Last Updated : 21 Nov, 2024 06:00 PM

 

Published : 21 Nov 2024 06:00 PM
Last Updated : 21 Nov 2024 06:00 PM

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ நவ.21 - 27

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சினைகள் தீரும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான பிரச்சினைகளில் இருந்து வந்த இழுபறி நீங்கும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். பெண்களுக்கு எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பதில் தாமதம் உண்டாகும்.

கலைத்துறையினருக்கு நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்துறையினருக்கு அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும்.

உத்திராடம் 2,3,4 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தை தூண்டும்படியாக இருக்கலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் குறித்த கவலை உண்டாகும். சகமாணவர்களிடம் நிதானமாக பழகுவது நன்மை தரும்.

திருவோணம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். நெருப்பு, ஆயுதங்களை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உங்கள் ஆவணங்களை கவனமாக வைத்துக் கொள்வது நன்மை தரும். பெண்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்க முழு முயற்சி மேற்கொள்வீர்கள். வாக்கு வாதங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் உணர்ச்சிவசப்படாமல் எதையும் சிந்தித்து செயல்படுவது நன்மை தரும். கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். கலைத்துறையினருக்கு தகுந்த மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். விருதுகள் கிடைக்கும். தேவையான பண உதவி கிடைக்கும். கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வகுப்புகளில் சேர ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ண பகவனை பிரார்த்தனை செய்து வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - லாப ஸ்தானத்தில் சுக்ரன் என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகும். காரியங்கள் முடிவதில் தாமதபோக்கு காணப்படும். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.

தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

கலைத்துறையினர் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அரசியல்துறையினருக்கு மேலிடத்துடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் அரசியலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மேலிடத்தில் இருந்து வந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். எடுத்திருக்கும் அரசாங்க வேலைகள் மூலம் நன்மை உண்டாகும். உறவினர்கள் மூலம் காரியங்களில் தடை தாமதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். எதிலும் மந்தமான சூழ்நிலையை உருவாகும். புதிய நபர்களின் நட்பும், அதனால் மன மகிழ்ச்சியும் ஏற்படும். மதிப்புகள் கூடும்.

சதயம்: இந்த வாரம் மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியம் நல்லபடியாக முடியும். எதிலும் சிக்காமல் நழுவி விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் மனவருத்தம் ஏற்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

பூரட்டாதி1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். காரிய தாமதம் உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பது சிரமம். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை ஞாயிற்றுக்கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு (வ) - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ) - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரகநிலை உள்ளது.

பலன்கள்: இந்த வாரம் எதிலும் சாதகமான நிலை காணப்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்.

பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கலைத்துறையினருக்கு உடல் ஆரோக்கியம் பெறும். அரசியல்துறையினருக்கு நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கள். வீண் பிரச்சினைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நன்மை தரும். உறவினர் நண்பர்களிடம் பழகும் போது கவனம் தேவை. சுபகாரியங்கள் நடக்கலாம். திருமண முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் தொழில் தொடர்பாக எதையும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். பெண்களுக்கு உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்தி தரும்.

ரேவதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு வேகம் இருக்காது. நிதானமாக நடக்கும். பணவரத்து தாமதப்படலாம். ஆர்டர்கள் தொடர்பாக வீண் அலைச்சல் உண்டாகலாம். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

பரிகாரம்: வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்தியை வணங்குவதும் வயதானவர்களுக்கு உதவிகள் செய்வதும் எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x