Published : 02 Oct 2017 12:18 PM
Last Updated : 02 Oct 2017 12:18 PM
மகாத்மா காந்தியின் 149-வது பிறந்தநாளை நாடே கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அதேசமயம் காரல் மார்க்ஸின் மூலதனத்திற்கு வயது 150 என்பதை சிலர் மட்டுமே நினைவு கூர்கிறார்கள். மகாத்மா இந்த தேசத்திற்கு வழிகாட்டியாக, தேசப்பிதாவாக மக்கள் அங்கீகரித்து வெகுநாட்களாகி விட்டது. பாடத்திட்டங்களில், வரலாறுகளில் இதை நீக்கமற நிறைத்து 70 ஆண்டுகள் ஆகியும் விட்டது. உலகத்திற்கே ஒளி விளக்காக, சமூக மாற்றத்திற்கு வித்திட்ட விஞ்ஞானியான காரல் மார்க்ஸுக்கு நம் இந்திய சமூகம் எந்த அளவுக்கு இடம் தந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம்.
மது, மாது, சூது சமூக தீது என்பதை சுட்டினார் காந்தி. காரலோ 'மதம் அபின்' என்றார். 'ரகுபதி, ராகவ, ராஜராம், ஈஸ்வர அல்லா தேரா நாம்!' என பாடி அனைத்துக் கடவுள்களையும் ஏற்று பல கடவுளர்களையும் சாக விடாமல் தடுத்தாண்டார் மகாத்மா. மார்க்ஸோ, அபினாகப்பட்ட மதத்தின் அத்தனை கூறுகளையும் தீர்க்கமாய் உணர்ந்து கடவுளர்களை ஆணித்தரமாக மறுத்து, சாகடிக்கவும் தலைப்பட்டார். சுரண்டலுக்கு ஆட்பட்ட மனிதர்களை போதையில் ஆழ்த்தி சிந்திக்க விடாமல் செய்திருக்கும் கொடூரத்தில் ஒன்றுதான் கடவுளின் உருவாக்கமும் என்பதில் நிறைந்தார்.
இருந்தாலும் ஒழுக்கவயப்பட்ட, நேர்மை, சத்திய வயப்பட்ட இந்திய சமூகத்தின் ஆற்றல் மகாத்மாக்களையே நம்பியது. மார்க்ஸைப் போன்ற தீர்க்கதரிசிகளை சிறுத்துவிடச் செய்தது. அதற்கு மகாத்மாவின் அஹிம்சை துணை புரிந்தது. ஹிம்சையை விட அஹிம்சை எவ்வளவு துன்ப மயமானது என்பதை சாகத் துடிக்கும் பிள்ளையை கண்எதிரே கையறு நிலையில் பார்த்து மலையென கண்ணீர் வடிக்கும் தாயைக் கேட்டால்தான் தெரியும். அதை தன் அன்னை புத்திலிபாய் காந்திக்கு காட்டியிருந்தால் அஹிம்சையை கையிலெடுத்திருப்பாரா என்பது சந்தேகம்தான். அவருக்கு கடவுளை நிரூபிக்க அஹிம்சை துணைநின்றது. இந்திய தேசமே கடவுளை நம்பி நின்றதால் அதையும் நம்பியது. ஏனென்றால் இந்த தேசத்தில் கடவுளுக்கு வயது மிக அதிகம்.
இன்று போல் அன்றில்லை. அறம் செய விரும்பு சொல்லிக் கொடுக்கும் முன்னே, 'காந்தியடிகள் நம் நாட்டுக்கு சுதந்திரம் வாங்கித்தந்தார்!' என்ற போதனையே இளம் பிஞ்சின் மனதில் ஏற்றப்பட்டது.
காந்தியடிகள் பாரிஸ்டர் படிப்பு பயில இங்கிலாந்து புறப்பட்டார். புலால் உண்ண மாட்டேன். மது அருந்த மாட்டேன். தீய செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று தன் தாய்க்கு மூன்று சத்தியங்கள் செய்து தந்தார்
கெட்டதை பார்க்காதே, கெட்டதை கேட்காதே, கெட்டதை பேசாதே என்பதை காட்ட காந்தியடிகள் மூன்று குரங்கு பொம்மைகள் வைத்திருந்தார். சிறுவயதில் காந்தி ஹரிச்சந்திரா நாடகம் பார்த்தார். அதிலிருந்து உண்மையே பேசுவது என்று முடிவு செய்தார்.
