Published : 15 Oct 2017 12:07 PM
Last Updated : 15 Oct 2017 12:07 PM

காலத்தின் வாசனை: ரங்கநாதன் தெருவில் ஒரு மாமரம் இருந்தது!

செ

ன்னை மாம்பலம் ஸ்டேஷனை ஒட்டியுள்ள ரங்கநாதன் தெருவில் இப்போது பிரம்மாண்டமான வணிக அங்காடிகள் கோலோச்சும் இடத்தில் குடை விரித்தமாதிரி ஒரு பெரிய மாமரம் நின்றிருந்தது என்றால் நம்புவீர்களா? இருந்தது. 42 வருடங்களுக்கு முன்னர்!

மாம்பலம் ஸ்டேஷனில் ரயில் எப்போதாவதுதான் கூவும். மாமரத்தில் குயில் எப்போதும் கூவும். மாமரத்தில் ஒரு சிறிய கிளை பழங்கால வீடு ஒன்றின் மாடி அறைக்குள் ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கும். அந்த மாடி அறையில்தான் நான் தங்கியிருந்தேன். கம்பி அழி வைத்த பெரிய மாடி முற்றத்தில் இன்னொரு அறை. இங்கு தங்கியிருந்த நாங்கள் நாலைந்துபேரும் பிரம்மச்சாரிக் கட்டைகள்

அந்த வீட்டின் கீழ்ப்பகுதியில் நிலவிய ஜனத்தொகையைக் கண்டு அங்கே பத்துப் பனிரெண்டு குடித்தனங்களாவது இருக்க வேண்டும் என்று ஊகித்தேன். எல்லோரும் மத்யமர்கள் அல்லது அதற்கும் கீழே. விநாயக சதுர்த்தி அன்று எலிவால் பின்னலுடன் ஒரு குழந்தை படியேறிவந்து தட்டு நிறைய கொழுக்கட்டைகள் கொடுத்துவிட்டுப் போகும்.

வீட்டுக்கு வெளியே வீட்டை மறைத்துக்கொண்டு ‘தஞ்சாவூர் சுகந்த மண்டலம்’ என்றொரு கடை. இடது பக்கம் ‘பட்ஸ்’ ஓட்டல். சற்று ஓரமாக டயனோரா டி.வி. ஷோரூம். அந்தக் கடையின் நீண்ட படிக்கட்டில் இரவு வேளைகளில் நேரம் காலம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். ஐராவதம் சுவாமிநாதன், சுப்ரமண்யராஜு, வெளி ரெங்கராஜன் போன்ற எழுத்தாளர்கள் அரட்டையில் கலந்துகொள்வார்கள்.

எதிர்ச்சிறகில் புகழ்பெற்ற ராஜாஜி சீவல் ஸ்டோர். அங்கே வெற்றிலையும் வாசனை சீவலும் வாங்கி மடி நிறையக் கட்டிக்கொண்டு அரட்டையடிக்க வந்துசேரும் ஆர். கே. எப்போதும் கைபனியனுடன் காட்சியளிப்பார். என்னை சங்கீத சபாக்களுக்கு வற்புறுத்தி கூட்டிப் போவார். “வாசனை சீவலும் பிஸ்மில்லாகானும் இல்லாட்டா வாழ்க்கை சோபிக்காதுங்காணும்” என்பார்.

அப்போதெல்லாம் ரங்கநாதன் தெருவில் சாவதானமான முகங்களைப் பார்க்கலாம். தெருமுனையில் கீதா ஓட்டல். ரூ.1.50-க்கு முழுச்சாப்பாடு. துர்காபவனில் வத்தக் குழம்பு. செட்தோசை என்றால் பட்ஸ் ஓட்டல். கோமதி சங்கர் தூத்பேடா கீரையும் மாங்காய் இஞ்சியும் விற்கும் பெண்கள். சின்னச்சின்ன ஆடை ஆபரணக் கடைகள். ரங்கநாதன் தெரு தலபுராணத்தை இப்படி நாலே வரிகளில் எழுதிவிடலாம்.

