Last Updated : 01 Aug, 2024 02:42 PM

 

Published : 01 Aug 2024 02:42 PM
Last Updated : 01 Aug 2024 02:42 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ ஆக.1-7 

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாகும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். தன்னம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்ற வாய்ப்புகள் எதிரில் வந்து தோன்றும்.

வியாபாரம் தொடர்பான செலவு வார இறுதியில் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு எதிர்பாராத சந்திப்புகள் உண்டாகும். திடீர் செலவு உண்டாகும். முக்கிய பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலைகாணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

அஸ்வினி: இந்த வாரம் சீரான நிலை காணப்படும். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலத்தை விட அதிகம் இருக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்காமல் போகலாம். பெண்களுக்கு மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

பரணி: இந்த வாரம் பாடுபட வேண்டியிருந்தாலும் மிகவும் நன்றாக இருக்கும். மாணவமணிகள் தீவிர முயற்சி எடுத்து படிப்பது அவசியமாகும். குடுமபத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் எதிர்ப்புகள் நீங்கும். தைரியம் கூடும். பணவரத்து திருப்திதரும். எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். பேச்சு திறமையால் காரிய வெற்றிகள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களால் மனநிறைவு உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் பின்னடைவு ஏற்படாமல் கவனமாக இருப்பது நல்லது. திடீர் டென்ஷன் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பரிகாரம்: துர்க்கை அம்மனை செவ்வாய், வெள்ளிக்கிழமையில் பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனத்துயரம் நீங்கும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு, செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் தைரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நினைத்த காரியத்தை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி பிடிப்பு உண்டாகும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும்.

தொழில் வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலை தூக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம்.

கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் சாதகமாக வரும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பதில் ஆர்வம் உண்டாகும். மனதில் உற்சாகம் ஏற்படும்.

கார்த்திகை 2,3,4 பாதங்கள்: இந்த வாரம் மற்றவர்களால் அமைதியின்மை உண்டாகலாம். அடுத்தவர் பேச்சை கேட்பதை குறைப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து பேசுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டி பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும்.

ரோகினி: இந்த வாரம் எதிர்பாராத செலவுகள் உண்டாகலாம். திட்டமிட்டு செயல்படுவது நல்லது. உறவினர்களுடன் தேவையற்ற வாக்குவாதம் உண்டாகலாம். வாகனங்களால் செலவும் ஏற்படும். நண்பர்களிடம் இருந்து பிரிவு உடல்சோர்வு உண்டாகலாம். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

மிருகசிரீஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் நீங்கி விருத்தியடையும். பொருட்களை வெளியூருக்கு அனுப்பும்போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பார்க்கும் இடத்தில் கவனமுடன் பழகுவது நல்லது. பேச்சு திறமையால் காரியங்களை எளிதாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: லட்சுமியை வழிபட கடன் பிரச்சினை தீரும். செல்வநிலை உயரும்.

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் தன ஸ்தானத்தில் இருந்து தைரிய வீர்ய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நல்லது. பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும்.

பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிட்டு செயல் படுவது நல்லது. பணவரத்து தாமதப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கும் மந்த நிலை மாற கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம். எந்த வேலையிலும் முழு கவனம் தேவை.

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சின்ன விஷயங்கள் கூட மன நிறைவு தரும்படி இருக்கும். அரசியல் துறையினருக்கு சில நற்பலன்களை ஏற்பட்டாலும் சிறுமனகஷ்டமும் அவ்வப்போது உண்டாகும். எதை பற்றியும் கவலைப்படாமல் தீர ஆலோசித்து எதையும் செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

திருவாதிரை: இந்த வாரம் எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கடன்கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை நீங்கி முன்னேற்றம் உண்டாகும். போட்டிகளில் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் அதிகரிக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் உண்டாகும். பணம் வருவது அதிகரிக்கும். எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

பரிகாரம்: பெருமாளை பூஜித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். காரிய அனுகூலம் ஏற்படும்.

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் ராகு - லாப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் ராசியில் இருந்து தனவாக்கு ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது. குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாகலாம். கணவன், மனைவி ஒருவருக்கொரு வர் அனுசரித்து செல்வது நல்லது.

பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழே உள்ளவர்களால் நன்மை உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.

பூசம்: இந்த வாரம் துணிச்சலாக முயற்சிகள் மேற்கொண்டு வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். காரியங்களை துணிச்சலாக செய்து முடித்து வெற்றி காண்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.