இதுவெல்லாம் 'அ'ன்னா, 'ஆ'வண்ணா போட்டுப்பழகுவதற்கு முன்பே என் மூளையிலும் ஏற்றப்பட்டு விட்டது. காந்தியின் புகைப்படம், அவரைப்பற்றிய வாழ்க்கை பற்றிய குறுங்கதை எங்காவது தென்பட்டுவிட்டால் அதை வாசித்துவிடத் தூண்டியது. அவர் பற்றிய கதாகாலட்சேபம், பொம்மலாட்டம், மேடை நாடகம் காணும்போது அதுவாகவே மாறும் நிலையையும் ஏற்படுத்தியது. அதுதான் பனிரெண்டாம் பிராயத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே, 'காந்தியடிகளின் இளமைப் பருவம்!' என்ற தலைப்பில் கட்டுரை எழுதி, பள்ளி இலக்கியப் போட்டியில் முதன் முதலாக இரண்டாம் பரிசு பெறவும் வைத்தது.
அந்த நாள் தொடங்கி 12 ம் வகுப்பு படிக்கும் காலம் வரை கோடை மாதத்தில் 15 நாட்கள் சிங்காநல்லூர் இளைஞர் மன்றம் நடத்திய காந்திய சிந்தனை வகுப்புகளில் ஓடோடி பங்கு பெறவும் செய்தது. பதினோராம் வகுப்பில் அதே காந்திய சிந்தனை வகுப்பில் எழுதிய கட்டுரைப் போட்டிக்கு முதல் பரிசாக கிடைத்த சத்தியசோதனை நூலை அப்போதே வாசிக்கவும் வைத்தது. அப்போது புரியாதவை, அடுத்த முறை வாசித்த போது புரிந்தது. அந்த முறை வாசிப்பில் புரியாத விஷயங்கள் அடுத்த முறை புரிந்தது. இப்படியாக அந்த நூலை எத்தனை முறை வாசித்திருப்பேன் என்பது இதுவரை நினைவில்லை.
ஆனால் ஓடி நகர்ந்த காலப் பெருவெளியில் பெரியாரையும், மார்க்ஸையும், இன்னபிற வரலாற்று ஆவணங்களையும் வாசித்து விட்டு, பிறகு சத்திய சோதனையை வாசித்தலென்பது மாபெரும் சோதனையாகவும், ஆய்வுக்குட்படுத்தும் விஷயமாகவே நின்றது.
இதுவரை வாழ்ந்த நாடு நம் நாடு அல்ல என்ற திடீர் சூன்யத்தை இரு வேறு மத சகோதர்களுக்கும் உருவாக்கிய வரலாற்று நிகழ்வு இந்திய- பாகிஸ்தான் பிரிவினை. இருபுறத்திலும் மத வெறியால் லட்சோபலட்சம் மக்கள் கொல்லப்பட்டு, அகதிகளாக திரும்பியிருக்கும் சூழல். வரலாற்றில் ரத்த வெள்ளத்தால் எழுதப்பட்ட மாபெரும் புலம்பெயர்வு நடந்து கொண்டிருந்த நேரம். இந்திய நாடு முழுக்க இஸ்லாம் எதிர்ப்புணர்வும், பாகிஸ்தான் முழுக்க இந்து எதிர்ப்பும் வலுத்து கொலைவெறி கூர் வாள் கொண்டு தாக்கிக் கொண்டிருந்த நேரம். பிரிவினை ஒப்பந்தப்படி என் பாகிஸ்தான் இஸ்லாம் சகோதரனுக்கு ரூ. 55 கோடியை தரச் சொல்லி பிர்லா மந்திரில் உண்ணாவிரதம் இருக்கிறார் காந்தி.
