Last Updated : 24 Jul, 2024 03:24 PM

 

Published : 24 Jul 2024 03:24 PM
Last Updated : 24 Jul 2024 03:24 PM

மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூலை 25 - 31

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, செவ்வாய் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன், சந்திரன், சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நிதானத்தை கடைபிடிப்பது வெற்றிக்கு வழிவகுக்கும். பேச்சில் கோபம் தெரியாவிட்டாலும் அழுத்தம் இருக்கும். சில சிக்கலான பிரச்சினைகளில் சுமுகமான முடிவை காண முற்படுவீர்கள். சூரியனின் சுகஸ்தான சஞ்சாரத்தால் மனதடுமாற்றம் அகலும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். பணவரத்து எதிர்பார்த்த அளவு இல்லாவிட்டாலும் தேவை பூர்த்தியாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் கவனமாக இருப்பது நல்லது.

வேறு வேலைக்கு முயற்சி செய்பவர்கள் சிறிது காலம் தள்ளிப் போடுவது சிறந்தது. குடும்பத்தில் ஏதாவது பிரச்சினை தலைதூக்கலாம். எல்லோரையும் அனுசரித்து செல்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம். உறவினர் வகையில் மனவருத்தம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிம்மதியைத் தரும்.

பெண்களுக்கு மனதடுமாற்றம் இல்லாமல் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். கலைத்துறையினருக்கு நன்மைகள் நடக்கும். அரசியல் துறையினருக்கு தீர ஆலோசித்து எதிலும் ஈடுபடவும், மாணவர்களுக்கு கல்விக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது பற்றிய கவலை நீங்கும்.

அஸ்வினி: இந்த வாரம் உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம்.

பரணி: இந்த வாரம் யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். வீண் மனக்கவலை, காரிய தாமதம் உண்டாகலாம் கவனம் தேவை. பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்துசேரும்.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். கவுரவம் கூடும். நிலுவை தொகை வந்து சேரும். பதவி உயர்வு கிடைக்கலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு, செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவி செய்ய போய் வில்லங்கம் ஏற்படலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மனதில் ஏதாவது குறை இருக்கும். புதிய நபர்கள் எதிர்பாலினத்தவர் ஆகியோருடன் பேசும் போது கவனமாக பேசி பழகுவது நல்லது. விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டி வரலாம். தொழில் வியாபாரம் செய்பவர்கள் பழைய பாக்கிகள் வசூல் செய்வதில் வேகம் காண்பிப்பார்கள். போட்டிகள் விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நாட்களாக இருந்த இழுபறியான காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணி நிமித்தமாக அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகள் மூலம் மனநிம்மதி கிடைக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் இருந்த மனகசப்பு மாறும்.

பெண்களுக்கு வாக்குறுதிகள் கொடுக்கும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு படிக்க முற்படுவீர்கள். சக மாணவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும்.

ரோகிணி: இந்த வாரம் உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். எதிர்பார்த்த பணம் வரும் வாய்ப்பு உள்ளது. திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.

மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் செல்வ சேர்க்கை உண்டாகும். எந்த ஒரு வேலையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தனாதிபதி புதன் சஞ்சாரத்தால் பண வரவு அதிகரிக்கும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன்(வ), சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன், சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, செவ்வாய் என கிரக நிலைகள் உள்ளன.

பலன்கள்: இந்த வாரம் நெருக்கடி நிலை அகலும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பணப்புழக்கம் திருப்தியாக இருக்கும். தொழில் வியாபாரம் வழக்கம் போல் நடக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து பேசுவது நல்லது. லாபம் குறைவது போல் இருந்தாலும் பணவரத்து திருப்தி தரும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு வீணாகும். மேலதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. சக பணியாளர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் இருப்பவர்களிடம் கோபமாக பேசுவதை தவிர்த்து இதமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். குழந்தைகள் எதிர்கால நலன் பற்றி சிந்திப்பீர்கள்.

உங்களது உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. பெண்களுக்கு எந்த காரியத்திலும் நெருக்கடியான நிலை உண்டாகும். அரசியல்வாதிகள், தொண்டர்களின் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்வீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு பாடங்களை படிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகும்.

மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் தொழில், வியாபாரத்தை மாற்றலாமா என்ற எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் வரவேண்டிய பாக்கிகள் வசூலாகும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். சரக்குகளை வெளியூர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

திருவாதிரை: இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுக்கு தேவையான துணி போன்றவைகளை வாங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேற்றுமை குறையும். உங்களை பற்றி யாராவது வீண் அவதூறு பேசினால் கண்டுகொள்ளாமல் ஒதுங்கி விடுவது நல்லது. விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ருசியான உணவை உண்பீர்கள்.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். கடுமையான முயற்சிகள் மேற்கொள்வது குறையும். வீண் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவு உண்டாகும்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x