பக்கத்து அறையில் தெலுங்குத் திரையுலகில் தனது வாய்ப்புக்காகக் காத்திருந்த ஒரு இயக்குநர் இருந்தார். வயது 50-க்குமேல் இருக்கும்.“அதிர்ஷ்ட தேவதை என் கையில் சிக்காமல் நழுவிக்கொண்டே போகிறாள்” என்பார் விரக்திச் சிரிப்புடன். தெலுங்கும் தமிழும் கலந்த அவர் பேச்சு வேடிக்கையாக இருக்கும்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அந்தக் கலைஞன் தனது முழு பரிணாமத்தையும் எங்களுக்குக் காட்டினார். நவரசங்களையும் நடித்துக் காண்பித்தார். பசியால் அழுகிற குழந்தையை சமாதானப்படுத்த ஏழைத்தாய் ஒருத்தி படாதபாடு படுகிறாள். கடைசியாக மார்பில் பால் சுரக்கிறது. அப்போது குழந்தைக்குப் பால் கொடுக்கிறாள். அந்த முகத்தில் அலைபாய்ந்த உணர்ச்சிகள், பரவசம் - எல்லாம் தத்ரூபமாக இருந்தன. எங்கள் கண்ணுக்கு தாயாகவே தோன்றினார். நாங்கள் எல்லோருமே உத்யோக நிமித்தம் பட்டணம் வந்தவர்கள். அவரவர் அம்மாவின் ஞாபகம் வந்து அழுதேவிட்டோம். வெற்றிலையை எடுத்து சுண்ணாம்பு தடவிய ஆர். கே. விக்கித்து உட்கார்ந்திருந்தார். அந்த வீட்டின் கடைசி போர்ஷனில் நடுத்தர வயது நபர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் ரங்கா. சற்றே மனநிலை பிசகியவர். அவர் உடை மாற்றி நான் பார்த்ததே இல்லை. காய்ந்த புற்களாய் தலைமுடி. காதில் அணைத்த பீடித்துண்டு. “இந்த வீட்டில் அவனுக்கும் பங்கு உண்டு தெரியுமோ?” என்றார் ஆர்.கே. இது உண்மையா என்று தெரியாது. ஆனால் ரங்கா பற்றிய உண்மைச் சம்பவம் கற்பனையையும் மிஞ்சக் கூடியது.

ரங்காவிடம் ஒரு விசித்திரப் பழக்கம். தி.நகர் பேருந்து நிலையத்திலிருந்து பனகல் பார்க் வரை கீழே கிடக்கிற காகிதங்களைப் பொறுக்கிக்கொண்டு வந்து தன் அறையில் பத்திரப்படுத்துவது.

“ஏன் ரங்கா இப்படிப் பண்றீங்க?” என்று அவரிடமே கேட்டேன்.

“நாளைக்கு இந்த வீட்டுக்கு டாக்குமெண்ட் இருக்கா என்று ஒரு பய நம்மகிட்ட கேட்கப்படாது பாருங்கோ... அதுக்காகத்தான்!” - என்றாரே பார்க்கலாம்.

ஒரு வெளியூர் இளைஞன் தன் கல்விச் சான்றிதழ்களை தி. நகர் பஸ் ஸ்டாண்டில் தவறவிட்டுவிட்டான். யாரோ ரங்காவைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள் .நேராக வந்துவிட்டான். ரங்கா அவனைத் தன் அறைக்கு அழைத்துப் போனார். மலையாகக் கிடந்த காகிதக் குப்பையைக் காட்டினார். இளைஞனின் அதிருஷ்டம் பாருங்கள். சான்றிதழ்கள் அத்தனையும் கிடைத்துவிட்டன. ரங்காவின் காலில் விழுந்தான் பையன்.

“கடவுள் சார் நீங்க!” என்றான்.

ரங்கா பீடியைப் பற்றவைத்தபடி சொன்னார், “நான் கடவுளை நம்பறதில்லை. போயிட்டுவா!”

பையன் நீட்டிய முழு பத்து ரூபாய்த் தாளை வாங்க மறுத்துவிட்டார் ரங்கா. அப்போது அது பெரிய தொகை.

“நான் இதை சர்வீசா பண்ணிக்கிட்டிருக்கேன். காசெல்லாம் வாணாம். எனக்கு பீடி வாங்கவும், அதோ அந்த கருப்பு நாய்க்கு ரொட்டி வாங்கவும் டூ ரூபீஸ் கொடு போதும்!” கறுப்பு நாய் வாலாட்டியது. பையன் கும்பிட்டான். ஆர். கே. வாசனை சீவல் வாங்கப் போனார்.

-தஞ்சாவூர்க் கவிராயர்,

தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x