'நாட்டு மக்களின் கடும் எதிர்ப்பை மீறி இந்த நேரத்தில் பணத்தை அளிப்பது உகந்ததல்ல!' என்ற நிலையில் சுதந்திர இந்தியாவின் பிரதமர் நேரு தலைமையிலான அமைச்சர்கள் வரிசை கட்டி காந்தியின் தலை மாட்டில் நிற்கிறார்கள். மவுண்ட் பேட்டன், நாட்டின் இரும்பு மனிதர் என புகழப் பெற்ற சர்தார் வல்லபாய் படேல் என எவர் சொன்ன வார்த்தைகளுக்கும் செவி சாய்க்கவில்லை காந்தி. 1948 ஜனவரி 13ல் தொடங்கி 18 வரை நீடித்த இந்த உண்ணாவிரதத்தில் எந்த நேரமும் காந்தி இறந்துவிடக்கூடும் என்ற சூழல் நிலவியது.
அது ஒரு மாலை நேரம். பிர்லா மாளிகையை நோக்கி ஒரு பெருங்கூட்டம் வந்து கொண்டிருக்கிறது. காந்தியின் செயலாளர்களில் ஒருவர் வாயிலுக்கு ஓடுகிறார். அங்கே காடு அடர்ந்த வெளியில் நீண்ட நிழல்கள் போல் மனிதர்களும், அவர்களின் கைகளில் கொடிகளும் நகர்ந்து வருகின்றன.
காந்தி படுத்திருந்த இருளடர்ந்த அறைக்குள் அவர்களின் அரவ ஒலி பரவியது. பலவீனமடைந்து, களைப்படைந்தும் கட்டிலில் கிடந்த காந்தி சற்றே கண் விழிக்கிறார். தன் செயலாளர் பியாரேலாலை வினவுகிறார். 'என்ன நடக்கிறது?' மிகச் சன்னமாக கீச்சிடுகிறது காந்தியின் குரல்.
'அகதிகள் கூட்டத்தினர் ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள்!' என்கிறார் பியாரேலால்.
'நிறைய கூட்டமோ?' என்று வினவிய காந்தி அடுத்துக் கேட்கிறார். 'அவர்கள் என்ன செய்கிறார்கள்?'
'கோஷமிடுகிறார்கள்'
சிறிதுநேரம் அவர்களின் கோஷத்தை தெளிவாக கேட்க காதுகளை கூர்மையாக்குகிறார் காந்தி. வார்த்தைகள் சரிவர செவியில் ஏறவில்லை.
'அவர்கள் என்ன சொல்கிறார்கள்?' கேட்கிறார் காந்தி.
பிராரேலால் தயங்கினார். என்ன பதில் சொல்வதென்று யோசித்தார். பின்னர் மென்று விழுங்கி சொன்னார். 'அவர்கள் போடும் கோஷம் காந்தி இறக்கட்டும்'.
டொமினிக் லேப்பியர், லேரி காலின்ஸ் ஆகியோர் எழுதி 'நள்ளிரவில் சுதந்திரம்!' நூலை வாசித்த வேளை, அதில் காட்டப்படும் சித்திரங்கள், காந்தி தன் சத்தியசோதனையில் குறிப்பிடாத சம்பவங்கள். இதுபோன்று காந்தியின் இன்னொரு பக்கம் வாசிக்கப்படும்போது, அவரின் சத்தியம், நேர்மை, சொல்வாக்கு தவறாமை, அதை கட்டிக்காப்பாற்ற அவர் தன் உயிரையும் விடத்துணிந்த நிலைகள் நம்மை ஒரு வழி ஆக்கிவிடுகின்றன. ஹரிச்சந்திரனும், புத்தனும், ஏசுவும் அவரை என்னென்னவோ செய்தது என்றால் அதையும் தாண்டி அவர் வாசித்து கோடிட்டுக் காட்டின கீதையும், கடையனுக்கும் கடைத்தேற்றமும் நம்மை எங்கெல்லாமோ இட்டுச் சென்று விடுகிறது. இதை நிலைநிறுத்த அவர் கையிலெடுத்த பிடிவாதமெனும் ஆயுதமே அஹிம்சையின் ஒளியாக வெளிச்சமிடவும் செய்கிறது.
இந்த ஒழுக்க வயப்பட்ட சமூக பண்பாட்டு, கலாச்சாரத்தின் மேன்மையில் ஊறிய பல விஷயங்களை உருக்கி, உருவாக்கி இங்கு நிற்கும் கடவுளை மறுத்தலென்பது இந்த மண்ணையும் மக்களையும் மறுத்தலாகும்; அது தன்னையும் அவர்களை மறுக்க வைக்கும் என்பதை அவர் புரிந்தே வைத்திருந்தார். அதை பறைசாற்றுவதாக எழுந்ததே அஹிம்சை எனும் ஆயுதம் என்றே தோன்றுகிறது.