ஆயில்யம்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் நடந்து முடியும். கலைத்துறையினருக்கு கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம்.

பரிகாரம்: துர்க்கைக்கு வேப்பிலை அர்ப்பணித்து பூஜித்து வணங்க துன்பங்கள் நீங்கும். காரிய வெற்றி கிடைக்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் ராகு - தொழில் ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் விரைய ஸ்தானத்தில் இருந்து ராசி ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் பயணங்கள் மூலம் நன்மையும், காரிய அனுகூலமும் உண்டாகும். நன்மை ஏற்படும். புதிய நட்புகள் கிடைக்கும். எடுத்த காரியங்கள் கை கூடும். அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லது. பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். கடன் பிரச்சினைகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் செலவும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் செய்கையால் மன உளைச்சல் ஏற்படலாம்.

கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதங்கள் உண்டாகாமல் தவிர்ப்பது நன்மை தரும். பிள்ளைகளுடன் சகஜமாக பேசி வருவது நல்லது. அவர்கள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் காரிய தாமதமும் ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புக்களை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் எதிர்த்து செயல்பட்டவர்கள் அடங்கி விடுவார்கள். பண வரத்தும், எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண்செலவு உடல்நல பாதிப்பு ஏற்படலாம். கவனம் தேவை.

பூரம்: இந்த வாரம் அதிர்ஷ்டங்கள் வந்து சேரும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

பரிகாரம்: பிரதோஷவேளையில் சிவனையும் நந்தீஸ்வரரையும் வணங்க எல்லா பிரச்சினைகளும் சுமூகமாக முடியும். குடும்பத்தில் அமைதி ஏற்படும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் ராகு - பாக்கிய ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் லாப ஸ்தானத்தில் இருந்து விரைய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். சூரியனின் சஞ்சாரம் மனக்குழப்பத்தை உண்டாக்கலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. காரியத் தடைகள் விலகும். புதன் சஞ்சாரம் பயணங்கள் மூலம் நன்மையை தரும். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். லாபம் அதிகரிக்கும். திறமையான பணியாளர்கள் அமைவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக செயல்பட்டு சாதகமான பலன் காண்பார்கள். குடும்பத்தில் இதமான சூழ்நிலை நிலவும். உங்களது கருத்துக்களுக்கு மாற்று கருத்துக்கள் இருக்காது.

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். குழந்தைகளின் செயல்பாடுகள் மனதிருப்தியை தரும். வேடிக்கை வினோதங்களை கண்டுகளிக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பெண்களுக்கு தொலைதூர தகவல்கள் மனமகிழ்ச்சியை தருவதாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வித் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். திறமை வெளிப்படும்.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் முயற்சிகள் கைக்கூடும். மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

அஸ்தம்: இந்த வாரம் மனதில் இருக்கும் கவலைகள் பறந்தோடும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. மற்றவர்களின் நலனுக்காக தன்நலனை பாராமல் உழைப்பீர்கள். எதிர்பார்த்தபடி காரியங்கள் நடந்து முடியாமல் காரிய தாமதம் உண்டாகலாம். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

சித்திரை 1,2 பாதங்கள்: இந்த வாரம் வீண் வாக்குவாதத்தால் பகை உண்டாகலாம். பயணத்தில் தடங்கல், வீண் செலவு போன்றவை ஏற்படும். நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். பணவரத்து இருக்கும். வாகன யோகம் உண்டாகும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது.

பரிகாரம்: பகவத்கீதை படித்து கண்ணனை வணங்கி வர எல்லா பிரச்சினைகளும் தீரும். மனநிம்மதி உண்டாகும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: உங்களுக்கு இந்த வாரம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும், மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். ராசிநாதன் சுக்கிரன் சஞ்சாரத்தால் புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக் கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்கு வன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவிகள் கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள்.

சுவாதி: இந்த வாரம் அலுவலக பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த குடும்பம் தொடர்பான பிரச்சினைகள் சாதகமாக முடியும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் குழந்தைகள் கல்விக்காக பாடுபட வேண்டி இருக்கும். பயணங்களால் செலவு ஏற்படும். துணிச்சலுடன் எதிலும் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். விளையாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.

பரிகாரம்: மாரியம்மனை வணங்கி வர எதிர்ப்புகள் விலகும். காரிய வெற்றி உண்டாகும். மனமகிழ்ச்சி கூடும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து அதிகமாகும். வீண் பிரச்சினைகள் விலகும். ஆனாலும் எதிலும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. தன்னம்பிக்கை அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகளும் கிடைக்கும். எந்த காரியத்தையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சலும், பண விரயமும் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகும்.

மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளை கூடுதல் கவனமுடன் செய்வது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும் படியான சூழ்நிலை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீர்கள்.

உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். செலவு கூடும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் காரிய தடைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கைக்கு கிடைக்கும். தன்னை தானே உயர்த்தி கொள்வதுடன் பிறரும் உயர பாடுபடுவீர்கள். மனோதைரியம் கூடும். எல்லா வகையிலும் சுகம் உண்டாகும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

அனுஷம்: இந்த வாரம் பணவரத்து அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். தூக்கம் குறையும். எதிர்பாலினத்தாரின் நட்பு கிடைக்கும். அரசாங்கம் தொடர்பான பணிகள் சாதகமாக நடக்கும். முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும்.

கேட்டை: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த மெத்தனபோக்கு மாறும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் சுமாரான பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க முடியாமல் தாமதம் ஏற்படலாம். சக ஊழியர்களுடன் கவனமாக பழகுவது நல்லது.

பரிகாரம்: குலதெய்வத்தை வணங்க எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். வாக்குவன்மை ஏற்படும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பலவகை யோகம் உண்டாகும். புண்ணிய ஸ்தலங்களை தரிசிக்கும் எண்ணம் ஏற்படும். சிலர் யாத்திரை செல்வார்கள். அடுத்தவர்கள் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். எதிர்பார்த்த ஆர்டர்கள் வந்து சேரும்.

அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்துடன் நடந்து கொண்டு நன்மை அடைவார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கக் கூடும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். புதிய வீடு கட்டுவது, பழைய வீட்டை புதுப்பிப்பது போன்ற பணிகளை தொடங்க முற்படுவீர்கள்.

கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும். பிள்ளைகளால் பெருமை சேரும். பெண்களுக்கு விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு புத்தி சாதூரியத்துடன் நடந்து கொண்டு மற்றவர்களின் பாராட்டை பெறுவீர்கள். கல்வியில் மேன்மை உண்டாகும்.

மூலம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை வளரவிடாமல் சமாளித்து விடுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இடைவெளி காணப்படும். பிள்ளைகள் புத்திசாதூர்யமாக நடந்து கொள்வது மன மகிழ்ச்சியை தரும்.

பூராடம்: இந்த வாரம் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் திட்டமிட்டபடி பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். உயர் கல்விக்காக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன்தரும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரிய தடைகளை சந்திப்பீர்கள். வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும்.

பரிகாரம்: முருகனை வணங்கி வர கஷ்டங்கள் தீரும். வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பீர்கள்.

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பணத்தேவை உண்டாகும். இடமாற்றம் ஏற்படலாம். ஆடை அணிகலன் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். வாகன யோகம் கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் பார்ட்னர்களுடன் சுமூகமான முறையில் அனுசரித்து செல்வது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் நெருக்கடிகள் ஏற்படலாம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பயனற்ற பயணங்கள் உண்டாகலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் கவனமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் கல்வி தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவது நல்லது.

வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்து போவது நல்லது.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள்.

அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை.

பரிகாரம்: சனி பகவானை சனிக்கிழமையில் நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபடுவது கவலையை போக்கும். வீண் அலைச்சல் குறையும். வேலைபளு நீங்கும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வார மத்தியில் வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி தரும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும்.

கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை.

சதயம்: இந்த வாரம் மாணவர்கள் கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். புத்திசாதூரியத்துடன் காரியங்களை செய்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரலாம். எதிர்ப்புகள் விலகும்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம். எந்த காரியம் செய்தாலும் தாமதம் உண்டாகும். எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். புதிய நபர்களின் நட்பு உண்டாகும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை.

பரிகாரம்: பெருமாளை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். கொடுக்கல் வாங்கல் சீர்படும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் (வ), சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரக நிலைகள் உள்ளன | கிரக மாற்றம்: 01-08-2024 அன்று சுக்கிரன் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் விருப்பங்கள் கைகூடும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும்.

வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும்.

கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டு படிப்பது எதிர்காலத்திற்கு உதவும். திறமையுடன் காரியங்களை செய்வீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் உண்டாகலாம். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி குறைவு உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும்.

ரேவதி: இந்த வாரம் வாக்குவாதங்கள் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை அதிகரிக்கும். திடமான மனதுடன் படிப்பது வெற்றியை தரும்.

பரிகாரம்: விநாயக பெருமானை தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மனகஷ்டம் தீரும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x