமானவராக இருக்கலாம். ஆனால் என் எழுத்தின் ஆதர்ஷம் மேலாண்மை!' என்றே பொங்கினேன். அந்தத் தொகுதிக்கு அற்புதமாக சு.சமுத்திரம் முன்னுரை வழங்கியிருந்தாலும், நான் ஓயவில்லை. மேலாண்மையை சந்தித்தபோதும் பொங்கித் தீர்த்தேன். அவரோ, ராஜாமணி சொன்னதையே சொன்னார்.

என்றாலும் நான் அடங்கவில்லை. அடுத்த சிறுகதைத் தொகுதியை உடனே கொண்டு வந்தேன். அதற்கு முன்னுரை மேலாண்மைதான். சிறுகதைகள் அனுப்பி இரண்டே நாளில் ஆறு பக்க அளவில் முன்னுரை. மிரண்டு விட்டேன். 'வெள்ளந்தியான மனசும், பாடுபடும் சிந்தனையும், சக மக்களின் மீதான பரிவும் இருந்தால் மட்டுமே அவன் எழுத்தாளனாக பரிணமிக்க முடியும்!' என்பதை அவர் முன்னுரை என் கதைகளை முன்வைத்தே ஆகப்பெருமையுடன் பேசியது என்னை மேலும் அவர் மீதான ஈடுபாட்டை கூடுதலாக்கியது.

மேலாண்மையுடனான நெருக்கம், அவரின் எழுத்தினால் ஏற்பட்ட வார்ப்பு, வருடத்திற்கு 40 முதல் 50 கதைகளை எழுதி வந்த நான் வருடத்திற்கு ஒன்றிரண்டு கதைகளே எழுத ஆரம்பித்தேன். அவர் சுட்டுதலின் பேரில்தான் ஜெயகாந்தன், புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி என மறுவாசிப்பு செய்ய ஆரம்பித்தேன். அதற்கேற்ப சத்தானதாக - அடர்த்தி மிக்கதாக மாறிப்போனது எழுத்து.

வெற்றுச் சிதிலங்களை சிற்பங்கள் என்று எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு எது சிற்பம் என்பது அதற்குப் பின்புதான் புரிந்து சிற்பியாக மாற ஆரம்பித்தான் என்றே சொல்லலாம். அதன் உயிர்ப்பாக எழுந்ததுதான் என் 'பொழுதுக்கால் மின்னல்' நாவல். அந்த நாவலை உடனே வாசித்துவிட்டு உணர்ச்சி பொங்கி அவர் எழுதிய கடிதம் இன்னமும் பத்திரமாக என கோப்புகளில் உள்ளது. (அதை சமீபத்தில் வெளியான 'பொழுதுக்கால் மின்னல்' மறுபதிப்பில் சுருக்கியும் வெளியிட்டுள்ளேன்)

செம்மலர் சிகரச் சிறுகதை முத்திரை கொடுத்து 10 சிறுகதைகளை மாதந்தோறும் வெளியிட்டதில் 10 வது சிறுகதையாக என் கதை வெளியானது. 'அதுவரை வந்த கதைகள் தகரக்கதைகள், உங்களுடையதே சிகரக்கதை!' என்று ஒரு வாசகர் எழுதியிருந்ததை அப்போது செம்மலர் ஆசிரியர் குழுவில் இருந்த அவர் நினைவுகூர்ந்ததும் அப்போதுதான்.

அதை சொல்ல வேண்டிய சூழலையும், காலத்தையும் முன் வைத்து சில மாதங்களுக்கு முன் எழுத்தாளர் க.சீ. சிவக்குமார் காலமான நேரத்தில் 'தி இந்து' இணையதளத்தில் நான் எழுதிய நினைவலைகளை வாசித்தவர்கள் உணர முடியும். இன்னமும் சொல்லப்போனால் நான் செய்தியாளராக ஆன பின்பும் என்னுடன் தொடர்பில் உள்ள முக்கிய இலக்கிய கர்த்தா அவரே.

அவருக்கும் முன்னோடி இடதுசாரி எழுத்தாளரான கோவை சீனியர் வக்கீல் சி. ஞானபாரதி தன் இலக்கிய தன்மையையே குழிதோண்டிப் புதைத்தது போல் வாளாவிருந்த காலத்தில், அவரைத் தூண்டி விட்டு ஒரு சிறுகதை எழுத வைத்து, அதை செம்மலருக்கே அர்ப்பணிக்க வைக்க உதவிய வழித்தோன்றல் அவர். அவர் கரத்தால் சி. ஞானபாரதியின் 'மூங்கில் கழி' சிறுகதை நூலை வெளியிட்ட திருப்தி எனக்குண்டு.

அதேபோல் கடந்த ஆண்டு நான் வெளியிட்ட, 'உச்சாடனம்- கலைஞரை சந்தித்திராத அனுபவங்கள்!' நூலை படித்துவிட்டு, உடனே போனில் வந்தார். 'கருணாநிதிக்கு இதை விட பெரிய மகுடம் தேவையில்லை. முன்னுரை எழுதிய உங்கள் அன்பு மகள் ரோகிணி புலிக்கு பிறந்தது புலிக்குட்டிதான் என நிரூபித்திருக்கிறார். வாழ்த்துகள்!' என்று குறிப்பிட்டு நிறைய பேசினார்.

ஆதித்தனார் நினைவு பரிசு, ஆனந்தவிகடன் முத்திரைக்கதைகள், சாகித்ய அகாடமி விருது என எத்தனையோ பெற்ற போதும், சிங்காநல்லூரில் நடந்த தமுஎகச மாவட்ட மாநாட்டில் பங்கேற்ற அதே எளிமை. அதே பாசத்துடன் என்னுடன் அளாவளாவினார். அவர் மகன் கவிஞர் வெண்மணிக்கு பெண் கோவையில் எடுத்த போது பெரிய புரட்சியே செய்தார்.

அதில் சில வெளிப்பாடுகளை அவர் என்னிடம் எதிர்பார்க்க, அதில் நான் மூடுதிரையாய் மவுனம் காக்க, அது அவருக்கு வெளிச்சத்திற்கு வந்த வெளியில் அவர் என் சிந்தையில் மேலும் உயர்ந்து நின்றார். அந்த வகையில் அவர் குடும்பமும் என்னுடன் இரண்டற கலந்த கணங்கள் அவை. அப்போதும் கூட அவர் உடல்நலம் குன்றியே இருந்தார்.

தன் டாக்டர் மகளுக்கு வரன் தேடிய நேரத்தில் கடைசியாக சில மாதங்களுக்கு முன்பு போன் செய்தார். அதை பற்றிய தேடலில் என்னை ஈடுபடுத்திக் கொள்ள முடியாத அளவுக்கு எனக்கு பணி நெருக்கடி. அதற்கு பின்பு இப்போது தோழர் சி. ஞானபாரதியின் செல்பேசி அழைப்பு. 'மேலாண்மை இறந்துவிட்டாராம் தெரியுமா தோழர்?' அதிர்ச்சிதான்.

பிறப்பென்று இருந்தால் இறப்பொன்று இருந்துதான் தீரும். ஆனால் சமூகத்தின்பால் பாசம் கொண்ட எழுத்தாளர்களுக்கு இறப்பென்பதில்லையே. அந்த வகையில் அவரின் நூல்கள் மூலம் மட்டுமல்ல, ஏராளமான எழுத்தாளர்களை உருவாக்கிய, என்னைப் போன்ற ஏராளமான எழுத்தாளர்களை செதுக்கி உயிரில் விழுந்து உணர்வில் கலந்த வல்லமையோடும் வாழ்கிறார்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x