இல்லாவிட்டால் அதே காலகட்டத்தில் வாழ்ந்த கார்ல் கண்ட தத்துவார்த்தத்தையும், அதுவும் கூட நமக்கு வெகுதூரம், அதற்கு முன்பு இங்கே சாகடிக்கப்பட வேண்டியவன் 'கடவுள்' என்ற பெரியாரின் பகுத்தறிவு ஆற்றலையும் கையிலெடுத்திருப்பாரோ என்று எண்ணத்தோன்றுகிறது. அண்மையில் தமிழகத்தின் மூத்த முன்னோடி கம்யூனிஸ்ட் தோழர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.
'அன்றைக்கு சோவியத் ருஷ்யா உருவானது போல, நம் நாடு சோசலிஸ நாடாக மாறியிருந்தால் அது போல உடைந்திருக்குமா?' என கேட்டேன். அவர் கொஞ்சம் யோசித்தார். 'நிச்சயம் அந்த அளவு சிதிலமடைந்திருக்காது என்பது என் பார்வை. ஏனென்றால் உலக நாடுகளிலேயே ஒழுக்க வயப்பட்ட, பண்பாட்டுக்கூறுகள் நிறைந்த, புரிதல் மிகுந்த, சகிப்புத் தன்மைகள் பல்கிய, பன்முகத்தன்மையிலும் ஒருமைப்பாடு உணர வாழும் மண்ணின் மைந்தர்கள் வாழ்ந்த பூமி அது. அந்த உணர்வுகள் இங்குள்ள மாந்தர்களின் ஜீன்களிலும் தூவப்பட்டிருக்கிறது. இந்த நாட்டை முன்மாதிரியாகக் கொண்டு இன்னும் கூட பல நூறு நாடுகள் சோசலிஸ நாடாக மலர்ந்திருக்கும். சில நாடுகள் சோசலிஸத்தின் அடுத்த படிநிலையான கம்யூனிசத்திற்குள்ளும் கூட உள் நுழைந்திருக்கும்!' என்று நானே பதிலும் சொன்னேன்.
அவரிடம் அதையொட்டி வேறொரு விஷயத்தையும் குறிப்பிட்டேன். 'புரட்சிக்கான அகச்சூழல் நிறைந்து நின்றதால் ருஷ்ய மண்ணில் அன்று புரட்சிக்கான போர் வெடித்தது. அதை முன்னிட்டு காரலின், ஏங்கெல்சின் வழி காட்டுதல்கள் அமைந்தன. ஆனால் அதை தக்க வைத்துக் கொண்டு அடுத்த நிலைக்கு சமூகம் செல்வதற்கான சூழல்நிலைமைகள் இல்லை. ஆனால் இங்கே அது இருந்திருக்கிறது. ஒரு மலர் தானாக மலர்வதே நிறைவான வாசத்தை தரும். அதுவே மொட்டாக இருக்கும்போதே அதன் இதழ்களை விரித்து, கசக்கி முகர்ந்து பார்த்தால் என்னவாகும்? இங்கே பூ மலர்வதற்கு தயாராக இருந்தது. அதை அஹிம்சையால் அகழ்ந்தெடுத்துவிட்டார் காந்தி. ரஷ்யாவில் மொட்டாக இருந்தது. அதை புரட்சியின் மூலம் வென்றெடுத்தனர் சோசலிஸ்ட்டுகள். அதன் பலனைத்தான் இப்போது நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். இங்கே மாறுதல் என்பதுதானே மாறாதது?!'
அந்த மூத்த தோழர் இதை கேட்டு மறுக்கவில்லை; மாறாக பிரம்மித்தார். பிறகு சொன்னார். 'இப்படியொரு மார்க்சிய கண்ணோட்டத்தை நான் இதுவரை எங்கும் கேட்டதில்லை!'
எல்லாம் காந்தியும், பெரியாரும், கார்ல் மார்க்ஸூம் வாசித்ததில் கிடைத்த பரிசுதானே?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT